“தேவேந்திர முனை பகுதியில் சீனா  ரேடர் நிலையை  அமைக்கும் திட்டம் உண்மையா – பொய்யா என்பதற்கு அப்பால், அவ்வாறானது ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது, சீனா கடுமையான அழுத்தங்களை எதிர்கொள்ளும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை”

அண்மைக்காலமாக பிராந்தியத்தில் சீனாவின் நகர்வுகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

குறிப்பாக இலங்கை, பாகிஸ்தான், மியான்மார் உள்ளிட்ட நாடுகளில் – சீனா, தனது பாதுகாப்பு நலன்களை விரிவுபடுத்தி வருவதாக, பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன.

இவற்றில் உண்மைகளும் உள்ளன. பொய்களும் இருக்கின்றன.  மிகைப்படுத்தப்பட்ட தகவல்களும், பல சமயங்களில் வெளியாவது வழக்கம்.

இலங்கையின் தென்பகுதியில்,  தேவேந்திர முனை காட்டுப் பகுதியில், சீனா ரேடார் நிலையம் ஒன்றை அமைக்க உள்ளதாக அண்மையில் தகவல் ஒன்று வெளியானது.

அதுபோல, மியான்மாரில்  கொகோ தீவில் அமைக்கப்பட்டு வரும் விமான ஓடுபாதையுடன் கூடிய ரேடர் நிலை தொடர்பாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த இரண்டும் இந்தியாவில் பாதுகாப்பு நலன்களுடன் நேரடியாக தொடர்புபட்டவை.

இந்த இரண்டு இடங்களிலும் சீனா தனது ரேடர் நிலைகளையோ அல்லது பாதுகாப்பு வசதிகளையும் உருவாக்கிக் கொண்டால், அது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலான விடயமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் பாதுகாப்பு ஆதிக்க விரிவாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில்,  இந்தியா தனது பாதுகாப்பு குறித்தும்-

அதன் கூட்டாளியான அமெரிக்காவும் மேற்குலகமும் பிராந்தியத்தின் பாதுகாப்பு குறித்தும் கவலைப்படாமல் இருக்க முடியாது.

அதனால் தான், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் குறிப்பாக தெற்காசிய பிராந்தியத்தில் சீனா முன்னெடுக்கின்ற எல்லா நகர்வுகளும் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.

இந்த கவனிப்புகள் பல சமயங்களில் ஊகங்களையும் புரளிகளையும், மிகையான தகவல்களை வெளிப்படுத்துகின்ற நிலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

சீனா பல்வேறு நகர்வுகளையும் முன்னெடுப்பதும் அவை தொடர்பாக, இரகசியங்களை பேணுவதும் இரகசியமான விடயம் அல்ல.

அதற்காக சீனா, மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகி வருகிறது என்று  பூதாகரமாக மிகைப்படுத்தப்பட்ட  தகவல்கள்  வெளியாவது  ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.

இலங்கையின் தென்முனையில் சீனா ரேடர் நிலையம் ஒன்றை அமைக்க உள்ளதாக வெளியான தகவல்களை  அமைச்சர் அலி சப்ரி நிராகரித்திருக்கிறார்.

இது தொடர்பாக சீன தூதரகத்திடம்  செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அலட்சியமான பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது  இந்தியா ஊடகங்களின் இவ்வாறான செய்திகளை எல்லாம் பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற தொனியில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் விஞ்ஞான அக்கடமியின் கீழ் உள்ள, விண்வெளி தகவல் ஆராய்ச்சி நிறுவகமும், ருகுணு பல்கலைக்கழக விஞ்ஞான பீடமும் விண்வெளி ஆய்வு தொடர்பான ஒரு உடன்பாட்டை செய்திருக்கின்றன.

இது காலநிலை தொடர்பான  ஆய்வுகள் தகவல்களை பரிமாறிக் கொள்வது,  ஆய்வுகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு  ஒத்துழைப்புகளுக்கும் வழி செய்கின்ற ஒரு உடன்பாடு ஆகும்.

இந்த ஒத்துழைப்பு ஏற்கனவே பல மாதங்களாக இருந்து வருகின்ற நிலையில் தான், தேவேந்திர முனையில் ரேடர் நிலையம் ஒன்றை சீனா அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதனை அரசாங்கம் மறுத்திருந்தாலும், நெருப்பில்லாமல் புகை வராது என்று நம்புகிறவர்கள் அதிகம்.

சீனா தனது ஒட்டு மொத்த வளங்களையும், தனது தேசிய இலக்கை அடைவதற்கான நோக்கில் திருப்பி விட்டிருக்கிறது.

அங்குள்ள நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அமைப்புகள் எல்லாமே, சீன அரசாங்கத்தின் திட்டங்கள், இலக்குகளை நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில், ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன.

இங்குள்ள பல்கலைக்கழகங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் ஒத்துழைப்பு உடன்பாடுகளை செய்திருக்கின்றன.

அவை ஆராய்ச்சி,நோக்கங்களை அடிப்படையாக கொண்டதாக இருந்தாலும், சீனா இந்த விடயத்தில் வேறுபட்டு நிற்கிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன், கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் விவசாய பல்கலைக்கழகம் உடன்பாடு ஒன்றை செய்து கொள்வதற்கு அரசாங்கத்தின் அனுசரணையுடன் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

ஆனால், அதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா இணங்க மறுத்து விட்டார். மாணவர் ஒன்றியமும் அதனைக் கடுமையாக எதிர்த்தது.

ஆனால் ருகுணு பல்கலைக்கழகத்துடன் சீன விஞ்ஞான அகடமிக்கு தொடர்புகள், இணக்கப்பாடுகள் இருக்கின்றன.

அதனை அவர்கள் தங்களின் ஆய்வுகள், தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் தான், பலரும் நெருப்பில்லாமல் புகை வராது என்கிறார்கள்.

இவ்வாறான நிலையில், இந்தியாவுக்கு நிச்சயம் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய ஒரு செய்தி அண்மையில் வெளியாகியிருக்கிறது. அது மியான்மாரின், கொகோ தீவில் வலுப்படுத்தப்படுகின்ற படைத்தளம் பற்றியது.

மியான்மாரின் தென்பகுதியில் உள்ள, கொகோ தீவு, வங்காள விரிகுடாவில், இந்தியாவின் அந்தமான் -நிகோபார் தீவுக் கூட்டங்களில் இருந்து, சுமார் 60 கிலோ மீற்றர் தொலைவில்  உள்ளது.

கொகோ தீவில் ஏற்கனவே இருந்த விமான ஓடுபாதை புனரமைக்கப்பட்டு, 2300 மீற்றர் நீளம் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

அங்கு இரண்டு விமான தரிப்பிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ரேடர்களை பாதுகாக்கும் வகையிலான கட்டமைப்பு ஒன்றும் அங்கு புதிதாக அமைக்கப்பட்டிருக்கிறது. குடியிருப்புத் தொகுதியும் அதனுடன் காணப்படுகிறது.

ஒதுக்குப்புறமான இந்த தீவை பிரதான நிலப்பரப்புடன் இணைக்கின்ற வகையில், 175 மீற்றர் நீளமும், 8 மீற்றர் அகலமும் கொண்ட பாலம் ஒன்றும் புதிதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இவையெல்லாம், அண்மையில் வெளியான செய்மதிப் படங்களின் மூலம் வெளிவந்த தகவல்கள்.

இது இந்தியாவுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். ஆனால் வெளியிடவில்லை.

மியான்மாரின் இராணுவ ஆட்சியாளருக்கு சீனா ஆதரவளிக்கிறது. சர்வதேச அரங்கில் அவர்களைக் காப்பாற்றுகின்ற முயற்சிகளிலும் ஈடுபடுகிறது.

இதற்கு பிரதியீடாகவே, மியான்மாரை சீனா தனது பாதுகாப்பு நலன்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு, அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

கொகோ  தீவில் அமைக்கப்பட்ட வரும் அந்த கேந்திர இராணுவ நிலையானது,  ஒரு பக்கம் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது.  இன்னொரு பக்கம் மலாக்கா நீரிணைக்கு  அருகாக காணப்படுகிறது.

அதேவேளை வங்காள விரிகுடாவில் கிழக்கு புறத்தில் காணப்படும் கொகோ தீவில் இருந்து,  மேற்கு புறத்தில் உள்ள இந்தியாவின் முக்கியமாக ஏவுகணை மற்றும் விண்வெளி ஆய்வு தளங்களை இலகுவாக கண்காணிக்க  முடியும்.

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் தான் பிரதானமான அதன் விண்வெளி மற்றும் ஏவுகணை சோதனை மையங்கள் மற்றும் ஏவுதளங்கள் காணப்படுகின்றன.

இங்கிருந்து தான் இந்தியா தனது முக்கியமான  ஏவுகணை பரிசோதனைகளை  மேற்கொள்வது வழக்கம்.

கொகோ தீவில் சீனா தனது ரேடார் கண்காணிப்பு மையத்தை அமைக்குமானால் -இந்தியாவின் பாதுகாப்புக்கு குறிப்பாக ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

கொகோ தீவில் சீனா அமைத்து வரும் இராணுவ கண்காணிப்பு நிலை இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறக்கூடும்.

இலங்கையில்  சீனா அமைப்பதாக கூறப்படும் கண்காணிப்பு நிலையை விட, இது இன்னும் கூடிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.

இதனால் இந்தியா இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை- எடுத்துக் கொள்ளவும் முடியாது.

சம தருணத்தில் இலங்கையிலும் இவ்வாறானதொரு நிலையை சீனா அமைக்குமா இல்லையா என்ற கேள்வி இந்தியாவுக்கு இருப்பதால்தான், இது தொடர்பான வதந்திகளும் உலா வருகின்றன.

மியான்மாரை கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் இந்தியா இல்லை.  எனவே கொகோ தீவில்  சீனா தனது கண்காணிப்பு நிலையை அமைக்கும்.  அதனை இந்தியாவினால் நேரடியாக தலையிட்டு தடுக்க முடியாமல் இருக்கும்.

ஆனால் இலங்கையில் அவ்வாறான நிலை இல்லை. ஏற்கனவே சீனாவின் பல திட்டங்களை இந்தியா தடுத்திருக்கிறது.

தேவேந்திர முனை பகுதியில் சீனா  ரேடர் நிலையை  அமைக்கும் திட்டம் உண்மையா- பொய்யா என்பதற்கு அப்பால், அவ்வாறானது ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது, சீனா கடுமையான அழுத்தங்களை எதிர்கொள்ளும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இந்தியாவும், அமெரிக்காவும் அதனைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கும்.

ஏனென்றால், அது இந்தியாவுக்கு மாத்திரமன்றி, டியாகோகார்சியாவில் உள்ள அமெரிக்க, பிரித்தானியா தளங்களுக்கும், அதற்கு அருகே ரியூனியன் தீவில் உள்ள பிரெஞ்சு தளங்களுக்கும் கூட, இந்த தளம் அச்சுறுத்தலாக இருக்கும்.

-ஹரிகரன்

Share.
Leave A Reply

Exit mobile version