வெலிகம, பெலான பகுதியில் உள்ள புகையிரத கடவையில் முச்சக்கர வண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்து, மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (03) பிற்பகல் மாத்தறையில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற புகையிரதம், வெலிகம புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் சென்று கொண்டிருந்த போது வெலிகம பெலான ரயில் கடவையில் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் முச்சக்கர வண்டியில் தாயுடன் 3 பிள்ளைகளும் மற்றுமொரு உறவினரும் பயணித்துள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 9 வயது குழந்தை மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.
ஏனைய இரண்டு பிள்ளைகள், தாய் மற்றும் மற்றுமொரு உறவினர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொல்வத்துமோதர கல்லூரியில் கல்வி கற்கும் 3 பிள்ளைகளையும் தாய் ஏற்றிச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னிணைப்பு
வெலிகம பெலான பகுதியில் உள்ள புகையிரத கடவையில் முச்சக்கர வண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் ஆபத்தான நிலையில் இருந்த மற்றுமொரு குழந்தை இன்று (03) உயிரிழந்துள்ளது.
7 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, அந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 03 ஆக அதிகரித்துள்ளது.