மே மாதம் 6ஆம் தேதி நண்பகல் பொழுதில், வரலாற்றுச் சிறப்புமிக்க புனித எட்வர்ட் மகுடம் அரசர் மூன்றாம் சார்ல்ஸினுடைய தலையில் பொருத்தப்படும். இது பல நூற்றாண்டுகள் பழமையான முடிசூட்டுச் சடங்கு. ஆனால் அரசர் இம்மகுடத்தை ஒருமணி நேரத்திற்கும் குறைவாகவே அணிந்திருப்பார். அதன் பிறகு ஒருபோதும் அதனை அணியமாட்டார்.
இந்தத் தனித்துவமான மகுடத்தைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் பார்ப்போம்.
தனது தாய் இறந்த உடனே சார்ல்ஸ் அரசர் ஆகிவிட்ட போதிலும், முடிசூட்டுவிழா என்பது அவரது ஆட்சி துவங்குவதைக் குறிக்கும் ஒரு பழமையான சடங்கு.
இந்நிகழ்வு, முடிசூட்டு விழாவின்போது மட்டுமே அணியப்படும் விலைமதிப்பில்லா புனித எட்வர்ட் மகுடத்தைக் காண்பதற்கு ஓர் அரிய வாய்ப்பு.
22 காரட் கட்டித் தங்கத்தால் செய்யப்பட்ட இம்மகுடம் 360 வருடங்கள் பழமையானது. இதன் உயரம் 30சென்டிமீட்டர்கள் (1அடி). இம்மகுடத்தின் எடை 2.23கிலோ. அதாவது, இது இரண்டு பைனாப்பிள்கள், ஒரு பெரிய தர்பூசணி, அல்லது இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டில் அளவுக்கு கனக்கும்.
இதற்கு முன் புனித எட்வர்ட் மகுடத்தை ராணி இரண்டாம் எலிசபெத் 1953ஆம் ஆண்டு தமது முடிசூட்டு விழாவின்போது அணிந்தார். அதன்பின் 70 ஆண்டுகளாக இது லண்டன் கோபுரத்திலிருந்து வெளியே செல்லவில்லை.
பல ஆண்டுகள் கழித்து, ஓர் ஆவணப் படப்பிடிப்பின் போது இம்மகுடத்தை மீண்டும் பார்த்த ராணி, “இன்னும் இது கனமாகத்தான் இருக்கிறதா?” என்று கேட்டபடி, அதனைத் தூக்கிப்பார்த்து, தமது நினைவில் உள்ளதுபோலவே அது கனமாகத்தான் இருக்கிறது என்பதை உறுதி செய்துகொண்டார்.
சார்ல்ஸ் ஃபாரிஸ், வரலாற்றாசிரியர்
இம்மகுடத்தில் 444 விலையுயர்ந்த கற்கள் உள்ளன. நீலக்கற்கள், மாணிக்கங்கள், அமேதிஸ்ட், புஷ்பராகங்கள், பல இளநீல, நீலமும் பச்சையும் கலந்த அக்வாமரைன்கள் ஆகிய கற்கள் எனாமல் மற்றும் தங்கத்தில் பதிக்கப்பட்டிருக்கின்றன.
இம்மகுடத்தில் உள்ள கற்கள் கழற்றி எடுக்ககூடிய வகையில் அமைந்திருந்தன. முடிசூட்டு விழாக்களின் போது பிரத்யேகமாக வாடகைக்கு வாங்கப்பட்டன.
20ம் நூற்றாண்டில்தான் அவை இம்மகுடத்தில் நிரந்தரமாகப் பொருத்தப்பட்டன.
அரச மகுடம், மற்ற அரச நகைகளோடு அரசர் இரண்டாம் சார்ல்ஸ்.
அம்மகுடம் ஆங்கிலோ-சாக்ஸ்ன் அரசரும் புனிதருமான எட்வார்டுக்குச் சொந்தமானது. 11ஆம் நூற்றண்டின் பாயூ திரைச்சீலையில் (Bayeux Tapestry), அவர் அம்மகுடத்தை அணிந்திருப்பதுபோலச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
எட்வர்டின் மறைவுக்குப்பின் புனித நினைவுச் சின்னமாகக் கருதப்பட்ட இம்மகுடம், 1220ஆம் ஆண்டில் அரசர் மூன்ற்ம் ஹென்ரியின் முடிசூட்டு விழாவிலும், அதற்குப் பின்வந்த அரசர், அரசிகளின் முடிசூட்டு விழாக்களிலும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் 1660களில் அரசர் முதலாம் சார்ல்ஸின் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டதற்குப் பிறகு, ஆலிவர் க்ராம்வெல்லை ஆதரித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்ற அரச நகைகளோடு இம்மகுடத்தையும் உருக்கினர்.
கிராம்வெல்லின் மரணத்திற்குப் பிறகு அரச குடும்பம் மீண்டும் பிரபலமடைந்தது. அரசர் இரண்டாம் சார்ல்ஸ் புதிய அரச நகைகள், அரச மகுடம், புதிய புனித எட்வர்ட் மகுடம் ஆகியவற்றைச் செய்ய உத்தரவிட்டார். (படத்தில் அவர் அம்மகுடத்தை அணிந்திருக்கிறார்.)
எட்வர்டின் மகுடத்தில் வெகு சில கற்களே இருந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் அரசர் இரண்டாம் சார்ல்ஸின் மகுடத்தில் வைரங்களும் வண்ணக் கற்களும் இருந்தன.
இவை ராபர்ட் வைனர் என்ற பொற்கொல்லரிடமிருந்து மிகப்பெரும் தொகையான £500க்கு (அன்றைய மதிப்பில் 51,000 ரூபாய்) வாடகைக்கு வாங்கப்பட்டன என்கிறார் அரச நகைகளின் வரலாற்று ஆய்வாளர் அன்னா கீ.
மகுடத்தின் பட்டையில் நான்கு சிலுவைக்குறிகளும், லில்லி மலர்களும் உள்ளன. இப்பட்டையிலிருந்து தோன்றும் நான்கு வளைவுகள் மேலே மத்தியில் இணைகின்றன.
இந்நான்கு வளைவுகளின்மேல் தங்கத்தாலான சிறு மணிகள் உள்ளன. இவற்றிற்கு முன் இவ்விடத்தில் போலி முத்துக்கள் இருந்தன.
மகுடத்தின் உச்சியில் கற்கள் பதிக்கப்பட்ட ஒரு சிலுவை உள்ளது. இதிலிருந்து இரண்டு மணிகள் தொங்குகின்றன. இவற்றோடு ஒரு சிறு உலக உருண்டையும் உண்டு. இது அரசரின் ஆட்சிக்குக் கீழிருக்கும் உலகத்தைக் குறிக்கிறது.
இம்மகுடம் 1661ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும், சார்ல்ஸ் இதனை அணியும் ஏழாவது அரசர் மட்டுமே.
அரசர் மூன்றாம் சார்ல்ஸ் புனித எட்வர்ட் மகுடத்தினால் முடிசூட்டப்படும் ஏழாவது அரசராவார்.
ஆனால் அரசர்களின் விருப்புகள், ஃபேஷன் ஆகியவை மாறவும், 200 வருடங்களுக்கு அது அணியப்படவில்லை. ஆனால் அரச நகைகள் காட்சிப்படுத்தப்பட்ட பல சந்தர்ப்பங்களில் இம்மகுடமும் காட்சிப்படுத்தப்பட்டது.
1902ஆம் ஆண்டு அரசர் ஏழாம் எட்வர்ட் தமது முடிசூட்டு விழாவில் இம்மகுடத்தை அணியத் திட்டமிட்டிருந்தார். அதற்காக இதனை பிரத்யேகமாகப் புதுப்பிக்கவும் செய்தார். ஆனால் விழாவிற்கு முன் அவருக்கு உடல் நலமின்றிப் போகவே, எடை குறைந்த அரச மகுடத்தைக் கொண்டு முடிசூட்டப்பட்டார்.
ஏழாம் எட்வர்டைப் போலவே,, ஐந்தாம் ஜார்ஜும் இம்மகுடத்தைக் கொண்டு முடிசூட்டிக்கொள்ள விரும்பினார். அவர் இதில் கற்களை நிரந்தரமாகப் பதித்தார், பல டஜன் அக்வாமரைன் கற்கள் இவற்றில் அடக்கம்.
மூல மகுடத்தில் இக்கற்கள் இருந்திருக்கவில்லை, ஆனால் அரசர்களிடையேயும், ஃபாபெர்ஜ் (Faberge) போன்ற அரச பொற்கொல்லர்களிடையேயும் இவை பிரபலமாக இருந்தன என்கிறார் விலையுயர்ந்த கற்களில் நிபுணரான கிம் ரிக்ஸ்.
இதனைத் தொடர்ந்து ஆறாம் ஜார்ஜும், இறுதியாக ராணி இரண்டாம் எலிசபெத்தும் இம்மகுடத்தையணிந்து முடிசூட்டிக்கொண்டனர்.
மகுடத்தின் பட்டையைச் சுற்றியுள்ள குஞ்சம், எர்மைன் எனப்படும் ஒருவகை வெள்ளை கீரியின் முடியால் செய்யப்பட்டது. இவ்விலங்கின் உடல் முழுதும் வெள்ளையாகவும், வாலின் நுனி மாத்திரம் கருப்பாகவும் இருக்கும். பாரம்பரியமாக, இது பிரபுத்துவ வர்க்கத்தினரிடையே அந்தஸ்தின் சின்னமாகக் கருதப்பட்டது.
மகுடத்தின் முற்பகுதி எதுவென அதிலிருக்கும் கற்களின் நிறத்தை வைத்துக் கண்டறியலாம். ஆனால் கடந்தகாலத்தில் இது பல குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆறாம் ஜார்ஜின் முடிசூட்டு விழா
பின்னாளில் அரசர் இவ்வாறு எழுதினார்: “மகுடம் சரியாக பொருத்தப்பட வேண்டும் என்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் எடுத்திருந்தேன். ஆனால், ஆயரும் பேராயரும் அதை முன்னும் பின்னுமாக மாற்றிக்கொண்டே இருந்ததனால், அது சரியாக பொருத்தப்பட்டதா இல்லையா என்று என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை.
பொதுவெளியில் அதிகம் பார்க்கப்படாவிட்டாலும், இம்மகுடம் பரிச்சயமானதாகத் தோன்றலாம்.
இம்மகுடத்தின் படத்தை நீங்கள் பிரிட்டனின் அரச முத்திரையில் காணலாம். இம்முத்திரை பிரிட்டனின் கடவுச்சீட்டுகளிலும், தபால் துறையின் முத்திரையிலும் இடம்பெற்றிருக்கிறது. சமூக ஊடகங்களை கவனிக்கத் தவறாதீர்கள். டிவிட்டரில் முடிசூட்டு விழா தொடர்பான ஹேஷ்டேகுகளைப் பயன்படுத்தினால், இம்மகுடம் போன்ற எமோஜி தாமாகவே தோன்றும்.
ராணி இரண்டாம் எலிசபெத் புனித எட்வர்ட் மகுடத்தை அரச சின்னமாக முன்னெடுத்துச் சென்றிருந்தாலும், அரசர் சார்ல்ஸ் தனது அட்சி துவக்கத்தின் சின்னமாக வேறொரு மகுடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனாலும், புனித எட்வார்ட் மகுடத்தின் முக்கியத்துவம் நீடிக்கிறது.
“இம்மகுடம், முடியாட்சி புராதானமான நிறுவனம் என்றும், அது நிலைத்திருக்கும் என்றும் தெளிவானதொரு செய்தியைச் சொல்கிறது,” என்கிறார் ட்ரேசி போர்மன். இவர் ‘மகுடமும் செங்கோலும் என்ற வரலாற்று நூலை எழுதியிருக்கிறார்.
புராதனமான அரண்மனைகளின் வரலாற்றாசிரியரான சார்ல்ஸ் ஃபாரிஸ், முடிசூட்டப்படும் கணத்திற்காக மட்டுமே இம்மகுடம் பிரத்யேகமாக பாதுகாத்து வைக்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியமானது என்கிறார்.
இச்சிறப்புவாய்ந்த பொருளின் மாயத்தன்மையை அது கூட்டுகிறது
சார்ல்ஸ் ஃபாரிஸ், வரலாற்றாசிரியர்
ஆகையால், மே 6ஆம் தேதி நடக்கவிருக்கும் முடிசூட்டுவிழா இம்மகுடத்தைப் பொதுவெளியில் காண்பதற்கான ஒரு அரிய வாய்ப்பு.
அதன்பின், புனித எட்வர்ட் மகுடம் மீண்டும் லண்டன் கோபுரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அடுத்த அரசருக்காக காத்திருக்கும்.
பங்களிப்பு
எழுத்தும் தயாரிப்பும் – அம்மர் அல் யாசிரி, டொமினிக் பெய்லி, பாட்ரிசியா ஓஃபுவானோ. மேம்படுத்துதல் – அலெக்சாண்டர் இவனோவ், ஜாக் போரெஹாம், ஸ்காட் ஜார்விஸ், மற்றும் தாமஸ் டாய்கினிட்சாஸ். படங்கள்: Getty, PA, ஜென்னி லா.