மதுரை : மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் எழுந்தருள்வதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் திரண்டிருந்த நிலையில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களில் சிலர் வைகை ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று (மே 5) அதிகாலை 6 மணியளவில் நடந்தது.
இதையொட்டி, வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு, இரு கரையை தொட்டு தண்ணீர் ஓடும் நிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் தங்கக் குதிரையில் பச்சைப் பட்டுடுத்தி எழுந்தருளினார்.
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண லட்சக்கணக்கானோர் குவிந்தனர்.
கோரிப்பாளையம், ஆழ்வார்புரம், வைகை வடகரை, தென்கரை மற்றும் ஏவி மேம்பாலம், ஓபுளாபடித்துறை மேம் பாலம், யானைக்கல் தரைப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.
உற்சாக மிகுதியில் யானைக்கல் தரைப்பாலம் அருகிலுள்ள தடுப்பணையில் தேங்கிய தண்ணீரில் பக்தர்கள் சிலர் குதித்து விளையாடினர்.
இந்நிலையில், கள்ளழகர் ஆற்றில் இறங்கிய பின், தடுப்பணை பகுதியில் ஆண் உடல் ஒன்று மிதந்தது தெரியவந்தது.
போலீசார் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் தெற்குமாசி வீதியைச் சேர்ந்த நல்லமாயன் என்றும், திருவிழா பார்க்க வந்தபோது, தடுப்பணையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் தெரியவந்தது.
கல்பாலம் பகுதியில் மேலும் இருவரின் உடல் தண்ணீர் மிதந்தது. அவர்களின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தியதில் ஒருவர் மதுரை மாவட்டம், விளாச்சேரி சுண்ணாம்பு காளவாசல் பகுதி ஜெயக்குமார் மகன் பிரேம்குமார் (18) எனத் தெரிந்தது.
மற்றொருவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் கூட்ட நெரிசலில் நீரில் மூழ்கி பலியாகினரா அல்லது வேறு காரணமா என விசாரணை நடைபெற்று வருகிறது.
மதுரை வடக்குமாசி வீதி நல்லமாடன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சுடலைமுத்து (58). அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியபின், மண்டகப்படிக்கு எழுந்தருளியபோது, மதிச்சியம் பகுதியில் சுவாமிக்கு முன்பாக பக்தர்களுக்கு மத்தியில் தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்தார்.
திடீரென நெஞ்சு வலியால் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண பெரும் திரள் குவிந்ததைப் பயன்படுத்தி, ஒரு கும்பல் பொதுமக்களை தாக்கி நகை பணம் உள்ளிட்டவற்றை பறித்துள்ளது. இதில் 7 பேர் காயமடைந்தனர்.
வழிப்பறி கும்பலில் இருந்த எம்.கே.புரத்தைச் சேர்ந்த சூர்யபிரகாஷ், மதிச்சியம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
Share.
Leave A Reply

Exit mobile version