ஜெர்மனி ராணுவத்தின் திட்டம் இதுவாக இருந்தது. தங்களது ராணுவத்தின் மூன்று பிரிவுகளை பெல்ஜியத்தில் நிலை நிறுத்திக் கொண்டு பிரான்ஸ் மீது தாக்குதல் நடத்தலாம், பிரான்ஸை ஆக்கிரமிக்கலாம் என்பதே அது.
1914 ஆகஸ்ட் 4 அன்று பெல்ஜியத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்தது ஜெர்மனி. ஜூலை 24 அன்று கூட பெல்ஜியம் அரசு, “பிற நாடுகளுக்கு இடையே பெரும் போர் மூளும் நிலை வந்திருக்கிறது. அப்படி வந்தால் எங்கள் நடுநிலைத் தன்மையைத் தொடருவோம்” என்று கூறி இருந்தது.
என்றாலும் ஜெர்மனி (பிரான்ஸைத் தாக்குவதற்கு) தங்கள் மண்ணுக்குள் தனது ராணுவத்தை அனுப்பப்போகிறது என்ற செய்தி அந்த மாத இறுதியில் பெல்ஜியம் அரசுக்குத் தெரிந்து விட, அது தனது ராணுவத்தைத் தயார் நிலையில் வைக்கத் தொடங்கியது.
ஆகஸ்ட் இரண்டாம் தேதி ஜெர்மன் அரசு பெல்ஜியத்துக்கு எச்சரிக்கை தொனியில் ஒரு தகவலை அனுப்பியது.
‘எங்கள் ராணுவம் உங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு உங்கள் அரசு அனுமதி அளிக்க வேண்டும்’. இப்படி ஒரு தகவலை அனுப்பிவிட்டு இதற்குச் செவி சாய்க்காவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா என்று எச்சரிப்பது போல் லக்ஸ்சம்போர்க் நாட்டை ஆக்கிரமித்தது ஜெர்மன் ராணுவம்.
(இது மேற்கு ஐரோப்பாவில் உள்ள, முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு சிறிய நாடு. ஜெர்மனி, பிரான்ஸ் ஆகியவற்றை அண்டை நாடுகளாகக் கொண்டது.)
1914-ல் ஐரோப்பிய நாடுகள் இருந்த நிலை
“அதெல்லாம் எங்கள் நாட்டுக்குள் நீங்கள் நுழைய அனுமதிக்க முடியாது. ஏனென்றால் போரில் நாங்கள் நடுநிலை வகிக்கிறோம்” என்று கூறியது பெல்ஜியம். கொதித்துப் போன ஜெர்மனி தனது ராணுவத்தை பெல்ஜிய எல்லைக்குள் அனுப்பியது.
தொடங்கியது லியெஜ் போர். (லியேஜ் என்பது ஒரு நகரம். பெல்ஜியத்தில் உள்ள இந்த நகரத்தில் பல கோட்டைகள் உண்டு).
ஜெர்மனி ராணுவத்தின் திட்டம் இதுவாக இருந்தது. தங்களது ராணுவத்தின் மூன்று பிரிவுகளை பெல்ஜியத்தில் நிலை நிறுத்திக் கொண்டு பிரான்ஸ் மீது தாக்குதல் நடத்தலாம், பிரான்ஸை ஆக்கிரமிக்கலாம் என்பதே அது.
ஜெர்மனி தனது சக்தி மிக்க ராணுவத்தைக் கொண்டு லியெஜ் நகரைத் தன்வசமாக்கியது. அவர்கள் எதிர்பார்த்ததைவிட பெல்ஜியர்களின் எதிர்ப்பு வலுவாகவே இருந்தது.
என்றாலும் ஜெர்மானிய ராணுவம் தமது குட்டையான பீரங்கிகளைப் பயன்படுத்தத் தொடங்கியதும், பெல்ஜியத்தால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவர்களின் படைகள் பின்வாங்கின.
பின்னர் ஜெர்மானிய ராணுவம் பெல்ஜியத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியாக ஆக்கிரமித்தபடி பிரான்ஸை நோக்கி முன்னேறியது.
ஒரு கட்டத்தில் (ஆகஸ்ட் 17 அன்று) தங்கள் நாட்டுத் தலைநகரான ப்ருஸெல்ஸை விட்டு பெல்ஜிய அரசு நீங்க வேண்டிய கட்டாயம் உண்டானது. அதற்கு அடுத்த இரண்டாவது நாளே ஜெர்மானிய ராணுவம் ப்ருஸெல்ஸ் நகரைத் தன்வசமாக்கிக் கொண்டது.
ப்ருஸெல்ஸில் தனது ஒரு பகுதி ராணுவத்தை நிறுத்தி வைத்துக் கொண்டு (பெல்ஜிய ராணுவம் மீண்டும் எதிர்த்தால் அதைத் தாக்குப் பிடிக்க வேண்டுமே) பிரான்ஸை நோக்கி நகர்ந்தது.
பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப் நகரைச் சுற்றி தனது ஒரு ராணுவப் பிரிவை முன்னெடுத்துச் சென்றது ஜெர்மனியின் ராணுவம். சுதாரித்துக் கொண்ட பெல்ஜியம் தனது பதில் தாக்குதலைக் கொஞ்சம் வீரியமாகக் கொடுக்கத் தொடங்கியது.
இதன் காரணமாக பெல்ஜியத்தில் தங்க வைக்கப்பட்ட ராணுவப் பிரிவுகளை பிரான்சுக்கு எடுத்துச் செல்ல வைக்க முடியாத நிலை ஜெர்மனிக்கு ஏற்பட்டது.
இந்த நிலை பல நாள் தொடர்ந்தது. உக்கிரமடைந்த ஜெர்மன் ராணுவம் பெல்ஜியத்தில் உள்ள சாதாரண மக்களையும் தாக்கத் தொடங்கியது.
படுகொலைகள் நிகழ்ந்தன. முக்கிய பெல்ஜிய ராணுவ வீரர்களைப் பணயக் கைதிகள் ஆக்கிக் கொண்டனர். பல சிறிய ஊர்களைத் தீக்கு இரையாக்கினார்கள்.
இந்தச் செயல்களை ‘Rape of Belgium’ என்ற வார்த்தைகள் மூலம் பின்னர் சரித்திரம் குறிப்பிட்டது என்றாலும் பெல்ஜிய ராணுவம் தன்னால் முடிந்தவரை ஈடு கொடுத்தது.
ஜெர்மனி ராணுவ வீரர்களை அவர்கள் முடிந்த அளவு முன்னேற விடாமல் தடுத்து நின்றனர். அந்த நேரத்தில் பெல்ஜிய மக்களில் பலரும் அங்கிருந்து பிற நாடுகளுக்கு அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர்.
தாங்கள் தஞ்சமடைந்த நாடுகளிடம் ஜெர்மனி ராணுவத்தின் அத்துமீறல்களையும் அராஜகங்களையும் விளக்கி ஆதரவு திரட்டினர்.
இப்படிப் பிற நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்த பெல்ஜிய மக்களின் எண்ணிக்கை சுமார் 15 லட்சம். அதாவது கிட்டத்தட்ட அவர்களது மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு எனலாம். அவர்கள் முக்கியமாகத் தஞ்சம் புகுந்தது ஹாலந்து, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில்தான்.
Depiction of the execution of civilians in Blégny by Évariste Carpentier
“எங்கள் குழந்தைகளின் கைகளை ஜெர்மனிய ராணுவ வீரர்கள் வெட்டினார்கள். எங்கள் பெண்களை அவர்கள் பலவிதங்களில் அவமானப்படுத்தினார்கள்” என்றெல்லாம் அகதிகளாகச் சென்ற பெல்ஜிய மக்கள் தாங்கள் தஞ்சம் புகுந்த நாடுகளில் கூற, உணர்வுகள் பெருக்கெடுத்து ஓடின.
பதிலுக்கு ஜெர்மனியும் தன் தரப்பை நியாயப்படுத்தியது. “நாங்கள் பெல்ஜியத்தை ஆக்கிரமித்தோமே தவிர அந்த நாட்டு மக்களுக்குச் சேதம் விளைவிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குத் துணியும் இல்லை” என்று புதிய நியாயத்தை வெளியிட்டது.
“காயம் பட்டுக் கிடந்த எங்கள் வீரர்களின் கண்களை நோண்டி எடுத்தனர் பெல்ஜிய ராணுவ வீரர்கள்” என்று அவர்களும் உணர்வுகளில் புகுந்து விளையாடினார்கள். என்றாலும் இது அவ்வளவாக எடுபடவில்லை.
காரணம் ஆக்கிரமித்தது அவர்கள்தான் என்ற அடிப்படை உண்மை. இதன் காரணமாக நேசநாடுகள் தரப்பு தெய்வங்கள் போலவும் அச்சு நாடுகள் தரப்பு சாத்தான்களைப் போலவும் ஒரு பிம்பம் பரவியது.
Also Read
முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: இரு நாடுகளின் பகை ஓர் உலகப்போராக மாறிய தருணம் இதுதான்!
இரு தரப்பு மக்களும் பல்வேறு சான்றுகளைக் கொண்டு, அவற்றைப் பலவித மொழிகளில் மொழியாக்கம் செய்து வெளியிட்டு தங்கள் தரப்பை நியாயப்படுத்திக் கொள்ளக் கடுமையாக முயற்சி செய்தார்கள்.
என்றாலும் நடுநிலையாக இருக்கப் போவதாக அறிவித்த ஒரு நாட்டுக்குள் ஜெர்மனி நுழைந்து அதைச் சேதப்படுத்தியதைப் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக இருதரப்பிலும் இருந்த பிற நியாய அநியாயங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன.
– போர் மூளும்
Also Read