பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத் காவல்துறை தலைவர் (ஐ.ஜி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நிலைமை ‘இயல்புடன்’ உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இஸ்லாமாபாத் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இம்ரான் கானின் பாகிஸ்தான் டெஹ்ரீக் இ இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவர் ஃபவாத் செளத்ரி, தமது ட்விட்டர் பக்கத்தில், “முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்டார்.

அந்த நேரத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் துன்புறுத்தப்பட்டனர். அடையாளம் தெரியாத சிலரால் பெயர் குறிப்பிடாத இடத்திற்கு இம்ரான் கான் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி. உள்துறை செயலாளர் மற்றும் போலீஸ் ஐ.ஜி ஆகியோர் 15 நிமிடங்களில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்,” என்று கூறியுள்ளார்.

பிடிஐ கட்சியின் மூத்த தலைவர் முஸரத் சீமா தமது ட்விட்டர் பக்கத்தில் பகிரந்துள்ள ஒரு காணொளி செய்தியில், “இப்போது இம்ரான் கானை சித்ரவதை செய்கிறார்கள். அவரை அடிக்கிறார்கள். அவரை வைத்து ஏதோ செய்திருக்கிறார்கள்,” என்று கூறியுள்ளார்.

மற்றொரு தலைவரான ஷிரீன் மசாரி, “இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்துக்குள் இம்ரான் கான் கடத்தப்பட்ட சம்பவம் அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதம். இந்த நாட்டில் காட்டாட்சி நடக்கிறது. போலீஸ் ரேஞ்சர்கள் வழக்கறிஞர்களை அடித்து, சித்ரவதை செய்து, இம்ரான் கானை கடத்திச் சென்றுள்ளநர்,” என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்த தகவலை உறுதிப்படுத்த, பாகிஸ்தான் தகவல் அமைச்சர் மரியம் ஔரங்கசீப்பை செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தொடர்புகொண்டபோது, அவர் எந்த பதிலையும் வழங்கவில்லை.

பாகிஸ்தானில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு இணையாக சக்திவாய்ந்த அமைப்பாக அந்நாட்டு ராணுவம் இருக்கிறது.

இந்நிலையில், எந்த ஆதாரமும் இல்லாமல் பணியில் உள்ள ஐ.எஸ்.ஐ அதிகாரிக்கு எதிராக “மிகவும் பொறுப்பற்ற மற்றும் ஆதாரமற்ற” குற்றச்சாட்டுகளை முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சுமத்துவதாக பாகிஸ்தான் ராணுவம் எதிர்வினையாற்றியிருந்தது.

அந்த கருத்து வெளிவந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் இம்ரான் கான் போலீஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இன்று காலையில் நீதிமன்றத்துக்கு புறப்படுவதற்கு முன்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் இம்ரான் கான் வெளியிட்டிருந்த காணொளியில், என்னை கைது செய்ய முயல இரண்டு முக்கிய காரணங்கள் என்று கூறியிருந்தார்.

அதில் முதலாவதாக, தேர்தல் அறிவிக்கப்படும்போது இன்ஷா அல்லாஹ் நான் பேரணிகளை நடத்துவேன் என்பதால் என்னை பிரசாரம் செய்வதிலிருந்து தடுக்க அவர்கள் கைது செய்ய முயல்கிறார்கள்.

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம்.

அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்..

இரண்டாவதாக, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் பட்சத்தில், ஆதரவாளர்களுடன் சேர்ந்து அரசியலமைப்பை பாதுகாக்கும் வகையில் நான் மிகப்பெரிய இயக்கத்தை நடத்துவேன் என்பதாலும் இப்படி செய்ய முற்படுகின்றனர்.

என்னை ஏற்கெனவே இரண்டு முறை அந்த ஐஎஸ்ஐ உயரதிகாரி கொலை செய்ய முயன்றுள்ளார் என்று இம்ரான் கான் குற்றம்சாட்டினார்.

நீதிமன்ற வளாகத்தில் மிகப்பெரிய அளவில் அதிரடிப்படையினர், ரேஞ்சர்கள் இருப்பதாக அறிகிறேன். எனக்கு எதிராக எந்தவொரு நீதிமன்ற வழக்கு நிலுவையில் இல்லை என்றாலும் என்னை கைது செய்ய விரும்பினால், எனக்கு எதிரான கைது வாரன்ட்டை அவர்கள் காண்பிக்கட்டும். நான் மகிழ்வுடன் சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறேன் என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

காதிர் அறக்கட்டளை வழக்கு என்ன?

தற்போது இம்ரான் கான் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படும் காதிர் பல்கலைக்கழக அறக்கட்டளை வழக்கு என்பது பஞ்சாப் மாகாணத்தின் ஜீலம் பகுதியின் பாஹ்ரியா என்ற நகரில் உள்ள அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்ட நிலம் தொடர்புடையது.

இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, 2019ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி அந்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், அந்த பல்கலைக்கழக அறக்கட்டளையின் தலைவராக இருப்பதும் இம்ரான் கான். அந்த நிலத்தை தர உதவியதற்காக பஹ்ரியா நகரின் மாலிக் ரியாஸ் என்பவருக்கு 190 மில்லியன் பவுண்டுகளை இம்ரான் கான் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version