2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்காது.
அதிக ஆளணி இழப்புக்களையோ பெருமளவு சுடுகலன் பாவிப்புக்களையோ செய்யும் நிலையில் உக்ரேன் இல்லை.
இரசியாவின் நகர்வுகளைப் பார்க்கும் போது அது மேலும் நிலப்பரப்புக்களைக் கைப்பற்றுவதிலும் பார்க்க தான் ஏற்கனவே கைப்பற்றிய பிரதேசத்தை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றது.
அத்துடன் கிறிமியாவில் உள்ள துறைமுகங்கள், கடற்கலன்கள், இரசியாவில் இருந்து கிறிமியாவிற்கு கட்டப்பட்டுள்ள பாலம் ஆகியவற்றைப் பாதுகாப்பதிலும் இரசியா அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
2022 பெப்ரவரி தொடங்கிய போரின் பின்னர் 2022 செப்டம்பரில் உக்ரேனின் நிலப்பரப்பில் 27%ஐக் கைப்பற்றியிருந்த இரசியா அதன் பின் பல இடங்களில் பின்வாங்கி தற்போது 18% நிலப்பரப்பை மட்டும் வைத்திருக்கின்றது.
உக்ரேனின் வடகிழக்கில் உள்ள கார்க்கீவ் மற்றும் தெற்குப் பதியில் உள்ள கேர்சன் ஆகிய இடங்களில் இரசியப் படையினரை உக்ரேன் பின்வாங்கச் செய்துள்ளது.
சிறிய பாக்மூட் நகரை கைப்பற்ற இரசியாவின் கூலிப்படையினர் ஆறுமாதமாக முயற்ச்சி செய்தனர்.
2023 மே 9-ம் திகதிக்கு முன்னர் அதை முழுமையாக கைப்பற்றி இரண்டாம் உலகப் போர் வெற்றி விழாவில் மார்தட்டும் புட்டீனின் திட்டம் நிறைவேறமல் போய்விட்டது.
மாறாக இரசியக் கூலிப்படையைன் தளபது தனது படை மக்மூட் நகரை இரசியப் படையினரிடும் கையளித்து விட்டு வெளியேறுவதாக அறிவித்தார்.
2023 மே 10-ம் திகதி உக்ரேனியர்கள் மக்மூட் நகரின் மூன்று சதுர கிமீ நிலப்பரப்பில் இருந்து இரசியர்களைப் பின்வாங்கச் செய்துள்ளனர்.
சிறு தாக்குதல்கள் பெரும் நன்மை
இரசிய – உக்ரேன் போர் முனை அறுநூறு மைல் நீளமானதாக உள்ளது. அந்தளவு நீளமான போர் முனை உக்ரேனுக்கு ஒரு வாய்ப்பான நிலையாகும்.
அதில் எங்காவது சிறிய அளவில் உக்ரேனால் இரசியாவிற்கு அவமானம் ஏற்படக்கூடிய வகையில் தாக்குதல் செய்வது உக்ரேனுக்கு பயனுள்ளதாக அமையும்.
அத்தாக்குதல்களால் இரசிய அதிபர் புட்டீனின் நெருக்கமானவர்களிடையே உக்ரேன் மீதான சிறப்பு படை நடவடிக்கை மிகவும் விரயமானது, பயனற்றது, தொடர்ந்து நடத்த முடியாதது என்ற எண்ணத்தை ஆழமாக விதைக்கலாம்.
புட்டீனின் படைகள் மீது மிகப் பெரிய தாக்குதல்களை நடத்தினால் அவரின் எதிர்வினை எப்படி இருக்கும் எனச் சொல்ல முடியாது என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது. அதனால் புட்டீனை இரசியர்களிடமிருந்து தனிமைப் படுத்துவது அமெரிக்காவின் முக்கிய நோக்கமாக இருக்கும்.
சிறிதான வெற்றி விழா அணிவகுப்பு
2023 மே மாதம் இரசியா தனது 2-ம் உலகப் போர் வெற்றி அணிவகுப்பைச் செய்தது. வழமையாக பத்தாயிரம் முதல் பதினான்காயிரம் படையினருடன் செய்யப்படும் இந்த அணிவகுப்பு இம்முறை ஏழாயிரம் படையினருடன் செய்யப்பட்டது.
அதைப் பார்வையிடப் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. வீட்டிலிருந்து ஒளிபரப்பை பார்க்க மக்கள் பணிக்கப்பட்டனர்.
தலைநகரைத் தவிர மற்ற பல இடங்களில் அணிவகுப்பு இரத்துச் செய்யப்பட்டது. உக்ரேனிய ஆழ ஊடுருவிகளுக்கு அஞ்சி இரத்துச் செய்யப்பட்டிருக்கலாம்.
அணிவகுப்பில் ஒரே ஒரு போர்த்தாங்கி மட்டும் பாவிக்கப்பட்டது. இரசியாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானம் SU-57 பங்கு பற்றியதாக காட்டப்பட்டவை கணினியால் உருவாக்கப்பட்ட அசைவுப்படங்கள் என சில நேட்டோ நாடுகளின் ஊடகங்கள் தெரிவித்தன.
உக்ரேனியர் தமது நிலப்பரப்பை ஆக்கிரமித்திருக்கும் படையினருக்கு எதிரான தாக்குதலை எப்போது செய்வார்கள் எப்படிச் செய்வார்கள் என்பவை பெரிய கேள்விகளாக இருக்கின்றன.
உக்ரேன் செய்யவிருக்கும் தாக்குதலிற்கு “இளவேனிற்காலத் தாக்குதல்” (Spring Offensive) எனப் பெயரும் இட்டுள்ளனர்.
குளிர்காலம் முடிந்து இளவேனிற் காலத்தில் தாக்குதல் செய்யலாம் எனப் பரவலாகப் பேசப்பட்டது. குளிர்காலம் 2023 மார்ச் 20-ம் திகதியுடன் முடிவடைந்து விட்டது. ஜூன் 21-ம் திகதிவரை இளவேனிற் காலம் தொடரும். சிலர் உக்ரேன் ஏற்கனவே தாக்குதல்களைத் தொடங்கி விட்டது என்பதற்கு:
1. மார்ச் – 23-ம் திகதி Zaorizhzhia குண்டுவெடிப்பு
2. மே 2-ம் திகதி கிறிமியாவில் எரிபொருள் களஞ்சியத்தின் மீது தாக்குதல்.
3. மே 3-ம் திகதி தென் கிழக்கு இரசியாவில் Bryansk பிரதேசத்தின் தொடருந்து நிலைகள்மீது எறிகணைத் தாக்குதலும் அங்குள்ள விமானத் தளத்தின் மீது ஆளிலித்தாக்குதலும்.
ஆகிய தாக்குதல்களைச் சுட்டிக் காட்டுகின்றனர். வேறு சிலர் இவை முன்னேற்பாட்டுத் தாக்குதல்கள் மட்டுமே இரசியப் படைகளுக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தக் கூடிய தாக்குதல் இனித்தான் ஆரம்பமாகப் போகின்றது என்கின்றனர்.
hypersoniques
இரசியாவிற்கு அதிச்சிக்கு மேல் அதிர்ச்சி
உக்ரேனின் இளவேனிற்கால தாக்குதல் (Spring Offensive) ஐ தடுப்பதற்காக 2023 மே மாதம் 6-ம் திகதி உக்ரேனின் பல்வேறு நகரங்கள் மீது இரசியா பல ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
அவற்றில் ஒரு மீயுயர்வேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணை ஒன்றை உக்ரேன் அமெரிக்காவின் patriotic என்னும் வான்பாதுகாப்பு முறைமை மூலம் சுட்டு வீழ்த்தியதாக உக்ரேன் அறிவித்து உலகப் படைத்துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
மீயுயர்வேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணையை இடைமறித்து அழிக்கும் வலிமை எந்த நாட்டிடமும் இல்லை என பரவலாக நம்பப்பட்டது.
மீயுயர்வேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை உருவாக்குவதில் இரசியாவும் சீனாவும் அமெரிக்காவிலும் பார்க்க ஒரு படி மேல் உள்ளன எனவும் நம்பப்பட்டது.
அந்த அதிச்சியைத் தொடர்ந்து அமெரிக்கா $1.2 பில்லியன் உதவியை உக்ரேனுக்கு வழங்கவுள்ளது என்ற செய்தி 2023 மே 9-ம் திகதி வெளிவந்தது.
இது உக்ரேனின் நீண்ட கால வான் பாதுகாப்புக்கானது எனவும் அமெரிக்கா சொன்னது. அமெரிக்காவும் மற்ற நேட்டோ நாடுகளும் தொடர்ச்சியாக உக்ரேனுக்கு படைக்கலன்களை வழங்கிக் கொண்டிருக்க முடியாது என நம்பிய புட்டீன் இதை எப்படி எதிர் கொள்ளப்போகின்றார்?
அமெரிக்கா தனது புதிய படைக்கலன்களை உக்ரேன் போர்க்களத்தின் இரசியாவின் புதிய படைக்கலன்களுக்கு எதிராக பாவித்து தேர்வுக்கு உள்ளாக்குகின்றதா என்பது இரசியாவிற்கு இன்னும் ஒரு அதிர்ச்சி. இரசியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை அமெரிக்க patriotic சுட்டு வீழ்த்திய செய்தி மே 6ம் திகதி வெளிவந்தது
உக்ரேனின் “இளவேனிற்காலத் தாக்குதல்” (Spring Offensive) ஒரு பெரிய அதிரடித் தாக்குதலாக இருக்காது. இரசியர்கள் எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத வகையில் சிறிய பல தாக்குதல்களாக இருக்கும்.
இப்போது எதிர்த்தாக்குதல் நடக்க மாட்டாது. எமது போர் வீர ர்களை போதிய படைக்கலன்களின்றி களத்திற்கு அனுப்ப மாட்டோம் என்றார் உக்ரேனிய அதிபர்.
தங்களிடம் பதில் தாக்குதல் பற்றிய விபரங்களைக் கேட்க வேண்டாம் என்றார் உக்ரேனிய துணைப்பாதுகாப்பு அமைச்சர்.
2023 ஏப்ரல் 28-ம் திகதி உக்ரேனில் பல இடங்களில் இரசியா தாக்குதல்களைச் செய்திருந்தது. உக்ரேனின் படைக்கலக் களஞ்சியங்கள் எங்கு இருக்கின்றன எனத் தெரியாத வகையில் குடிசார் உட்-கட்டுமானங்களுக்கு நடுவில் உக்ரேன் அவற்றை மறைத்து வைத்திருக்கின்றது.
அவற்றை அழிப்பதற்கு இரசியா செய்யும் தாக்குதல்கள் பல அப்பாவி மக்களுக்கு உயிரிழப்புக்களையும் சொத்து இழப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளன.
உக்ரேனியர் தமது நிலப்பரப்பை ஆக்கிரமித்திருக்கும் படையினருக்கு எதிரான தாக்குதலை எப்போது செய்வார்கள் எப்படிச் செய்வார்கள் என்பவை பெரிய கேள்விகளாக இருக்கின்றன.
உக்ரேனியர் தமது பதிலடியை எப்போது செய்வார்கள் என்பது கால நிலையில் பெரிதும் தங்கியுள்ளது என்றார் உக்ரேனியப் படைத்தளபதி.
பனி உருகி சேறாக இருக்கும் போது படைக்கலன்களையும் வண்டிகளையும் நகர்த்துவது சிரமமாக இருக்கும். அதனால் இளவேனிற் காலம் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாகியும் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படவில்லை.
உக்ரேனின் தாக்குதல் Zaporizhzhiaவைக் கைப்பற்றி பின்னர் அங்கிருந்து கிறிமியாவிற்கான வழங்கற்பாதைகளைத் துண்டிப்பதாக அமையலாம் என சிலர் எதிர்பார்க்கின்றனர்.
-வேல்தர்மா-