“சிங்களத் தலைமைகளின் ஊடாக இந்தியாவின் நலன்களை உறுதிப்படுத்த முடியாத போது, தமிழ் தலைமைகளை வளைத்துப் போட்டு, தமிழ் அமைப்புகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்து, காரியம் சாதித்துக் கொண்டது இந்தியா”

வடக்கு, கிழக்கில் பௌத்தமயமாக்கல் தொடர்ந்தால், இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகளின் உதவியைக் கோரப் போவதாகக் கூறியிருக்கிறார், பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன்.

ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியான அவரது இந்தக் கருத்து, பரவலாக கவனிக்கப்பட்ட ஒன்று.

அதேசெய்தியில், பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன், மாறுபட்ட கருத்தை கூறியிருக்கிறார்.

பௌத்தமயமாக்கலுக்கு எதிராக இந்தியா எதையும் செய்யாது, செய்வதற்கு வாய்ப்பில்லை என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கையில் தமிழர்களும், தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடமான வடக்கு, கிழக்கும், பௌத்தமயமாக்கல் என்ற பாரிய நெருக்கடிக்குள் சி்க்கியிருக்கின்ற தருணம் இதுவாகும்.

இந்தச் சிக்கலில் இருந்து விடுபடுவது எப்படி, இந்தப் பிரச்சினையைத் தீர்க்கின்ற வழி என்ன என்று தெரியாமல் தமிழர் தரப்பு திணறிக் கொண்டிருக்கின்ற நிலையில் தான், இந்தியாவிலுள்ள இந்து அமைப்புகளை நாடுகின்ற வழியை பற்றிப் பேசியிருக்கிறார் சி.வி.விக்னேஸ்வரன்.

இலங்கைப் பிரச்சினையுடன் நேரடியாகத் தொடர்புபட்ட நாடு இந்தியா.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தாங்கள் நேரடியாகத் தலையிடவில்லை என்று கூறினாலும், இந்தியாவின் ஈடுபாட்டையும், தலையீட்டையும் தவிர்க்க முடியாது என்பது கடந்த 75 ஆண்டுகளில் தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் இருக்கின்ற தொப்புள் கொடி உறவு, வடஇந்தியாவுக்கும் தென்னிலங்கைக்கும் இடையில் காணப்படும் பௌத்த, கலாசார உறவு என்பனவும், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் அதன் அரசியல் கொள்கைகளுடன் இலங்கை நேரடியாகத் தொடர்புபட்டிருப்பதாலும், இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையீடுகளும், செல்வாக்கும் தவிர்க்க முடியாததாக இருந்து வந்திருக்கிறது.

அந்த செல்வாக்கு குறையும் போது, அதனை சமநிலைப்படுத்தும் வகையில், இந்தியா மாற்று நகர்வு ஒன்றை முன்னெடுக்கவும் தயங்கியதில்லை.

குறிப்பாக, சிங்களத் தலைமைகளின் ஊடாக இந்தியாவின் நலன்களை உறுதிப்படுத்த முடியாத போது, தமிழ் தலைமைகளை வளைத்துப் போட்டு, தமிழ் அமைப்புகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்து, காரியம் சாதித்துக் கொண்டது இந்தியா.

பின்னர், இந்திய – இலங்கை உடன்பாடு ஏற்பட்டதும், தமிழ் அமைப்புகளை தானே கட்டிப் போட முயன்றது. அடங்க மறுத்த புலிகளையும் அழிக்க முற்பட்டது.

ஆக, இலங்கையில் தனது நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தலையீடு செய்து வந்திருக்கும் இந்தியா, இலங்கை பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களில் இருந்த போது உதவிகளை வழங்கவும் தவறவில்லை.

1971 இல் ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது, இந்தியா 150 கூர்க்கா படையினரை அனுப்பி கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது.

மூன்று போர்க்கப்பல்களை அனுப்பி, கொழும்பு துறைமுகத்தின் பாதுகாப்பை பலப்படுத்தியது.

அதுபோலவே, அண்மையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதும், இந்தியா 4 பில்லியன் டொலர் வரை வழங்கி, நாடு முற்றாக மூழ்கிப் போகாத வகையில் காப்பாற்றியது.

இதையெல்லாம் இலங்கை மீது கொண்ட கரிசனை, பற்றினால் மாத்திரம் இந்தியா செய்யவில்லை, அதற்கு அப்பால், இலங்கைக்கு உதவுவது என்ற பெயரில், வேறு நாடுகள் கால் வைத்து விடக் கூடாது என்ற நோக்கத்திலும் தான் இந்தியா தலையிட்டது.

இந்தியா தனது நலன்களை ஒட்டியே இதுவரை செயற்பட்டு வந்திருக்கும் நிலையில், அவ்வாறான நலன்களை உதாசீனப்படுத்தி விட்டு இந்தியா வேறெந்த தலையீட்டையும் செய்ய முனையாது.

தமிழர் பிரச்சினை தீவிரமடைந்த போது கூட, இந்தியா இரட்டை அணுகுமுறையையே கையாண்டது.

ஒரு பக்கத்தில் இலங்கையின் ஆட்சியாளர்களை தன்வசப்படுத்த முயன்றது. இன்னொரு பக்கம் தமிழ்ப் போராளிகளை அரவணைத்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முனைந்தது.

இலங்கை விவகாரத்தில் எந்த முடிவை எடுக்கும் போதும், அது இரண்டுபட்டிருக்கும் தரப்புகளில் ஒன்றை நோக்கிச் சாய்ந்திருப்பதை இந்தியா விரும்புவதில்லை.

அது தனக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறது புதுடில்லியின் வெளிவிவகாரக் கொள்கை.

2009 இறுதிப் போருக்குப் பின்னர் இந்தியா மீது ஈழத் தமிழர்களுக்கு ஆழமான வருத்தமும், ஏமாற்றங்களும் இருந்த நிலையில், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்க முன்வந்தது.

அது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் எண்ணம் மாத்திரமன்றி, தமிழர்கள் இந்தியா மீது கொண்ட வெறுப்பை சமநிலைப்படுத்தும் ஒரு நகர்வும் கூட.

இப்படிப்பட்ட நிலையில் பௌத்தமயமாக்கலுக்கு எதிராக இந்தியாவிலுள்ள இந்து அமைப்புகளின் உதவியைக் கோருவதும், அவர்கள் ஊடாக இந்திய அரசாங்கத்தை அணுகுவதும் எந்தளவுக்கு சாத்தியப்படும் என்ற கேள்வி எழுகிறது.

இந்து அமைப்புகள் தற்போதைய இந்திய அரசாங்கத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பது உண்மை.

பா.ஜ.க. அரசாங்கத்தின் பின்னால், ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவ அமைப்புகள் தான் இருப்பதாகவும், அவற்றின் விருப்பத்துக்கு ஏற்பவே ஆட்சி பெறுவதாகவும் இந்திய எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றன.

இந்திய அரசாங்கத்தில் இந்துத்துவ அமைப்புகளின் ஆதிக்கம் இருந்தாலும், அந்த அமைப்புகள், பௌத்தமயமாக்கலை எதிர்க்க முற்படுமா என்பது சந்தேகம் தான்.

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் பௌத்த மதம் ஆழமாகப் பரவியிருந்தது. பாண்டிய, பல்லவர் அரசுகள் கோலோச்சிய காலங்களில் பௌத்தம் அங்கு ஆதிக்கம் செலுத்தியது.

அப்பர், சுந்தரர், சம்பந்தர் போன்ற சைவசமய நாயன்மார்கள் பௌத்த ஆதிக்கத்தை உடைத்து,  சைவசமயத்தின் மீள் எழுச்சிக்கு வித்திட்டனர்.

அங்கே பௌத்தமயமாக்கலுக்கு எதிராக சைவப் பெரியார்கள் செயற்பட்டது போன்று, இலங்கையில் பௌத்தமயமாக்கலுக்கு எதிராக இந்தியா செயற்படும் என்று எதிர்பார்க்க முடியாது.

அதற்கு முக்கியமான ஒரு காரணம், பௌத்தமும் இந்து மதத்தின் ஒரு பகுதி தான் என்று வட இந்தியர்கள் பலர் வலுவாக நம்புகின்றனர்.

கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் எழுச்சியைத் தான், இந்தியா தீவிரமான விடயமாக பார்க்கிறது. அவற்றின் மதமாற்ற பரவலைத் தடுக்கவே முற்படுகிறது.

இவ்வாறான சூழலில், பௌத்தமயமாக்கலை இந்தியா அச்சுறுத்தலாக கருதவில்லை. மனோகணேசன் கூறுகின்ற இன்னொரு காரணமும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது தான்.

பௌத்தம் இந்தியாவில் தோன்றிய ஒரு மதம். அத்தகைய மதம், இலங்கையிலும் பிறநாடுகளிலும் பரவி வருவதை தடுப்பதற்கு இந்தியா துணை போகாது என்பது அவரது வாதம்.

அது சரியானதும் கூட.

இலங்கையின் பௌத்த மத வளர்ச்சிக்கும், கலாசார, பண்பாட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இந்தியா கூட்டாக முயற்சித்து வருவது தெரிந்ததே.

அதற்காக பெருமளவு உதவிகளையும் வழங்கியிருக்கிறது இந்தியா.

இவ்வாறான நிலையில், இலங்கையில் பௌத்தமயமாக்கலை இந்தியா எதிர்க்கும், அல்லது தடுக்கும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் பௌத்தமயமாக்கலை தடுப்பதற்கு இந்தியாவின் இந்து அமைப்புகளுடன் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக கூறியிருக்கிறார்.

ஆனால், அந்தப் பேச்சுக்கள் எதுவும், தீர்க்கமான கட்டத்தை அடையவில்லை என்பதை அவரது கருத்துக்களில் இருந்தே உணரமுடிகிறது.

சி.வி.விக்னேஸ்வரன் அரசியலுக்கு வந்து 10 ஆண்டுகளாகி விட்டன.

தமிழருக்கு எதிரான சிங்கள பௌத்த பேரினவாத போக்கு இன்று நேற்றல்ல. அவர் அரசியலுக்கு வர முன்னரும் இருந்தது. இப்போதும் இருக்கிறது.

இவ்வாறான நிலையில் பௌத்தமயமாக்கலை தடுக்க அவர் தனக்கு செல்வாக்கு இருப்பதாக கருதினால், இந்தளவுக்கும் இந்தியாவில் அதனைப் பயன்படுத்த முயன்றிருக்க வேண்டும்.

இனிமேலும் தொடர்ந்தால் இந்தியாவிலுள்ள இந்து அமைப்புகளின் உதவியைக் கோர நேரிடும் என்று எச்சரித்துக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை.

ஏனென்றால் வெள்ளம் எப்போதோ தலைக்கு மேல் வந்து விட்டது.

-ஹரிகரன்

Share.
Leave A Reply

Exit mobile version