கப்பலின் மேல்தளத்தில் நாட்களை கடத்தும் புலம்பெயர் இலங்கை தமிழர்கள்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு, புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு நரகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது.
இந்திய பெருங்கடல் பகுதியில் சிக்கிய மீன்பிடிப் படகிலிருந்து மீட்கப்பட்ட டஜன் கணக்கான புலம்பெயர்ந்தோர், அந்தப் பகுதியில் அமைந்துள்ள பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு தீவில் மாதக்கணக்கில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்த வெப்பமண்டல தீவிலிருந்து அவர்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல விரும்பினாலும், அங்குள்ள அசாதாரண சட்ட நடைமுறைகள் அவர்களை தீவை விட்டு வெளியேற முடியாதபடி செய்துள்ளன.
இந்த நிலை, அவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் உதவியற்றவர்களாக உணர்கின்றனர்.
இலங்கை தமிழர்களுக்கு நரகத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் அந்தத் தீவின் பெயர், டியாகோ கார்சியா. அங்கு சிக்கித் தவிக்கும் இலங்கை தமிழர்கள் (புலம்பெயர்ந்தோர்) அனைவரின் பெயர்களும் இந்தக் கட்டுரையில் மாற்றப்பட்டுள்ளன.
திசைமாறிய பயணம்
கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஒரு நாள் அதிகாலை வேளையில் மீன்பிடிப் படகு ஒன்று டியாகோ கார்சியா தீவுக்கு அருகில் சிக்கியது.
பிரிட்டன்- அமெரிக்க ராணுவத்தின் ரகசிய தளம் அமைந்துள்ள அந்த தீவு, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இருந்து பல நூறு மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது என்பதுடன், முன் அனுமதி பெறாத நபர்கள் அந்த பகுதிக்குள் பிரவேசிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த எல்லைக்குள் நுழைந்த மீன்பிடி படகு குறித்த விசாரணையில், அந்த தீவின் நிர்வாகம் உடனடியாக இறங்கியது.
அந்த படகில் மொத்தம் 89 இலங்கை தமிழர்கள் இருந்ததும், அவர்கள் உள்நாட்டில் அனுபவித்த பல்வேறு இன்னல்களில் இருந்து தப்பிப் பிழைத்து அடைக்கலம் தேடி வேறு நாட்டிற்கு செல்வதும் தெரிய வந்தது. அத்துடன் அவர்கள் டியாகோ கார்சியா தீவில் தரையிறங்க விரும்பவில்லை என்பதும் தெரிந்தது.
தஞ்சம் புகுவதற்காக கனடாவை நோக்கி அவர்கள் பயணித்து கொண்டிருந்த போது, மோசமாக மாறிய வானிலையும், படகின் இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறும் அவர்களின் பயணத்தை திசைத் திருப்பின.
படகு ஆபத்தில் சிக்கியதால், நாங்கள் கரை ஒதுங்க அருகில் ஏதேனும் பாதுகாப்பான இடம் கிடைக்குமா என்று தேட ஆரம்பித்தோம். “அப்போது சிறிது தொலைவில் மெல்லிய வெளிச்சம் தென்படவே, டியாகோ கார்சியா தீவை நோக்கி பயணித்தோம்” என்று படகில் இருந்த ஒரு நபர் பிபிசியிடம் கூறினார்.
பிரிட்டன் கடற்படை கப்பல், படகை பத்திரமாக கரை ஒதுங்க செய்தது. மேலும் அதில் இருந்த அனைவரும் ஓர் தற்காலிக இடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
20 மாதங்களுக்கு முன் இந்த சம்பவம் நிகழ்ந்தது. “ஆரம்பத்தில் படகின் இயந்திரத்தை பழுது பார்க்கும் வாய்ப்பு குறித்து மட்டும் ஆராய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், புலம் பெயர்ந்த குழுவினர், டியாகோ கார்சியாவில் இருந்து வேறொரு நாட்டிற்கு தஞ்சம் புகுவதற்கு தேவையான முயற்சிகளை எடுக்க தங்களை வலியுறுத்தலாம் என்ற அனுமானத்தையும் நிராகரிக்க முடியாது” என்றும் தீவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகளின் அனுமானம் அடுத்த நாளே நிஜமானது. தீவில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கை தமிழர்கள், அங்கிருந்த பிரிட்டிஷ் கடற்படை தளபதியிடம் ஓர் கடிதத்தை தந்தனர். அதில், “உள்நாட்டில் கடும் கொடுமைகளுக்கு ஆளாகி வந்ததால், 18 நாட்களுக்கு முன் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருந்து இந்தப் பயணத்தை தொடங்கினோம்; நாங்கள் பாதுகாப்பான ஒரு நாட்டிற்கு செல்ல விரும்புகிறோம்” என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2009 இல் இலங்கை ராணுவத்தினருடன் நடைபெற்ற உள்நாட்டு போரில் வீழ்த்தப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கூறியதன் விளைவாக தாங்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாக அவர்களில் பலர் கூறினர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் சிலர் குற்றம்சாட்டினர்.
முதல்முறையாக நிகழ்ந்த சம்பவம்
இதனிடையே, வெளிநாட்டு பிராந்தியங்களுக்கான பிரிட்டன் இயக்குநரான பால் கேண்ட்லர் வெளியிட்டிருந்த குறிப்பில், “ பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் பகுதியில் (BIOT) இதுபோன்றதொரு தஞ்சம் கோரும் சம்பவம் முதன்முறையாக நிகழ்ந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் இலங்கை தமிழர்கள் குழுவின் வருகையை “எதிர்பாராத வருகை” எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து பிரிட்டன் அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது என்றும், நிலைமைக்கு விரைந்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றும் பால் கேண்ட்லர் தமது குறிப்பில் தெரிவித்திருந்தார்.
“டியாகோ கார்சியா தீவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்கள் குழு தற்போதைக்கு வெளி உலகுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் நாளடைவில் இந்தச் செய்தி பரவ வாய்ப்புள்ளது” என்றும் கேண்டலரின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நரகமாக மாறிய தீவு
இதற்கிடையே, புகலிடம் கோரி எதிர்பாராத விதமாக தீவிற்கு வந்தவர்களுக்கு, தங்களின் யதார்த்த சூழ்நிலை போகப்போக புரிய ஆரம்பித்தது.
“ஆரம்பத்தில் இங்கு நான் மகிழ்ச்சியாகவும். உயிர் தப்பியதாகவும் உணர்ந்தேன். முகாமில் உணவு அளிக்கப்பட்டது. அதுநாள் வரை அனுபவித்து வந்த கொடுமைகளில் இருந்து விடுபட்டதாகவும் உணர்ந்தேன்” என்று முகாமில் இருந்த லெக்ஷனி என்ற இலங்கை தமிழரான பெண் ஒருவர் கடந்த மாதம் பிபிசியிடம் கூறி இருந்தார்.
ஆனால் தங்களுக்கு அடைக்கலம் அளித்த இந்த வெப்ப மண்டல தீவு விரைவில் நரகமாக மாறியது என்றும் அவர் கூறினார்.
தன்னுடன் படகில் பயணித்து, தீவு முகாமில் தங்கியிருந்த ஒரு நபரால் தான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என்று அந்த பெண் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
“அப்போது நான் கதறி அழுதேன். ஆனால் யாரும் உதவிக்கு வரவில்லை” என்று லெக்ஷனி கூறினார்.
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து, அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்க விரும்பியதாக கூறிய அவர், ’ஆனால், பாலியல் வன்கொடுமையின் போது தான் உடுத்தியிருந்த துணியை துவைத்து விட்டதன் விளைவாக ஆதாரத்தை சேகரிப்பது கடினம் என்று தான் அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தம்மை பாலியல் வன்புணர்வு செய்த நபரை வேறு கூடாரத்திற்கு மாற்ற வேண்டும் என்ற தனது கோரிக்கையை அதிகாரிகள் ஏற்கும் வரை, கிட்டத்தட்ட ஒரு வாரம் அந்த நபருடனே ஒரே கூடாரத்தில் தாமும் தங்கியிருக்க வேண்டியிருந்தது என்று பரிதாபமாகக் கூறினார் லெக்ஷனி.
ஆனால் பிரிட்டன் அரசு மற்றும் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் பிராந்திய நிர்வாகங்கள் (பிஐஓடி), இந்த குற்றச்சாட்டு தொடர்பான கோரிக்கைகளுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.
“முகாமில் நிலவிய சூழல் காரணமாக, தாங்கள் அல்லது தங்களுக்கு தெரிந்தவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகினர். அதன் விளைவாக அவர்கள் தற்கொலைக்கு முயன்றனர் அல்லது தங்களை தாங்களே காயப்படுத்தி கொண்டனர். கூர்மையான ஆயுதங்களை விழுங்கியதன் விளைவாக சிலர் மூச்சுத் திணறலுக்கும் ஆளாகினர்” என்று முகாமில் இருந்த லெக்ஷனி மற்றும் சிலர் பிபிசியிடம் தெரிவித்தனர்.
முகாமிற்குள் குறைந்தது 12 தற்கொலை முயற்சிகள் நடந்திருப்பது குறித்தும், குறைந்தபட்சம் இரண்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் எழுந்தது தொடர்பாகவும் நிர்வாகிகள் நன்கு அறிவார்கள் என்று புலம்பெயர்ந்தோர் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
“நாங்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்வாக உணர்கிறோம். இங்கு நாங்கள் உயிர்பற்ற ஓர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். என்னை நான் நடைப்பிணமாக உணர்கிறேன். இதன் விளைவாக இரண்டு முறை என்னை நானே காயப்படுத்திக் கொண்டேன்” என்று பிபிசியிடம் கூறினார் டியாகோ கார்சியா தீவு முகாமில் இருக்கும் மற்றொரு புலம்பெயர்ந்த நபரான விதுஷன்.
பாதுகாப்பு குறித்த தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, தான் அனைத்து நம்பிக்கையையும் இழந்து விட்டதாகவும், இத்துடன் வாழ்க்கையை முடித்து கொள்ள முடிவு செய்ததாகவும் கூறினார் முகாமில் இருந்த மற்றொரு நபரான ஆதவன்.
தமது கணவரும் தற்கொலைக்கு முயற்சித்ததாக, சாந்தி என்ற மற்றொரு பெண் கூறினார்.
கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு விலங்கை போல நான் இங்கு வாழ விரும்பவில்லை என்றும் அவர் மனம் நொந்து கூறினார்.
அதிகாரிகள் மிரட்டல்
2021 இல் இலங்கை ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தலுக்கு தான் ஆளாகி இருந்ததாக குற்றம்சாட்டி, மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவேன் என்று முகாமில் இருந்த ஓர் அதிகாரி மிரட்டினார். அதன் விளைவாக தான் தற்கொலைக்குத் தூண்டப்பட்டேன் என்று லக்ஷனி குற்றம்சாட்டினார்.
அவரது இந்த குற்றச்சாட்டு குறித்து, தீவில் உள்ள இலங்கை தமிழர்களின் முகாமிற்கு பாதுகாப்பு அளித்துவரும் பிரிட்டன் அரசு மற்றும் ‘G4S’ தனியார் நிறுவன நிர்வாகங்கள் பதிலளிக்க மறுத்து விட்டன.
தீவு முகாமில் உள்ள புலம்பெயர்ந்தவர்களை தங்களது அதிகாரிகள் எல்லா நேரங்களிலும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தி வருகின்றனர் என்று G4S நிறுவன நி்ர்வாகம் தெரிவித்திருந்தது.
பிஐஓடி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோரின் நலன் மற்றும் பாதுகாப்பு மிகவும் முக்கியம். தாங்கள் தரக்குறைவாக நடத்தப்படுவதாக அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் தீவிரமாக கருத்தில் கொள்ளப்பட்டு, அவை குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்று பிரிட்டன் அரசின் செய்தித் தொடர்பாளர் உறுதியளித்திருந்தார்.
பிஐஓடி நிர்வாகம் அங்கு முகாமில் உள்ளவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
தீவு முகாமில் உண்ணாவிரத போராட்டங்களும் நடந்துள்ளன என்றும், இதில் குழந்தைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அரசு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
செல்ஃபோன்கள் பறிமுதல்
முகாமில் இருந்த புலம்பெயர்ந்தோரின் செல்ஃபோன்கள் மற்றும் தொலைபேசி வசதிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்களுக்கு மருத்துவ வசதி வேண்டாம் என்று தனிநபர்கள் எழுத்துபூர்வமாக விருப்பத்தை தெரிவிக்காத பட்சத்தில், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மருத்துவ சிகிச்சைகளும் திரும்பப் பெறப்பட்டன என்று முகாமில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் தரப்பு வழக்கறிஞர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் திட்டவட்டமாக மறுத்தது பிஐஓடி நிர்வாகம். ஓர் உண்ணாவிரத போராட்டத்தின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக முகாமில் இருந்து கூர்மையான ஆயுதங்கள் அகற்றப்பட்டன. இதேபோன்று, முகாமில் இருப்பவர்கள் தங்களை தாங்களே காயப்படுத்தி கொள்வதை தடுக்கும் விதத்தில்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று பிஐஓடி நிர்வாகம் விளக்கம் அளித்தது.
ராணுவ தளமாக திகழும் டியாகோ கார்சியா தீவு, புகலிடம் கோரி வருவோரை தங்க வைக்கும் இடம் இல்லை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ளலாம்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள டியாகோ கார்சியா உள்ளிட்ட தீவுகளை உள்ளடக்கிய சாக்கோஸ் தீவை தனது காலனி ஆதிக்கத்தில் இருந்த மொரிஷியஸ் வசமிருந்து 1965 இல் பிரிட்டன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக, டியாகோ கார்சியா தீவில் ராணுவ தளம் அமைப்பதற்காக அங்கிருந்து 1000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஆனால் ,1968 இல் மொரிஷியஸ் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. அதன்பின் இந்த தீவுகளை பராமரித்து வரும் மொரிஷியஸ் அரசு, இந்த தீவுகள் தங்களுக்கு சொந்தமானவை என்றும் உரிமை கொண்டாடி வருகிறது. ஐ.நா. நீதிமன்றமும் இந்த பிராந்தியத்தில் பிரிட்டன் ஆளுகை செலுத்தி வருவது சட்டவிரோதம் என்றும், இந்த நடவடிக்கை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், சாக்கோஸ் தீவுகள் விவகாரத்தில் சர்வதேச அழுத்தத்தை விரும்பாத பிரிட்டன், வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு இறுதிவரை கூறி வந்தது.
அமெரிக்காவின் ஆளுகை
சில தசாப்தங்களாக ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்த, அமெரிக்க போர் விமானங்கள் டியாகோ கார்சியா தீவில் உள்ள ராணுவ தளத்தை பயன்படுத்தி வருகின்றன. அத்துடன் பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படுபவர்களை அமெரிக்க ராணுவம் விசாரிக்கும் இடமாகவும் இத்தீவு திகழ்கிறது.
டியாகோ கார்சியா தீவு முகாம் முன்பு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை தனிமைப்படுத்தும் முகாமாக பயன்படுத்தப்பட்டு வந்தது என்று லண்டன் நீதிமன்றத்தில் பிரிட்டன் அரசு தெரிவித்திருந்தது.
தற்போது இந்த முகாம், புலம்பெயர்ந்தவர்களுக்கான முகாமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முகாம் பகுதியைச் சுற்றி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. முகாமிற்குள் அடிப்படை மருத்துவ வசதிகள் மற்றும் சிற்றுண்டி சாலை (கேன்டீன்) வசதியும் உள்ளது.
கூண்டு கிளிகள்
ஆனால், “ நாங்கள் கூண்டில் அடைபட்ட கிளிகளாய், எவ்வித சுதந்திரமும் இன்றி இங்கு வாழ்ந்து வருகிறோம்”என்கிறார் முகாமில் உள்ள சாந்தி.
ஓராண்டுக்கு முன்பு வரை முகாமில் இருப்போருக்கு அடிப்படை கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த நேரத்தில் எலிகளின் தொல்லை காரணமாக வகுப்புகள் பெரும்பாலும் முகாமிற்கு வெளியே திறந்த வெளியில் தான் நடைபெறும் என்று முகாமில் வசிப்போர் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
முகாமில் இருந்த புலம்பெயர்ந்தோர்களில் சிலர் தங்களது கோரிக்கையை கைவிட்டு அல்லது நிராகரிக்கப்பட்ட பின்னர் வீடு திரும்பியுள்ளனர். இன்னும் பலர் தஞ்சம் கோரி, பிரான்ஸ் நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட இந்தியப் பெருங்கடல் தீவான ரீயூனியனுக்கு சென்றுள்ளனர் என்று தீவு முகாமில் இருக்கும் இலங்கை தமிழர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.
தற்போது மீதமுள்ள 60 இலங்கை தமிழர்கள் தங்களின் தலைவிதியை தீர்மானிக்கும் முடிவுக்காக டியாகோ கார்சியா தீவு முகாமில் இன்னமும் காத்திருக்கின்றனர்.
சர்வதேச சட்டங்கள் மீறப்படுகிறதா?
அகதிகளை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான சர்வதேச சட்டங்களில் பிரிட்டன் கையெழுத்து இட்டுள்ளது. ஆனாலும், இந்த சட்டங்கள் பிஐஓடி பிராந்தியத்திற்கு பொருந்தாதது. ஏனெனில் இந்த பிராந்தியம் அரசியலமைப்பு ரீதியாக வேறுபட்டது மற்றும் பிரிட்டனில் இருந்து தனியானது என்று பிரிட்டன் அரசு கூறி வருகிறது.
பல்வேறு இன்னல்களை அனுபவித்து, மனிதாபிமானமற்ற முறையிலும் நடத்தப்படும் நாட்டில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் அதே நாட்டிற்கு திருப்பி அனுப்பக் கூடாது என்ற கருத்தின் அடிப்படையில், டியாகோ கார்சியா தீவு முகாமில் உள்ள இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதா அல்லது பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு அனுப்புவதா என்பதை தீர்மானிக்க தனி செயல் திட்டம் நிறுவப்பட்டுள்ளது.
ஆனால் இந்த செயல் திட்டம், அகதிகளுக்கான சட்டத்திற்கு சவால் விடுவதாக இருப்பதாக கூறும் வழக்கறிஞர் டிசா கிரிகோரி, இது அடிப்படையில் நியாயமற்ற செயல் என்றும் விமர்சித்துள்ளார்.
லண்டனில் அவர் பணிபுரியும் லீ டே நிறுவனம், புகலிடம் கோரி, டியாகோ கார்சியா தீவில் தவித்து வருபவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.
பாதுகாப்பான மூன்றாவது நாட்டை பிரிட்டன் அரசாங்கம் இன்னும் அடையாளம் காணாததால் முகாமில் இருப்பவர்களின் வாழ்க்கை நகரமாக்கப்பட்டுள்ளது என்று டிசா கிரிகோரி குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே, பிஐஓடி நிர்வாகம், அதன் சட்டத்திற்கு உட்பட்டும், சர்வதேச சட்ட விதிகளுக்கு ஏற்பவும் தீவு முகாமில் உள்ள புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பு கோரிக்கைகள் பரிசீலித்து வருகிறது என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
ஐநா கவலை
டியாகோ கார்சியாவில் உள்ள முகாமில் நிலவும் மோசமான சுகாதார நிலைமை தொடர்பான அறிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பின் (UKHCR) பிரிட்டன் அலுவலகம் பிபிசியிடம் கவலை தெரிவித்துள்ளது.
“பிரிட்டனின் கட்டுப்பாட்டில் உள்ள தீவில் தஞ்சம் அடைந்துள்ளவர்களின் நலன்களை உறுதி செய்வதற்கான அனைத்து அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அத்துடன் இவர்களின் பாதுகாப்பை பிரிட்டன் அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரிட்டன் வழக்கறிஞரும், தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளருமான இமைய்லி மெக்டோனல் அண்மையில் வலியுறுத்தி இருந்தார்.
பிரிட்டன் அரசின் அதிரடி முடிவு
டியாகோ கார்சியாவில் தஞ்சம் புகுந்துள்ளவர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொள்ள போவதில்லை என்று பிரிட்டன் முடிவு செய்துள்ளதாக வழக்கறிஞர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இந்த தீவில் தஞ்சம் புகுந்த தமிழர்களில் மூன்று பேர் தற்போது மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தற்கொலை முயற்சி மற்றும் தங்களை தாங்களே காயப்படுத்தி கொண்ட குற்றச்சாட்டுகளின் காரணமாக, அவர்கள் டியாகோ கார்சியாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். என்று பிரிட்டன் விளக்கம் அளித்துள்ளது.
ருவாண்டாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ள மூன்று பேரில் ஒருவருக்கு கடந்த மாதம் பிஐஓடி நிர்வாகம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. பிபிசியின் பார்வைக்கு கிடைத்துள்ள அந்த கடிதத்தில், “ ருவாண்டாவில் மருத்துவத்துக்கான செலவுடன், அங்கு தனியார் விடுதிகளில் தங்குவதற்கான செலவையும் பிஐஓடி நிர்வாகம் ஏற்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த யோசனை உங்களுக்கு திருப்தி அளிக்காதபட்சத்தில், நீங்கள் மீண்டும் டியாகோ கார்சியாவுக்கு திரும்புவதற்கு ஏற்பாடு செய்யப்படும். தற்போதைய சூழலில் உங்களை வேறு நாட்டிற்கு அனுப்ப வழிகள் எதுவும் இல்லை” என்று அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு தங்களை அனுப்பும்படி கோரியிருந்த இத்தீவில் தஞ்சம் அடைந்துள்ள நான்கு பேரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக கோரிக்கையாளர்களில் ஒருவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன் பிஐஓடி நிர்வாகம் அனுப்பியிருந்த கடிதம் பிபிசியின் கைக்கு கிடைத்துள்ளது. அதில், “உங்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீடிக்கும் இழுபறி
இந்த விவகாரம் தொடர்பாக பிபிசிக்கு அண்மையில் கிடைத்துள்ள அறிக்கையில், “டியாகோ கார்சியாவில் தஞ்சம் அடைந்துள்ள புலம்பெயர்ந்தோரின் தற்போதைய நிலைமையை மாற்ற, நீண்ட கால தீர்வு காணும் நோக்கில், பிஐஓடி நிர்வாக்கத்துடன் பிரிட்டன் அரசு அயராது உழைத்து வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால்,டியாகோ கார்சியா தீவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்களை, பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு அனுப்புவதற்கான தெளிவான காலக்கெடு வரையறுக்கப்படாமல் உள்ளதும், இந்த விவகாரத்தில் உள்ள சட்ட சிக்கலும் இவர்களின் நிலையை தொடர்ந்து இழுபறியாகவே வைத்திருக்கக்கூடும்.
“20 மாதங்கள் நீண்ட காத்திருப்புக்கு பிறகு நாங்கள் அனைவரும் நம்பிக்கை இழந்துவிட்டோம்” என்று விரக்தியுடன் கூறுகிறார் டியாகோ கார்சியா தீவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர் ஒருவர்.