பெங்களூரின் பிரபல, சுரங்க அகழ்வு தொழிலதிபரான சையத் சமீர் உசைன், தனது பிலிப்பைன்ஸ் நாட்டு சுரங்க அகழ்வின் போது கண்டு பிடித்த திரிசூலம் மற்றும் வஜ்ராயுதமானது பல ஆயிரம் வருடங்கள் பழமையானது என இந்திய தொல்லியல் துறை உறுதி செய்துள்ளது. சுமார் ஏழு வருடங்கள் இடம்பெற்ற இந்த ஆய்வின் முடிவில் திரிசூலமானது 10 ஆயிரம் வருடங்கள் பழமையானது என்றும் வஜ்ராயுதம் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என புதுடெல்லியிலுள்ள தொல்லியல் துறை உறுதி செய்துள்ளது.
இதன் மூலம் பிலிப்பன்ஸில் சிவ வழிபாடுகள் இடம்பெற்றமைக்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் மேலும் பல சிவசின்னங்கள் கண்டு பிடிக்கப்படலாம் என்றும் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
அதை விட சையத் சமீர் உசைன் இஸ்லாம் சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சைவ சமய சின்னங்களை மிகவும் பாதுகாப்பாக இந்தியாவுக்கு கொண்டு வந்து சேர்த்தமை அவரது உயரிய பண்பையும் இஸ்லாம் மதத்தின் பெருமைகளையும் உலக வாழ் இந்துக்களுக்கு அறியச்செய்துள்ளதாகவும் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சையத் சமூர் உசைன் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபராவார். இவர் சுரங்கங்களிலிருந்து இரும்புத் தாது மற்றும் தங்கம் அகழ்தல் தொழிலை செய்து வருபவராவார்.
இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் சுரங்க அகழ்வு தொழிலில் இணைந்து கொண்டிருந்தார்.
2015 ஆம் ஆண்டு மே 5 ஆம் திகதி மேற்படி பிலிப்பைன்ஸ் நாட்டில் தனது சுரங்கத்தில் 200 அடி ஆழத்தில் அகழ்வு பணிகளை மேற்கொண்டிருந்த போது சிவனின் திரிசூலம் ஒன்றும் இந்திரனின் ஆயுதமுமான வஜ்ராயுதமும் இவருக்கு கிடைத்துள்ளன.
அது எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பதை இவரால் மதிப்பிட முடியவில்லை. எனினும் இவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதால் இது சைவர்களின் வழிபாட்டுக்குரிய பொருட்கள் என்பதை அறிந்திருக்கின்றார். இந்த வடிவங்களை அவர் இணையத்தின் மூலம் தேடி உறுதிபடுத்தியுள்ளார்.
இதன் தொன்மையை அறிய வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு எழுந்துள்ளது. அதன் படி அவற்றை பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் அனுமதியுடன் மிகவும் பத்திரமாக இந்தியாவுக்கு எடுத்து வந்துள்ளார்.
இந்திய தொல்லியல் துறைக்கு பொறுப்பான மத்திய அமைச்சிடம் அனுமதி பெற்று இதை புது டெல்லியில் அமைந்துள்ள தொல்லியல் துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
தொல்லியல் துறையின் பழங்கால பொருட்களுக்கு பொறுப்பான பதிவாளர் அஞ்சனி முன்ஷி என்பவர் இதை பொறுப்பெடுத்து தொல்லியல் ஆய்வுக்கு பதிவு செய்துள்ளார்.
எனினும் இந்த திரிசூலமும் வஜ்ராயுதமும் எத்தனை வருடங்கள் பழமையானவை என்பதை இந்திய தொல்லியலாளர்களால் உடனடியாக கண்டு பிடிக்க முடியவில்லை. இதற்காக அவர்கள் ஏழு ஆண்டுகளை செலவிட்டுள்ளனர்.
கடந்த 7 ஆண்டுகளாக நடந்த ஆய்வில் சிவனின் திரிசூலம் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், இந்திரனின் வஜ்ராயுதம் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் பாரம்பரியத்தை எடுத்து காட்டும் திரிசூலம் ஆகும். தொல்லியல் துறை தவிர்த்து பல்வேறு இந்து அமைப்புகள், தொண்டு நிறுவனங்களும் திரிசூலம் மற்றும் வஜ்ராயுதத்தின் வடிவங்களை வைத்து இவை பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்பதை உறுதி செய்துள்ளன.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க தகவலை வெளியிட தொழிலதிபர் சையத் சமீர் உசைன் ஆர்வம் கொண்டார்.
அதன்படி தொல்லியல் துறை அனுமதியுடன் ஊடகங்களை சந்தித்து திரிசூலத்தையும் வஜ்ராயுதத்தையும் கைகளில் ஏந்தி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இது இந்தியாவின் பாரம்பரியங்களில் ஒன்று என்பது எனக்கும் பெருமையளிக்கின்றது என்று தெரிவித்துள்ள அவர் , இதை வாங்கிக்கொள்ள மத்திய கிழக்கு உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த தரகர்கள் என்னை அணுகினாலும் நான் அதை விரும்பவில்லை. இது இந்தியாவுக்கு சொந்தமானது என்பதே எனது முடிவாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
இதை இந்தியாவுக்கு கொண்டு வந்து ஆய்வுக்குட்படுத்தி இந்து மதம் தொடர்பில் பல ஆய்வுகளுக்கு வித்திட்டுள்ள சமீர் உசைனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதை விற்பனை செய்திருந்தால் அவருக்கு பல கோடி ரூபாய்கள் கிடைத்திருக்கும். இவர் உண்மையில் ஒரு வர்த்தகர்.
இருந்தாலும் அதை எல்லாம் ஒரு பக்கம் வைத்து விட்டு இவர் ஒரு மதத்தின் தொன்மையை உலகறியச் செய்துள்ளார். எனவே இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இரண்டு பொக்கிஷங்களும் இவருக்கு உரித்தானதாக இருப்பதால் இவற்றை விற்பதற்கு விரும்புகின்றீர்களா என ஊடகங்கள் இவரிடம் கேட்ட போது, அது பற்றி எனது குழுவினர் முடிவு செய்வர்.
எனக்குத் தேவையாக இருந்தது என்னவென்றால் முதலில் இதை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதாகும். அப்படி விற்பனை செய்ய வேண்டும் என நான் நினைத்திருந்தால் டுபாயிலேயே இதை விற்றிருப்பேன். எனக்கு அந்தளவுக்கு இதற்கு கேள்வி இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.