கடந்த வாரத்தில், வாக்னர் குழு தலைவரான ஜெவ்ஜெனி பிரிகோசின் தான் உலக ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தார்.

உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில், தீர்க்கமான பங்கை வகித்து வந்தது, வாக்னர் குழு. இது ஒரு தனியார் இராணுவ அமைப்பு. உலகின் பல நாடுகளில் கூலிப்படைகளாகச் செயற்படும் ஒரு இராணுவம்.

உக்ரேன் இராணுவத்துக்கு எதிராக போரிட்டு வந்த வாக்னர் குழு, திடீரென கடந்த வாரம் ரஷ்ய எல்லைக்குள் திரும்பி, நகரம் ஒன்றையும், ரஷ்யாவின் தென்பகுதி பாதுகாப்பு தலைமையகத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தம்முடன் பேச்சு நடத்த முன்வராது போனால், மொஸ்கோ நோக்கி படைகளுடன் செல்லவுள்ளதாக எச்சரித்த பிரிகோசின், அதற்கான உத்தரவுகளையும் பிறப்பித்தார்.

மொஸ்கோ நோக்கி வாக்னர் குழுவினர்  முன்னேறிக் கொண்டிருந்த நிலையில், ரஷ்யா முழுவதும் உள்நாட்டுப் போர் ஏற்படும் ஆபத்து தோன்றியது.

பெலாரஸ் ஜனாதிபதி தலையிட்டு, இரண்டு தரப்புகளுடனும் சமரசம் செய்து, உடன்பாட்டை ஏற்படுத்தியதால் அந்தப் படையெடுப்பு 24 மணி நேரத்துக்குள் கைவிடப்பட்டு பதற்றம் தணிந்தது.

வாக்னர் குழு தலைவர் பிரிகோசின் பெலாரஸுக்கு பாதுகாப்பாகச் சென்றிருக்கிறார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அதிகாரத்தை அசைத்துப் பார்த்து விட்டார் பிரிகோசின்.

இந்தளவுக்கும், புட்டின் உருவாக்கிய இராணுவம் தான் வாக்னர் குழு. தனது நம்பிக்கைக்குரிய- நெருங்கிய நண்பரான பிரிகோசின் தலைமையில் அவர் இந்த கூலிப்படையை 2014இல் உருவாக்கியிருந்தார்.

பெரும்பாலும் ரஷ்ய படைகளில் இருந்து விலகியவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது இந்த கூலிப்படை. இவர்களுக்கான வெடிபொருட்கள், ஆயுதங்களையும் ரஷ்யாவே வழங்கியது.

உக்ரேன் போரில் மூர்க்கமாகப் போரிட்ட வாக்னர் குழுவுக்கு பக்மூத் நகரைக் கைப்பற்றும் சண்டை நீண்டகாலத்துக்கு நீடித்தது ஒரு பெரும் பின்னடைவு.

ரஷ்யா போதிய ஆயுதங்களை தமக்கு வழங்காமல் போனது தான், அந்தப் போரில் தங்களின் திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனதாக வாக்னர் குழு குற்றம்சாட்டியது.

ரஷ்ய போர் விமானங்கள் தங்களை குறிவைத்து தாக்கியதாகவும் வாக்னர் குழு குற்றம்சாட்டுகிறது.

தோளுக்கு மிஞ்சிய தோழனை தொட்டுப் பார்க்க முற்பட்டார் புட்டின். அதனால் வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோசின் ஆத்திரமடைந்து, உக்ரேன் எல்லையில் இருந்து தனது படைகளை விலக உத்தரவிட்டார்.

புட்டின், வாக்னர் குழு என்ற கூலிப்படையை உருவாக்கி விட்டதன் பலாபலனை இப்போது அனுபவிக்கின்ற நிலை தோன்றியிருக்கிறது.

வாக்னர் குழுவின் மூலம், உலகம் எங்கும் ரஷ்யாவின் அதிகாரத்தை நிலை நிறுத்துவது தான் புட்டினின் திட்டம்.

ஆசியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா என்று உலகின் பல பாகங்களிலும் வாக்னர் குழு செயற்படுகிறது என்று அமெரிக்காவின் கொள்கை ஆய்வு அமைப்பான, மூலோபாய மற்றும் அனைத்துலக கற்கைகள் நிலையம் கூறுகிறது.

சிரியாவிலும், மாலியிலும் மாத்திரமன்றி பல நாடுகளில் இந்த அமைப்பு செயற்படுவதாகவும், ரஷ்யாவில் இதுபோலப் பல தனியார் இராணுவக் குழுக்கள் உருவாகியிருப்பதாகவும், அந்த ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.

உலகில் சுமார் 30 நாடுகளில் இந்த அமைப்பு செயற்படுகிறது என்று மூலோபாய மற்றும் அனைத்துலக கற்கைகள் நிலையத்தின் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

ஐரோப்பாவில் உக்ரேன், ஆபிரிக்காவில் மாலி, சூடான், தென் அமெரிக்காவில் வெனிசுவேலா, மத்திய கிழக்கில் சிரியா மற்றும் லிபியா போன்ற நாடுகளில் வாக்னர் குழுவினர் கூலிப்படைகளாக இயங்குகின்றனர் என்று கூறப்படுகிறது.

மாலியில் இருந்து ஐ.நா அமைதிப்படையை வெளியேறுமாறு அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்திருந்தது. வாக்னர் குழுவின் ஆதரவு தங்களுக்கு இருக்கின்ற துணிச்சலில் தான் மாலி அரசாங்கம் அந்த அறிவிப்பை விடுத்திருந்தது.

இந்தநிலையில் ஆசியாவிலும் வாக்னர் குழு தீவிரமாக செயற்படுகிறது என்று பல்வேறு ஆய்வாளர்களும் தெரிவித்திருக்கின்றனர்.

அதில் உக்ரேனின் மோல்பர் (Molfar) என்ற ஆலோசனை நிறுவனம், இலங்கையில் ரஷ்யாவின் தனியார் இராணுவக் குழுக்கள்- அதாவது கூலிப்படைகள் இயங்குகின்றன என்று கூறியிருக்கிறது.

வெளிநாடுகளில் ரஷ்யாவின் 37 தனியார் இராணுவக் குழுக்கள் செயற்படுவது, கண்டறியப்பட்டுள்ளதாக மோல்பர் ஆலோசனைக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை போன்ற நாடுகளில் இயங்கும் ரஷ்ய தனியார் இராணுவ செயற்பாட்டாளர்களுக்கும், வாக்னர் குழுவுக்கும் தொடர்புகள் கண்டறியப்பட்டுளளதாகவும் அந்த ஆலோசனைக் குழு குறிப்பிட்டிருக்கிறது.

இலங்கைப் போரில் பல நாடுகளின் கூலிப்படைகள் ஈடுபட்டிருக்கின்றன. இஸ்ரேலின் மொசாட், பிரித்தானியாவின் கீனி மீனி அல்லது எஸ்.ஏ.எஸ், போன்ற அமைப்புகளைச் சேர்ந்த கூலிப்படையினர் 1980களில் இலங்கைப் படையினருக்கு பயிற்சிகளை வழங்கியிருக்கின்றனர்.

சில போர் நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அப்போது, கீனி மினியின் பயிற்சி மற்றும் திட்டமிடலின் கீழ், முன்னெடுக்கப்பட்ட சில தாக்குதல்களில், கீனி மீனியை சேர்ந்தவர்கள் விமானிகளாகவும் பங்கெடுத்திருந்தனர்.

பாகிஸ்தான், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் கூலிப்படைகளாகச் செயற்பட்டிருந்தனர்.

சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் ரஷ்யா, உக்ரேன், கசகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து போக்குவரத்து  மற்றும் தாக்குதல் ஹெலிகொப்டர்களும் விமானங்களும் அதிகளவில் வாங்கிக் குவிக்கப்பட்டன.

அப்போது, இலங்கை விமானப்படையில் போதிய விமானிகள் இருக்கவில்லை. உடனடியாக புதிய விமானிகளுக்கு பயிற்சிகளையும் வழங்க முடியவில்லை.

போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில், புதிய ஹெலிகள், விமானங்களில் விமானிகளுக்குப் பயிற்சிகளை வழங்குவதற்கும் வாய்ப்பு இருக்கவில்லை. அவ்வாறான நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரேனில் இருந்து கூலிப்படையினராக விமானிகள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

அவர்களே அப்போது மிக்-27 போர் விமானங்களையும், எம்.ஐ 24 தாக்குதல் ஹெலிகொப்டர்களையும், மாத்திரமன்றி, அன்டனோவ் -32 போக்குவரத்து விமானங்களையும், எம்.ஐ 17 போக்குவரத்து ஹெலிகொப்டர்களையும் கூட இயக்கியிருந்தனர்.

இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ரஷ்ய மற்றும் உக்ரேன் நாட்டு விமானிகள் பலர் கொல்லப்பட்டும் உள்ளனர்.

மிக் -27 போர் விமானம் ஒன்று, 2001ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் குரான பகுதியில் விபத்துக்குள்ளானதில், உக்ரேனைச் சேர்ந்த கப்டன் எல். வெலாலி என்ற விமானி உயிரிழந்தார்.

அதற்கு முன்னர், எம்.ஐ 24 தாக்குதல் ஹெலிகொப்டர் மற்றும் எம்.ஐ 17 ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்ட போதும், ரஷ்ய விமானிகள் உயிரிழந்தனர்.

இலங்கையில் ரஷ்யாவுடன் தொடர்புடைய விமானிகள் கூலிப்படையினராக செயற்பட்டிருந்தனர்.

ஆனால் இப்போது, ரஷ்ய கூலிப்படையினர் ஏன் இலங்கையில் இயங்குகின்றனர் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இலங்கையில் ரஷ்யாவின் கூலிப்படையினர் வெளிப்படையாக செயற்படவில்லை. அரசாங்கமோ அல்லது வேறு அதிகாரபூர்வ தரப்புகளோ இதனை ஒப்புக்கொள்ளவுமில்லை.

ஆனால், உக்ரேனிய ஆலோசனை நிறுவனம், இதனைக் கூறியிருக்கிறது.  ரஷ்யாவும் இலங்கையும் நட்பு நாடுகள். இப்போது இலங்கையின் சுற்றுலாத் துறையை காப்பாற்றிக் கொள்ளும் முக்கியமான நாடாக, ரஷ்யா விளங்குகிறது.

இங்கு ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் இப்போது உலாவுகின்றனர். அவர்கள் எல்லோரும்  சுற்றுலாப் பயணிகளாக வந்தவர்கள் என்று கூற முடியாது.

சுற்றுலாப் பயணிகள் மத்தியில்  கூலிப்படையினரும் இருந்தால், அவர்கள் ஏன் தற்போதைய நிலையில் இலங்கைக்கு வர வேண்டும்? என்ற கேள்வி உள்ளது.

புட்டின் ஆட்சி அமெரிக்காவைப் பலவீனப்படுத்தும் தேசியவாத கொள்கையை கொண்டது.

தற்போது இலங்கையில் அமெரிக்காவின் கை ஓங்கி வருகின்ற நிலையில் ரஷ்யா தனது கூலிப்படையினரை இலங்கையில் களமிறங்கியிருக்கலாம் என்ற ஊகங்களும் உள்ளன.

அவர்களின் இலக்கு இலங்கையாக இல்லாது போனாலும், அமெரிக்கா அல்லது மேற்குலகம்  இலக்காக இருக்காது என்று கூற முடியாது.

(ஹரிகரன்)

Share.
Leave A Reply

Exit mobile version