உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன.
புதினின் உத்தரவுக்கு ரஷிய ராணுவ வீரர்கள் அடி பணிய மறுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 1½ ஆண்டுகளாக நீடித்து வருகிறது. உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. இப்போரில் ரஷிய ராணுவ வீரர்கள் ஏராளமானோர் பலியாகி உள்ளதாக அமெரிக்கா, உக்ரைன் தெரிவித்துள்ளன.
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால் ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் தொடர்ந்து போரிட்டு வருகிறது.
இந்த நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் உத்தரவுகளுக்கு ரஷிய ராணுவம் அடிபணிய மறுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக போர் ஆய்வுக்கான நிறுவனம் ஒன்று கூறியதாவது:-
உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷிய அதிபர் புதினுக்கு ராணுவ தளபதிகளால் காட்டப்படும் கீழ்ப்படியாமை தற்போது ராணுவ வீரர்களிடமும் பரவி வருகிறது. உக்ரைன் மீது போரை தொடங்கியதில் இருந்து, பலனற்ற கட்டமைப்புகள், குழுக்களில் நம்பிக்கையின்மை அல்லது வெளிப்படைத்தன்மை, துருப்புகளின் குறைந்த மன உறுதி ஆகியவற்றுடன் ரஷிய படைகள் போராடின.
58-வது ஒருங்கிணைந்த ஆயுத ராணுவ தளபதி கர்னல் ஜெனரல் இவான் போபோவ் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு ரஷிய ராணுவத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இதே போல் பல ராணுவ தளபதிகள் மோதல் போக்குடன் உள்ளனர்.
கர்னல் ஜெனரல் மைக்கேல் டெப்லின்ஸ்கியை கைது செய்தால், கைப்பற்றப்பட்ட கெர்சன் பிராந்தியத்தில் இருந்து வெளியேறு வோம் என்று ரஷிய ராணுவத்தின் ஒரு பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தளபதிகள் மத்தியில் உள்ள கீழ்ப்படியாமை அவர்களின் சில வீரர்களுக்கு எவ்வாறு பரவுகிறது என்பதை காட்டுகிறது. ராணுவ தளபதிகள் மத்தியில் கீழ்ப்படியாமை அதிகரித்து வருவது ரஷிய ராணுவ தலைமையை இன்னும் வெளிப்படையாக எதிர்க்க மற்ற உயர்மட்ட அதிகாரிகளை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளது.
ஏற்கனவே உக்ரைன் போரில் ரஷிய படைகளுக்கு உதவிய தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு ரஷிய அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட முயன்றது. பின்னர் பெலாரஸ் அதிபரின் சமரசத்தால் கிளர்ச்சியை கைவிட்டது. இதன் மூலம் புதினுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகியது.
இந்த நிலையில் புதினின் உத்தரவுக்கு ரஷிய ராணுவ வீரர்கள் அடி பணிய மறுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.