இலங்கையில் இனத்துவ உறவுகளைப் பொறுத்தவரையில், ஒரு எல்லைக்கோடாக அமைந்த 1983 ஜூலை இன வன்செயல்கள் இடம்பெற்றது சரியாக நான்கு தசாப்தங்கள் கடந்துவிட்டன.
இலங்கை அரசியலில் முன்னரைப் போன்று மீண்டும் எதுவும் இருக்கப்போவதில்லை என்பதை நிறுவிய அனர்த்தங்கள் நிறைந்த அந்த மாதத்தை காலஞ்சென்ற பிரபல பத்திரிகையாளர் மேர்வின் டி சில்வா ‘கறுப்பு ஜூலை’ (Black July) என்று வர்ணித்தார். அந்த ஜூலைக்கு பிறகு இலங்கையில் சகலதும் கறுப்பாகவே இருந்து வந்திருக்கிறது என்று இன்னொரு சிங்களப் பத்திரிகையாளர் குறிப்பிட்டதும் நன்றாக நினைவில் இருக்கிறது.
ஒரு வாரத்துக்கு மேலாக தலைவிரித்தாடிய வன்செயல்களின் கொடூரம், அதனால் நேர்ந்த உயிரிழப்புகள் மற்றும் சொத்து அழிவுகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் மனங்களில் வேரூன்றிய வேதனை அதிர்ச்சியும் உளவியல் தாக்கமும் உண்மையில் கணிப்பிட முடியாதவை.
1983 ஜூலை 22 வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்தின் திருநெல்வேலியில் விடுதலைப்புலிகள் நடத்திய கொரில்லா தாக்குதலில் 13 இலங்கை இராணுவத்தினர் பலியான சம்பவம் அரசாங்கத்துக்குள் ஆதிக்கம் செலுத்திய இனவெறிச்சக்திகள் தமிழ் மக்களுக்கு எதிராக நாடு பூராகவும் மேற்கொள்வதற்கு ஏற்கெனவே திட்டமிட்டிருந்த வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவதற்கு வாய்ப்பாக அமைந்தது.
அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன கறுப்பு ஜூலை வன்செயல்களுக்கு ஒரு வாரம் முன்னதாக (11 ஜூலை 1983) லண்டன் ரெலிகிராவ் பத்திரிகையின் செய்தியாளர் கிரஹாம் வார்ட்டுக்கு வழங்கிய நேர்காணலில் வெளியிட்ட கருத்துக்கள் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் எத்தகைய மனநிலையில் இருந்தது என்பதை தெளிவாக வெளிப்படுத்தியது.
அந்த பத்திரிகையின் 1983 ஜூலை 11 இதழில் வெளியான அந்த நேர்காணலை இலங்கையில் அரசுக்கு சொந்தமான ‘சண்டே ஒப்சேவர்’ பத்திரிகை (1983 ஜூலை 17) பெரும் முக்கியத்துவம் கொடுத்து மறுபிரசுரம் செய்திருந்தது.
“இப்போது நான் யாழ்ப்பாண மக்களின் அபிப்பிராயத்தைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்களைப் பற்றி…. அவர்களது உயிர்களைப் பற்றி அல்லது எம்மைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தை எங்களால் இப்போது சிந்திக்க முடியாது. வடக்கு மீது எந்தளவு கூடுதலாக நெருக்குதல்களைப் பிரயோகிக்கின்றோமோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். வடக்கை நான் பட்டினி போட்டால் சிங்களவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்” என்று ஜெயவர்தன நேர்காணலில் கூறியிருந்தார்.
தமிழர்களை கொடுமைப்படுத்தினால் சிங்களவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியடைவார்கள் என்று கூறிவிட முடியாது. ஆனால், சிங்களவர்களைப் பற்றி அவ்வாறு ஒரு கணிப்பீட்டை ஜெயவர்தன கொண்டிருந்தார் என்பதே உண்மை.
அவரது அந்த கருத்துக்கள் கறுப்பு ஜூலை வன்செயல்கள் யாழ்ப்பாணத்தில் படைவீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தினால் சிங்களவர்கள் சீற்றமடைந்ததன் விளைவாக மாத்திரம் மூண்டதல்ல, அரசாங்கத்துக்குள் இருந்த செல்வாக்கு மிக்க சக்திகள் தமிழ் மக்களுக்கு எதிராக வன்செயல்களை கட்டவிழ்த்துவிடுவதற்கு நீண்ட நாட்களாக தீட்டிவந்த திட்டத்தின் விளைவானது என்பதை அம்பலப்படுத்தியது.
கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக நீடித்த உள்நாட்டுப் போரில் தமிழ் மக்கள் அனுபவித்த அவலங்களும் அவர்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்து அழிவுகளும் கறுப்பு ஜூலையில் அவர்கள் அனுபவித்தவற்றை விடவும் விபரிக்கமுடியாத அளவுக்கு அதிகமானவை என்ற போதிலும், அந்த ஜூலையே தமிழர்கள் மத்தியில் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் பெருகுவதற்கு வழிவகுத்து உள்நாட்டுப் போரை மூளவைத்தது என்பதால் இலங்கையின் அரசியல் வரலாற்றில் அதற்கு பிரத்தியேகமான ஒரு எதிர்மறைக் குறியீடு இருக்கிறது.
கறுப்பு ஜூலை வன்செயல்களினால் நாடு பூராவும் பெரும் அவலங்களை சந்தித்த தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் அகதி முகாம்களில் தஞ்சமடைந்தபோது அவர்களுக்கு ஒரு அனுதாப வார்த்தையை கூறுவதற்கு அரசாங்கத்தின் எந்தவொரு தலைவரும் அரசியல்வாதியும் முன்வரவில்லை.
வன்செயல்கள் மூண்டு கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு பிறகு ஜூலை 28 வியாழக்கிழமை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய ஜனாதிபதி ஜெயவர்தன, அந்த வன்செயல்களை நாட்டுப் பிரிவினை கோரிக்கைக்கு எதிரான சிங்கள மக்களின் இயல்பான பிரதிபலிப்பு என்று நியாயப்படுத்தினாரே தவிர, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு குறைந்த பட்சம் வருத்தம் தெரிவிக்க ஒரு வார்த்தையேனும் கூறவேண்டும் என்று நினைக்கவேயில்லை.
“எமது மக்களுக்காக இந்த அரசாங்கத்தினால் உறுதிசெய்யப்படக்கூடியதாக இருந்துவரும் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை நிர்மூலம் செய்யும் நோக்குடனான ஒரு முயற்சியாகவே இந்த வன்செயல்கள் மேற்கொள்ளப்படுவதாக நாம் உணர்கிறோம். எமது தாய்நாட்டைப் பிரிப்பதற்கான இயக்கம் ஒன்றை 1976ஆம் ஆண்டில் தமிழ் அரசியல்வாதிகள் முன்னெடுத்தார்கள். அந்த இயக்கம் வன்முறையாக மாறி அப்பாவி மக்களும் ஆயுதப்படைகளின் உறுப்பினர்களும் பொலிஸார் மற்றும் அரசியல்வாதிகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பயங்கரவாதிகளின் இந்த வன்முறை காரணமாக சிங்களவர்கள் தங்கள் எதிர்வினையை காட்டுகிறார்கள்” என்று அவர் கூறினார்.
வன்செயல்களை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மாத்திரமல்ல, படையினரும் பொலிஸாரும் வன்முறைக் கும்பல்களுக்கு அனுசரணையாகவே செயற்பட்டனர். அரசாங்க அரசியல்வாதிகளும் பல அமைச்சர்களும் கூட தங்கள் பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை முன்னரங்கத்தில் நின்று தூண்டிவிட்டார்கள்.
“மிகவும் கடுமையான வேகத்துடன் காற்று வீசும்போது அதை தடுத்து நிறுத்தமுடியாது. வளைந்து கொடுப்பது மாத்திரமே எம்மால் செய்யக்கூடியது. கடும் வேகக்காற்று எப்போதும் வீசப்போவதில்லை. அது தணிந்தவுடன் வளைந்துகொடுத்த மரங்கள் வழமைநிலைக்கு வரும்” என்று எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் மிக அமைதியாக பதிலளித்ததாக பல பிரதமர்களுக்கும் ஜனாதிபதிகளுக்கும் செயலாளராகவும் ஆலோசகராகவும் இருந்த மூத்த நிர்வாக சேவை அதிகாரி பிரட்மன் வீரக்கோன் ‘Rendering unto Ceaser’ என்ற தனது சரிதை நூலில் கூறியிருக்கிறார்.
ஜெயவர்தனவின் அந்த பதில் தனக்கு அதிர்ச்சியை கொடுத்தபோதிலும், நீண்டகால அனுபவம் கொண்ட விவேகம் மிக்க அரசியல் தலைவரிடமிருந்து வருகின்ற பதில் என்று நினைத்துக்கொண்டதாக வீரக்கோன் குறிப்பிட்டிருக்கிறார்.
“படையினர் மத்தியில் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகள் பெருமளவுக்கு இருந்தது என்று நான் நினைக்கிறேன். கலவரங்களில் ஈடுபட்ட சிங்களவர்களை சுடுவது சிங்களவர்களுக்கு விரோதமான செயலாக இருக்கும் என்றும் படையினர் உணர்ந்திருக்கக்கூடும். உண்மையில் சில இடங்களில் கலகக்காரர்களை அவர்கள் உற்சாகப்படுத்தியதையும் நாம் கண்டோம்” என்று பதிலளித்தார். அவரின் இந்த பதிலை ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா’ பத்திரிகை ஆகஸ்ட் 10, 1983 அதன் ஆசிரிய தலையங்கத்தில் மேற்கோள் காட்டியிருந்தது.
வெலிக்கடை தமிழ்க்கைதிகள் கொலை
வன்செயல்கள் தணிந்து முதல் தடவையாக 4 ஆகஸ்ட் 1983 பாராளுமன்றம் கூடியபோது அந்த படுகொலைகளை தடுக்க அரசாங்கம் தவறியது குறித்து எதிர்க்கட்சி கண்டனம் தெரிவித்தபோது அன்றைய பிரதமர் ஆர். பிரேமதாஸ “ஒரு சிங்களக் கைதியும் கொல்லப்பட்டிருக்கிறார்” என்று பதிலளித்தார்.
நாற்பது வருடங்கள் கடந்துவிட்டன. சிறை அதிகாரிகளின் கண்முன்னால் நடந்த அந்த படுகொலைகள் குறித்து இன்று வரை பக்கச்சார்பற்ற ஒரு விசாரணை நடத்தப்படவேயில்லை.
கறுப்பு ஜூலை வன்செயல்களுக்காக ஜெயவர்தனவோ பிரேமதாஸவோ அல்லது அன்றைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் அரசியல்வாதிகளில் எவருமோ ஒருபோதும் தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவித்ததில்லை.
மன்னிப்பு கேட்ட சந்திரிகா
கறுப்பு ஜூலையின் 21வது வருட நினைவைக் குறிக்குமுகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், “அந்த இன வன்செயல்களுக்காக இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கூட்டாக குற்றப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும். இலங்கை அரசு, அரசாங்கம் மற்றும் எங்கள் எல்லோரின் சார்பிலும் இலங்கையின் சகல குடிமக்கள் சார்பிலும் மன்னிப்பைக் கோரும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
இந்தியத் தலையீடு
கறுப்பு ஜூலை இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் நேரடி தலையீட்டுக்கு வழிவகுத்தது. அன்றைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி நிலைவரங்களை அவதானிக்க தனது வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவை கொழும்புக்கு அனுப்பினார். அவர் வந்திறங்கிய தினம் (29 ஜூலை 1983 வெள்ளிக்கிழமை) கொழும்புக்கு விடுதலைப்புலிகள் வந்திருப்பதாக புரளியை கிளப்பிய இனவாதச் சக்திகள் தமிழர்களுக்கு எதிராக படுமோசமான தாக்குதல்களை மேற்கொண்டன. அன்றைய தினமே கூடுதலான கொலைகள் இடம்பெற்றதாக கூறப்படுவதுண்டு.
தமிழர்களின் சார்பில் இந்தியா தலையீடு செய்வதற்கு தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்காகவே நரசிம்மராவ் கொழும்பு வந்த தினம் இனவாத சக்திகள் வன்முறையை மீண்டும் கட்டவிழ்த்துவிட்டன என்பதில் சந்தேகமில்லை.
1984 ஒக்டோபர் 31 பிரதமர் இந்திரா காந்தி சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியா பூராவும் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறைகள் மூண்டன. அந்த வன்முறைகளுடன் கறுப்பு ஜூலையை ஜனாதிபதி ஜெயவர்தன ஒப்பிட்டுப் பேசினார்.
தாயாரின் கொலையை அடுத்து பிரதமராக பதவியேற்ற ராஜீவ் காந்தி சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளை கடுமையாகக் கண்டனம் செய்து, “இந்த பைத்தியக்காரத்தனத்தை உடனே நிறுத்துங்கள்” (Stop this madness) என்று வன்முறைச் சக்திகளைக் கேட்டுக்கொண்டார். ஆனால், ஜெயவர்தன கறுப்பு ஜூலை வன்முறைச் சக்திகளை அவ்வாறு ஒருபோதும் கண்டித்ததுமில்லை, தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு பகிரங்கமாக கேட்டுக்கொண்டதுமில்லை.
இராணுவத் தீர்வில் அக்கறை
கறுப்பு ஜூலைக்கு பின்னரான காலகட்டத்தில் அதிகாரத்தில் இருந்த சகல அரசாங்கங்களுமே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வை காண்பதற்கு முயற்சிப்பதாக கூறிக்கொண்டு மறுபுறத்தில் இராணுவ தீர்வில்தான் அக்கறை காட்டின. சமாதான முயற்சிகள் எல்லாமே வேறு மார்க்கத்திலான போராகவே அமைந்தன.
சிங்கள அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் தமிழர் பிரச்சினை தொடர்பிலான தங்களது சிந்தனைகளில் ‘போர்’ பற்றிய ஒரு பிரமையைக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு இரு உதாரணங்களை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.
1977 ஜூலை பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஜெயவர்தன பிரதமராக பதவியேற்றார். அடுத்த மாதம் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் மூண்டன. அப்போது தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்.
அந்த வன்செயல்களுக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜெயவர்தன அமிர்தலிங்கத்தை நோக்கி “போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம்” என்று கூறினார்.
அதற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னர் 1956 ஜூன் 5 அன்றைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் அரசாங்கம் பாராளுமன்றத்தில் தனிச் சிங்கள சட்டத்தை கொண்டுவந்ததை கண்டித்து, தந்தை செல்வா தலைமையில் இலங்கை தமிழரசு கட்சி கொழும்பு காலிமுகத்திடலில் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தியது. பொலிஸார் பார்த்துக்கொண்டு நிற்க காடையர்கள் சத்தியாக்கிரகிகளை தாக்கினார்கள்.
அந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் அமிர்தலிங்கமும் ஒருவர். தலையில் தனது காயத்துக்கு கட்டுப்போட்டுக்கொண்டு அவர் பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்தபோது பிரதமர் பண்டாரநாயக்க, “கௌரவ போர்க்காயங்களே” (Honourable wounds of war) என்று விளித்துப் பேசினார்.
தமிழர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு வெகுமுன்னதாகவே தமிழர்களின் நியாயபூர்வமான உரிமைப் போராட்டத்தை சிங்களத் தலைவர்கள் ஒரு போர் மனோபாவத்துடனேயே நோக்கினார்கள் என்பது தெளிவாகிறது. இறுதியில் அந்தப் போர் வந்துசேர்வதை எவராலும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை. அதற்கு பின்னரானவை அண்மைக்கால வரலாறு.
சகல ஜனாதிபதிகளுமே உலக ஒப்பாசாரத்துக்கு அரசியல் தீர்வினை பற்றி பேசினார்களே தவிர, இராணுவத் தீர்வினை காண்பதற்கான முயற்சிகளுக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கிவிட்டே சென்றார்கள்.
இந்தியாவின் தலையீடோ அல்லது சர்வதேசத்தின் பங்களிப்போ இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று காணப்படுவதற்கு பதிலாக இராணுவத் தீர்வினை நோக்கிய செயன்முறைகள் முனைப்படைவதை உறுதிசெய்ததையே காணக்கூடியதாக இருந்தது.
இறுதியில் சர்வதேச அரசியல் நிகழ்வுப் போக்குகளில் ஏற்பட்ட மாறுதல்கள் வன்னியில் விடுதலைப்புலிகளை தோற்கடித்து உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு கிடைக்கச் செய்தன.
போரில் அரசாங்கப் படைகள் வெற்றி பெறுவதற்கு உறுதியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய ஒரே ஜனாதிபதி தானே என்று பெருமைப்பட்ட ராஜபக்ஷ போர் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு சிங்கள மக்கள் மத்தியில் உச்சபட்சத்துக்கு அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்தார்.
பெரும்பான்மை இனவாத அரசியலின் தோல்வி
இராணுவவாத அணுகுமுறையுடன் சிங்கள பௌத்த பெரும்பான்மை இனவாத அரசியல் கொள்கைகளை முன்னெடுத்த ராஜபக்ஷக்கள் இறுதியில் தங்களது தவறான ஆட்சிமுறை, ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் குடும்ப ஆதிக்க அரசியலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்களினால் கடந்த வருடம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டார்கள். அவர்களின் வீழ்ச்சி பெரும்பான்மை இனவாத அரசியலின் தோல்வியையே பறைசாற்றுகிறது.
மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவும் முறைகேடான ஆட்சி முறையை மூடி மறைக்கவும் இனிமேலும் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல்களுக்கு இடமளிக்கக்கூடாது என்பதே பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் உணர்த்தி நிற்கும் முக்கியமான படிப்பினையாகும்.
ஆனால், அண்மைக்காலமாக மீண்டும் இனவாத அரசியல் அணிதிரட்டல்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. இன ரீதியான பிரச்சினை இப்போது மத ரீதியான பிரச்சினையாகவும் மடைமாற்றப்படுகிறது. அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் இலங்கை இதுகாலம் வரை காணாத மிகப்பெரிய இனக்கலவரம் மூளும் என்று விமல் வீரவன்ச, சரத் வீரசேகர போன்ற சிங்கள கடும்போக்கு அரசியல்வாதிகள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எச்சரிக்கை செய்வதை காணக்கூடியதாக இருக்கிறது.
இத்தகைய பின்புலத்தில் மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை நிகழாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அவ்வாறு மீண்டும் நிகழக்கூடாது என்றால் நடந்தவற்றை நினைத்துப் பார்க்கவேண்டியது முக்கியமானதாகும். கறுப்பு ஜூலையில் இருந்து ஏதாவது படிப்பினையை இன்றைய சிங்கள அரசியல் சமுதாயம் பெற்றிருக்கிறதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
வரலாற்றில் இருந்து பாடங்கள் கற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதே வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ளப்படக்கூடியதாக இருக்கும் பாடமாகும் என்ற வியட்நாம் போர்க்கால அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரும் உலகவங்கியின் முன்னாள் தலைவருமான றொபேர்ட் மக்னமாராவின் கூற்றே நினைவுக்கு வருகிறது.
வீரகத்தி தனபாலசிங்கம்