ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் இந்தியாவுக்கு சென்று வந்ததன் பின்னர் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் மீண்டும் மாகாண சபை முறைமையை ஸ்தாபிப்பதுவும் பேசுபொருள்களாக ஆகியுள்ளன.
பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதனை இனப்பிரச்சினை தீர்விற்கான ஆரம்பபடிமுறையாக ஏற்பதற்கான தமது விருப்பை வெளியிட்டும் உள்ளன.
பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்பது காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் மாகாண சபைகளை மீண்டும் ஸ்தாபிப்பதாகும்.
பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி சர்வ கட்சிகளின் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
ஆயினும், இந்திய விஜயத்திற்கு முன்னரும் பின்னரும், பாராளுமன்றத்திலுள்ள அரசியல் கட்சிகளின் இணக்கமின்றி மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட மாட்டாது என்ற தனது நிலைப்பாட்டில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார்.
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக முன்னர் தெரிவித்த ஜனாதிபதி, பின்னர் தனது நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டதற்கான முக்கிய காரணம்; பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு, குறிப்பாக மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதற்கு தென்னிலங்கையில் எழுந்த எதிர்ப்பாகும்.
13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு முப்பத்தாறு வருடங்கள் ஆகியுள்ள போதிலும் இதுவரை எச்சந்தர்ப்பத்திலும் மாகாண சபைகளுக்குப் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படவில்லை.
தென்னிலங்கையின் எதிர்ப்பு
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுவதற்கு தென்னிலங்கையில் கடும் எதிர்ப்பு இருந்து வருகின்றது.
பௌத்த பிக்குகளும் தென்னிலங்கை அரசியல்வாதிகளும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுவதற்கான தமது கடும் எதிர்ப்பினை பல தடவைகள் வெளியிட்டுள்ளனர்.
பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் மூலம் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுவதனை இல்லாதாக்கும் வகையில் தான் அரசியலமைப்பிற்கு இருபத்திரண்டாவது திருத்தத்தினைக் கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவினதான பொலிஸ் அதிகாரமே வழங்கப்பட்டுள்ளது.
மாகாண சபைகளின் பொலிஸ் அதிகாரம் தொடர்பில் தென்னிலங்கையிலுள்ள பெரும்பாலானவர்கள் மத்தியில் தவறான புரிந்துணர்வு இருந்து வருகின்றது.
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற தவறான புரிந்துணர்வினை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள்.
தேசிய பாதுகாப்பு
பொலிஸ் அதிகாரம் என்பது பொது ஒழுங்குடன் சம்பந்தப்பட்டது. தேசிய பாதுகாப்பு என்பது முப்படையினருடன் சம்பந்தப்பட்டது.
தேசிய பாதுகாப்பு பற்றிய விடயங்கள் எதுவும் மாகாண சபைகளின் அதிகாரத்தினுள் உள்ளடக்கப்படவில்லை. பதின்மூன்றாவது திருத்தத்தில் இரண்டு இடங்களில் இவ்விடயம் மிக தெளிவாக வலியுறுத்திக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பிற்குப் பொறுப்பான முப்படையினர் மத்திய அரசாங்கத்தின் குறிப்பாக ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர்.
எனவே மத்திய அரசாங்கம் விரும்பும் போது விரும்பிய இடத்திற்கு முப்படையினரை அனுப்பி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடியதாக உள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படையினரை அனுப்புகின்ற போது மாகாண முதலமைச்சரின் சம்மதத்தைப் பெற வேண்டிய அவசியமும் இல்லை.
எனவே, மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாது.
மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர்
பதின்மூன்றாவது திருத்தத்தின்படி, மாகாணப் பிரதி பொலிஸ் மாஅதிபரை நியமிப்பதில் பொலிஸ் மாஅதிபருக்கும் மாகாண முதலமைச்சருக்கும் இடையே இணக்கப்பாடு இருந்தால் அவர்களால் கூட்டாக நியமிக்கப்படுபவர் மாகாண பிரதி பொலிஸ் மாஅதிபர் ஆவார்.
இணக்கப்பாடு என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் பொலிஸ் மாஅதிபருக்கும் மாகாண முதலமைச்சருக்கும் இடையேயான இணக்கப்பாடு இல்லாத போது அவர்களால் மாகாண பிரதி பொலிஸ் மாஅதிபரை நியமிக்க முடியாது.
பொலிஸ் மாஅதிபருக்கும் மாகாண முதலமைச்சருக்கும் இடையே இணக்கப்பாடு இல்லாதபோது, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவானது மாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடி மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரை நியமிக்கும்.
கலந்துரையாடல் என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் மாகாண முதலமைச்சருடனான கலந்துரையாடல் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவைக் கட்டுப்படுத்தாது.
எனவே, மாகாண முதலமைச்சர் விரும்புகின்ற ஒருவரை அல்லாது தேசிய பொலிஸ் ஆணைக்குழு விரும்புகின்ற ஒருவரையே மாகாண பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கலாம்.
மாகாண பொலிஸ் ஆணைக்குழு
மாகாண பொலிஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு, இடமாற்றம், பதவி உயர்வு மற்றும் ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு ஆகியவைகள் மாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் கீழ் வருகின்றன. இவ்வாறான அதிகாரங்களைக் கொண்ட மாகாண பொலிஸ் ஆணைக்குழுவில் மூன்று அங்கத்தவர்கள் உள்ளனர்.
மாகாண பொலிஸ் ஆணைக்குழுவில் மாகாண பிரதி பொலிஸ் மாஅதிபர், ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் செய்து பகிரங்க சேவை ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்ட அங்கத்தவர் ஒருவர் மற்றும் மாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட அங்கத்தவர் ஒருவர் ஆகியோர் அங்கத்தவர்களாக இருப்பர். எனவே, மாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் மூன்று அங்கத்தவர்களில் ஒரு அங்கத்தவர் மாத்திரமே மாகாண முதலமைச்சரின் விருப்பத்தில் நியமிக்கப்பட்டவராக இருப்பார்.
மாகாண பொலிஸாரின் ஆயுதங்கள்
மாகாண பொலிஸார் பயன்படுத்துகின்ற சுடுகலன்கள் மற்றும் கருவிகள் ஆகியவைகளின் வகை மற்றும் அளவு என்பவை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் மாகாண பொலிஸ் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல் செய்யப்பட்டுத் தீர்மானிக்கப்படும்.
இதில் கலந்துரையாடல் என இருப்பதனால் மாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்தால் தேசிய பொலிஸ் ஆணைக்குழு கட்டுப்படாது.
மாகாண பொலிஸ் ஆணைக்குழுவிலும் கூட ஒரு அங்கத்தவரே மாகாண முதலமைச்சரின் விருப்பத்தில் நியமிக்கப்பட்டவராக இருப்பார்.
எனவே, மாகாண பொலிஸார் பயன்படுத்துகின்ற ஆயுதங்களைப் பற்றித் தீர்மானிப்பது மாகாண பொலிஸ் ஆணைக்குழு அல்லாது தேசிய பொலிஸ் ஆணைக்குழுவாகவே இருக்கும்.
மாகாண பொலிஸாரின் கீழான குற்றங்கள்
மாகாணங்களினுள் பொது ஒழுங்கைப் பேணுவதற்குப் பொறுப்பாக மாகாண பொலிஸார் இருப்பார்கள். மாகாண பொலிஸார் தேசிய பொலிஸாருக்குக் கீழே வருகின்ற குற்றச் செயல்கள் தவிர்ந்த ஏனைய குற்றங்களை மாகாணத்தினுள் தடுப்பதற்கும் கண்டுபிடிப்பதற்கும் புலனாய்வு செய்வதற்கும் பொறுப்பாக இருப்பார்கள்.
அரசுக்கு எதிரான குற்றங்கள், முப்படையினர் சம்பந்தப்பட்ட குற்றங்கள், தேர்தல் குற்றங்கள், நாணயங்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள், அரச அதிகாரிகளுக்கு எதிரான குற்றங்கள், அரச சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள், தேசிய பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள், மத்திய அரசிற்குட்பட்ட விடயங்கள் தொடர்பான குற்றங்கள், ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்களிலுள்ள நீதிமன்றங்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள், சர்வதேச குற்றங்கள் போன்றவை தேசிய பொலிஸாரின் அதிகாரத்தின் கீழேயே உள்ளன.
தேசிய பொலிஸாரின் கீழ் வருகின்ற குற்றங்கள் தொடர்பிலான வாசகங்கள் பரந்த பொருள்விளக்கத்திற்கு உட்படக் கூடியவைகளாகவும் பல்வேறுபட்ட வகைக் குற்றங்களை உள்ளடக்கக் கூடியவைகளாகவும் உள்ளன.
இவ்வாறாக, மாகாண சபைகளின் பொலிஸ் அதிகாரம் என்பது மட்டுப்படுத்தப்பட்ட குற்றங்கள் சம்பந்தப்பட்டதாகவே உள்ளது.
அவசரகால நிலை பிரகடனம்
மாகாணமொன்றினுள் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாகாணப் பிரதி பொலிஸ் மா அதிபரின் நெறிப்படுத்தல் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றுபவர்களாக இருப்பார்கள்.
மாகாணத்தினுள் பொது ஒழுங்கை நிலைநாட்டுவது மாகாணத்தினுள் பொலிஸ் அதிகாரங்களைப் பிரயோகிப்பது தொடர்பில் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் மாகாண முதலமைச்சருக்குப் பொறுப்புக் கூற வேண்டியவராகவும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளவராகவும் இருப்பார்.
ஆயினும், மாகாணமொன்றினுள் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளபோது, மாகாண முதலமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அத்தகைய பொலிஸ் அதிகாரங்களை ஜனாதிபதி பொறுப்பேற்கலாம் என்பதுடன் மாகாணத்தினுள் பொது ஒழுங்கு தொடர்பான மாகாண நிருவாகத்தையும் தான் பொறுப்பேற்கலாம்.
மாகாணமொன்றினுள் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளபோது அந்த மாகாணத்தினுள் பொது ஒழுங்கைப் பேணுவதற்கு தேசிய பொலிஸாரை பொலிஸ் மாஅதிபர் அனுப்பி வைக்கலாம்.
ஏதேனும் குழப்பம் காரணமாக மாகாணத்தினுள் பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கருதுகின்ற போது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தாது, மாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடி மாகாணத்தினுள் பொது ஒழுங்கை மீளக் கட்டியெழுப்புவதற்காக தேசிய பொலிஸாரை ஜனாதிபதி அந்த மாகாணத்திற்கு அனுப்பி வைக்கலாம்.
கலந்துரையாடல் என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் முதலமைச்சரின் விருப்பத்திற்கு மாறாகக் கூட, ஜனாதிபதி தேசிய பொலிஸாரை குறித்த மாகாணத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இன்மை
நாம் மேலே பார்த்தவாறாக மாகாண பொலிஸ் அதிகாரம், தேசிய பாதுகாப்பை உள்ளடக்காது என்பதாலும், மாகாண பிரதி பொலிஸ் மாஅதிபர் பெரும்பாலும் மத்திய அரசின் விருப்பத்திற்குரியவராக இருப்பார் என்பதாலும், மாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவர் மட்டுமே மாகாண முதலமைச்சரின் விருப்பத்திற்குரியவராக இருப்பார் என்பதாலும், மாகாணப் பொலிஸார் பயன்படுத்துகின்ற ஆயுதங்களின் வகை மற்றும் அளவைத் தீர்மானிப்பதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவே இருக்கும் என்பதாலும், தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட குற்றங்கள் உட்பட பல முக்கிய குற்றங்கள் தேசிய பொலிஸாரின் கீழ் வருவதாலும், அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போது ஜனாதிபதி மாகாண முதலமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரங்களை தான் பொறுப்பேற்கலாம் என்பதுடன் அந்த மாகாணத்தினுள் பொது ஒழுங்கைப் பேணுவதற்கு தேசிய பொலிஸாரை பொலிஸ் மாஅதிபர் அனுப்பி வைக்கலாம் என்பதாலும் மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது எவ்வகையிலும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைய மாட்டாது.
முடிவுரை
சட்டம் ஒழுங்கு பேணப்பட்டு மக்கள் அச்சமின்றி அமைதியுடன் வாழ்வதை முழுமையாக உறுதிப்படுத்த வேண்டுமென்றால், மக்களின் நேரடி ஆட்சியாளர்களிடம் பொலிஸ் அதிகாரம் இருத்தல் வேண்டும். அதிகாரப் பரவலாக்கலின் கீழ் மக்களின் நேரடி ஆட்சியாளராக மாகாண சபைகள் இருப்பதனால், மாகாண சபைகளுக்குப் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுதல் வேண்டும்.
பொலிஸ் அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டால், மாகாணமொன்றினுள் எழக் கூடிய சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றிய பிரச்சினைகளுக்கு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டியதாக சம்பந்தப்பட்ட மாகாண சபை இருக்கும். அந்த மாகாண சபைக்குப் பதிலளிக்க வேண்டியவர்களாக மாகாணப் பொலிஸார் இருப்பார்கள். இது மக்கள், நிருவாகம் மற்றும் பொலிஸார் ஆகியோரிடையேயான உறவை வலுப்படுத்துவதுடன், பொது ஒழுங்கையும், மக்களின் அமைதி வாழ்க்கையையும் மற்றும் பொறுப்புக் கூறுந்தன்மையையும் உறுதிப்படுத்துவதாகவும் அமையும்.
-பேராசிரியர் அ. சர்வேஸ்வரன்–