ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த வாரம் இந்­தி­யா­வுக்கு சென்று வந்­ததன் பின்­ன­ர்   பதின்­மூன்­றா­வது திருத்தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதும்  மீண்டும் மாகாண சபை முறை­மையை  ஸ்தாபிப்­ப­துவும் பேசு­பொ­ருள்­க­ளாக ஆகி­யுள்­ளன.

பெரும்­பா­லான தமிழ் அர­சியல் கட்­சிகள் பதின்­மூன்­றா­வது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தனை இனப்­பி­ரச்­சினை தீர்­விற்­கான ஆரம்பபடி­மு­றை­யாக ஏற்­ப­தற்­கான தமது விருப்பை வெளி­யிட்டும் உள்­ளன.

பதின்­மூன்­றா­வது திருத்­தத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வது என்­பது காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்­க­ளுடன் மாகாண சபை­களை மீண்டும் ஸ்தாபிப்­ப­தாகும்.

பதின்­மூன்­றா­வது திருத்­தத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது தொடர்பில் ஜனா­தி­பதி சர்வ கட்­சி­களின் கூட்­டத்தை கூட்­டி­யுள்ளார்.

ஆயினும், இந்­திய விஜ­யத்­திற்கு முன்­னரும் பின்­னரும், பாரா­ளு­மன்­றத்­தி­லுள்ள அர­சியல் கட்­சி­களின் இணக்­க­மின்றி மாகாண சபை­க­ளுக்கு பொலிஸ் அதி­காரம் வழங்­கப்­பட மாட்­டாது என்ற தனது நிலைப்­பாட்டில் ஜனா­தி­பதி உறு­தி­யாக உள்ளார்.

பதின்­மூன்­றா­வது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தாக முன்னர் தெரி­வித்த ஜனா­தி­பதி, பின்னர் தனது நிலைப்­பாட்­டினை மாற்றிக் கொண்­ட­தற்­கான முக்­கிய காரணம்; பதின்­மூன்­றா­வது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு, குறிப்­பாக மாகாண சபை­க­ளுக்கு பொலிஸ் அதி­கா­ரத்தை வழங்­கு­வ­தற்கு தென்­னி­லங்­கையில் எழுந்த எதிர்ப்­பாகும்.

13 ஆவது திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்டு முப்­பத்­தாறு வரு­டங்கள் ஆகி­யுள்ள போதிலும் இது­வரை எச்­சந்­தர்ப்­பத்­திலும் மாகாண சபை­க­ளுக்குப் பொலிஸ் அதி­காரம் வழங்­கப்­ப­ட­வில்லை.

தென்­னி­லங்­கையின் எதிர்ப்பு 

மாகாண சபை­க­ளுக்கு பொலிஸ் அதி­காரம் வழங்­கப்­ப­டு­வ­தற்கு தென்­னி­லங்­கையில் கடும் எதிர்ப்பு இருந்து வரு­கின்­றது.

பௌத்த பிக்­கு­களும் தென்­னி­லங்கை அர­சி­யல்­வா­தி­களும் மாகாண சபை­க­ளுக்கு பொலிஸ் அதி­காரம் வழங்­கப்­ப­டு­வ­தற்­கான தமது கடும் எதிர்ப்­பினை பல தட­வைகள் வெளி­யிட்­டுள்­ளனர்.

பிவி­துரு ஹெல உறு­மய கட்­சியின் தலை­வ­ரான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில, பதின்­மூன்­றா­வது திருத்தச் சட்டம் மூலம் மாகாண சபை­க­ளுக்கு பொலிஸ் அதி­காரம் வழங்­கப்­ப­டு­வ­தனை இல்­லா­தாக்கும் வகையில் தான் அர­சி­ய­ல­மைப்­பிற்கு இரு­பத்­தி­ரண்­டா­வது திருத்­தத்­தினைக் கொண்­டு­வ­ர­வுள்­ள­தாக தெரி­வித்­துள்ளார்.

பதின்­மூன்­றா­வது திருத்தச் சட்­டத்தின் மூலம் மாகாண சபை­க­ளுக்கு மிகவும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அள­வி­ன­தான பொலிஸ் அதி­கா­ரமே வழங்­கப்­பட்­டுள்­ளது.

மாகாண சபை­களின் பொலிஸ் அதி­காரம் தொடர்பில் தென்­னி­லங்­கை­யி­லுள்ள பெரும்­பா­லா­ன­வர்கள் மத்­தியில் தவ­றான புரிந்­து­ணர்வு இருந்து வரு­கின்­றது.

மாகாண சபை­க­ளுக்கு பொலிஸ் அதி­காரம் வழங்­கப்­ப­டு­வது தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லாக அமையும் என்ற தவ­றான புரிந்­து­ணர்­வினை அவர்கள் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

தேசிய பாது­காப்பு

பொலிஸ் அதி­காரம் என்­பது பொது ஒழுங்­குடன் சம்­பந்­தப்­பட்­டது. தேசிய பாது­காப்பு என்­பது முப்­ப­டை­யி­ன­ருடன் சம்­பந்­தப்­பட்­டது.

தேசிய பாது­காப்பு பற்­றிய விட­யங்கள் எதுவும் மாகாண சபை­களின் அதி­கா­ரத்­தினுள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. பதின்­மூன்­றா­வது திருத்­தத்தில் இரண்டு இடங்­களில் இவ்­வி­டயம் மிக தெளி­வாக வலி­யு­றுத்திக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

தேசிய பாது­காப்­பிற்குப் பொறுப்­பான முப்­ப­டை­யினர் மத்­திய அர­சாங்­கத்தின் குறிப்­பாக ஜனா­தி­ப­தியின் கட்­டுப்­பாட்டின் கீழ் உள்­ளனர்.

எனவே மத்­திய அர­சாங்கம் விரும்பும் போது விரும்­பிய இடத்­திற்கு முப்­ப­டை­யி­னரை அனுப்பி தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தக் கூடி­ய­தாக உள்­ளது.

தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த முப்­ப­டை­யி­னரை அனுப்­பு­கின்ற போது மாகாண முத­ல­மைச்­சரின் சம்­ம­தத்தைப் பெற வேண்­டிய அவ­சி­யமும் இல்லை.

எனவே, மாகாண சபை­க­ளுக்கு பொலிஸ் அதி­காரம் வழங்­கு­வது தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யாது.

மாகாண பிரதி பொலிஸ் மா அ­திபர்

பதின்­மூன்­றா­வது திருத்­தத்­தின்­படி, மாகாணப் பிரதி பொலிஸ் மாஅ­தி­பரை நிய­மிப்­பதில் பொலிஸ் மாஅ­தி­ப­ருக்கும் மாகாண முத­ல­மைச்­ச­ருக்கும் இடையே இணக்­கப்­பாடு இருந்தால் அவர்­களால் கூட்­டாக நிய­மிக்­கப்­ப­டு­பவர் மாகாண பிரதி பொலிஸ் மாஅ­திபர் ஆவார்.

இணக்­கப்­பாடு என்ற சொற்­பதம் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதால் பொலிஸ் மாஅ­தி­ப­ருக்கும் மாகாண முத­ல­மைச்­ச­ருக்கும் இடை­யே­யான இணக்­கப்­பாடு இல்­லாத போது அவர்­களால் மாகாண பிரதி பொலிஸ் மாஅ­தி­பரை நிய­மிக்க முடி­யாது.

பொலிஸ் மாஅ­தி­ப­ருக்கும் மாகாண முத­ல­மைச்­ச­ருக்கும் இடையே இணக்­கப்­பாடு இல்­லா­த­போது, தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழு­வா­னது மாகாண முத­ல­மைச்­ச­ருடன் கலந்­து­ரை­யாடி மாகாண பிரதி பொலிஸ் மா அ­தி­பரை நிய­மிக்கும்.

கலந்­து­ரை­யாடல் என்ற சொற்­பதம் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதால் மாகாண முத­ல­மைச்­ச­ரு­ட­னான கலந்­து­ரை­யாடல் தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழுவைக் கட்­டுப்­ப­டுத்­தாது.

எனவே, மாகாண முத­ல­மைச்சர் விரும்­பு­கின்ற ஒரு­வரை அல்­லாது தேசிய பொலிஸ் ஆணைக்­குழு விரும்­பு­கின்ற ஒரு­வ­ரையே மாகாண பிரதி பொலிஸ் மா அ­தி­ப­ராக நிய­மிக்­கலாம்.

மாகாண பொலிஸ் ஆணைக்­குழு

மாகாண பொலிஸ் சேவைக்­கான ஆட்­சேர்ப்பு, இட­மாற்றம், பதவி உயர்வு மற்றும் ஒழுக்­காற்றுக் கட்­டுப்­பாடு ஆகி­ய­வைகள் மாகாண பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் கீழ் வரு­கின்­றன. இவ்­வா­றான அதி­கா­ரங்­களைக் கொண்ட மாகாண பொலிஸ் ஆணைக்­கு­ழுவில் மூன்று அங்­கத்­த­வர்கள் உள்­ளனர்.

மாகாண பொலிஸ் ஆணைக்­கு­ழுவில் மாகாண பிரதி பொலிஸ் மாஅ­திபர், ஜனா­தி­ப­தி­யுடன் கலந்­து­ரை­யாடல் செய்து பகி­ரங்க சேவை ஆணைக்­கு­ழுவால் நிய­மிக்­கப்­பட்ட அங்­கத்­தவர் ஒருவர் மற்றும் மாகாண முத­ல­மைச்­சரால் நிய­மிக்­கப்­பட்ட அங்­கத்­தவர் ஒருவர் ஆகியோர் அங்­கத்­த­வர்­க­ளாக இருப்பர். எனவே, மாகாண பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் மூன்று அங்­கத்­த­வர்­களில் ஒரு அங்­கத்­தவர் மாத்­தி­ரமே மாகாண முத­ல­மைச்­சரின் விருப்­பத்தில் நிய­மிக்­கப்­பட்­ட­வ­ராக இருப்பார்.

மாகாண பொலி­ஸாரின் ஆயு­தங்கள்

மாகாண பொலிஸார் பயன்­ப­டுத்­து­கின்ற சுடு­க­லன்கள் மற்றும் கரு­விகள் ஆகி­ய­வை­களின் வகை மற்றும் அளவு என்­பவை தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழு­வினால் மாகாண பொலிஸ் ஆணைக்­கு­ழு­வுடன் கலந்­து­ரை­யாடல் செய்­யப்­பட்டுத் தீர்­மா­னிக்­கப்­படும்.

இதில் கலந்­து­ரை­யாடல் என இருப்­ப­தனால் மாகாண பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் தீர்­மா­னத்தால்  தேசிய பொலிஸ் ஆணைக்­குழு கட்­டுப்­ப­டாது.

மாகாண பொலிஸ் ஆணைக்­கு­ழு­விலும் கூட ஒரு அங்­கத்­த­வரே மாகாண முத­ல­மைச்­சரின் விருப்­பத்தில் நிய­மிக்­கப்­பட்­ட­வ­ராக இருப்பார்.

எனவே, மாகாண பொலிஸார் பயன்­ப­டுத்­து­கின்ற ஆயு­தங்­களைப் பற்றித் தீர்­மா­னிப்­பது மாகாண பொலிஸ் ஆணைக்­குழு அல்­லாது தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழு­வா­கவே இருக்கும்.

மாகாண பொலி­ஸாரின் கீழான குற்­றங்கள் 

மாகா­ணங்­க­ளினுள் பொது ஒழுங்கைப் பேணு­வ­தற்குப் பொறுப்­பாக மாகாண பொலிஸார் இருப்­பார்கள். மாகாண பொலிஸார் தேசிய பொலி­ஸா­ருக்குக் கீழே வரு­கின்ற குற்றச் செயல்கள் தவிர்ந்த ஏனைய குற்­றங்­களை மாகா­ணத்­தினுள் தடுப்­ப­தற்கும் கண்­டு­பி­டிப்­ப­தற்கும் புல­னாய்வு செய்­வ­தற்கும் பொறுப்­பாக இருப்­பார்கள்.

அர­சுக்கு எதி­ரான குற்­றங்கள், முப்­ப­டை­யினர் சம்­பந்­தப்­பட்ட குற்­றங்கள், தேர்தல் குற்­றங்கள், நாண­யங்கள் சம்­பந்­தப்­பட்ட குற்­றங்கள், அரச அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ரான குற்­றங்கள், அரச சொத்­துக்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்கள், தேசிய பாது­காப்பு மற்றும் அத்­தி­யா­வ­சிய சேவைகள் சம்­பந்­தப்­பட்ட குற்­றங்கள், மத்­திய அர­சிற்­குட்­பட்ட விட­யங்கள் தொடர்­பான குற்­றங்கள், ஒன்­றுக்கு  மேற்­பட்ட மாகா­ணங்­க­ளி­லுள்ள நீதி­மன்­றங்கள் சம்­பந்­தப்­பட்ட குற்­றங்கள், சர்­வ­தேச குற்­றங்கள் போன்­றவை தேசிய பொலி­ஸாரின் அதி­கா­ரத்தின் கீழேயே உள்­ளன.

தேசிய பொலி­ஸாரின் கீழ் வரு­கின்ற குற்­றங்கள் தொடர்­பி­லான வாச­கங்கள் பரந்த பொருள்­வி­ளக்­கத்­திற்கு உட்­படக் கூடி­ய­வை­க­ளா­கவும் பல்­வே­று­பட்ட வகைக் குற்­றங்­களை உள்­ள­டக்கக் கூடி­ய­வை­க­ளா­கவும் உள்­ளன.

இவ்­வா­றாக, மாகாண சபை­களின் பொலிஸ் அதி­காரம் என்­பது மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட குற்­றங்கள் சம்­பந்­தப்­பட்­ட­தா­கவே உள்­ளது.

அவ­ச­ர­கால நிலை பிர­க­டனம்

மாகா­ண­மொன்­றினுள் பணி­யாற்றும் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் மாகாணப் பிரதி பொலிஸ் மா அ­தி­பரின் நெறிப்­ப­டுத்தல் மற்றும் கட்­டுப்­பாட்டின் கீழ் பணி­யாற்­று­ப­வர்­க­ளாக இருப்­பார்கள்.

மாகா­ணத்­தினுள் பொது ஒழுங்கை நிலை­நாட்­டு­வது மாகா­ணத்­தினுள் பொலிஸ் அதி­கா­ரங்­களைப் பிர­யோ­கிப்­பது தொடர்பில் மாகாண பிரதி பொலிஸ் மா அ­திபர் மாகாண முத­ல­மைச்­ச­ருக்குப் பொறுப்புக் கூற வேண்­டி­ய­வ­ரா­கவும் அவ­ரது கட்­டுப்­பாட்டின் கீழ் உள்­ள­வ­ரா­கவும் இருப்பார்.

ஆயினும், மாகா­ண­மொன்­றினுள் அவ­சர நிலை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­போது, மாகாண முத­ல­மைச்­ச­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள அத்­த­கைய பொலிஸ் அதி­கா­ரங்­களை ஜனா­தி­பதி  பொறுப்­பேற்­கலாம் என்­ப­துடன் மாகா­ணத்­தினுள் பொது ஒழுங்கு தொடர்­பான மாகாண நிரு­வா­கத்­தையும் தான் பொறுப்­பேற்­கலாம்.

மாகா­ண­மொன்­றினுள் அவ­ச­ர­கால நிலை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­போது அந்த மாகா­ணத்­தினுள் பொது ஒழுங்கைப் பேணு­வ­தற்கு தேசிய பொலி­ஸாரை பொலிஸ் மாஅ­திபர் அனுப்பி வைக்­கலாம்.

ஏதேனும் குழப்பம் கார­ண­மாக மாகா­ணத்­தினுள் பாது­காப்பு அல்­லது பொது ஒழுங்கு மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது என்று ஜனா­தி­பதி கரு­து­கின்ற போது அவ­ச­ர­கால நிலையைப் பிர­க­ட­னப்­ப­டுத்­தாது, மாகாண முத­ல­மைச்­ச­ருடன் கலந்­து­ரை­யாடி மாகா­ணத்­தினுள் பொது ஒழுங்கை மீளக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக தேசிய பொலி­ஸாரை ஜனா­தி­பதி அந்த மாகா­ணத்­திற்கு அனுப்பி வைக்­கலாம்.

கலந்­து­ரை­யாடல் என்ற சொற்­பதம் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதால் முத­ல­மைச்­சரின் விருப்­பத்­திற்கு மாறாகக் கூட, ஜனா­தி­பதி தேசிய பொலி­ஸாரை குறித்த மாகா­ணத்­திற்கு அனுப்பி வைக்க முடியும்.

தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் இன்மை 

நாம் மேலே பார்த்­த­வா­றாக மாகாண பொலிஸ் அதி­காரம், தேசிய பாது­காப்பை உள்­ள­டக்­காது என்­ப­தாலும், மாகாண பிரதி பொலிஸ் மாஅ­திபர் பெரும்­பாலும் மத்­திய அரசின் விருப்­பத்­திற்­கு­ரி­ய­வ­ராக இருப்பார் என்­ப­தாலும், மாகாண பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் அங்­கத்­த­வர்­களில் ஒருவர் மட்­டுமே மாகாண முத­ல­மைச்­சரின் விருப்­பத்­திற்­கு­ரி­ய­வ­ராக இருப்பார் என்­ப­தாலும், மாகாணப் பொலிஸார் பயன்­ப­டுத்­து­கின்ற ஆயு­தங்­களின் வகை மற்றும் அளவைத் தீர்­மா­னிப்­ப­தாக தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழுவே இருக்கும் என்­ப­தாலும், தேசிய பாது­காப்பு சம்­பந்­தப்­பட்ட குற்­றங்கள் உட்­பட பல முக்­கிய குற்­றங்கள் தேசிய பொலி­ஸாரின் கீழ் வரு­வ­தாலும், அவ­ச­ர­கால நிலை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள போது  ஜனாதிபதி மாகாண முதலமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரங்களை தான் பொறுப்பேற்கலாம் என்பதுடன் அந்த மாகாணத்தினுள் பொது ஒழுங்கைப் பேணுவதற்கு தேசிய பொலிஸாரை பொலிஸ் மாஅதிபர் அனுப்பி வைக்கலாம் என்பதாலும் மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது எவ்வகையிலும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைய மாட்டாது.

முடிவுரை

சட்டம் ஒழுங்கு பேணப்பட்டு மக்கள் அச்சமின்றி அமைதியுடன் வாழ்வதை முழுமையாக உறுதிப்படுத்த வேண்டுமென்றால், மக்களின் நேரடி ஆட்சியாளர்களிடம் பொலிஸ் அதிகாரம் இருத்தல் வேண்டும். அதிகாரப் பரவலாக்கலின் கீழ் மக்களின் நேரடி ஆட்சியாளராக மாகாண சபைகள் இருப்பதனால், மாகாண சபைகளுக்குப் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுதல் வேண்டும்.

பொலிஸ் அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டால், மாகாணமொன்றினுள் எழக் கூடிய சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றிய பிரச்சினைகளுக்கு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டியதாக சம்பந்தப்பட்ட மாகாண சபை இருக்கும். அந்த மாகாண சபைக்குப் பதிலளிக்க வேண்டியவர்களாக மாகாணப் பொலிஸார் இருப்பார்கள். இது மக்கள், நிருவாகம் மற்றும் பொலிஸார் ஆகியோரிடையேயான உறவை வலுப்படுத்துவதுடன், பொது ஒழுங்கையும்,  மக்களின் அமைதி வாழ்க்கையையும் மற்றும் பொறுப்புக் கூறுந்தன்மையையும் உறுதிப்படுத்துவதாகவும் அமையும்.

-பேராசிரியர் அ. சர்வேஸ்வரன்

Share.
Leave A Reply

Exit mobile version