சுன்னாக காதல் விவகாரத்தில் 54 வயதான நபரை அடித்துக் கொலை செய்தமை தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

19 வயது யுவதியும் 54 வயது ஆணொருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியே சென்று குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், அவர்களை சேர்த்து வைப்பதாக உறவினர்கள் ஊருக்கு வரவழைத்தனர்.

இவ்வாறு அவர்கள் வந்தவேளை உறவினர்களால் அவர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்ட நிலையில், அந்த ஆண் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது இடையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சுன்னாகம் பொலிஸாரால் அறுவர் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்கள் அறுவரையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான யுவதி தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் யுவதியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் தடயச் சான்றான, உயிரிழந்த நபரின் சாரத்தை எரித்த குற்றச்சாட்டின் கீழ் யுவதியின் அண்ணாவையும் பொலிஸார் செவ்வாய்க்கிழமை (08) கைது செய்துள்ளனர்.

மேலும் சம்பவம் நிகழ்ந்த இடத்தினை மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிவான் செவ்வாய்க்கிழமை (08) மாலை 4 மணியளவில் பார்வையிட்டார். அதன்பின்னர் உயிரிழந்தவரது சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version