இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட உடுதுணிகளுக்குள் மறைத்து 4 கடவுச்சீட்டுக்களை சட்டவிரோதமாக கொண்டு வந்த பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய வர்த்தகப் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (21) அதிகாலை 04.14 மணியளவில் இந்தியாவின் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-126 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இந்நிலையில் அவர் கொண்டு வந்த உடுதுணிகளைச் சோதனையிட்டபோதே இந்த 4 கடவுச்சீட்டுகள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஐரோப்பாவுக்கு தப்பிச் செல்வதற்காக இந்த கடவுச்சீட்டுகளை மனித கடத்தல்காரர்களுக்கு வழங்க இந்த வர்த்தக பெண் திட்டமிட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.