இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது.
படிப்படிப்பாக லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டு மாலை 6.04 மணிக்கு நிலவின் தரைப்பகுதியில் விக்ரம் லேண்டர் கால்பதித்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை தென் ஆப்ரிக்காவில் இருந்து காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரோ குழுவினருடன் இணைந்து பார்த்தார்.
விக்ரம் லேண்டர் தரையிறங்கியது தொடர்பாக காணொளி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோதி, “இது போன்ற வரலாற்றுத் தருணங்களைப் பார்க்கும் போது நமக்குப் பெருமையாக இருக்கிறது. இது புதிய இந்தியாவின் விடியல். இந்த தருணம் மறக்க முடியாதது. இந்த தருணம் இதற்கு முன் நடந்திராதது. துயரக் கடலை கடக்கும் தருணம் இது.
140 கோடி இந்தியர்களின் துடிப்பால் இந்த தருணம் உருவாகியுள்ளது. இந்த தருணத்துக்காக இஸ்ரோ பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்துள்ளது. 140 கோடி நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துகள். நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பாலும் திறமையாலும், உலகில் எந்த நாடும் அடைய முடியாத நிலவின் தென் துருவத்தை அடைந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
சந்திரயான்- 3 திட்டத்தின் திட்ட இயக்குநராக தமிழ்நாட்டின் வீர முத்துவேல் செயல்பட்டு வருகிறார். விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கியதும் பேசிய அவர் “எனது குழுவினர் முழுமையான பங்களிப்பை வழங்கினர்” என்று கூறினார்.
விழுப்புரத்தில் விஞ்ஞானி வீர முத்துவேல் அவர்களின் தந்தையார் பழனிவேல் சந்திராயன் நிலவில் தரை இறங்கும் காட்சியை ஆர்வமுடன் அவர் வீட்டில் இருந்தபடியே கண்டு ரசித்தார்
சந்திரயான் 3 திட்டம் வெற்றிபெற வேண்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மத வழிப்பாட்டு தலங்களில் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
டெல்லியில் உள்ள ஜன் கல்யான் சமிதியில் சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற வேண்டி யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
டெல்லியில் உள்ள பங்களா சாகிப் குருத்வாராவில் மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் பூரி உள்ளிட்டோர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். நிலவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்க வேண்டி காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரட்பால் தர்காவில் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்.
நிலாவின் தென் துருவப்பகுதியில் 70 டிகிரி அட்சரேகையில் லேண்டர் தரையிறங்குகிறது. அந்தப் பகுதியில்தான் சந்திரயான்-3 தனது ஆய்வுகளைச் செய்யப் போகிறது.
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பின்னர், அதன் உள்ளே இருக்கும் ரோவர் வெளியே வரும். இந்த ரோவர் நிலாவின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து தரைப்பரப்பின் தன்மை என்ன, வெப்பம் எந்த அளவுக்கு உள்ளது, தண்ணீர் உள்ளதா என்பன போன்ற தகவல்களைச் சேகரித்து அனுப்பும்.