பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்­கான சிறப்­பு­ரி­மையைப் பயன்­ப­டுத்தி, மீண்டும் நீதித்­து­றையின் மீது மோச­மான சேற்றை வாரி­யி­றைத்­தி­ருக்­கிறார் சரத் வீர­சே­கர.

இன­வாத அர­சி­யலை முன்­னெ­டுப்­பதில் சரத் வீர­சே­க­ர­வுக்கும் விமல் வீர­வன்ச மற்றும் உதய கம்­மன்­பி­ல­வுக்கும் இடையில் இப்­போது, கடும் போட்டி நில­வு­கி­றது.

முன்னர் விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில போன்­ற­வர்கள் தான் இன­வாதம் கக்­கு­வதில் முன்­னிலை வகித்து வந்­தனர். அவர்­க­ளுக்கு கடும் போட்­டி­யாக உரு­வெ­டுத்­தி­ருக்­கிறார் சரத் வீர­சே­கர.

குருந்­தூர்­மலை, 13 ஆவது திருத்­தச்­சட்டம் போன்ற விட­யங்­களைப் பயன்­ப­டுத்தி தமி­ழர்கள் மீது இன­வாதம் கக்­கு­வதில் அவர் குறி­யாக இருக்­கிறார்.

குருந்­தூர்­ம­லையை சிங்­கள பௌத்­தர்­களின் இடம் என்­கிறார். இரா­வ­ணனை சிங்­கள மன்னன் என்­கிறார். தமி­ழர்கள் வந்­தேறு குடிகள் என்­கிறார். எங்கு வேண்­டு­மா­னாலும் புத்­தரை வைத்து வழி­படும் உரிமை தங்­க­ளுக்கு இருப்­ப­தாக கூறு­கிறார்.

இவ்­வ­ள­வையும் கூறி விட்டு தமிழ் அர­சி­யல்­வா­திகள் தான் இன­வாதம் பேசு­கின்­றனர், இன­வாத அர­சியல் நடத்­து­கின்­றனர் என்­றெல்லாம் அவர் குற்­றம்­சாட்­டு­கிறார்.

இலங்­கையில் இன­வாத அர­சியல் முறை இப்­போது கூர்­மை­ய­டையத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

தமிழர் தரப்பில் உரி­மைக்­காக குரல் கொடுப்­ப­வர்­களும், சிங்­கள, பௌத்த ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ராக குரல் எழுப்­பு­ப­வர்­களும் இன­வா­தி­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர்.

இவ்­வா­றா­ன­தொரு அர­சியல் பாரம்­ப­ரி­யத்­துக்குள் தான் இலங்கைத் தீவு பல­ கா­ல­மாக மூழ்கிக் கிடக்­கின்­றது.

அண்­மைக்­கா­ல­மாக சிங்­கள பௌத்த பேரி­ன­வாத அர­சியல் இன்னும் மோச­மாக மாறத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

தமி­ழர்­களின் பூர்­வீக நிலங்­களை அப­க­ரிப்­பது, ஆல­யங்­களை அழித்து, புதிய விகா­ரை­களை கட்­டி­யெ­ழுப்­பு­வது என, சிங்­களப் பேரி­ன­வாத அணு­கு­முறை மோச­ம­டைந்­தி­ருக்­கி­றது. அதற்குக் குறுக்கே நிற்பவர்­களை மோச­மாக விமர்­சிக்­கின்ற போக்கு அதி­க­ரித்­தி­ருக்­கி­றது.

பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்றும் சரத் வீர­சே­கர, உதய கம்­மன்­பில உள்­ளிட்ட இன­வாதப் போக்­கு­டைய உறுப்­பி­னர்கள் பலரும், நாட்டின் நீதித்­து­றையை கேவ­லப்­ப­டுத்தும் வகையில் நடந்து கொள்­கின்­றனர்.

குருந்­தூர்­ம­லைக்குச் சென்ற சரத் வீர­சே­கர முல்­லைத்­தீவு நீதி­ப­தியின் விசா­ர­ணையில் குறுக்­கிட முயன்ற போது, அவரை அங்­கி­ருந்து வெளி­யேற்­றி­யி­ருந்தார் நீதி­பதி.

அதற்குப் பின்னர், பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய சரத் வீர­சே­கர இது சிங்­கள பௌத்த நாடு என்றும், சிங்­கள பௌத்­த­ரான தன்னை வெளி­யேற்­று­வ­தற்கு ஒரு தமிழ் நீதி­பதிக்கு அதி­காரம் இல்லை என்றும் கூறி­ய­துடன் தமிழ் நீதி­ப­திகள் பக்­க­சார்­பாக நடந்து கொள்­வ­தா­கவும் குற்­றம்­சாட்­டினார்.அதற்கு எதிர்ப்­புகள் வந்­த­வுடன், தனது கருத்து திரி­பு­ப­டுத்­தப்­பட்டு விட்­ட­தா­கவும் குறிப்­பிட்டார்.

குருந்­தூர்­ம­லையில் தமி­ழர்­களால் பொங்கல் வழி­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்ட பின்னர், கடந்த வாரம் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய சரத் வீர­சே­கர, முல்­லைத்­தீவு நீதி­ப­தியை மன­நோ­யாளி என்றும் அவரை இட­மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரினார்.

பாரா­ளு­மன்­றமா இது என்று கேள்வி எழுப்பத் தோன்றும் அள­வுக்கு கேவ­ல­மான- இன­வாத விமர்­ச­னங்கள், தமி­ழர்கள் மீது முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. சிங்­கள பௌத்த பேரி­ன­வாத திமி­ருடன் தமி­ழர்­களை எங்கு வேண்­டு­மா­னாலும் கேவ­லப்­ப­டுத்த முடியும் என சரத் வீர­சே­கர போன்­ற­வர்கள் உறு­தி­யாக நம்­பு­கி­றார்கள்.

குருந்­தூர்­ம­லையில் தமி­ழர்கள் பொங்கல் விழாவை முன்­னெ­டுத்­தது, சிங்­கள பௌத்­தர்­களை காயப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக இன்­னொரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஜயந்த சம­ர­வீர கூறி­யி­ருக்­கிறார்.

குருந்­தூர்­ம­லையில் விகாரை கட்­டப்­ப­டு­வ­தற்கு முன்னர் அங்கு பொங்கல் வழி­பா­டுகள் சைவ மக்­களால் மேற்­கொள்­ளப்­பட்­டது.

அது­வரை காலமும் பொங்கல் வைத்த போது பௌத்­தர்கள் யாருக்கும் மனம் புண்­ப­ட­வில்லை. இப்­போது மட்டும் புண்­ப­டு­வ­தாக கூறு­கிறார் ஜயந்த சம­ர­வீர.

சரி, 2000 ஆண்­டு­க­ளுக்கு முந்­திய விகாரை இருந்­த­தா­கவே வைத்துக் கொள்வோம். அதனை சிங்­கள பௌத்­தர்­களே அமைத்­தனர் என்றும் வைத்துக் கொள்வோம்.

அத்­த­கைய புரா­தன விகா­ரையை மண்­ணுக்குள் புதைய விட்­ட­தற்­காக, இத்­தனை காலமும் அங்கு வழி­ப­டாமல் போன­தற்­காக ஏன் சிங்­கள பௌத்­தர்­கள வருந்­த­வில்லை.

அந்த விகா­ரையை கைவிட்­ட­தற்­காக ஏன் அவர்கள் வெட்­கப்­ப­ட­வில்லை?

இவ்­வா­றான கருத்­துக்­களின் ஊடாக நாட்டில் மீண்டும் இன­வாத அர­சி­ய­லுக்கு உயிர் கொடுக்க முனை­கி­றார்கள் இவர்கள்.

அடுத்த ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் நடக்கப் போகி­றது. அதில் மீண்டும் சிங்­கள பௌத்த வாக்­கு­களால் ஜனா­தி­ப­தியை தேர்வு செய்யும் நோக்கம் சரத் வீர­சே­கர போன்­றோ­ருக்கு இருக்கக் கூடும்.

2019 ஜனா­தி­பதி தேர்­தலில் அவர்கள் தனிச் சிங்­கள பௌத்த வாக்­கு­களால் கோட்­டா­பய ராஜபக் ஷவை ஜனா­தி­பதி ஆக்­கி­னார்கள். அவர்­களின் அந்த வெற்றி இரண்­டரை ஆண்­டு­க­ளுக்குக் கூட தாக்குப் பிடிக்­க­வில்லை.

சிங்­கள பௌத்­தர்­களின் ஜனா­தி­பதி ஒட்­டு­மொத்த நாட்டு மக்­க­ளையும் துன்­பத்­துக்குள் தள்­ளினார். அதனால் மக்­களால் வெறுக்­கப்­பட்டு விரட்­டப்­பட்டு நாட்டை விட்டே ஓடினார்.

அந்த இடத்­தி­லேயே தனிச் சிங்­கள பௌத்த வாக்­குகள் என்ற இரா­ஜ­தந்­திரம் தோல்­வி­ய­டைந்­தது.

அப்­போது ஆட்­சியை இழந்த ராஜபக் ஷவினர், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஆட்­சிக்கு கொண்டு வந்து பின்­க­தவால் தங்­களின் ஆட்­சியை நடத்திக் கொண்­டி­ருக்­கின்­றனர். ஒரு கட்­டத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையே மீண்டும் ஜனா­தி­ப­தி­யாக்கும் திட்டம் தான் தங்­க­ளுக்கு சரிப்­பட்டு வரும் என்று அவர்கள் நம்­பி­னார்கள்.

ஆனால், இப்­போ­தைய நிலையில் ராஜ­பக் ஷவினர் மீண்­டெ­ழு­வ­தற்கு முற்­ப­டு­கின்­றனர். அதி­கா­ரத்தை மீளக் கைப்­பற்றும் திட்­டங்­களை வகுக்கத் தொடங்­கி­யுள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில், ராஜபக் ஷவி­ன­ரையோ அல்­லது சிங்­கள பௌத்­தர்­களால் தெரிவு செய்யக் கூடிய ஒரு­வ­ரையோ தான் அடுத்த ஜனா­தி­ப­தி­யாக்­கு­வ­தற்கு சரத் வீர­சே­கர போன்­ற­வர்கள் முற்­ப­டு­கின்­றனர்.

தனிச் சிங்­கள பௌத்­தர்­களால் மீண்டும் ஒரு ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வதன் மூலம், தமிழ்ப்­பேசும் சமூ­கங்­களின் அர­சியல் வகி­பா­கத்தை குறைப்­ப­தற்கு முனை­கின்­றனர்.

தமிழ்ப்­பேசும் சமூ­கங்கள், அர­சி­யலில் செல்லாக் காசாக மாற்­றப்­பட்டால் தான் வடக்கு, கிழக்கை சிங்­கள பௌத்­த­ம­ய­மாக்கும் திட்­டங்­களை முன்­னெ­டுக்­கலாம்.

அதற்­காக மீண்டும் சிங்­கள பௌத்­தர்­களின் ஆணை பெற்ற ஜனா­தி­பதி ஒரு­வரைத் தெரிவு செய்ய வேண்­டு­மானால்- இன­வாத நெருப்பு பற்­றி­யெ­ரிய வேண்டும்.

மிக அண்­மையில் தான் சிங்­கள பௌத்­தர்­களின் ஆணை பெற்ற ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரத்தின் தோல்­வியை அனு­ப­வித்த மக்கள் மீண்டும் ஒரு­முறை அவ்­வாறு படு­கு­ழிக்குள் விழ விரும்­ப­மாட்­டார்கள்.

அந்தக் கசப்­பான அனு­ப­வத்தில் இருந்து அவர்கள் இன்­னமும் மீள­வில்லை.

அவ்­வா­றான மக்­களை முழு­மை­யாக சிங்­கள பௌத்த பேரி­ன­வாத மனோ­நி­லைக்கு கொண்டு சென்றால் தான் அந்த இலக்கை நிறை­வேற்றிக் கொள்ள முடியும்.

சிங்­கள பௌத்த பேரி­ன­வாத உணர்­வு­களைத் தூண்டி விட்டால் தான், சிங்­கள பௌத்த வாக்­கு­களை ஒன்­றி­ணைத்து தீர்க்­க­மா­ன­தொரு வெற்­றியை-, ஆணையை பெற முடியும்.

சரத் வீர­சே­கர, உதய கம்­மன்­பில போன்ற இன­வா­திகள் இந்த உண்­மையை தெளி­வாக புரிந்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.

ராஜபக் ஷவி­னரே, ரணில் விக்கி­ர­ம­சிங்­கவை மீண்டும் வேட்­பா­ள­ராக நிறுத்த முனைந்­தாலும்- இவர்கள் அதனை அனு­ம­திக்­க­மாட்­டார்கள். ராஜபக் ஷவி­னரை உசுப்­பேற்றி உசுப்­பேற்றி அவர்­களை நடுத்­தெ­ரு­வுக்கு கொண்டு வந்து நிறுத்­தி­ய­வர்கள் இவர்கள் தான்.

தங்­களின் அர­சியல் நலன்­க­ளுக்­காக, சிங்கள பௌத்த பேரி­ன­வாத நலன்­க­ளுக்­காக அவர்கள் மீண்டும் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான இன­உ­ணர்­வு­களை தூண்டி விடத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள். வடக்கில் பௌத்­த­ம­ய­மாக்­கலை தீவி­ரப்­ப­டுத்தும் போது தமி­ழர்கள் அதனை இன்னும் மோச­மாக எதிர்ப்­பார்கள் என்­பது இன­வா­தி­க­ளுக்குத் தெரியும்.

அதனால் அவர்கள் பௌத்­த­ம­ய­மாக்­கலை முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

அதன் ஊடாக தமி­ழர்­களின் எதிர்­வி­னையை கொண்டு அவர்­களை இன­வா­தி­க­ளாக சித்­தி­ரித்து, சிங்­கள பௌத்­தர்­களின் நலன்­களும் உரி­மை­களும் தமி­ழர்­களால் பறிக்­கப்­ப­டு­வ­தாக கூச்சல் போடு­கின்­றனர்.

இதன் ஊடா­கவே, சிங்­கள பௌத்­தர்கள் மத்­தியில் இன­வாத உணர்வைத் தட்­டி­யெ­ழுப்­பு­கின்­றனர். வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் அவர்கள் தங்­களின் காரியம் நிறை­வேறும் வரையில் இந்த இன­வாத நெருப்பை அவர்கள் அணைய விட­மாட்­டார்கள். இன்னும் இன்னும் எண்ணெய் ஊற்றி கொளுந்து விட்டு எரிய வைத்துக் கொண்டிருப்பார்கள்.

(நன்றிவீரகேசரி)  கபில்

Share.
Leave A Reply

Exit mobile version