13ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இது சரி­யான தருணம் அல்ல என்று ஐக்­கிய மக்கள் சக்­தியும், ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவும் கூறி­யி­ருக்­கின்­றன.

13 ஆவது திருத்தச் சட்ட அமு­லாக்க விட­யத்தில், அர­சியல் கட்­சி­களின் நிலைப்­பா­டு­களை ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கோரி­யி­ருந்த நிலையில்- இரண்டு பிர­தான கட்­சி­க­ளிடம் இருந்து கிட்­டத்­தட்ட ஒரே மாதி­ரி­யான கருத்து வெளி­யா­கி­யி­ருக்­கி­றது.

13 ஆவது திருத்தச் சட்­டத்தை இந்தக் கட்­சிகள் எதிர்க்­க­வில்லை. அதனை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தையும் பகி­ரங்­க­மாக எதிர்க்­க­வில்லை. இது ஒரு வகைத் தந்­திரம்.

ஏனென்றால், 13 ஆவது திருத்தச் சட்­டத்தை எதிர்ப்­பது, இந்­தி­யா­வுக்கு நேர­டி­யாகச் சவால் விடு­வது போல அமையும்.

இந்­திய – இலங்கை உடன்­பாட்­டுக்கு அமைய, கொண்டு வரப்­பட்­டது தான் 13 ஆவது திருத்­தச்­சட்டம். இதுதான் இலங்கைத் தமிழர் பிரச்­சி­னைக்­கான நிலை­யான தீர்வு என்று, இந்­தியா கடந்த 36 ஆண்­டு­க­ளாக வலி­யு­றுத்தி வரு­கி­றது.

இவ்­வா­றான நிலையில் 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு எதி­ரான நிலைப்­பாட்டை எடுத்தால், அல்­லது அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை நிரா­க­ரித்தால், இந்­தி­யாவை எதிர்ப்­பது போல அமைந்து விடும்.

அடுத்த ஆண்டு முக்­கி­ய­மான தேர்­தல்கள் நடக்­க­வுள்ள நிலையில், இந்­தி­யாவைப் பகைத்துக் கொள்­வது நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தும் என்­பதை மஹிந்த ராஜபக்ஷவோ, சஜித் பிரே­ம­தா­சவோ அறி­யா­த­வர்கள் அல்ல.

இந்­தி­யாவைப் பகைத்துக் கொள்­வதன் மூலம், தங்­களின் வெற்றி வாய்ப்பை பறி­கொ­டுக்க எந்­த­வொரு பிர­தான அர­சியல் கட்­சியும் தயா­ராக இருக்­காது. அதே­ வேளை, 13 ஆவது திருத்தச் சட்டம் என்­பது, கடந்த 36 ஆண்­டு­க­ளாக அர­சி­ய­ல­மைப்பின் ஒரு பகு­தி­யா­கவே இருக்­கி­றது.

இதன் மூலம் உரு­வாக்­கப்­பட்ட மாகாண சபைகள் இயங்கிக் கொண்­டி­ருக்­கின்­றன. அதற்கு நடத்­தப்­பட்ட தேர்­தல்­களில், ஐக்­கிய மக்கள் சக்­தியின் தாய்க் கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்­சியும், பொது­ஜன பெர­மு­னவும் அதன் தாய்க் கட்­சி­யான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும், வெற்­றி­களைப் பெற்று ஆட்­சி­ய­மைத்து வந்­தி­ருக்­கின்­றன.

13 ஆவது திருத்தச் சட்­டத்தின் ஊடாக உரு­வாக்­கப்­பட்ட மாகாண சபை­களின் அதி­கா­ரங்­களை ருசி பார்த்த இந்தக் கட்­சிகள், இப்­போது அதனை நிரா­க­ரிக்க முடி­யாது.

மாகாண சபை­க­ளுக்கு கூடுதல் அதி­கா­ரங்­களை வழங்கும், 13 ஆவது திருத்தச் சட்டம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வதை எதிர்க்க முடி­யாது.

ஏனென்றால், 13இன் கீழான அதி­காரப் பகிர்வு என்­பது, தனியே வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு மாத்­திரம் உரி­ய­தல்ல.  நாட்டின் ஏனைய ஏழு  மாகா­ணங்­க­ளுக்கும் சேர்த்தே அதி­கா­ரங்கள் பகி­ரப்­படும்.

ஏற்­கெ­னவே இந்தக் கட்­சிகள் மாகாண சபை­களைக் கைப்­பற்றி ஆட்சி நடத்­திய போது, தங்­க­ளுக்கு போதிய அதி­கா­ரங்கள் இல்லை என்று குரல் எழுப்­பி­யி­ருந்­தன.

அப்­போது, முத­ல­மைச்­சர்­க­ளாக, மாகாண அமைச்­சர்­க­ளாக இருந்து மாகா­ணங்­க­ளுக்கு மேல­திக அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட வேண்டும் என்று கோரி­ய­வர்கள் இப்­போது பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்­கி­றார்கள்.

அப்­ப­டிப்­பட்ட நிலையில், இந்தக் கட்­சிகள் 13 ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வதை நிரா­க­ரிக்­கவோ – எதிர்க்­கவோ முடி­யாது.

அப்­ப­டி­யானால், 13 ஆவது திருத்தச் சட்­டத்தின் முழு­மை­யான அமு­லாக்­கத்தை எதிர்க்­காத ஐக்­கிய மக்கள் சக்­தியும், பொது­ஜன பெர­மு­னவும், ஏன் உட­ன­டி­யாக அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஆத­ர­வ­ளிக்கத் தயா­ராக இல்லை?

இங்கு தான் சிங்­களப் பேரி­ன­வாதக் கட்­சி­களின் அர­சியல் தந்­திரம் இருக்­கி­றது.

13 ஆவது திருத்தச் சட்­டத்தை எதிர்க்­காமல் இருப்­பது ஒரு இரா­ஜ­தந்­திரம் என்றால், அதனை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தாமல் தடுப்­பதும் இன்­னொரு இரா­ஜ­தந்­திரம் தான்.

இங்கு தான் அவர்கள் இரட்டை இரா­ஜ­தந்­தி­ரத்தை கையா­ளு­கின்­றனர்.

13 ஆவது திருத்தச் சட்­டத்தை ஆர்.ஜய­வர்­தன கொண்டு வந்த போது,  ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அதனை தீவி­ர­மாக எதிர்த்­தது. ஆரம்­பத்தில் அந்தக் கட்சி நேர­டி­யாக மாகாண சபைத் தேர்­தல்­களில் போட்­டி­யி­ட­வில்லை.

1993இல் சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஐக்­கிய சோச­லிச முன்­னணி என்ற கூட்­ட­ணியின் பெயரில், போட்­டி­யிட்ட போது, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் பலரும் போட்­டி­யிட்­டி­ருந்­தார்கள்.

அதற்குப் பின்னர், மாகாண சபைத் தேர்­தல்­களில் சுதந்­திரக் கட்சி கூட்­டணி அமைத்து போட்­டி­யிட்­டி­ருக்­கி­றது.

ஆனாலும் மாகா­ணங்­க­ளுக்கு கூடுதல் அதி­கா­ரங்­களைப் பகி­ரு­வ­தற்கு – இருக்­கின்ற அதிகாரங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஆத­ர­வ­ளிக்க தயங்­கு­கி­றது.

அதற்கு முக்­கி­ய­மாக சொல்­லப்­படும் காரணம், காணி, பொலிஸ் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட்டால், வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் தனி­நா­டாக மாறி விடும் என்ற அச்சம் தான்.

பொலிஸ் அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்தி தமி­ழர்கள் தனி­நாட்டை அமைத்து விடு­வார்கள் என்ற அச்சம் சிங்­களக் கட்­சி­க­ளுக்கு இருப்­பது உண்மை.

ஆனால், அது­வல்ல பிர­தான காரணம்.தமி­ழர்கள் கூடுதல் அதி­கா­ரங்­களைப் பெற்று விடக் கூடாது என்­பதே சிங்­களக் கட்­சி­களின் அடிப்­படை நோக்கம்.

ஏனென்றால், 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்­பட்டு, 36 ஆண்­டு­க­ளாகி விட்­டன. ஆனாலும், அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இது­வரை ஆட்­சியில் இருந்த எந்­த­வொரு அர­சாங்­கமும் முயற்­சிக்­க­வில்லை.

இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்­வாக இந்­தியா முன்­மொ­ழியும் ஒரு அர­ச­மைப்புத் திருத்­தத்தை, நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இது­வரை காலம் வர­வில்லை என்றால் அதன் அர்த்தம் என்ன?

அந்த தீர்வை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை சி்ங்களத் தரப்பு விரும்­ப­வில்லை என்­பது தானே உண்மை.

13 ஆவது திருத்தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இது தரு­ண­மல்ல என்றால், 36 ஆண்­டு­களில் அதற்கு தருணம் வர­வில்­லையா?

அப்­ப­டி­யானால் 13 ஆவது திருத்­தத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான தருணம் எப்­போது வரும்? அந்த தரு­ணத்தில் கூட 13 ஆவது திருத்தச் சட்டம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டுமா? என்ற கேள்­விகள் எழு­கின்­றன.

பொரு­ளா­தார நெருக்­க­டியை காரணம் காட்டி 13ஐ நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை பிற்­போட சொல்­கி­றது பொது­ஜன பெர­முன.

கடந்த காலங்­களில் ஒவ்­வொரு முறையும் ஒவ்­வொரு காரணம் சொல்­லப்­பட்­டது.

இப்­போது பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக முன்­வைக்­கப்­ப­டு­கி­றது.

இந்த நெருக்­கடி தீர்ந்த பின்னர் 13ஐ நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இது தரு­ண­மல்ல என்று இன்­னொரு காரணம் முன்­வைக்­கப்­படும்.

சிங்­களக் கட்­சி­க­ளுக்கு காலத்­துக்கு காலம் ஒவ்­வொரு காரணம் கிடைக்­கா­மலா போகப் போகி­றது?

13 ஆவது திருத்தச் சட்­டத்தின் ருசியை அனு­ப­வித்­த­வர்கள் கூட, அதனை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த தயங்­கு­கின்­றனர். இதனை இந்­தியா திணித்­தது என்ற சிந்­த­னையும் அதற்கு ஒரு காரணம்.

தமி­ழர்கள் கூடுதல் அதி­கா­ரங்­களைப் பெற்று விடு­வார்கள் என்பது இன்னொரு காரணம்.

13இன் ஊடாக அதிகாரப் பகிர்வு தமிழர்களுக்கு தனித்துவமானதல்ல, ஏனைய 7 மாகாணங்களுக்கு உரியதை போலவே வடக்கு, கிழக்கிற்கும் அதிகாரம் பகிரப்படும் என்பதை தெரிந்திருந்தாலும், அதனை சிங்களக் கட்சிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இந்தியாவின் மேலாண்மையில் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை, நடைமுறைப்படுத்தப்படுவதையும், அதன் ஊடாக தமிழர்கள் அதிகாரம் பெறுவதையும், எதிர்ப்பதே, சிங்களக் கட்சிகளின் அடிப்படை மனோநிலையாக இருக்கிறது.

இந்த மனோநிலையில் இருந்து கொண்டு, 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தருணத்தை அவர்களால் ஒருபோதும், உருவாக்க முடியாது. இந்த மனநிலையை அவர்கள் மாற்றாத வரையில் அதற்காக தருணமும் உருவாகமாட்டாது.

-சத்­ரியன்

Share.
Leave A Reply

Exit mobile version