ரஸ்யாவுடன் ஆயுத ஒப்பந்தங்களை செய்துகெண்டால் அதற்கான விலையை வடகொரியா செலுத்தவேண்டியிருக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஆயுதவிற்பனை தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையில் இடம்பெறும் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமடைந்துள்ளன என தெரிவித்துள்ள அமெரிக்கா இந்த எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

உக்ரைனிற்கு எதிராக பயன்படுத்துவதற்கு ரஸ்யாவிற்கு வடகொரியா ஆயுதங்களை வழங்கினால் அது வடகொரியாவிற்கு உகந்த விடயமாக அமையப்போவதில்லை அதற்கு வடகொரியா ஒரு விலையை செலுத்தவேண்டியிருக்கும் என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக்சுலிவன் தெரிவித்துள்ளார்.

பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுத திட்டங்கள் தொடர்பில் ஏற்கனவே அமெரிக்கா -ஐக்கிய நாடுகளின் தடைகளை எதிர்கொண்டுள்ள வடகொரியாவிற்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பது குறித்து அவர் எதனையும் தெரிவிக்கவில்லை.

ரஸ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கப்போவதில்லை என்ற உறுதிமொழியை கடைப்பிடிக்கவேண்டும் என தனிப்பட்ட ரீதியிலும் பகிரங்கமாகவும் நாங்கள் வடகொரியாவை கேட்டுக்கொண்டுள்ளோம் எங்கள் சகாக்களும் இதனை தெரிவிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம் என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் அன் ரஸ்ய ஜனாதிபதியை சந்திப்பதற்காக மொஸ்கோ செல்லவுள்ளார் என தகவல்கள்வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது

உக்ரைனிற்கு எதிரான யுத்தத்தில் ரஸ்யா பயன்படுத்துவதற்கான ஆயுதங்களை வடகொரியா வழங்குவது குறித்து இந்த சந்திப்பில் ஆராயப்படலாம் என இந்த தகவலை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு எங்கு இடம்பெறவுள்ளது என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள இந்த தகவல் குறித்து ரஸ்யா வடகொரியா எந்த தகவலையும் வெளியிடவில்லை.

விசேட புகையிரத்தில் கிம் மொஸ்கோ செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version