தமிழர் வாழ்வில் புலப்பெயர்வு மிகவும் கவர்சிகரமான ஒன்று. எவருக்கு புலம்பெயர விரும்பமில்லை என்று கேட்டால் – இல்லையென்று சொல்பவர்கள் அரிதானவர்களாகவே இருக்க முடியும்.

அந்தளவிற்கு அது ஒரு கவர்சிமிக்க வாழ்வாகிவிட்டது. தமிழர் அரசியலில் தீர்க்கதரிசிகள் எவரும் இருந்ததாக தெரியவில்லை. செல்வநாயகம் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென்று ஒரு முறை கூறியிருந்தார்.

அதனையும் ஒரு தீக்கதரிசன பார்வையென்று கூறிவிட முடியாது – ஏனெனில், கடந்த 74 வருடகால அரசியல் நகர்வில், தமிழ் மக்களை கடவுளும் காப்பாற்றவில்லை.

இருந்ததையும் இழந்து, இருப்பதையும் பாதுகாக்க முடியாதவொரு கையறு நிலையில்தான் தமிழினம் திண்டாடிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் எவ்வாறு மண்ணைவிட்டு ஓடலாமென்றே சிந்திக்கின்றனர்.

இந்த இடத்தில் உண்மையிலேயே ஒரு தீர்க்தரிசி பற்றி கூறுவதனால், முறிந்த பனையின் ஆசிரியர்களில் ஒருவரான, படுகொலை செய்யப்பட்ட ரஜனி திரணகமவைத்தான் குறிப்பிட முடியும். முறிந்த பனையில் பின்பக்கத்தில் சில வரிகளுண்டு.

அதாவது, எரிகின்ற தேசத்தை விட்டுவி;;ட்டு ஒவ்வொரு புத்தியுள்ள மனிதனும் ஓடிக் கொண்டிருக்கின்றான்.

இன்றைய புலப்பெயர்வு கவர்சியை உற்று நோக்கும் போது, அந்த வரிகள் தீர்க்கதரிசனம் மிக்கவைதான். ஆன்று ஓட ஆரம்பித்த தமிழன் ஓடுவதை நிறுத்தவேயில்லை. ஆரம்பத்தில் ஓடியவர்களுக்கு, ஓடியதற்கான காரணம் இருந்தது, இன்றோ, வெறும் வெளிநாட்டு கவர்ச்சி மட்டுமேயிருக்கின்றது.

கனடிய அரசாங்கம் அதன் குடிவரவு கொள்கையை தளர்த்தியிருக்கின்றது. ஆசியாவை சேர்ந்தவர்களுக்கு கனடாவின் கதவு சற்று அகலமாகவே திறந்திருக்கின்றது.

இதுதான் சந்தர்ப்பம் என்று கருதும் மத்தியவர்க்க தமிழர்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர். 50 வயதை கடந்தவர்களைக் கூட ஆசை விடவில்லை.

அவர்களை பொறுத்தவரையில் எங்களுடைய பிள்ளைகளுக்கு நல்லதொரு வாழ்வு கிடைக்கும்தானே என்கின்றனர்.

பல வருடங்களுக்கு முன்னர் கடனாவிற்கு குடிபெயர்ந்த கவிஞர் ஒருவர், ஒரு நேர்காணலில் கூறியதை இப்போது நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.

எதற்காக கனடா வந்தீர்கள் என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில். கனடா அழகானதொரு நாடு. எனது ஆய்வுகளுக்கு சிறந்த நாடு. அந்தக் கவிஞரோ, தமிழ் தேசியத்தை செப்பனிட நினைத்த அறிஞர்களில் ஒருவர்.

அவரைப் போன்றவர்களால் செப்பனிட முடிந்ததா என்பது வேறு விடயம். அவ்வாறான ஒருவரே, இலங்கை அசிங்கம், கனடா அழகென்று எண்ணும் போது, சாமானிய மனிதர்கள் கனடாவை எண்ணி ஆசைப்படுவதில் என்ன தவறுண்டு. வறிய நாடுகளில் வாழ்வோர், வசிதியுள்ள நாட்டை நோக்கி செல்ல எண்ணுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

தங்கள் எதிர்காலத்தை கனடாவிலும், மேற்குலக நாடுகளிலும் கழிக்க வேண்டுமென்று எண்ணும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

பக்கத்து வீட்டிலுள்ளவர்கள், தங்களுடை உறவினர்கள் கடனாவில் இருக்கின்ற போது, அதனைப் பார்த்து மனம் வெந்து, தங்களுக்கு அந்த வாய்பில்லையே – என்று எண்ணும் தமிழர்கள் ஏராளம்.

இந்த மனோநிலைதான், வாய்ப்புக்கள் கிடைக்கும் போது, அவர்களை ஓடச் செய்கின்றது. தமிழர் தாயகமென்று அடையாளப்படுத்தப்படும், வடக்கு கிழக்கிலிருந்து ஏற்கனவே, பன்னிரண்டு லட்சம் வரையானவர்கள் வெளியேறிவிட்டனர்.

தொடர்ந்தும் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் பத்து வருடங்களில் தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பதற்கே குறிப்பிட்டளவான மக்கள் இருக்கப் போவதில்லை.

வசதியில்லாத ஏழை மக்களே இறுதியில் தாயகத்தில் எஞ்சப் போகின்றனர். அவர்களின் பிரதான பிரச்சினை அடையாளமோ, அல்லது தேசியமாகவோ இருக்காது. அவர்களின் முதல் பிரச்சினை தாங்கள் பசியின்றி, வாழ்வதாக மட்டுமே இருக்கும்.

தமிழ் மக்கள் தங்களை தாங்களே தீர்மானித்து வாழ்வதற்கான அரசியல் ஏற்பாடு ஒன்று வேண்டும். அதன் மூலம் மட்டும்தான், தமிழர்கள் தன்னிறைவாக வாழ முடியும். இதுதான் நமது அரசியல் சுலோகம்.

இந்;தச் சுலோகத்திற்கு வயதோ முக்கால் நூற்றாண்டு. 1949இல் இலங்கை தமிழரசு கட்சி, அதன் ஆங்கிலப் பெயராக, சமஸ்டியை முன்நிலைப்படுத்திய காலத்திலிருந்து, எங்களது சமஸ்டி வரலாறு நீண்டுசெல்கிறது.

அம்புலி மாமாக் கதையில் வருகின்ற, விக்கிரமாதித்தியன் வேதாளத்திற்கு கதை சொல்வது போன்று, நாங்களும் எங்களுடைய மக்களுக்கு சமஸ்டிக் கதையை கூறிவருகின்றோம்.

ஆனாலும் எங்களால் ஒரு சிறிய முன்னேற்றத்தைக் கூட காண்பிக்க முடியவில்லை. புலம்பெயர் சமூகம் பெரியதொரு பலமென்று கூறிய போதிலும் கூட, நடைமுறையில் இதுவரையில் அந்தப் பலத்தை காண்பிக்க முடியவில்லை.

வடக்கு கிழக்கில் புலம்பெயர் முதலீடுகள் பெரியளவில் குவியும் போது, தமிழ் மக்கள் மத்தியில் தொழில் துறைகள் உருவாகும், அதனால் மேலதிக புலப்பெயர்வை கணிசமானளவில் தடுக்க முடியுமென்றெல்லாம் எதிர்பார்ப்புக்கள் உண்டு.

இது பற்றி பேசியவுடன், நம்வர்கள் பலர் முன்வைக்கும் கேள்வி – புலம்பெயர் முதலீடுகளுக்கு என்ன உத்தரவாதம்? உத்தரவாதம் இல்லையென்று கூறிக்கொண்டிருந்தால், இன்னும் பல தசாப்பதங்களுக்கு கூறிக்கொண்டிருக்கலாம்.

நாம் மாற்று வழிகளை ஆராய வேண்டும். தமிழ் நாட்டில் நிறுவனங்களை பதிவு செய்து, இந்திய முதலீடாக புலம்பெயர் முதலீடுகளை கொண்டுவர முடியும்.

அதற்கான பாதுகாப்பை இந்திய வழங்கும். இல்லாவிட்டால், ஒரு கனடிய நிறுவனத்தின் ஊடாக, அமெரிக்க நிறுவனத்தின் ஊடாக உள்;வராலம்.

2015இல், எனது நண்பர்களின் அழைப்பில் நேர்வேக்கு சென்றிருந்த போது, இந்தக் கருத்தை, நோர்வே வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கு கூறியிருந்தேன்.

முதலீடுகள் தொடர்பில் அச்சமிருந்தால், நோர்வேஜிய முதலீடாகக் கொண்டுவாருங்கள். ஒரு வெளிநாட்டு முதலீடாக வரும்போது, அதற்கு சர்வதேச பாதுகாப்புண்டு.

புலம்பெயர் சமூகமென்னும் அடையாளம் தேவையில்லை. குறித்த நாடுகளின் அடையாளம் மட்டும்தான் இருக்கும். இந்த அடிப்படையில் சிந்திக்காமல், அனைத்தையும் கறுப்பு வெள்ளையாக சிந்தித்தால், தாயகத்தை காப்பது வெறும் கனவாக மட்டுமே இருக்க முடியும்.

சாத்தியமான வழிகளில் சிந்திப்பவர்களுக்கு, அவ்வாறு சிந்திப்பவர்களை ஊக்குவிப்பதற்கு நம்மத்தியில் ஆதரவில்லை. வெறும் உணச்சிப் பிளம்பாக காட்சியளிக்கும் ஆட்களே நம் மத்தியில் அதிகம். கடந்த 14 வருடங்களில் இந்த உணச்சிப்பிளம்பால் எதனையாவது சாதிக்க முடிந்ததா?

ஒரு நிலப்பரப்பை பாதுகாப்பதற்கு சனத்தொகை அவசியம். சனத்தொகை வீழ்சியடைந்து செல்லும் போது, அந்த நிலப்பரப்பை அடையாளப்படுத்துவதற்கான தார்மீக தகுதியை குறித்த மக்கள் கூட்டம் இழந்துவிடும். கிழக்கு மாகாணம் இன்று மூவினங்களும் வாழ்கின்ற ஒரு மாகாணம்.

இந்த பின்புலத்தில் ஏற்கனவே, கிழக்கு மாகாணம் தமிழர் பகுதியென்னும் அடையாளத்தை இழந்துவிட்டது. நாங்கள் வேண்டுமானால் அவ்வாறு உச்சரித்துக் கொண்டு, எங்களை நாங்களே ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்.

கிழக்கு என்பது, இப்போது மூவின மக்களும் வாழும் பகுதி. வடக்கு மாகாணத்தின் நிலைமையும் இன்னும் பத்துவருடங்களின் பின்னர் இப்போதிருப்பது போன்று இருப்பதற்கான வாய்ப்பில்லை.

யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் அதிகமான பகுதிகளில் வீடுகள் மட்டுத்தான் இருக்கும் – ஒரு வேளை அந்த வீடுகளில் வெளிநாட்டு குளிர் ஒத்துக் கொள்ளாத முதியவர்கள் இருக்கலாம்.

இதுதான் தமிழரின் நிலையென்றால், யாரை முன்னிலைப்படுத்தி, நாங்கள் அரசியல் தீர்வு தொடர்பில் பேசிக் கொண்டிருக்கின்றோம்? வசிதியுள்ள மேற்குலக நாடுகளை நோக்கிச் செல்வதுதான், பெரும்பாலான தமிழரது கனவென்றால், அவ்வாறானவர்களுக்கு எதற்காக அரசியல் தீர்வு. அரசியல் தீர்வு, நமது நிலத்தை விட்டால் வேறு வழியில்லை என்பவர்களுக்கல்லவா!

அடைந்தால் மகா தேவி இல்லாவிட்டால் மரண தேவி என்னும் நிலையில், சிந்தித்துக் கொண்டிருந்தால், எதிர்காலத்தில், தாயகமென்று அடையாளப்படுத்துவதற்கு எதுவுமிருக்காது.

பின்னர், விகாரைகள் வருகிறதென்று, வீதிகளில் சிலர் கூடி சத்தமிடுவதில் பொருளில்லை. இன்னும் பத்துவருடங்களில் வடக்கு கிழக்கை பிரதிநித்துவம் செய்யும் தமிழ் நாடாளுமன்ற எண்ணிக்கை பத்து தொடக்கம் பன்னிரெண்டுக்குள் முடங்கலாம்.

மக்கள் தொடர்ந்தும் வெளியேறிக் கொண்டிருந்தால், எங்களிடம் எஞ்சியிருக்கும் ஜனநயாக பிரதிநித்துவ பலத்தையும் சிறுகச் சிறுக இழப்போம். இதனை கருத்தில் கொண்டு சிந்திக்க மறுப்பவர்கள் தமிழ் மக்களுக்கு நன்மைசெய்பவர்கள் அல்லர்.

Share.
Leave A Reply

Exit mobile version