பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தனின் முள்ளாள் அந்தரங்கச் செயலாளரான அன்ஸீர் அசாத் மௌலானாவுடன் நடத்திய நேர்காணலொன்றை மையமாக வைத்து பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்து கடந்த வாரம் வெளியிட்ட விவரணத் திரைப்படம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2018 ஆண்டு ஜனவரி மாதம் தாம் பிள்ளையானின் ஆலோசனையின் படி அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலேக்கும் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில பல இடங்களில் தற்கொலை குண்டுகளை வெடிக்கச் செய்து 269 பேரை படுகொலை செய்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிமுக்கும் இடையில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ததாக மௌலானா இந்த விவரணப்படத்தில் கூறுகிறார்.

புத்தளம் பிரதேசத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் அந்த சந்திபிப்ன் போது கோட்டாபய ராஜபக்‌ஷவை பதவிக்கு கொண்டு வர நாட்டில் பாதுகாப்பற்ற நிலைமையை உருவாக்க வேண்டும் என்று சலே கூறியதாகவும் மௌலானா மேலும் கூறுகிறார்.

அதாவது பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கி அதன் மூலம் பாதுகாப்புத்துறையில் பரிச்சயமுள்ள கடும் போக்குள்ள ஒருவர் நாட்டின் தலைவராக வேண்டும் என்றதோர் கருத்தை நாட்டு மக்களின் மனதில் திணித்து கோட்டா தேர்தல் களத்தில் போட்டியிடுவதே திட்டமாகும் என்றே அவர் கூறுகிறார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாதிகளால் மூன்று உல்லாச பிரயாண ஹோட்டல்களிலும் மூன்று கிறிஸ்தவ தேவஸ்தானங்களிலும் நடத்தப்பட்ட இந்த குண்டுத் தாக்குலுக்கு பின்னால் அரச புலனாயவுத் துறையினரே இருந்தனர் என்பதையே சனல் 4 இந்த விவரணப்படத்தின் மூலம் உலகுக்கு வழங்கும் செய்தியாகும்.

ஆனால் மலேசியாவில் இலங்கை தூதரகத்தில் கடமையாற்றிய தாம் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக மௌலானா கூறும் 2018 ஆம் ஆண்டு முழுவதிலும் மலேசியாவிலேயே இருந்ததாக சலே கூறுகிறார். சனல் 4 அவரது கூற்றையும் விவரணப்படத்தில் உள்ளடக்கியுள்ளது.

நாம் அவருடைய கருத்தையும் வெளியிட்டோம் இவருடைய கருத்தையும் வெளியிட்டோம் எனவே நாம் எவருக்கும் அநீதி இழைக்கவில்லை என்று விவரணப்படத் தயாரிப்பாளர்கள் கூறலாம்.

ஆயினும் புலனாயவு ஊடகவியல் என்றால் வெறுமனே இருவரினது கூற்றுக்களையும் முன்வைப்பது மட்டும் போதுமானதல்ல. அவர்கள் யார் சொல்வது உண்மை என்பதையும் ஆராய்ந்து இருக்க வேண்டும்.

சலே கூறுவது உண்மையாக இருந்தால் மௌலானா கூறுவது பொய்யாகிறது. அந்த சலே – சஹ்ரான் சந்திப்பு என்பதன் மீதே குண்டு வெடிப்புக்களுக்குப் பின்னால் கோட்டாபய ராஜபக்‌ஷ இருந்தார் என்ற முழு வாதமும் தங்கியிருக்கிறது. மௌலானா கூறுவது பொய்யானால் அந்த வாதம் அடித்தளமின்றி சரிந்துவிடுகிறது.

இந்த விடயத்தை முழுமையாக ஆராயாமல் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இவ்விவரணப்படத்தை வெளியிட்டமை தொழில்சார் ஒழுங்கை மீறும் செயலாகும் ஏனெனில் தெளிவின்மை காரணமாக மக்கள் மத்தியில் குழப்பங்களும் முரண்பாடுகளும் தோன்றலாம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னல் கோட்டாபய ராஜபக்‌ஷ இருந்தார் என்பது இதுவரை நிரூபிக்கப்படாவிட்டாலும் அதனை முதன்முதலில் கூறியது சனல் 4 நிறுவனம் அல்ல.

இது 2020 ஆம் ஆண்டு முதல் பலர் வெளியிட்டு வரும் கருத்தாகும். சலே- சஹ்ரான் சந்திப்பு பற்றிய கருத்து மட்டுமே புதிதாக இந்த விவரணப்படத்தின் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அதற்கும் சனல் 4 வேறு ஆதாரங்களை முன்வைக்கவுமில்லை.

ஆயினும் இவ்வாறு நடந்து இருக்காது என்று கூறவும் இதுவரை பலமான ஆதாரங்கள் எவரும் முன்வைக்கவில்லை.

தாம் 2018 ஆம் ஆண்டு இலங்கையில் இருக்கவில்லை என்ற சலேயின் கூற்று அவர் மௌலானா மூலமாக சஹ்ரானை சந்தித்தார் என்ற கருத்தை முறியடிக்கும் பலமான கூற்றாக தெரிந்தாலும் அதனை சரிபார்க்க சனல் 4 தொலைக்காட்சி முயன்றதாக தெரியவில்லை.

அவரது கூற்று உண்மையாக இருந்தால் மட்டுமே மௌலானா கூறும் காலத்தில் அந்த சந்திப்பு இடம்பெறவில்லை என்றும் மௌலானா கூறுவது உண்மை அல்ல என்றும் ஏற்றுக் கொள்ளலாம்.

பயங்கரவாத் தாக்குதலுக்குப் பின்னல் கோட்டாவோ அல்லது அவரது கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியோ இருந்ததாக நிரூபிக்கப்படும் வரை எவரும் அவர்களை குற்றஞ்சாட்ட முடியாது தான்.

ஆயினும் தாம் நிரபராதிகள் என்பதற்கு அக்கட்சியினர் முன்வைக்கும் வாதங்கள் மிகவும் பலவீனமானவையாகும்.

அதேபோல் அவர்கள் இதனை திட்டமிடாவிட்டாலும் தாக்குதல்கள் இடம்பெற்றதை அடுத்து மிகக் கேவலமான முறையில் அவர்கள் அதனை பாவித்து இனவாதத்தை தூண்டி தமது வேட்பாளரான கோட்டாவின் தேர்தலுக்காக அதனை மிகவும் கீழ்த்தரமான முறையில் பாவித்தனர் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

சிங்கள- பௌத்த தலைவர் ஒருவரை பதவிக்கு கொண்டு வர ஒன்பது முஸ்லிம் தீவிரவாதிகள் உயிர் தியாகம் செய்வார்களா என்று நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட பொதுஜன முன்னணியின் தலைவர்கள் வாதிடுகிறார்கள்.

நிச்சயமாக இது பலமான வாதம் தான் ஆனால் வேறுபட்ட நோக்கங்களுக்காக எதிரிகளும் சேர்ந்து செயற்பட்டமைக்கு வரலாற்றில் எவ்வளவோ உதாரணங்களை காணலாம்.

மாகாண மட்டத்துக்கு அப்பால் அதிகார பரவலாக்கல் செய்வதையும் எதிர்த்த ஒரு சிங்களத் தலைவர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில் இருக்கும் நிலையில் நாட்டை பிரித்து தனித் தமிழ் நாடொன்றை காண தமது படைகளுடன் போரிடும் கிளர்ச்சிக் குழுலொன்றுக்கு ஆயுதம் வழங்குவாரா? ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச 1989 ஆம் ஆண்டு அவ்வாறு செய்தார்.

சிங்கள -பௌத்த தனித்துவத்தையே அரசியல் மூலதனமாகக் கொண்ட தலைவர் ஒருவர் அரச படைகளுக்கு எதிராக போரிடும் தமிழ் தீவிரவாத குழுவொன்றுக்கு பணம் வழங்குவாரா?

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வடக்குக் கிழக்கில் தேர்தல் பகிஷ்கரிப்பை மேற்கொள்வதற்காக மஹிந்த ராஜபக்‌ஷவின் சார்பில் பஸில் ராஜபக்‌ஷ 18 கோடி ரூபா புலிகளுக்கு வழங்கியதாக தற்போதைய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சில வருடங்களுக்கு முன்னர் போதுக் கூட்டமொன்றில் கூறினார்.

பஸில் ராஜபக்‌ஷ இரண்டு பயணப் பொதிகளில் நிறைத்து இப்பணத்தை தமது அலுவலகத்திலேயே புலிகளின் பிரதிநிதியான எமில் காந்தனிடம் கையளித்ததாக அலஸ் அக்கூட்டத்தில் கூறினார்.

அந்த கூட்டத்தின் வீடியோ இன்னமும் யூடியூப்பில் இருக்கிறது. இந்தக் கூற்றுக்காக அலஸூக்கு எதிராக ராஜபக்‌ஷக்கள் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நாமலில் வாதம் பலமானதாக இல்லை.

அதேவேளை, உலகில எங்கும் அரச உளவுத்துறையினர் பல்வேறு நோக்கங்களுக்காக அரச படைகளுக்கு எதிராக போரிடும் கிளர்ச்சிக் குழுக்களுடன் தொடர்பு கொள்வது ஒன்றும் புதிய விடயம் அல்ல.

இரு சாராரும் மற்றைய சாராருக்குள் தமது ஏஜன்டுகளை ஊடுருவச் செய்வதும் சகஜமான விடயமாகும். இரு சாராரும் மற்றைய சாராரின் உறுப்பினர்களிடம் பணத்துக்கு இரகசியமாக தகவல் பெறுவதும் சகஜம்

2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களில் 70 சதவீத சபைகளை கைப்பற்றி பலமான நிலையில் இருந்த பொதுஜன முன்னணிக்கு 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற பயங்கரவாதிகளுடன் சேர்ந்து சதி செய்யத் தேவை இருக்கவில்லை என்பது நாமலின் மற்றொரு வாதமாகும்.

2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போது பொதுஜன முன்னணி 70 சதவீத சபைகளை கைப்பற்றியது என்பது உண்மையே. ஆனால் அக்கட்சி அத்தேர்தலில் 44.65 சதவீத வாக்குகளையே பெற்றது.

சட்டத்தின் படி ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளை பெற வேண்டும். எனவே பொதுஜன முன்னணி 2018 ஆம் ஆண்டு ஜனாதிபதத் தேர்தலில் வெற்றி பெறும் அளவுக்கு பலமாக இருந்ததாக நாமல் கூறுவது உண்மையல்ல.

சலேக்கும் சஹ்ரானுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படும் காலத்தில் தாம் சிறையில் இருந்ததாக கூறும் பிள்ளையான் ஒரு சிறைக் கைதிக்கு அது போன்ற ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இலங்கையில் கைதிகள் சிறையில் இருந்த வண்ணமே பாரியளவில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவது அவருக்கு தெரியாதா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது.

அவர்களது வாதங்கள் பலவீனமானதாக இருந்தாலும் கோட்டா தான் குண்டு வெடிப்புக்களுக்குப் பின்னால் இருந்தவர் என்று கூறுபவர்களின் வாதங்களும் நிரூபிக்கப்பட்டவில்லை.

கோட்டா, மஹிந்த, ரணில், மைத்திரிபால போன்ற அரசியல்வாதிகள் இதுபோன்றவற்றை செய்யக்கூடியவர்கள் தான். ஆனால் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும் வரை எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த சதித் திட்டம் பற்றிய கருத்து 2020 ஆம் ஆண்டு முதல் நாட்டில் பரவி இருப்பதால் அதை அறிந்த பொலிஸார்,

அரச அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் ஆகிய சகலரும் இப்போது அதைப் பற்றிய ஒரு நிலைப்பாட்டை கொண்டிருக்கத் தான் செய்வார்கள்.

இப்போது அதனை அவர்களது மனதில் இருந்து அகற்றுவது கடினமான விடயமாகும். எனவே மௌலானாவின் குற்றச்சாட்டைப் பற்றிய உண்மையை சர்வதேச விசாரணையொன்றின் மூலமே அறிய முடியும்.

-எம்.எஸ்.எம். ஐயூப்-

Share.
Leave A Reply

Exit mobile version