மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்த சம்பவம் சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை பிரதான வீதியில் திங்கட்கிழமை (18) மாலை இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி பகுதியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கிச் சென்றவர்களே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் குடும்ப உறுப்பினர்களை அழைத்துவரச் சென்றவர்களே இவ் விபத்தில் சிக்கியுள்ளனர்.

இவர்கள், பயணித்த வேன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றில் மோதியதில் இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதில், காத்தான்குடியைச் சேர்ந்த 54 வயதுடைய முகம்மட் இப்றாகிம் முகம்மட் ஹுசைன் என்பவரும் அவரது 4 வயது பேரப்பிள்ளையான முகம்மட் நுபைல் ஹிபா செரீன் என்பவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இவ் விபத்தில், உயிரிழந்த நபரின் மனைவி பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version