தமிழ்நாட்டில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் ஏற்படுவதாக கடந்த சில வாரங்களாக சலசலப்பான சூழல் நிலவி வருகிறது.
மேலும் இதனை மறைமுகமாக உணர்த்தும் வகையில், இரு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மாறி மாறி விமர்சித்துக் கொண்டு கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
மறைந்த தலைவர்கள் குறித்து தொடர்ந்து அண்ணாமலை பேசி வருவதால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்திருந்தது.
இது தொடர்பாக சமீபத்தில் விளக்கம் அளித்த தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, “அ.தி.மு.க.- பா.ஜ.க இடையே பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை.
அ.தி.மு.க.வின் தலைவர்கள் மற்றும் அண்ணாமலை இடையே பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை.
எனக்கு யாருடனும் பிரச்சினை இல்லை. நான் யாரையும் தவறாக பேசவில்லை,” என்று தெரிவித்தார்.
ந்த நிலையில், அ.தி.மு.க. கட்சியின் மூத்த தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களான வேலுமணி, சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி ஆகியோர் அவசர அவசரமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர்.
டெல்லியில் உள்ள அ.தி.மு.க. தலைவர்கள் பா.ஜ.க.வுடனான கூட்டணி தொடர்பாக மத்திய மந்திரி அமித் ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்த அதிமுக மூத்த தலைவர்கள் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பதில் ஈபிஎஸ் உறுதியாக இருப்பதாக கூறினர்.
மேலும், மாநில தலைவரை மாற்றினால் மட்டுமே கூட்டணி தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பாஜக தேசிய தலைமையிடம் அதிமுக மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை!
அ.தி.மு.க.வை பொருத்தவரை பா.ஜனதா மேலிடம் அண்ணாமலைக்கு வாய்ப்பூட்டு போட வேண்டும் என்பது தான்.
இதை வலியுறுத்த நேற்று திடீரென்று முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், சி.வி.சண்முகம், தங்கமணி ஆகியோர் டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்கள். ஆனால் அவர் நேரம் ஒதுக்கவில்லை.
இந்நிலையில் அண்ணாமலையை பா.ஜ.க. தலைமை கண்டிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இருப்பினும், எப்படியாவது அமித் ஷாவை சந்தித்து முறையிட வேண்டுமென எண்ணி டெல்லியிலேயே அ.தி.மு.க. தலைவர்கள் முகாமிட்டுள்ளனர்.
இதற்கிடையே அ.தி.மு.க.-வினர் ஜே.பி. நட்டாவை சந்தித்துள்ளனர். ஆனால், அவரும் அ.தி.மு.க.வினருக்கு சாதகமான பதிலை தெரிவிக்காதது அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.