சனல் 4 காணொளி பெரும் அர­சியல் பர­ப­ரப்பை தோற்­று­வித்­துள்­ளது. ஐ.நா. மனித உரி­மைப்­பே­ரவை அமர்­வுக்­காலம் என்­பதால் இந்தப் பர­ப­ரப்பு அதி­க­மா­கி­யுள்­ளது.

ஒரு மினி சூறா­வளி எனலாம். ஜனா­தி­ப­தியின் தெரி­வுக்­குழு, விசா­ர­ணைக்­குழு யோச­னை­களை கத்­தோ­லிக்க திருச்­சபை நிரா­க­ரித்­துள்­ளது. அவர்கள் சர்­வ­தேச விசா­ர­ணையை கோரு­கின்­றனர்.

எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­சாவும் இத­னையே கோரு­கின்றார். எதிர்­பார்க்­காத வகையில் சரத்­பொன்­சே­கா­விடம் இருந்தும் இக்­கோ­ரிக்கை வந்­துள்­ளது. தன்னை பழி­வாங்­கிய ராஜபக்ஷக்­களை பழி­வாங்­கு­வது அவ­ரது நோக்­க­மாக இருக்­கலாம்.

மொட்­டுக்­கட்­சியும் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு தயார் எனக் கூறி­யுள்­ளது. சர்­வ­தேச விசா­ரணை எதிர்ப்பு விமல் வீர­வன்ச கட்­சி­யு­டனும், உதய கம்­மன்­பில கட்­சி­யு­டனும் சுருங்­கிப்­போ­யுள்­ளது.

இந்த அலைகள் கண்­ணுக்கு முன்­னா­லேயே ராஜபக் ஷர்கள் சரிந்து வீழ்­வதையே காட்­டு­கின்­றன. முன்னர் ஒவ்­­வொரு தடவை வீழ்­கின்ற போதும். குறு­கிய காலத்­தி­லேயே மீண்­டெழும் ஆற்றல் ராஜபக்ஷர்­க­ளுக்கு இருந்­தது. பெருந்­தே­சி­ய­வா­தத்­திடம் அடைக்­கலம் புகு­வதே மீண்­டெழும் ஆற்­ற­லுக்கு காரணம்.

2015 ஆம் ஆண்டு வீழ்ந்த போது மிக சொற்ப காலத்­தி­லேயே மீண்­டெழும் ஆற்றல் அவர்­க­ளுக்கு கிடைத்­தது.

ஆனால் இந்­தத் ­த­டவை அதற்­கான வாய்ப்பு அறவே இல்லை அல்­லது மிகக் குறைவு எனக் கூறலாம். தமிழர் சம்­பந்­த­மான போர்க்­குற்ற விவ­காரம் அல்­லது முஸ்லிம் விவ­காரம் என்றால் அவர்­க­ளுக்கு அடைக்­கலம் கிடைத்­தி­ருக்கும். சனல் 4 விவ­காரம் சிங்­க­ளப்­பி­ரச்­சி­னை­யாக இருக்­கின்­ற­மையால் அடைக்­கலம் பெறு­வது கடி­ன­மாக உள்­ளது.

சனல் 4க்குப் பின்னால் இருக்கும் சர்­வ­தேச சக்­திகள் பெருந்­தே­சி­ய­வா­தத்­திடம் ராஜபக்ஷர்கள் அடைக்­கலம் பெற்­று­வி­டக்­கூ­டாது என்­பதில் மிகக் கவ­ன­மாக உள்­ளனர்.

இதற்­கேற்ப ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையும் தமிழர் சம்­பந்­த­மான போர்க்­குற்ற விவ­கா­ரத்தை சற்று அடக்கி வாசித்து ராஜபக்ஷர்கள் கால மனித உரிமை விவ­கா­ரங்­களை உயர்த்தி வாசிக்­கின்­றது.

ராஜபக்ஷர்களை பொறுத்தவரை ஒன்றில் தாங்கள் ஆட்­சியில் இருக்க வேண்டும். அல்­லது தங்­களால் கட்­டுப்­ப­டுத்தக்கூடிய ஆட்சி இருக்க வேண்டும்.

சுருக்கக் கூறின், நேர­டி­யா­கவோ, மறை­மு­க­மா­கவோ ஆட்சி அதி­காரம் தங்­க­ளிடம் இருக்க வேண்டும். இல்­லையேல், தாங்கள் அழி­வது தவிர்க்க முடி­யா­தது என்­பதை நன்­றா­கவே புரிந்­தி­ருக்­கின்­றனர்.

தற்­போது அவர்கள் நேரடி ஆட்­சியில் இல்லை. கட்­டுப்­ப­டுத்தும் பிடியும் தளர்ந்து வரு­கி­றது. ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க மிக இலா­வ­க­மாக இதனை தளர்த்தி வரு­கின்றார்.

மொட்­டுக்­கட்சி கண்­ணுக்கு முன்­னா­லேயே சிதறிக் கொண்­டி­ருக்­கி­றது. அதில் அங்கம் வகித்த பெருந்­தே­சியவாதத்தின் தீவி­ரப்­பி­ரி­வினர் விலகி ஓடிவிட்­டனர்.

விமல் வீர­வன்ச கட்­சியும், உத­ய­கம்மன்பில கட்­சியும் தற்­போது ராஜபக்ஷர்க­ளோடு இல்லை. லிபரல் பிரி­விலும் பேரா­சி­ரியர் பீரிஸ் அணி வில­கி­விட்­டது. நிமல் லான்சா குழு­வினர் வெளி­யே­று­வ­தற்கு ரணிலின் சிக்­னலை எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

தற்­போது கட்­சியில் மிஞ்­சி­யி­ருப்­பது ராஜபக்ஷர்­களின் எடு­பி­டிகள் மட்டும்தான். சுருக்கக் கூறின் ‘கழுதை தேய்ந்து கட்­டெ­றும்­பான நிலை’ மொட்­டுக்­கட்­சிக்கு ஏற்­பட்­டுள்­ளது.

கோட்டா காலத்தில் ‘கம­ ச­ம­க ­பி­ரி­சந்­திர’ திட்­டத்தின் கீழ் கிரா­மங்­க­ளுக்கு சென்­ற­வர்கள் மீளவும் சில முயற்­சி­களை தொடங்­கி­யுள்­ளனர்.

அண்­மையில் இத்­திட்­டத்தில் பணி­யாற்­றிய வர்த்­த­கர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் அடங்­கிய குழு முன்னர் சென்ற அதே கிரா­மங்­க­ளுக்குச் சென்று கோட்­டாவின் பிர­தி­மையை உயர்த்த முயன்­றுள்­ளது. ஆனாலும் பெரிய வெற்றி கிடைக்­க­வில்லை.

பசில் ராஜபக்ஷவின் முயற்­சி­களும் ‘சாண் ஏற முழம் சறுக்­கு­வ­தா­கவே’ உள்­ளது அவ­ரது ஆலோ­ச­னை­களைக் கேட்க மொட்­டுக்­கட்­சிக்குள் பெரி­தாக ஆட்கள் இல்லை. மஹிந்த தனது வாரி­சாக நாம­லுக்கு முடி­சூட்ட கனவு கண்­டி­ருந்தார். அந்­தக்­க­னவும் நன­வாகும் நிலை தற்­போ­தைக்கு இல்லை. எதிர்­கால வெளிச்­சங்­களும் மிகக் குறைவு.

ஏற்­க­னவே இலங்கை பொரு­ளா­தா­ரத்தை வங்­கு­ரோத்து பொரு­ளா­தா­ர­மாக மாற்­றி­ய­வர்கள் என்ற பெயர் ராஜபக்ஷர்க­ளுக்கு உண்டு. அத­னுடன் தற்­போது ஆட்சி அதி­கா­ரத்­திற்­காக மக்­களை கொலை செய்­துள்­ளனர் என்ற பெயரும் இணைந்­துள்­ளது. இவ்­வி­ளைவு ராஜபக்ஷர்களின் வீழ்ச்­சியை தவிர்க்க முடி­யா­த­தாக்­கி­யுள்­ளது.

உண்­மையில் ராஜபக்ஷர்களுக்கு சிங்­கள அர­சி­யலில் மரபு ரீதி­யாக முதன்­மைப்­பாத்­திரம் இருக்­க­வில்லை அது சேன­நா­யக்­க­க்களி­டமும், பண்­டா­ர­நா­யக்­கக்­க­ளி­ட­முமே இருந்­தது. ராஜபக்ஷர்­களின் பாத்­திரம் பகுதிப் பாத்­திரம் மட்­டுமே.

அவர்­களின் எழுச்சி தற்­கா­லிக மாயைதான் போர் வெற்றி அந்த மாயையை கொடுத்­தது. ராஜபக் ஷர்கள் அதனை நிரந்­தரம் என நினைத்­தது தான் வீழ்ச்­சிக்கு காரணம். நம்பர் 2 என்ற நிலையில் இருந்­தி­ருந்தால் தனது விருப்­பத்தை தக்க வைத்­தி­ருக்­கலாம். அவர்கள் அவ­ச­ரப்­பட்டு விட்­டனர்.

போர் வெற்றி நிரந்­தர முடி­சூ­டலை தரும் என நினைத்ததால் ஒரு கட்­டத்தில் நாட்டை சொந்தச் சொத்துப் போல சூறை­யாடத் தொடங்­கினர்.

அதுவும் தமிழர் தாய­கத்தில் அது பச்சை சூறை­யா­டல்­க­ளாக இருந்­தது. ஏழைத்­தமிழ் மக்கள் புலி­களின் வங்­கியில் வைப்­பி­லிட்ட ஆதார ரீதி­யான சொத்­துக்­களைக் கூட கொள்­ளை­ய­டிக்க அவர்கள் தயங்­க­வில்லை. ‘ஆட்சி அதி­கா­ரத்தை’ சூறை­யா­டு­வ­தற்­கான ‘லைசன்ஸ்’ என அவர்கள் கரு­தினர்.

ஆட்சி அதி­காரம் என்­பது ‘நம்­பிக்கை பொறுப்­பாளர்’ என்ற அந்­தஸ்தை உடை­யது என்­பதை அவர்கள் கணக்­கெ­டுக்­க­வில்லை .

மறு­பக்­கத்தில் இலங்­கைக்குள் உலகம் இருக்­கி­றது எனக் கருதி உலக ஒழுங்­கு­களை எல்லாம் தாம் நினைத்த மாதிரி மீறினர்.

புவிசார் அர­சி­ய­லையோ பூகோள அர­சி­ய­லையோ ஒரு பொருட்­டாக அவர்கள் பார்க்­க­வில்லை. வர­லாறு அவர்­க­ளுக்கு உல­கத்­திற்குள் தான் இலங்கை இருக்­கி­றது என்­பதை இடித்­து­ரைத்­தி­ருக்கும். மனித உரி­மைகள் பேரவை தீர்­மானம், கன­டாவின் தடைகள் எல்லாம் இடித்­து­ரைப்பின் வெளிப்­பா­டுகள் தான்.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தற்­போது பண்­டா­ர­நா­யக்­காக்­களை உள்­வாங்க முனை­கி­றது. கட்­சியை உயிர்ப்­பிக்க பண்­டா­ர­நா­யக்­காக்கள் அவ­சியம் என அது கரு­து­கி­றது. சந்­தி­ரிகா விரைவில் உள்­வரக் கூடும்.

எதிர்­கா­லத்தில் மகனும் உள்­வ­ரலாம். அவ்­வாறு வந்தால் ராஜபக் ஷர்­க­ளுக்கு சுதந்­தி­ரக்­கட்­சியின் வாசல்­ப­டி­யையே மிதிக்க முடி­யாத நிலை ஏற்­படும். பண்­டா­ர­நா­யக்­காக்­களை சிங்­கள அர­சி­யலில் பூச்­சிய நிலைக்கு கொண்டு வந்­தது ராஜபக்ஷர்கள் தான். இதனை பண்­டா­ர­நா­யக்­காக்கள் ஒரு போதும் மன்­னிக்கப் போவ­தில்லை.

தென்­னி­லங்கை அர­சியல் தற்­போது முற்­றாக குழம்­பி­யுள்­ளது. இக்­கு­ழம்­பிய குட்டை தான் ரணிலின் ராஜ­யோ­கத்­திற்கு காரணம். ராஜபக் ஷர்கள் கண்­ணுக்கு முன்னால் உதிர்­கின்­றனர்.

பிரே­ம­தா­சாக்கள் தமது இய­லா­மையை பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யுள்­ளனர். பிரே­ம­தா­சாக்­க­ளுக்கும் சிங்­கள அர­சியல் மரபு ரீதி­யான முதன்மை இட­மில்லை. அவர்­களின் எழுச்­சியும் தற்­கா­லிகம் தான். ராஜபக்ஷர்கள் உதிர்­வதை போல பிரே­ம­தா­சாக்கள் உதி­ரத்­தொ­டங்கும் காலமும் ஒன்று வரும். ஜே.வி.பி. ஒருபோதும் முடிசூடப்போவதில்லை.

இந்­தக்­கு­ழம்­பிய சூழல் தான் ரணி­லுக்கு சாத­க­மா­னது. தமிழ், முஸ்லிம் மலை­யக வாக்கு வங்கி எப்­போதும் அவ­ருக்குபோனஸ். தன்னை விட்டால்  வேறு தெரிவு சிங்­க­ளத்­திற்கு இல்லை என்ற பிர­தி­மையை ரணில் தோற்­று­வித்து வரு­கின்றார். ரணிலை வெறுப்­ப­வர்­களும் தற்­போது ரணிலை இழக்கத் தயா­ரா­கஇல்லை. உண்­மையில் அவ­ரைப்­போல ஜன­நா­ய­கத்தை சூறை­யா­டி­ய­வர்கள் இலங்­கையில் இல்லை.

அவ­ரது சூழல் அவ­ருக்கு அத்­து­ணிச்­சலை கொடுத்­தி­ருக்­கி­றது. ‘மிஸ்டர் மீட்பர்’ என்ற தோற்றம் அவ­ருக்கு மகா துணிச்­சலை கொடுத்­தி­ருக்­கி­றது.

குறிப்­பிட்ட காலத்­திற்கு அவ­ரது காட்டில் தான் மழை பெய்யப் போகி­றது. அடுத்த வருடம் ஜனா­தி­பதி தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் அவர் நடத்தப் போவ­தில்லை. அது ஒரு யாப்பு மீற­லாக இருக்­கின்ற போதும் அவர் பொருட்­ப­டுத்­தப்­போ­வ­தில்லை.

நாடே குழம்­பி­யி­ருக்­கின்ற பொது யாப்­பிற்கு மதிப்பு எப்­படி கிடைக்கும்? உயர் நீதி­மன்றம் கட்­ட­ளை­களைப் போட்­டாலும் அவர் சிரித்துக் கொண்டே அதனைக் கடப்பார்.

அவரின் ஜன­நா­யக அழிப்பை அவ­ருக்கு பின்னால் நின்று வழி­ந­டத்தும் அமெ­ரிக்கா தலை­மை­யி­லான மேற்­கு­ல­கமும் கண்டு கொள்­ளப்­போ­வ­தில்லை. மேற்­கு­ல­கத்தின் இலங்கை நோக்­கிய முத­லீடு எல்லாம் ரணிலை நம்­பித்தான். ரணில் என்ற மிகப்­பெரும் சொத்தை இழக்க அவை ஒரு போதும் முன்­வ­ரப்­போ­வ­தில்லை.

சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள் கொஞ்சம் சிணு­சி­ணுக்கும் என்­பது உண்­மையே! அவை சிணுங்­க­லோடு நின்­று­விட வேண்­டி­யது தான். ராஜபக் ஷர்கள் பொரு­ளா­தா­ரத்தை வங்­கு­ரோத்­தாக்­கினர் என்றால் ரணில் ஜன­நா­ய­கத்­தையே வங்­கு­ரோத்­தாக்­கி­யுள்ளார்.

மறு­பக்­கத்தில் பிராந்­திய, சர்­வ­தேச சூழல் வேக­மாக மாறிக்­கொண்டு வரு­கி­றது இரு துருவ அர­சியல் ஒரு துருவ அர­சி­ய­லாக மாறி பிராந்­திய அர­சு­களின் எழுச்­சிக்கு பின்னர் பல்­து­ருவ அர­சி­ய­லாக மாறி­யது. தற்­போது ரஷ்ய, சீன எழுச்­சியை தொடர்ந்து இரு அணிகளும்  ­து­ருவ அர­சி­யலை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கின்றன.

பிராந்­திய வல்­ல­ர­சான இந்­தியா இரு அணி­க­ளுக்­கி­டை­யேயும் சம­நிலை பேண முயற்­சிக்­கின்­றது. அது குவாட்­டுக்கும் பிறிக்ஸ்க்கும் இடையே நட­ன­மா­டு­கி­றது. ‘கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை’ என்ற நிலை அதற்கு.

இந்தோ – பசுபிக் மூலோ­பா­யக்­கா­ரர்கள் குவாட் பக்கம் இழுக்க முயற்­சிக்­கின்­றனர். மறு­பக்­கத்தில் பட்டு பாதைக்­கா­ரரும் முன்னாள் கூட்­ட­ணியும் பிறிக்ஸ் பக்கம் இழுக்­கின்­றனர். இழுவை தாங்­காமல் பிராந்­திய வல்­ல­ரசின் மீசை கிழிந்­தாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை.

இந்தோ – பசுபிக் மூலோ­பா­யத்தின் பிதா இந்­தி­யாவில் வைத்தே பட்டு பாதைக்­கான மாற்­றுத்­திட்­டத்தை அறி­வித்­தி­ருக்­கின்றார்.

அதுவும் தனித்தில்லாமல் சவூதி அரேபியா, ஐக்கியஅரபு இராச்சியம் என்பனவற்றுடன் இணைந்து இவ் அறிவிப்பு இடம் பெற்றிருக்கின்றது.

ரயில் சேவை, துறைமுகங்கள் ஊடாக இந்தியாவை மத்திய கிழக்குடனும் ஐரோப்பாவுடனும் இணைக்கும் திட்டமே இதுவாகும். இத்திட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ் என்பவையும் உள்ளடக்கம்.

இந்த வழித்தடம் தனித்தனியாக இரு மார்க்கங்களைக் கொண்டிருக்கின்றது. கிழக்கு வழித்தடம் வளைகுடா அரபு நாடுகளை இந்தியாவுடன் இணைக்க, வடக்கு வழித்தடம் வளைகுடாநாடுகளை ஐரோப்பாவுடனும் இணைக்கப் போகின்றது.

வளைகுடா நாடுகளுக்கு இது சங்கடமான நிலைதான் ஒரு புறம் அமெரிக்கா போன்ற பாரம்பரிய நட்பு நாடுகள். மறுபக்கத்தில் சீனா போன்ற வளர்ந்து வரும் நாடுகள். இரண்டுக்கும் இடையே சமநிலையை எவ்வாறு பேணுவது என்பதில் அவை குழம்பிக் கொண்டிருக்கின்றன.

அடுத்த வாரம் சூழல் பற்றி எந்த அக்கறையுமில்லாமல் தொடர் நித்திரையில் இருக்கும் தமிழ் அரசியலை தட்டியெழுப்புவது பற்றி யோசிப்போம்.

(சி.அ.யோதிலிங்கம்)

Share.
Leave A Reply

Exit mobile version