முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் தாங்கள் ஜனாதிபதியாக மற்றும் பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களிற்கு தொடர்ந்து பணம் வழங்கினார்கள் என சனல் 4 ஆவணப்படத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த முக்கிய விபரங்களை வெளியிட்ட ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் இறுதித் தருணங்களில் மில்லியன் கணக்கில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு பணம் வழங்கப்பட்டது என எமது சகோதர ஊடகமான டெய்லிமிரருக்கு தெரிவித்துள்ள ஆசாத்மௌலானா, எனினும் அந்தப் பணத் தொகையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் பின்னர் குறைத்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும் பிள்ளையானின் கட்சிக்கு வழங்கப்பட்ட பணம் குறைக்கப்பட்டது. பின்னர் கோட்டபய ராஜபக்ச ஜனாதிபதியானதும் அது மேலும் குறைக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு பணம் வழங்கினார்கள் என்ற கேள்விக்கு முதலில் ஆறு மில்லியன் முதல் மூன்று மில்லியன் வரை வழங்கினார்கள் பின்னர் அதனை பெருமளவிற்கு குறைத்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் பெயர் விபரங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கப்பட்டதாகவும் மட்டக்களப்பின் மூன்று வங்கிகள் ஊடாக பணம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் சார்பில் தான் பணத்தை எடுத்து பிள்ளையானிடம் வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.சில சந்தர்ப்பங்களில் போலி பட்டியலும் வழங்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இந்த விபரங்கள் அடங்கிய ஆவணங்களை கொழும்பிலும் ஜெனீவாவிலும் உள்ள இராஜதந்திர அலுவலகங்களிற்கு வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version