இந்த ஏவுகணை அணு உலையை அடிப்படையாகக் கொண்டது என்று இதுவரை அறியப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அணுசக்தியில் இயங்கும் க்ரூயிஸ் ஏவுகணையின் இறுதிச் சோதனையில் ரஷ்யா வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.

புதினின் செய்தித் தொடர்பாளர் நியூயார்க் டைம்ஸ் அறிக்கையை நிராகரித்ததை தொடர்ந்து புதினின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

புரேவெஸ்ட்னிக் என்ற ஆயுதத்தை ரஷ்யா சோதிக்கப் போவதாக அமெரிக்க நாளிதழ் தனது அறிக்கையில் கூறியிருந்தது.

இந்த சோதனை ஆயுதம் பற்றிய முதல் அறிவிப்பு 2018 ஆம் ஆண்டு செய்யப்பட்டது. அதன் தாக்குதல் தூரம் கிட்டத்தட்ட ’வரம்பற்றது’ என்று கூறப்படுகிறது.

புதின் கூறுவதில் உண்மை இருக்கிறதா?

அணுசக்தியில் இயங்கும் க்ரூயிஸ் ஏவுகணையின் இறுதிச் சோதனையில் ரஷ்யா வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

இந்த ஏவுகணை ஏன் சிறப்பு வாய்ந்தது?

இந்த ஏவுகணை பற்றி அதிக தகவல்கள் கிடைக்கவில்லை. ரஷ்ய அரசும் இது பற்றி அதிகம் கூறவில்லை. ஆனால் இந்த ஏவுகணை அணு உலையை அடிப்படையாகக் கொண்டது என்று இதுவரை அறியப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

எளிமையான வார்த்தைகளில் சொல்வதென்றால் இந்த ஏவுகணை, அணு உலையில் இருந்தே தனக்கான ஆற்றலைப் பெறுகிறது. கூடவே இது ஒரு க்ரூயிஸ் ரக ஏவுகணையாகும். இது அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

ஆனால் அதன் திறன்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக அதிக தகவல்கள் கிடைப்பதற்கு இல்லை. அதன் முந்தைய சோதனைகள் தோல்வியடைந்ததாக முன்பு வெளியான அறிக்கைகள் கூறுகின்றன.

சோச்சி நகரில் நடைபெற்ற சந்திப்பின் போது அதிபர் புதின் வெளியிட்ட இந்த அறிக்கை, சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை. இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு நோவாயா ஜெம்லியாவை நோக்கிப் பார்க்கிறார்.

ஆர்டிக் பகுதியில் உள்ள தொலைதூர தளத்தில் ரஷ்யா புதிய கட்டமைப்புகளை கட்டியிருப்பதை கடந்த வாரம் வெளியான செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டின.

சோவியத் யூனியன் காலத்தில் சோவியத் அரசு, அணுகுண்டு சோதனை நடத்தி வந்த இடம் இது. வடக்கு பேரண்ட்ஸ் கடலில் அமைந்துள்ள நோவாயா ஜெம்லியா என்ற தீவுக் குழுவில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை இந்தப் படங்கள் காட்டுகின்றன.

​​”நாங்கள் தற்போது நவீன வகையான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஆயுதங்கள் தொடர்பான பணிகளை கிட்டத்தட்ட முடித்துவிட்டோம்.

இது பற்றிய அறிவிப்பை நான் சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்டிருந்தேன்,” என்று ரஷ்யாவின் சோச்சி நகரில் உள்ள கருங்கடல் ரிசார்ட்டில் நடைபெற்ற சந்திப்பின் போது புதின் கூறினார்.

புதினின் இந்த அறிக்கை ரஷ்யாவின் அரசு தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்பட்டது. மேலும், ‘உலகின் எந்த இடத்தையும் தாக்கி அழக்கவல்ல, அணுசக்தியில் இயங்கும் புரேவெஸ்ட்னிக் க்ரூயிஸ் ஏவுகணையின் வெற்றிகரமான கடைசி சோதனை நடத்தப்பட்டுள்ளது’ என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ராணுவ அமைப்பான நேட்டோ, இந்த ஏவுகணைக்கு ‘ஸ்கைஃபால்’ என்ற குறியீட்டுப் பெயரை வைத்துள்ளது.

இந்த ஏவுகணையில் உள்ள அணு உலை திட எரிபொருள், ராக்கெட் பூஸ்டர்கள் மூலம் காற்றில் வீசப்பட்ட பிறகு இது செயல்பாட்டிற்கு வருகிறது.

இருப்பினும், 2017 மற்றும் 2019 க்கு இடையில் நடத்தப்பட்ட சோதனைகள் தோல்வியடைந்ததாக ஆயுதப் பெருக்கத்தை நிறுத்துவதற்கு ஆதரவாக செயல்படும் ’அணுசக்தி அச்சுறுத்தல் முன்முயற்சி’ குழுவை மேற்கோள் காட்டி அமெரிக்க செய்தித்தாள் நியூயார்க் டைம்ஸ், தனது அறிக்கையில் எழுதியுள்ளது.

ரஷ்யா எந்த சூழ்நிலையில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்பதை அணுசக்தி கோட்பாடு அல்லது அணுசக்தி கொள்கை தீர்மானிக்கிறது.

அணு ஆயுதத் தாக்குதல் குறித்து புதின் கூறியது என்ன?

சர்மத் என்ற பெயரிலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக்கான பணிகளும் நிறைவடைந்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யா தனது அணுசக்தி கொள்கையை மாற்றத் திட்டமிடவில்லை என்று இந்தத் தகவலைத் தெரிவித்த பிறகு புதின் கூறினார்.

ரஷ்யா எந்த சூழ்நிலையில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்பதை அணுசக்தி கோட்பாடு அல்லது அணுசக்தி கொள்கை தீர்மானிக்கிறது.

ரஷ்யாவின் இருப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் ஆரோக்கியமான மனமும், நல்ல நினைவாற்றலும் உள்ள எவரும் ரஷ்யாவுக்கு எதிராக அணு ஆயுதத்தாக்குதல் நடத்துவதை கருத்தில் கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

ஆனால் 1996 ஆம் ஆண்டின் விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்திற்கு தான் அளித்த ஒப்புதலை ரஷ்யா, கொள்கையளவில் திரும்பப் பெற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

”அமெரிக்காவும் இதில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால் அதை ஒருபோதும் செயல்படுத்தவில்லை. அத்தகைய சூழ்நிலையில், ரஷ்யாவும் அதையே செய்ய முடியும்,” என்றார் அவர்.

இந்த ஆயுத சோதனையை ரஷ்யா வெற்றிகரமாக முடித்திருப்பது ஒரு மைல் கல்லாகும்.
ரஷ்யாவின் நிகரற்ற ஆயுதம்?

இதுவரை உலகில் இந்த ஏவுகணைக்கு போட்டியாக எதுவும் இல்லை என்றும், வரும் பல ஆண்டுகளில் இதற்கு இணையான ஏவுகணை எதுவும் இருக்காது என்றும் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

“இது உண்மையில் ஒரு சிறப்பு ஆயுதம். ரஷ்யாவின் போரிடும் திறனை இது கணிசமாக அதிகரிக்கும். மிரட்டும் அறிக்கைகள் மூலம் ரஷ்யாவை அச்சுறுத்த முயற்சிப்பவர்கள் இனி இருமுறை யோசிக்க வேண்டும்,”என்றார் அவர்.

இந்த ஏவுகணை தயாரிக்கும் பணி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் சமீபத்தில்தான் அதன் வெற்றிகரமான சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த சோதனை முன்பு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. ரஷ்யா நீண்ட காலமாக இந்த திசையில் முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. அத்தகைய சூழ்நிலையில் அதன் வெற்றிகரமான சோதனை ரஷ்யாவிற்கு ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.

எவ்ஜெனி பிரிகோஜின், கடந்த மாதம் விமான விபத்தில் உயிரிழந்தார்
பிரிகோஜின் பற்றி என்ன சொன்னார்?

இந்த சந்திப்பின் போது, ​​வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்கெனி பிரிகோஜினின் அகால மரணம் குறித்தும் புதின் கருத்து தெரிவித்தார். புதினுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் எவ்கெனி பிரிகோஜின் கடந்த மாதம் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்த புதின், இது குறித்து விசாரணைக் குழுவின் தலைவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு தகவல் தெரிவித்ததாக கூறினார். விமான விபத்தில் ஏவுகணை தாக்குதல் போன்ற வெளிப்புற காரணிகளின் பங்கு எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.

உயிரிழந்தவர்களின் உடல்களில் கையெறிகுண்டுகளின் துண்டுகள் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். இறந்தவர்கள் மது அல்லது வேறு போதைப்பொருட்களை உட்கொண்டார்களா என்பதையும் புலனாய்வாளர்கள் ஆராய வேண்டும் என்று தான் கருதுவதாகவும் புதின் கூறினார்.

இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.

Share.
Leave A Reply

Exit mobile version