இலங்கைக்கு எதிராக டெல்லி அருண் ஜய்ட்லி விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மூன்று உலகக் கிண்ண சாதனைகளை தென் ஆபிரிக்கா நிலைநாட்டி 102 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிகூடிய மொத்த எண்ணிக்கை, அதிவேக சதம், ஒரே இன்னிங்ஸில் 3 கன்னிச் சதங்கள் என்ற மூன்று சாதனைகளே தென் ஆபிரிக்க அணியினரால் இன்றைய தினம் நிலைநாட்டப்பட்டது.
அப் போட்டியில் தென் ஆபிரிக்கா இலகுவாக வெற்றிபெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், இலங்கையின் பலத்த சவாலுக்கு மத்தியிலேயே தென் ஆபிரிக்கா வெற்றிபெற நேரிட்டது.
குசல் மெண்டிஸ், சரித் அசலன்க, தசுன் ஷானக்க, கசுன் ராஜித்த ஆகிய நால்வரும் துணிச்சலுடன் துடுப்பெடுத்தாடி தென் ஆபிரக்காவுக்கு பலத்த சவால் விடுத்தனர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 428 ஓட்டங்களைக் குவித்து உலகக் கிண்ணப் போட்டியில் அதிகூடிய மொத்த எண்ணிக்கைக்கான சாதனையைப் படைத்தது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 2015 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 5 விக்கெட்களை இழந்து பெற்ற 417 ஓட்டங்களே முன்னைய அதிகூடிய மொத்த எண்ணிக்கைக்கான உலகக் கிண்ண சாதனையாக இருந்தது.
அத்துடன் ஏய்டன் மார்க்ராம் 49 பந்துகளில் சதம் குவித்து உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதத்திற்கான சாதனையை நிலைநாட்டினார்.
இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிராக 2011 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 50 பந்துகளில் சதம் குவித்த அயர்லாந்து வீரர் கெவின் ஓ’ப்றயனுக்கு சொந்தமாகவிருந்த அதிவேக சதத்திற்கான முன்னைய சாதனை முறியடிக்கப்பட்டது.
குவின்டன் டி கொக் (100), ரெசி வென் டேர் டுசென் (108), ஏய்டன் மார்க்ராம் (106) ஆகியோர் சதங்களைக் குவித்து அசத்தினர். உலகக் கிண்ண வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் மூவர் கன்னிச் சதங்களைக் குவித்தது இதுவே முதல் தடவையாகும்.
குவின்டன் டி கொக், ரெசி வென் டேர் டுசென் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 204 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்க அணியைப் பலப்படுத்தினர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக தென் ஆபிரிக்காவினால் பகிரப்பட்ட அதிசிறந்த இணைப்பாட்டம் இதுவாகும்.
குவின்டன் டி கொக் 83 பந்துகளில் 12 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
ரெசென் வென் டேர் டுசென் 110 பந்துகளில் 13 பவுண்டறிகளையும் 2 சிக்ஸ்களையும் விளாசி 108 ஓட்டங்களைக் குவித்தார்.
ஏய்டன் மார்க்ராம் 54 பந்துகளில் 14 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 106 ஓட்டங்களைக் குவித்தார்.
ரெசி வென் டேர் டுசெனுடன் 3ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களையும் ஹென்றிச் க்ளாசெனுடன் 4ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களையும் ஏய்டன் மார்க்ராம் பகிர்ந்தார்.
க்ளாசென் 32 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் ஆட்டம் இழக்காமல் 39 ஓட்டங்களையும் மார்க்கோ ஜென்சென் ஆட்டம் இழக்காமல் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மதீஷ பத்திரண (95), கசுன் ராஜித்த (90), டில்ஷான் மதுஷன்க (86), துனித் வெல்லாலகே (81) ஆகிய இலங்கையின் நான்கு முன்னணி பந்துவீச்சாளர்கள் 80க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் கொடுத்தனர்.
இங்கிலாந்துக்கு எதிராக ஆம்ஸ்டெல்வீனில் கடந்த வருடம் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து பந்துவீச்சாளர்களுக்கு இதே கதி ஏற்பட்டிருந்தது.
தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 429 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 44.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 326 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
குசல் மெண்டிஸ், சரித் அசலன்க, அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆகிய மூவர் குவித்த அரைச் சதங்களும் கசுன் ராஜித்தவின் துணிச்சலான துடுப்பாட்டமும் இலங்கை கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெறுவதற்கு உதவின.
அவர்களில் குசல் மெண்டிஸ் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து தென் ஆபிரிக்க பந்துவீச்சாளர்களைப் பிரமிக்க வைத்தார்.
அதன் பின்னர் களம் புகுந்த குசல் மெண்டிஸ் ஆக்ரோஷ வெளிப்பாடே சிறந்தது என்பதை மனதில் நிறுத்தி அதிரடியாக ஓட்டங்களைக் குவித்த வண்ணம் இருந்தார்.
குசல் மெண்டிஸ் 26 பந்துகளில் 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது குசல் பெரேரா 7 பந்துகளை எதிர்கொண்டு ஓட்டம் பெறாமல் இருந்தார்.
மொத்த எண்ணிக்கை 67 ஓட்டங்களாக இருந்தபோது குசல் பெரேரா 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
பெத்தும் நிஸ்ஸன்க, குசல் பெரேரா ஆகிய இருவரும் மார்க்கோ ஜென்செனின் பந்துவீச்சில் ஒரே விதமாக போல்ட் ஆகினர்.
குசல் மெண்டிஸுடன் குசல் பெரேரா 2ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
குசல் மெண்டிஸ் 42 பந்துகளில் 8 சிக்ஸ்கள், 4 பவுண்டறிகளுடன் 76 ஒட்டங்களைப் பெற்றிருந்தபோது ரபாடாவின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளர் க்ளாசனிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். 109 – 3 விக்.)
சதீர சமரவிக்ரம (23), தனஞ்சய டி சில்வா (11) ஆகிய இருவரும் நீண்ட நேரம் ஆடுகளத்தில் நிலைத்திருக்கவில்லை. (150 – 5 விக்.)
இந் நிலையில் ஜோடி சேர்ந்த சரித் அசலன்க, தசுன் ஷானக்க ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.
65 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 79 ஓட்டங்களைப் பெற்ற சரித் அசலன்க நிகிடியின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
இளம் வீரர் துனித் வெல்லாலகே ஆடுகளம் புகுந்த வேகத்திலேயே ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்து சென்றார். (233 – 7 விக்.)
கோயட்ஸீ வீசிய 37ஆவது ஓவரில் 23 ஓட்டங்களை விளாசிய தசுன் ஷானக்க 62 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
அவர் கசுன் ராஜித்தவுடன் 8ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய பின்வரிசை வீரர் கசுன் ராஜித்த துணி;ச்சலுடன் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைப் பெற்றார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் அவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும்.
பந்துவீச்சில் ஜெரால்ட் கோயெட்ஸீ 68 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கெகிசோ ரபாடா 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கேஷவ் மஹாராஜ் 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மார்க்கொ ஜென்சென் 92 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.