காசா நிலப்பகுதியின் எல்லையை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை ஆயுதமேந்திய ஏராளமான ஹமாஸ் இயக்கத்தினர் இந்த வேலியைக் கடந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

தற்போது தங்களது கட்டுப்பாட்டுகள் எல்லைப்பகுதி வந்துவிட்டதால், புதிதாக யாரும் வேலியைத் தாண்டி வரவில்லை என்று இஸ்ரேல் கூறியுள்ளது,

நேற்று இரவும் காஸா மீது தொடர் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், 200 இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கியதாகக் கூறியுள்ளது.
விளம்பரம்

1500 ஹமாஸ் இயக்கத்தினரின் உடல்கள் இஸ்ரேலுக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐ.டி.எஃப். எனப்படும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறியுள்ளது.

இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதிலடி இப்போதுதான் தொடங்கியிருக்கிறது – இஸ்ரேலிய பிரதமர்

ஹமாஸின் தாக்குதலுக்கான பதிலடி இப்போதுதான் தொடங்கியிருக்கிறது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலுக்குள் இன்னும் துப்பாக்கியேந்திய பாலத்தீனர்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலியர்களை மீட்பதற்காக எல்லாவற்றையும் செய்யப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேலில் பரந்த கூட்டணி அரசு அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் காசாவில் சுமார் 1000 இலக்குகளை தாக்கியிருப்பதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறியிருக்கிறது.

இஸ்ரேலிய தரப்பில் 900 பேரும் காசாவில் 690 பேரும் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்போரை எந்தவிதமான எச்சரிக்கையுமின்றி கொல்லப் போவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

ஹமாஸின் தாக்குதலில் காயமடைந்த ஏராளமானோர் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்றும் இஸ்ரேல் கூறியிருக்கிறது.

இது தங்கள் மீதான செப்டம்பர் 11 தாக்குதல் என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

சனிக்கிழமை ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் நடத்தி வருகிறது. இஸ்ரேல் விமானப்படைகள் காசா மீது குண்டுமழை பொழிகின்றன.

சனிக்கிழமை காலை முதல் இஸ்ரேல் விமானப்படை நடத்தும் தாக்குதல்களில் 1100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால் 1,23,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பள்ளிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்தப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியிருக்கிறது.

இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் என்ன நிலைமை?

சனிக்கிழமை காலை, ஹமாஸ் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவியது. எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்தியதை அடுத்து காசா மக்கள் அதைக் கொண்டாடினர்.

ஒரு நாள் கழித்து, நிலைமை மிகவும் வித்தியாசமாக இருந்தது.

இடைவிடாத இஸ்ரேலிய ராக்கெட் தாக்குதலுக்குப் பிறகு, மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். ஞாயிற்றுக்கிழமை முழுவதும் தாக்குதல்கள் தொடர்ந்தன.

சத்தம் பயங்கரமாக இருந்தது. காசா பகுதி முழுவதும் கரும் புகை மேகங்கள் கட்டிடங்களை சூழ்ந்தன.

காசாவில் 1000க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவ நிலைகள், ஹமாஸ் தலைவர்களின் வீடுகள் மற்றும் போராளிக் குழுவால் நடத்தப்படும் வங்கிகள் ஆகியவை இதில் அடங்கும்.

ஞாயிற்றுக்கிழமை காலை இஸ்ரேலிய தாக்குதல்களில் ஒன்று, காசாவில் இண்டர்நெட் மையமாகச் செயல்படும் வாடன் கோபுரத்தை குறிவைத்தது.

காசா விற்கு மின்சாரம் வழங்குவதை இஸ்ரேல் நிறுத்தியதால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லை. காசாவின் உள்நாட்டு தயாரிப்பு மூலம் 20% மின்சாரத்தை மட்டுமே வழங்க முடியும்.

உணவு மற்றும் குடிநீர் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

பாலத்தீனியர்களுக்கான மருத்துவ உதவி அறக்கட்டளையின் காசா பகுதி இயக்குநர் மஹ்மூத் ஷலாபி, நகரின் முக்கிய மருத்துவமனையை “படுகொலைக்கூடம்” என்று கூறினார்.

“சவக்கிடங்கில் ஏராளமான உடல்கள் கிடக்கின்றன. மருத்துவமனை ஊழியர்களால் உயிர்கள்போவதைத் தடுக்க முடியவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

இஸ்ரேலுக்குள் ராணுவம் – ஹமாஸ் சண்டை

இஸ்ரேல் எல்லைக்குள் அந்நாட்டு படைகளுக்கும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும் இடையே குறைந்தது 22 இடங்களில் துப்பாக்கிச் சண்டைகள் நடந்துள்ளன.

இஸ்ரேல் படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. உரிம், பாரி, நஹல் ஓஸ், நேட்டிவ் ஹதாரா, ஜிகிம் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் இது போன்ற மீட்புப் பணிகள் மற்றும் பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யும் பணிகள் “நிலைமை மதிப்பீட்டிற்கு உட்பட்டு மேற்கொள்ளப்படும்” என்று ராணுவம் கூறுகிறது.

இதற்கிடையில், இஸ்ரேலிய அதிகாரிகள் தங்களது நாடு “இன்னும் போரைத்” தொடர்வதாகக் கூறியுள்ளனர். [மேலும்] ஹமாஸ் குழுவினரிடம் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களை மீட்கும் நடவடிக்கைகளை இன்னும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக” தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்களைத் தொடங்கி 24 மணி நேரத்திற்கும் மேலாக நாட்டின் தெற்கு பகுதியில் வசிக்கும் சமூகங்களுக்குள் ஊடுருவிய நிலையில், சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் இதுபோன்ற தாக்குதல்கள் குறித்த கூடுதல் விவரங்களைப் பார்ப்போம்.

தெற்கு இஸ்ரேலின் பல பகுதிகளில் இஸ்ரேலிய படைகளுக்கும் பாலத்தீன ஆயுதக்குழுவினருக்கும் இடையே மோதல்கள் நடந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டின் தென்பகுதியில் பெரும்பாலான பகுதிகளின் கட்டுப்பாட்டை இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளதாக ராணுவத்தை மேற்கோள் காட்டி ஹாரெட்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் காசா எல்லைக்கு அருகில் உள்ள பீரி மற்றும் ஸ்டெரோட் உள்ளிட்ட பகுதிகளில் சண்டை தொடர்கிறது.

ஜேக் மார்லோ என்ற பிரிட்டிஷ் குடிமகன் காணாமல் போனதை இங்கிலாந்தில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதல் நடந்தபோது அவர் காசா எல்லைக்கு அருகிலுள்ள வெளிப்புற நடன விழாவில் பாதுகாப்பு ஊழியராக பணிபுரிந்ததாகத் தெரியவந்துள்ளது.

இசை விழாவில் 260 பேர் கொல்லப்பட்டனர்

இஸ்ரேலில் சூப்பர்நோவா இசை விழாவில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 260 ஆக உயர்ந்துள்ளது என்று உள்ளூர் மீட்பு நிறுவனமான ஜகாவை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் மீதான மிகப்பெரிய திடீர் தாக்குதலின் ஒரு பகுதியாக ஹமாஸால் குறிவைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சுமார் 3,000 பேர் கலந்து கொண்டனர். காஸா பகுதிக்கு அருகேயுள்ள கிப்புட்ஸ் ரெய்ம் அருகே நெகேவ் பாலைவனத்தில் இந்த விழா நடைபெற்றது.

ஆனால் விழா தொடங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஹமாஸ் இயக்கத்தின் இந்த விழாவில் தாக்குதல் நடத்தினர்.

சராமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

260 க்கும் மேற்பட்ட உடல்கள் திருவிழா தளத்தில் இருந்து மீட்கப்பட்டதாக மீட்பு நிறுவனம் ஜகா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு மேலும் ஒரு முனையில் போர் அபாயம்

ஏற்கெனவே இஸ்ரேலிய நிலைகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய சாதாரண பீரங்கி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் மட்டுப்படுத்திய நிலையில், லெபனானின் தெற்கு எல்லையில் உள்ள நிலைமை இப்போது அமைதியாக உள்ளது.

ஆனால் இஸ்ரேல்-பாலத்தீன மோதலின் அச்சுறுத்தல் லெபனான் நாடு முழுவதிலும் பதற்றத்தை அதிகரித்து வருகிறது.

இரானிய ஆதரவு குழுவான ஹிஸ்புல்லா தனது இலக்கை கவனமாக தேர்ந்தெடுத்தது. சர்ச்சைக்குரிய 3 நிலைகளில் மட்டுமே அந்த அமைப்பு தாக்குதல் நடத்தியது. ஆனால், அதை விடப் பெரிய அளவில் அந்த அமைப்பு தாக்குதலை நடத்த முடியும்.

இரானைப் போலவே இஸ்ரேலை அழிக்கத் துடிக்கும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் குழுவினருக்கு தற்போதைய தாக்குதல் குறித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளது. ஹமாஸ் குழுவின் முன்னேற்றம் குறித்து “ஆழமாகக் கவனித்து வருவதாகவும்” அந்த அமைப்பு கூறியுள்ளது.

தற்போதைய தாக்குதல்கள் “பாலத்தீன மக்களின் இசைவைப் பெற்றுள்ளது” என்று அதன் அறிக்கை கூறுகிறது.

ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவிடம் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் உள்ளன. அவை இஸ்ரேலிய எல்லைக்குள் ஆழமாகச் சென்று தாக்கக் கூடியவை.

ஏவுதளம் மற்றும் பிற தளங்களை குறிவைத்து உடனடியாக பதிலடி கொடுத்த இஸ்ரேல், ஏற்கனவே தனது வடக்கு எல்லைக்கு வலுவான ராணுவ குழுக்களை அனுப்பியுள்ளது. அது ஒரு நீண்ட மோதலைத் திட்டமிடுவதாகவும், காஸாவில் தரைவழித் தாக்குதலை நடத்த முடிவெடுத்திருப்பதாகவும் கூறுகிறது.

தற்போதைய தாக்குதல்களின் அளவு வரம்பிற்குட்பட்டது. இரு தரப்பினரும் தங்கள் தாக்குதல்களை கவனமாக அளவீடு செய்து மேற்கொள்கின்றனர்.

மேலும் முழு அளவிலான போரைத் தூண்டும் காரணிகளும் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆனால் ஹிஸ்புல்லாவின் நடவடிக்கைகளில் உள்ள மறைமுகமான அச்சுறுத்தல், இதே நிலை நீடிப்பதற்குப் பதிலாக நிலைமை மோசடையும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

மேலும் ஹிஸ்புல்லா அமைப்பு என்பது லெபனான் நாடு அல்ல. அந்த அமைப்பை எதிர்க்கும் பலர் நாட்டில் உள்ளனர்.

இன்னும் அரசியல் முடக்கத்தால் அந்த அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது – தற்போதைய நிலையில் அந்த அமைப்புக்கு சரியான தலைமையும் இல்லை என்பதுடன் கடும் பொருளாதார நெருக்கடியில் அந்த அமைப்பு சிக்கித் தவிக்கிறது.

காசாவில் உள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர்

 

எகிப்தில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல்

எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா நகரில் இரண்டு இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளும், அவர்களது எகிப்திய சுற்றுலா வழிகாட்டியும் சுட்டுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த நகரத்தில் இருந்த இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மீது ஒரு போலீஸ் அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த அதிகாரி தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக அடையாளம் தெரியாத பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி எக்ஸ்ட்ரா நியூஸ் தொலைக்காட்சி சேனல் தெரிவித்துள்ளது.

பல தசாப்தங்களில் எகிப்தில் இஸ்ரேலியர்கள் மீதான இத்தகைய தாக்குதல் இதுவே முதல் முறையாகும்.
நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் பலி; பலர் கைது – இஸ்ரேல்

காசாவில் இருந்து நடந்த தக்குதலுக்கு பிறகு, பாலஸ்தீனிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி, இஸ்ரேலிய சமூகங்களைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன அறிக்கையின்படி, நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தர்கள் தற்போது கொல்லப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

இதுவரை எட்டு இடங்களில் தீவிரவாதிகளுடன் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

 

இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதல் – என்ன நடந்தது?

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்பட அந்நாட்டின் முக்கிய பகுதிகள் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது

இஸ்ரேல் – பாலத்தீனம் இடையே நூறாண்டுகளுக்கும் மேலாக பிரச்னை நீடித்து வருகிறது. இதனால், அங்கே குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச் சூடுகளும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

எனினும், 2021-ம் ஆண்டு இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான 11 நாள் போருக்குப் பிறகு ஒப்பீட்டளவில் பெரிய அளவில் அங்கே மோதல்கள் நடக்கவில்லை. அதற்கு ஹமாஸ் அமைப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்பட அந்நாட்டின் முக்கிய பகுதிகள் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.

இருபதே நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலின் பல கட்டடங்கள் தீப்பிடித்து எரிகின்றன. இதில், 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 740 பேர் காயமடைந்திருப்பதாகவும் இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல், லெபனான் மற்றும் சிரியா ஆகிய மூன்று நாடுகளும் சந்திக்கும் இடத்திற்கு அருகில் உள்ள மவுண்ட் டோவ் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

லெபனான் ஹிஸ்புல்லா இயக்கம் இந்தப் பிரச்னையில் தலையிட வேண்டாம் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

ஹிஸ்புல்லா ஒரு ஷியா இஸ்லாமிய அரசியல், ராணுவ மற்றும் சமூக அமைப்பு. இது லெபனானில் கணிசமான அதிகாரத்தைக் கொண்டுள்ளது. ஹமாஸை போலவே, இது இஸ்ரேலின் பரம எதிரியான இரானால் ஆதரிக்கப்படுகிறது. 2006இல் இஸ்ரேலுடன் ஒரு மாத காலப் போரை நடத்தியது.

ஜூலை மாதம், லெபனானில் இருந்து ஒரு சிறு ஏவுகணை ஏவப்பட்டதை அடுத்து, இஸ்ரேலின் ராணுவம் பீரங்கித் தாக்குதலால் பதிலளித்தது.

பாலத்தீன தாக்குதலுக்கு இரான் ஆதரவு

இரானின் தலைவர் அலி கமேனியின் ஆலோசகர், இஸ்ரேல் மீதான பாலத்தீனியர்களின் தாக்குதலை ஆதரிப்பதாக எங்களுக்குச் செய்திகள் வந்துள்ளன.

“பாலத்தீன போராளிகளை நாங்கள் வாழ்த்துகிறோம்” என்று ரஹீம் சஃபாவி கூறியுள்ளதாக ISNA செய்தி நிறுவனம் கூறுகிறது.

“பாலத்தீனம் மற்றும் ஜெருசலேம் விடுதலை அடையும் வரை நாங்கள் பாலத்தீன போராளிகளுக்கு துணை நிற்போம்” என்று அவர் கூறினார்.
ஹமாஸ் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா ஆதரவு

லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா, காஸாவின் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், “பாலத்தீன ஆயுதக் குழுவினரின் தலைமையுடன் நேரடி தொடர்பில் இருப்பதாகவும்” கூறியுள்ளது.

அது ஹமாஸ் தாக்குதல்களை “இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கு தீர்க்கமான பதில் மற்றும் இஸ்ரேலுடன் இயல்புநிலைக்கு வர விரும்புவோருக்கான ஒரு செய்தி” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆயுதக் குழு இஸ்ரேலின் முக்கிய எதிர்ப்பாளராகத் திகழ்ந்து வருவதாகவும், 2006 இல் அந்நாட்டுடன் போருக்குச் சென்றது என்றும் ஹிஸ்புல்லா அமைப்பு கூறியுள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானின் இராணுவ மற்றும் நிதி உதவியை நம்பிச் செயல்பட்டு வருகிறது.

 

காசாவை விட்டு இஸ்ரேல் வெளியேறிய பிறகு நடந்த மோதல்கள்

• ஆகஸ்ட் 2005 – மத்திய கிழக்குப் போரில் எகிப்திடம் இருந்து காசாவைக் கைப்பற்றிய 38 ஆண்டுகளுக்கு பின் இஸ்ரேலியப் படைகள், அனைத்தையும் பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு காசாவிலிருந்து வெளியேறின.

ஜன. 25, 2006 – பாலஸ்தீன தேர்தலில் ஹமாஸ் பெரும்பான்மை இடங்களை வென்றது. ஆயுத போராட்டத்தை கைவிடவும், இஸ்ரேலை அங்கீகரிக்கவும் ஹமாஸ் மறுத்ததால் பாலஸ்தீனர்களுக்கான உதவிகளை இஸ்ரேலும் அமெரிக்காவும் நிறுத்தின.

•ஜூன் 14, 2007 – மேற்குக் கரையில் இருக்கும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கு விசுவாசமான ஃபத்தா படைகளை வீழ்த்தி காசாவை ஹமாஸ் கைப்பற்றியது.

·டிசம்பர் 27, 2008 – தெற்கு இஸ்ரேலிய நகரமான ஸ்டெரோட் மீது பாலஸ்தீனர்கள் ராக்கெட்டுகள் வீசியதை அடுத்து, காஸா மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. 22 நாள் நடந்த தாக்குதலில் சுமார் 1,400 பாலஸ்தீனியர்கள் மற்றும் 13 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

• நவம்பர் 14, 2012 – ஹமாஸின் ராணுவத் தளபதி அஹ்மத் ஜபாரியை இஸ்ரேல் கொலை செய்தது.

• ஜூலை-ஆகஸ்ட் 2014 – மூன்று இஸ்ரேலிய இளைஞர்களைக் கடத்தி ஹமாஸ் கொலை செய்தது. இதைத் தொடர்ந்து ஏழு வாரங்கள் நடந்த போரில் 2,100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மற்றும் 73 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.

• மார்ச் 2018 – பாலஸ்தீனிய அகதிகளை தங்கள் நிலங்களில் மீண்டும் குடியேற அனுமதிக்க வேண்டும் என பாலஸ்தீனியர்கள் காசாவில் உள்ள இஸ்ரேல் எல்லையில் போராட்டம் நடத்தினர். பல மாதங்கள் நடந்த போராட்டத்தில் 170க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியது.

• மே 2021 – ரமலான் மாதத்தில் இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தலமான ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதி வளாகத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுடன் நடந்த மோதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர்.

• ஆகஸ்ட் 2022 – மூத்த இஸ்லாமிய ஜிஹாத் தளபதி தய்சீர் அல்-ஜபரியை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி நடத்தியது. மூன்று நாட்கள் நடந்த மோதலில் 15 குழந்தைகள் உட்பட குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டனர்.

• ஜனவரி 2023 – இஸ்ரேலிய படைகள் ஒரு அகதிகள் முகாமைத் தாக்கி ஏழு பாலஸ்தீன ஆதரவு தாக்குதல்தாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்களையும் கொன்றதை அடுத்து இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு இஸ்ரேலை நோக்கி இரண்டு ராக்கெட்டுகளை வீசியது.

இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இஸ்ரேல் பதில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

அக்டோபர் 2023 – தற்போது எல்லை தாண்டிச் சென்று மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தியுள்ளது. தனது போராளிகளும் இந்தத் தாக்குதலில் இணைந்துள்ளதாக இசுலாமிய ஜிஹாத் அமைப்பு கூறியுள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version