உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று நடக்கும் 14-வது லீக்கில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி – இலங்கை அணியுடன் மோதியது.

worldcup 2023 | australia vs Sril Lanka: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் லக்னோவில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 14-வது லீக்கில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி – இலங்கையை எதிர்கொண்டது.

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அதன் முதல் இரு ஆட்டங்களில் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்காவிடம் அடி வாங்கியது. இதேபோல், இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடமும், அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானிடமும் தோல்வியுற்றது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வர போராடும்.

டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்: ஆஸி., பவுலிங்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் செய்து வருகிறது. இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக குசல் பெரேரா – பாத்தும் நிஸ்ஸங்க ஜோடி களமிறங்கிய நிலையில், இந்த ஜோடி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடியை உடைக்க 21 ஓவர்கள் வரை ஆஸ்திரேலிய பவுலர்கள் போராடினார்கள். 8 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்த நிலையில் பாத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிழந்தார்.

12 பவுண்டரிகளை விரட்டிய குசல் பெரேரா 78 ரன்கள் எடுத்தபோது கம்மின்ஸ் பந்தில் அவுட் ஆனார். அவருடன் களத்தில் இருந்த கேப்டன் குசல் மெண்டிஸ் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்பின்னர் களத்தில் இருந்த சதீர சமரவிக்ரம – சரித் அசலங்கா ஜோடியில் சமரவிக்ரம ஆடம் ஜாம்பா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி 8 ரன்னுடன் ஆட்டமிழந்தார். தற்போது சரித் அசலங்கா – தனஞ்சய டி சில்வா களத்தில் இருந்து வரும் நிலையில், மழை குறுக்கீடு காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.

மழை நின்றபின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இலங்கை அணி 32.3 ஓவரில் 178 ரன் எடுத்திருந்தபோது, தனஞ்ஜெய டி சில்வா 7 எடுத்திருந்த நிலையில், மிட்செல் ஸ்டார்க் பந்தில் போல்ட் அவுட் ஆனார். இவரை அடுத்து, துனித் வெல்லலகே பேட்டிங் செய்ய வந்தார்.

இலங்கை அணி 34.5 ஓவரில் 184 ரன் எடுத்திருந்தபோடு, துனித் வெல்லலகே ரன் அவுட் ஆகி வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினார். இவரை அடுத்து, சமிகா கருணரத்னே பேட்டிங் செய்ய வந்தார்.

 

இலங்கை அணி 37.6 ஓவரில் 196 ரன் எடுத்திருந்தபோது, , சமிகா கருணரத்னே 2 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில், ஆடம் ஜம்பா வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார்.

இவரை அடுத்து, மஹீஷ் தீக்‌ஷனா பேட்டிங் செய்ய வந்தார். இவர் ஆடம் ஜம்பா பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் வந்த வேகத்திலேயே வெளியேறினார். இவரை அடுத்து லஹிரு குமாரா பேட்டிங் செய்ய வந்தார்.

மறுமுனையில் நிலையாக ஆடிவரும் சரித் அசலான்கா நிதானமாக விளையாடி வருகிறார்.

இலங்கை அணி 40.5 ஓவரில் 204 ரன் எடுத்திருந்தபோது, 4 ரன் மட்டுமே எடுத்திருந்த லஹிரு குமாரா மிட்செல் ஸ்டார்க் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். இவரை அடுத்து, தில்ஷன் மதுஷங்கா பேட்டிங் செய்ய வந்தார்.

மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடி வந்த சரித் அசலன்கா 25 ரன் எடுத்திருந்த நிலையில், கிளென் மேக்ஸ்வெல் பந்தில் லபுஷேன் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இறுதியில் இலங்கை அணி 43.3 ஓவரில் 209 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம், 210 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய இருந்தனர்.

ஆனால், மழை காரணமாக ஆஸ்திரேலியா பேட்டிங் செய்வது தாமதமானது. மழை நின்றபின் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் பேட்டிங் செய்ய களம் இறங்கினர்.

ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. ஆஸ்திரேலிய அணி 3.1 ஓவரில் 24 ரன் எடுத்திருந்தபோது, டேவிட் வார்னர் 11 ரன் எடுத்திருந்த நிலையில், தில்ஷன் மதுஷன்கா பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார்.

இவரையடுத்து, ஸ்டீவ் ஸ்மித் ரன் எதுவும் எடுக்காமல் தில்ஷன் மதுஷன்கா பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இவரையடுத்து, லபுஷேன் பேட்டிங் செய்ய வந்தார்.

ஆஸ்திரேலியா அணி 14.3 ஓவரில் 81 ரன் எடுத்திருந்தபோது, அரைசதம் அடித்திருந்த மிட்செல் மார்ஷ் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சமிகா கருணரத்னேவால் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார்.

இவரையடுத்து, ஜோஷ் இங்லிஸ் பேட்டிங் செய்ய வந்தார். லபுஷேன் மற்றும் ஜோஷ் இங்லிஸ் நிலைத்து நின்று விளையாடினார்கள்.

ஆஸ்திரேலியா அணி 28.5 ஓவரில் 158 ரன் எடுத்திருந்தபோது, 60 பந்தில் 40 ரன் எடுத்திருந்த லபுசேன் தில்ஷன் மதுஷங்கா பந்தில் சமிகா கருணரத்னேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரை அடுத்து கிளென் மேக்ஸ்வெல் பேட்டிங் செய்ய வந்தார்.

மறுமுனையில் அடித்து விளையாடிய ஜோஷ் இங்லிஸ், 59 பந்துகளில் 58 ரன் எடுத்திருந்தபோது, துணித் வெல்லலகே பந்தில் மஹீஷ் தீக்‌ஷணாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரை அடுத்து மார்கஸ் ஸ்டோனிஸ் பேட்டிங் செய்தார்.

இறுதியில் ஆஸ்திரேலியா அணி 35.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இலங்கையை எளிதாக வீழ்த்திய ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Share.
Leave A Reply

Exit mobile version