ககன்யான் திட்டத்திற்கான மாதிரி விண்கல சோதனை இன்று காலை 8 மணியிலிருந்து மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட பின், மற்றொரு நாளில் சோதனை நடைபெறும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியிருந்த நிலையில், சோதனைக்கலனில் ஏற்பட்ட கோளாரைக் கண்டுபிடித்து, சீரமைத்து, மீண்டும் 10 மணிக்கு சோதனைக்கலன் விண்ணில் ஏவப்பட்டது.
மாதிரி விண்கலம் டிவி-டி1(TV-D1) ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. மாதிரி சோதனை வெற்றிகரமாக முடிந்தவுடன் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “இந்த டிவி-டி1 மிஷன் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதன் நோக்கம், ககன்யாம் திட்டத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்கள், அதிலிருந்து தப்பிக்கும் ஒரு வாகனப் பரிசோதனை இது.
இது வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து, வீரர்களைக் கொண்டு செல்லும் வாகனம் வெற்றிகரமாக சோதனைக்கலனில் இருந்து பிரிந்து, குறித்த வேகத்தில் கடலில் விழுந்துள்ளது. அது தொடர்பான அனைத்து தரவுகளும் அந்த இயந்திரத்தில் உள்ளது. கடலில் விழுந்துள்ள இயந்திரம் மீட்கப்பட்டு, கப்பல் மூலமாகக் கொண்டுவரப்படும்,” என்றார்.
மேலும், கடைசி ஐந்த நொடியில் சோதனை திட்டம் நிறுத்தப்பட்டதற்கான காரணத்தையும் அவர் கூறினார்.
“காலை 8 மணிக்குத் திட்டமிடப்பட்டிருந்த சோதனை வானிலை காரணமாக 8.45 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின், தானியங்கி கணினிக்கு, இன்ஜின் ஆப்பரேஷனுக்கான ஒப்புதல் கிடைக்காததால், கடைசி ஐந்து விநாடியில் நிறுத்தப்பட்டது.
இது தானியங்கி கண்காணிப்பின்போது, இயந்திரத்தில் முன்னுக்குப் பின்னாக சிலவற்றைக் கண்டறிந்துள்ளது.
அது விரைவாக கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. ஆனால், மீண்டும் எரிவாயு நிரப்புவதற்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. அதனால்தான் இந்தத் தாமதம்,” என்றார் சோம்நாத்.
ககன்யான் திட்டத்திற்கான முன்னோட்ட சோதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று காலை 8 மணிக்கு விண்ணில் ஏவுத் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், வானிலை காரணமாக காலை 8 மணியில் இருந்து 8.30 மணிக்கு ஒத்திவைக்கபட்டது. பின்னர், மீண்டும் 8.30 மணிக்கான கவுன்ட்டவுன் நிறுத்தப்பட்டு, 8.45 மணிக்கு விண்ணல் ஏவி சோதனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, 8.45 மணிக்கு சரியாக விண்ணில் ஏவுவதற்கு ஐந்து விநாடிக்கு முன்னதாக கவுன்ட்டவுன் நிறுத்தப்பட்டது.
பிறகு இன்று சோதனை நடைபெறாது என்றும், மற்றொரு நாளில் சோதனை நடைபெறும் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.
மேலும் அடுத்து எப்போது மாதிரி விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் ஏவுதல் சோதனை நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
சுமார் 45 நிமிட சோதனைக்குப் பின், கடைசி விநாடியில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டதாகவும் காலை 10 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்றும் கூறினார்.
மேலும், சோதனைக்கான டிவி-டி1 ராக்கெட் பாதுகாப்பாகவே உள்ளதாகவும் சோம்நாத் கூறினார். தரையிலிருந்த 16.6 கிலோ மீட்டர் விண்ணில் ஏவப்பட்டு, பாராசூட் மூலம் வங்கக்கடலில் இறக்கும் சோதனை இது.
வானிலை காரணமாக நிறுத்தப்பட்டதா?
இன்று இரண்டு முறை வானிலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட ககன்யான் திட்டத்தின் சோதனை, மூன்றாவது முறையாக கடைசி ஐந்து விநாடிகளில் ஒத்தி வைக்கப்பட்டதற்கு வானிலை காரணம் இல்லை என்கிறார் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநர் பாண்டியன்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், “எந்தவொரு ராக்கெட் ஏவப்படும்போதும் கடைசி 10 நிமிடங்கள் மனிதர்களின் கட்டுப்பாட்டில் இருந்து தானியங்கி கட்டுப்பாட்டிற்குச் சென்றுவிடும். வானிலை உள்ளிட்ட புறக்காரணிகள் சரியாக இருந்தால் மட்டுமே தானியங்கியின் கட்டுப்பாட்டிற்குச் செல்லும்.”
“தானியங்கிக் கட்டுப்பாட்டிற்கு சென்ற பிறகு நிறுத்தப்படுகிறது என்றால் அதற்கு வானிலை காரணமாக இருக்காது. இயந்திரக் கோளாறோ அல்லது மென்பொருள் கோளாறோ அல்லது வேறு ஏதேனும் சிக்கலோ இருக்கலாம்.
ஆனால், என்ன சிக்கல் என்பதை சோதனைக்கலனில் உள்ள கணினியை எடுத்து ஆய்வு செய்த பிறகே தெரியும்,” என்கிறார் பாண்டியன்.
இன்றைய சோதனையில் என்ன நடக்கவிருந்தது?
அக்டோபர் 21 அன்று நடக்கும் சோதனைக்கு திரவ தள்ளுவிசையால் இயங்கும் ஒற்றை நிலை ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தப் பரிசோதனை பணிக்காக சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டது.
அந்த ராக்கெட்டின் மேலே ஒரு சிறப்புக் குப்பி இணைக்கப்பட்டிருக்கும். அதில்தான் மனிதர்கள் பாதுகாப்பாக இருத்தப்படுவார்கள். அதில் வீரர்களுக்கான இருக்கைகள் அமைந்திருக்கும்.
அவசரக் காலத்தில் விண்வெளி வீரர்கள் தப்பிப்பதற்கான ஏற்பாடுகளும் அதில் இருக்கும். அது பெரிய காற்றுப்பை போல அமைந்திருக்கும். ஏவுகணை புறப்படுவதில் ஏதாவது பிரச்னை இருந்தால் குப்பியை விரைவாக வெளியே இழுத்துத் தள்ள முடியும்.
இப்போது நடக்கும் சோதனையில் ஏவுகணையின் சோதனைப் பறப்பு நடக்கிறதா என்று சரி பார்க்கப்படும். அதன் பின்னர் குப்பியில் உள்ள பாராசூட் மற்றும் பிற மீட்பு அமைப்புகள் சரியாக வேலை செய்கின்றனவா என்று பரிசோதிக்கப்படும்.
பின்னர் கடற்பரப்பில் அது விழுந்து மீட்டு எடுத்து வருவதற்கான செயல்முறை பரிசோதிக்கப்படும். இந்தப் பரிசோதனையில் கிடைக்கும் முடிவுகள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு அவசியமான ஏராளமான படிப்பினைகளை வழங்கும்.