நெதர்லாந்துக்கு எதிராக லக்னோ, பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் எக்கானா கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (21) நடைபெற்ற உலகக் கிண்ண 19ஆவது லீக் போட்டியில் இலங்கை 5 விக்கெட்களால் தனது முதலாவது வெற்றியை ஈட்டியது.

மிகவும் நெருக்கடியான நிலைமையில் சதீர சமரவிக்ர திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்ததுடன் 3 இணைப்பாட்டங்களில் பங்காற்றி இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தார்.

அத்துடன் டில்ஷான் மதுஷன்க, கசுன் ராஜித்த ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுகளும் இலங்கையின் வெற்றிக்கு அடிகோலியிருந்தன.

தென் ஆபிரிக்கா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் தொடர்ச்சியாக 3 தோல்விகளைத் தழுவிய இலங்கைக்கு இந்த வெற்றி மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

மேலும் உலகக் கிண்ணப் போட்டியில் நெதர்லாந்தை சந்தித்த முதல் சந்தர்ப்பத்திலேயே வெற்றியை இலங்கை தனதாக்கிக்கொண்டது.

அத்துடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்தை சந்தித்த 6 சந்தர்ப்பங்களிலும் இலங்கை வெற்றியைத் தனதாக்கிக்கொண்டுள்ளது. எனினும் இன்றைய உலகக் கிண்ண வெற்றி இலங்கைக்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக அமைந்தது.

நெதர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 263 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 48.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 263 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

குசல் பெரேரா (5), அணித் தலைவர் குசல் மெண்டிஸ் (11) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தமை இலங்கைக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.

எனினும் பெத்தும் நிஸ்ஸன்க (54), சதீர சமரவிக்ரம ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறிய அளவில் தெம்பூட்டினர்.

பெத்தும் நிஸ்ஸன்க இப் போட்டிவரை தொடர்ச்சியாக 3 அரைச் சதங்களைப் பெற்ற போதிலும் அவற்றை பெரிய எண்ணிக்கையாக அவர் ஆக்கத் தவறுவது அவரிடம் ஏதோ குறை இருப்பதை உணர்த்துகிறது. அவர் மூன்று இன்னிங்ஸ்களிலும் கவனக்குறைவான அடிகளினாலேயே ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து சதீர சமரவிக்ரமவும் சரித் அசலன்கவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 77 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஒரளவு ஆறுதலைக் கொடுத்தனர்.

சரித் அசலன்க 44 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அநாவசியமாக பந்தை சுழற்றி அடிக்க முயற்சித்து போல்ட் ஆனார்.

இந் நிலையில் ஜோடி சேர்ந்த சதீர சமரவிக்ரமவும் தனஞ்சய டி சில்வாவும் 5ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு வெற்றியை அண்மிக்க உதவினர்.

சிக்ஸ் மூலம் வெற்றி ஓட்டங்களைப் பெற முயற்சித்த தனஞ்சய டி சில்வா 30 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

எனினும் சதீர சமரவிக்ரம, துஷான் ஹேமன்த ஆகிய இருவரும் இலங்கையின் வெற்றியை உறுதிசெய்ததுடன் சதீர சமரவிக்ரம 91 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

107 பந்துகளை எதிர்கொண்ட சமரவிக்ரம 7 பவுண்டறிகளை அடித்தார்.

துஷன்த ஹேமன்த ஆட்டம் இழக்காமல் 4 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஆரியன் டட் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நெதர்லாந்து 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 262 ஓட்டங்களைக் குவித்தது.

கசுன் ராஜித்த, டில்ஷான் மதுஷான் ஆகிய இருவரும் துல்லியமாக பந்துவீசி நெதர்லாந்தின் முன்வரிசை மற்றும் மத்திய வரிசை வீரர்களை ஆட்டம் இழக்கச் செய்தனர்.

22ஆவது ஓவரில் நெதர்லாந்தின் 6ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டபோது அதன் மொத்த எண்ணிக்கை வெறும் 96 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் சைப்ராண்ட் எங்க்ள்ப்ரெச், லோகன் வென் பீக் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் உலகக் கிண்ணத்திற்கான சாதனைமிகு 130 ஓட்டங்களைப் பகிர்ந்து நெதர்லாந்தை பலப்படுத்தினர்.

ரவிந்த்ர ஜடேஜா, தோனி ஆகிய இருவரும் நியூஸிலாந்துக்கு எதிராக மென்செஸ்டரில் 2019இல் பகிர்ந்த 116 ஓட்டங்களே உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இதற்கு முன்னர் 7ஆவது விக்கெட்டுக்கான அதிசிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.

சைப்ராண்ட் எங்க்ள்ப்ரெச் 70 ஓட்டங்களையும் லோகன் வென் பீக் 59 ஓட்டங்களையும் பெற்றனர்.

5 அபராத ஓட்டங்கள் (களத்தில் இருந்த ஹெல்மெட்டில் பந்து பட்டதால்) உட்பட 33 உதிரிகள் நெதர்லாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தது.

நெதர்லாந்தின் முன்வரிசையில் கொலின் அக்கமன் 29 ஓட்டங்களையும் மெக்ஸ் ஓ’டவ்ட் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் டில்ஷான் மதுஷன்க 49 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கசுன் ராஜித்த 50ட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

Share.
Leave A Reply

Exit mobile version