உலகில் மனிதப் பேரவலங்கள், இனஅழிப்புகள், படுகொலைகள் இடம்பெறுகின்ற போது, அதனை தடுத்து நிறுத்துவதற்காக காத்திரமான நடவடிக்கைகளை எடுக்காமல், வெறுமனே ‘உத்தியோகபூர்வ கண்ணீர்’ விட்டுக் கொண்டும், அறிக்கை விட்டுக் கொண்டும் இருப்பதுதான் உலக வழக்கமாகும். இதுதான் இப்போது அகன்ற பலஸ்தீன விடயத்திலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
உலக நீதி வேறு, உலக அரசியல் வேறு என்றாலும் உலக அரசியலும் அந்தந்த நாடுகள் மற்றும் ஆட்சியாளர்களின் சுய இலாப நட்டக் கணக்குமே உலகின் நியதியை, விதியை எழுதிச் செல்வதை நாம் வரலாறு நெடுகிலும் கண்டு வருகின்றோம். இப்போது பலஸ்தீனரியர்கள் மீது அது எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இன்று பலஸ்தீனத்தில் உணவு, வீடு, மின்சாரம், குடிநீர் இல்லாமலும், எங்கு போவது என்று தெரியாமலும், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு; ஓடித் திரியும் கிட்டத்தட்ட 20 இலட்சம் முஸ்லிம்களைப் பார்த்து உலகமே அழுகின்றது. இருப்பினும், நீதி நியாயம் பற்றி உலகுக்கு போதிக்கும் உலக நாட்டாமைகளால் அங்கு அமைதியோ, நீதியோ, விடுதலையோ இன்னும் நிலைநாட்டப்படவில்லை.
ஆனால், இவை எல்லாவற்றையும் விட பலஸ்தீனர்களின் நெஞ்சுறுதியும், அந்த மண்மீதான பற்றுதலும் மிகப் பெரியதும் பலமானதுமாகும். இத்தனை நடந்த பிறகும், பீரங்கிகளுக்கு முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்ற பச்சிளம் பாலகர்கள், தமது தேச விடுதலைக்காக அந்த மண்ணிலேயே உயிரை மாய்க்கவும் உறுதியாய் இருக்கின்ற பலஸ்தீனர்களின் வேட்கையை இஸ்ரேலின் சண்டித்தனத்தால் ஒன்றுமே செய்ய முடியாது.
உலக அரங்கில் இஸ்ரேல் கட்டிய விம்பங்கள் உடைநதுள்;ளன. இந்த கௌரவப் பிரச்சினையில், ஆத்திரத்தில் இஸ்ரேல் பிரதமர் மெதன்யாஹ{வுக்கு தலைகால் புரியவில்லை. இஸ்ரேலின் கூட்டாளிகள் இதனை சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்க விளைகின்றனர். ஆனால் இங்கு ஒருவிடயத்தைக் கவனிக்க வேண்டும்.
அதாவது, இஸ்ரேலும் அமெரிக்காவும் நினைத்தது போல களநிலைமைகள் இல்லை. புளித்துப்போன பரப்புரைகள், பலஸ்தீனர்களுக்கு எதிரான 75 ஆண்டுகால அடக்குமுறை, இந்த உலகை ஆட்டிப்படைக்க ‘பொலிஸ்காரர்களும்’ ‘நாட்டாமைகளும்’ போடுகின்ற திட்டங்கள் எல்லாம் உலகின் கடைநிலை பொதுமகனுக்கும் இப்போது நன்றாக விளங்கியிருக்கின்றது.
பலஸ்தீனத்தில் என்றாலும் இஸ்ரேலில் என்றாலும் அப்பாவி மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்இ ஆயினும், அகன்ற பலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி முஸ்லிம்களுக்கான அடிப்படை வசதிகளை துண்டித்துள்ள இஸ்ரேல் தொடர்ந்து கண்மூடித்தனமான தாக்குதலை நடத்துகின்றது. வெண் பொஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துதல், பெண்கள், சிறுவர்களை கொலை செய்தல் என பல விதிகளில் போர்க்கால விதிமுறைகளை மீறி வருகின்றது.
குறிப்பாக, அகன்ற பலஸ்தீனத்தில் இயங்கிவந்த அல்-அக்லி வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த 500 இற்கு மேற்பட்ட நோயாளிகளைக் கொலை செய்தது மிகப் பெரிய போர்க் குற்றமாக மாறியுள்ளது. அதுமட்டுமன்றி, இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் பற்றிய உலக நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்படுவதற்கும் காரணமாகியுள்ளது.
‘இஸ்ரேல் தனது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிமை உண்டு’ என்று அமெரிக்கா உட்பட பல மேற்கத்தேய, வல்லாதிக்க நாடுகள் முதலில் அறிவித்தன. ஒருவகையில் பார்த்தால், இது பலஸ்தீனத்தில் அழிச்சாட்டியங்களைச் செய்வதற்கும், போர் விதிமுறைகைள மீறி மக்களைக் கொள்றொழிப்பதற்கு வழங்கப்பட்ட மிக மோசமான ஒப்புதலாகும்.
உலகுக்கு பெரிய நாட்டாமைகள் போல காட்டிக் கொண்டு, பலவீனமான நாடுகளுக்கு நீதி, நியாயம் மனிதாபிமானத்தை போதிக்கின்ற மேற்குலகத்தின் மிக மோசமான முன்னுதாரணமே இது எனலாம். ஆனால், வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்திய பிறகு பலரும் தமது நிலைப்பாடுகளை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் எப்போதும் முஸ்லிம் விரோத போக்கையும் இஸ்ரேலுக்கு ஆதரவையும் வெளிப்படுத்தி வருகினறன. இந்நிலையில, இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே ஆரம்பத்தில் எடுத்தது. அப்படியென்றால், இஸ்;ரேலை ஆதரிக்கும் இந்தியா எப்படி இலங்கை தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும்? என்ற குறுக்கு கேள்வியும் வந்துபோனது.
ஆனால், பின்னர் இவ்விரு நாடுகளும் பலஸ்தீனர்களை குளிர்விக்கும் கருத்துக்களை வெளியிட்டதன் மூலம், சுதாகரித்துக் கொண்டு ‘புதிய உலக ஒழுங்கிற்கு’ வந்துள்ளன எனலாம். வைத்தியசாலை மீதான தாக்குதலையடுத்து அமெரிக்க ஜனாதிபதியின் அறிக்கை இங்கு கவனிப்பிற்குரியது.
ஆக, இஸ்ரேலின் பலஸ்தீனம் மீதான ஆக்கிரமிப்பு போர் பற்றிய மேற்குலகின் பார்வை மாறுபட்டுள்ளது, அப்படிக் கூறுவதை விட நின்று நிதானிக்கின்றன அல்லது பதுங்குகின்றன என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஹமாஸ_டன் ஹிஸ்புல்லா போன்ற வேறு அமைப்புகளும் நாடுகளும் இணைந்தால் என்னவாகும் என்ற எச்சரிக்கை உணர்வு இதற்கு ஒரு முக்கிய காரணம்.
ஏற்கனவே, கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்குப் பின்னர், ‘வன் வேர்ல்ட் ஓர்டா’; எனப்படும் ‘ஒற்றை உலக ஒழுங்கு’ மாறத் தொடங்கி விட்டது. இப்போது சவூதி, பஹ்ரைன், ஈரான், எகிப்து, ஜோர்டான் என அரபுலக நாடுகள் மட்டுமன்றி ரஷ்யா மற்றும் சீனா போன்றவையும் பலஸ்தீன மக்களின் பக்கம் நிற்கின்றன. எனவே, எதிரிகளை அதிகரித்துக் கொண்டு, நிலைமைகளை இன்னும் சிக்கலாக்கக் கூடாது என மேலும் பல காரணங்களும் உள்ளன.
எது எப்படியோ, பலஸ்தீன மக்கள் மீது நடக்கின்ற ஈவிரக்கமற்ற தாக்குதல் பற்றியும் இஸ்ரேல் கூறுகின்ற பயங்கரவாதம், மனிதக் கேடயங்கள் மற்றும் தற்பாதுகாப்பு என்ற பொய்க் காரணங்கள் பற்றியும் உலக மக்கள் தெளிவாக உள்ளனர். இதற்கு பிரதானமான காரணம், இன்றைய நவீன ஊடகங்களின் வளர்ச்சியும் உண்மைக் களநிலவரங்கள் ஒவ்வொரு நிமிடமும் கிடைத்துக் கொண்டிருக்கின்றமையும் ஆகும். இதனால் வழக்கமான சோடிக்கப்பட்ட ஊடக பிரசாரங்கள் இம்முறை தோல்வி கண்;டுள்ளன.
இந்தப் பின்னணியிலேயே, பல நாடுகள் பலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை அறிவித்திருப்பது மட்:டுமன்றி, சில அரசுகள் இஸ்ரேலை ஆதரித்தாலும் கூட அங்குள்ள எம்.பி.க்கள் பலஸ்தீனர்களின் விடுதலைக்காக, நீதிக்காக பகிரங்கமாக குரல் கொடுக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள முற்போக்கான யூதர்கள், இஸ்ரேலில் உள்ள நடுநிலையான யூதர்கள் என பல நாடுகளில் மக்கள் பேரணிகள் இடம்பெறுகின்றன.
சமகாலத்தில், அரபு நாடுகள் ஒன்றுபட்டுள்ளன. இதற்கு மத ரீதியான பின்புலக் கடப்பாடுகளும் உள்ளன. ஆனால், வரலாற்றில் பலஸ்தீனத்தை வஞ்சித்த எகிப்து, ஜோர்டான் போன்ற நாடுகளும் இந்த மக்களை வைத்து இவ்வளவு காலமும் அரசியல் செய்த 20 இற்கு மேற்பட்ட அரபு நாடுகளும் ஏற்கனவே ஒற்றுமையுடன் செயற்பட்டிருந்தால், பலஸ்தீனத்தில் மட்டுமன்றி, உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் தலைவிதி வேறு மாதிரி இருந்திருக்கும் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
எது எப்படியோ, இன்று அவசர தேவை – பலஸ்தீனர்களின் கண்ணீருக்கு ஒரு ஆறுதல், அந்த மக்களின் இழப்புக்களுக்கு ஒரு நீதியாகும். அகன்ற பலஸ்தீனத்தை அந்த மக்களிடமே ஒப்படைப்பதே நிரந்தர தீர்வாக அமையும். அதற்காகத்தான் இத்தனை இழப்புக்களையும் வலியையும் சுமந்து கொண்டு நூறு வருடமாக அந்த மண்ணில் வாழ்கின்றார்கள்.
அந்தவகையில், உலக நாடுகளும், நீதிக்காக குரல் கொடுக்கின்ற ஐ.நா. உள்ளிட்ட அமைப்புக்களும்; பலஸ்தீன மண்ணில் நீதியை நிலைநாட்டுவதற்கு காத்திரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளனவா? அல்லது வழக்கம்போல அறிக்கை விட்டுக் கொண்டும், புள்ளிவிபரங்களை கூறிக் கொண்டும் இனியும் இருக்கப் போகின்றனவா? என்ற கேள்வி எழுகின்றது
1945 இல் ஐ.நா. சபை உருவாக்கப்பட்டதன் முக்கியமான நோக்கம், இன்னுமொரு உலக யுத்தம் இடம்பெறுவதை தடுப்பதாகும். அதனை ஐ.நா. செவ்வனே செய்திருக்கின்றது. என்றாலும், உலகின் பல பாகங்களில் அதைவிடப் பெரிய மனித அவலங்களும் தொடர் மோதல்களும் நடந்தேறியுள்மை பட்டவர்த்தனமானது. .
அகன்ற பலஸ்தீனத்தில் முக்கால் நூற்றாண்டாக உயிரிழப்புக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுதவிர, பொஸ்னியா, செச்னியா, வளைகுடா, ஈராக், சிரியா, துருக்கி, லிபியா, ஆப்கானிஸ்தான் தென்னாபிரிக்கா என பல நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இடம்பெற்ற மனிதப் பேரவலங்களை ஐ.நா.வோ உலக நீதியைக் காப்பாற்றுவதாக சொல்கின்றவர்களோ தடுத்து நிறுத்தவில்லை.
மாறாக, அறிக்கை விட்டதும், புள்ளிவிபரம் வெளியிட்டதும் கண்ணீர் விட்டதும்தான் அதிகம் எனலாம். நீதி நிலைநாட்டல் என்பது – உலக நாட்டாமைகளுக்கும், மூன்றாம் உலக மக்களுக்கும், பலமிக்க நாட்டுக்கும் வலுவற்ற தரப்பிற்கும் வெவ்வேறு விதமாக, நியாயமற்ற விதத்தில் இடம்பெறுகின்றமை இதற்கு காரணம் எனலாம்.
பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் அழிச்சாட்டியம் இனியும் தொடரக் கூடாது. இஸ்ரேல், பலஸ்தீன விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஒரு வகிபாகத்தை கொண்டுள்ள ஐ.நா. மற்றும் சர்வதேச நாட்டாமைகள், நீதியின் காவலர்கள் இனியும் வெறுமனே அறிக்கை விட்டுக் கொண்டிருக்காமல், பலஸ்தீன மக்களுக்கான நீதியை, விடுதலையை, சுயாதீனத்தை நிலைநாட்ட வேண்டும்.
ஏ.எல்.நிப்றாஸ் (virakesari)