கார்களுக்கு உள்ளே பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் எதையும் வைத்து விட்டு செல்ல கூடாது.

ஆனால் இந்த எச்சரிக்கையை மீறிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5) காரின் உரிமையாளர் ஒருவர், நெருக்கடியில் சிக்கியுள்ளார்.

சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது.

இதில் 2 கொள்ளையர்கள், பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து, அதன் உள்ளே இருந்த பையை திருடி செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

 பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காருக்கு உள்ளே இருந்து கொள்ளையர்கள் 2 பைகளை திருடி சென்றுள்ளனர்.

இவற்றில் ஒட்டுமொத்தமாக 13.75 லட்ச ரூபாய் பணம் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வளவு பெரிய தொகையை பறிகொடுத்து விட்டு தற்போது பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரின் உரிமையாளர் பரிதவித்து கொண்டுள்ளார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் (Bangalore) பகுதியில் நடைபெற்றுள்ளது.

சம்பவத்தன்று 2 கொள்ளையர்கள், பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரை நோட்டமிட்டுள்ளனர். இதில் ஒரு கொள்ளையன் டூவீலரில் தயாராக இருக்க, மற்றொரு கொள்ளையன் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரின் கண்ணாடியை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளான்.

அதன் பிறகு அவர்கள் இருவரும் டூவீலரில் தப்பி சென்று விட்டனர். கார் கண்ணாடிகளை எந்த விதமான சிரமமும் இல்லாமல் எளிதாக உடைக்க உதவி செய்யும் கருவிகள், தற்போது சந்தையில் கிடைக்கின்றன.

அதை பயன்படுத்திதான், இந்த கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார் கண்ணாடியை உடைத்த பின்னர் கொள்ளையன் கதவை திறந்து உள்ளே செல்லவில்லை. அதற்கு பதிலாக உடைக்கப்பட்ட ஜன்னல் வழியாகவே காரின் கேபினுக்கு உள்ளே சென்று பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இது கொள்ளையனின் புத்திசாலித்தனமான நடவடிக்கையாக கருதப்படுகிறது. ஏனெனில் ஜன்னல் கண்ணாடியை உடைத்த பிறகு, கதவை திறக்க முயற்சி செய்திருந்தால், அலாரம் அடித்திருக்கலாம்.

இது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்து விடும் என்பதால், கொள்ளையன் அவ்வாறு செய்யவில்லை. பெங்களூர் நகரில் சர்ஜாபூர் பகுதியில் உள்ள சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு அருகே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பட்டப்பகலில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கார்களுக்கு உள்ளே பணம் மற்றும் நகை போன்ற விலை உயர்ந்த பொருட்கள் எதையும் வைத்து விட்டு செல்ல வேண்டாம்.

பாதுகாப்பாக ‘லாக்’ செய்து விட்டோம் என நீங்கள் நினைத்தாலும் கூட, இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே கவனமாக இருங்கள்.

 

Share.
Leave A Reply

Exit mobile version