உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்

அசோகனின் பாறை ஆணை-7 இல், எல்லா மதங்களும் எல்லா இடங்களிலும் வசிக்க வேண்டும் [King Piyadasi, desires that all religions should reside everywhere,] என்று அசோகன் கூறுகிறார்.

அதே போல அசோகனின் பாறை ஆணை-12 இல், ‘சந்நியாசிகள் மற்றும் வீட்டில் வசிப்பவர்கள் இருவரையும், அவர்கள் எந்த மதமாக இருந்தாலும் மதிக்கிறோம்’ .. ‘என் மதத்தை மகிமைப்படுத்த விடுங்கள் என்பது உண்மையில் அவரின் மதத்தையே தீங்கு விளைவிக்கும்’ என்கிறது [King Piyadasi, honors both ascetics and the householders of all religions, … “Let me glorify my own religion,” only harms his own religion. ].

மீண்டும் அசோகனின் பாறை ஆணை-13 இல், தெற்கில் சோழ, பாண்டியர் என உறுதிப்படுத்தப் படுகிறது [ beyond there where the four kings named Ptolemy, Antigonos, Magas and Alexander rule, likewise in the south among the Cholas, the Pandyas, and as far as Tamraparni.].

மேலும் அந்த பாறையில், என்னால், இந்த தரும அல்லது அறநெறி கட்டளை எழுதப்பட்டது ஏன் என்றால், என் மகன்களோ இல்லை பேரன்களோ புதிய வெற்றிகளை போரிட்டு பெறக் கருதக்கூடாது என்பதாலாகும் என்கிறார் [I have had this Dhamma edict written so that my sons and great-grandsons may not consider making new conquests,].

ஆனால் எந்த பாறையிலும் தன் மகனை, மகளை புத்த மதம் பரப்ப அனுப்பியது எழுதப்படவில்லை? மற்றும் ‘எல்லா மதமும் சம்மதம்’ என்பதையும் எல்லாளன் – துட்டகாமினி தொடங்கி, இன்று வரை காணமுடியவில்லை ?

புத்தரின் முதலாவது வருகையில் அவர் கடும் மழையையும் புயலையும் தோற்றுவித்து, இயக்கர்களின் மனதில் பீதியையும் திகிலையும் உண்டாக்கி, அதன் மூலம் அவர்களை தன் வழிப்படுத்தி இலங்கையில் இருந்து அகற்றினார் என்னும் மாஜாஜால வித்தை நடவடிக்கைகளை ஒருக்காலும் புத்தர் செய்யமாட்டார்,அப்படியான கதைகளை அவர் ஏற்றுக்கொண்டதும் இல்லை. என்றாலும் இந்த யோசனையை மகாவம்சம் எழுதிய மகாநாம தேரர் [Mahānāma] கட்டாயம் இந்து வேதத்தில் இருந்து இரவல் பெற்றிருப்பார் போல் தெரிகிறது.

அங்கு “நான் இடிமுழக்கத்தையும் மின்னலையும் அனுப்பும் பொழுது தான் நீ என்னில் நம்பிக்கை வைப்பாய்” [“Yes, when I send thunder and lightning” says Indra “then you believe, in me.”] என இந்திரன் சொல்வதாக அறிகிறோம். அது மட்டும் அல்ல மகாவம்சத்தின் பல செய்திகள், காட்சிகள் சமஸ்கிரத இதிகாசங்களில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இவைகள் எல்லாம் புத்தரின் கொள்கைக்கும் அவரின் இயல்புக்கு ஒவ்வாதவையாகும்?

தீக நிகாயம் [Digha Nikāya], அறிவுரை 11 இல், கேவத்த [Kevaddha] என்ற ஒரு சாதாரண மனிதனின் கேள்வி ஒன்றிற்கு புத்தர் பதிலளிக்கும் பொழுது “ஒரு மனிதன் பல மனிதர்கள் ஆகலாம்; மலைகள், சுவர்கள் ஊடே நுழைந்து செல்லலாம்; தண்ணீர் மீது நடந்து செல்லலாம்; காற்றின் மீது சம்மணம் போட்டவாறு பறக்கலாம்; நிலவையும் கதிரவனையும் தொடலாம்; பிரம்ம லோகம் வரை மானுட உடலில் செல்லலாம்.” [Miracles of psychic power; multiplying ones body; passing through walls, mountains etc.; walking on water; flying through the air cross-legged; touching the sun and moon; and traveling as far as the Brahma Realms.] என்றாலும் இதை பார்க்கும் ஒருவர், அதை, இந்த சம்பவத்தை, சந்தேகப் படுபவர்களிடமும், நம்பாதவர்களிடமும் முறையிட்டால், அவர்கள் இது ஒருவித மந்திர வசீகரமே காரணம் என்பார் [But if one were to see this kind of miracle and report it to someone skeptical and unbelieving they would think it was due to some kind of magic charm.],

ஆகவே புத்தர் திட்ட வட்டமாக “அதனால் தான். நான் அவைகளை விரும்பவில்லை, நிராகரிக்கிறேன், வெறுக்கிறேன்” என்று சொல்கிறார் [That is why, seeing the danger of such miracles, I dislike, reject and despise them].

உலகளாவிய அன்பு மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் இரக்கம் [universal love and compassion for all living beings] என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் புத்தரின் போதனைகள் பொதுவாக உருவாக்கப் பட்டவையாகும்.

தீக நிகாயம், அறிவுரை 30 இல், ததாகதர் [துறவு நிலை அடைந்தவர்] என்பவர் எப்பவும் ஒரு கடுமையான பேச்சை நிராகரிப்பவர், அப்படியானவற்றில் இருந்து விலகுபவர், குற்றமற்ற பேச்சு பேசுபவர், காதுக்கு மகிழ்ச்சி தரக் கூடியவற்றையும், ஏற்றுக்கொள்ளக் கூடியவற்றையும், இதயத்தை அடையக் கூடியவற்றையும், நாகரிகமானவற்றையும், மற்றும் மக்களின் கூட்டத்திற்கு மகிழ்ச்சி தரக் கூடியவற்றையும் கவரக்கூடியவற்றையும் பேசுபவர் என்று வர்ணிக்கிறார் [“the Tathagata rejects harsh speech, abstains from it, spoke what was blameless, pleasing to the ear, agreeable, reaching the heart, urbane, pleasing and attractive to the multitude”]

இலங்கையில், குறிப்பாக இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ததாகவும், அதில் தேரவாத பௌத்தர்கள் மற்றும் மஹாயான பௌத்தர்கள் ஆகிய இருபிரிவினரும் உள்ளடக்கம் என்பதும் தமிழ் பௌத்தம் பற்றி ஆராய்ந்தவர்களுடைய கருத்தாகும்.

அதாவது, இலங்கையில், எங்கு நாகர்கள், இயக்கர்களை விட பெரும்பான்மையாக காணப்பட்டார்களோ, அங்கு தமிழ் மொழி மேம்பட்டது அல்லது நிலவியது எனலாம் [In Sri Lanka, wherever the Nagas were concentrated in larger numbers than the Yakkhas, the Tamil language prevailed]. ஆகவே, தென்னிந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, தமிழ் பௌத்தர்கள் இருந்தமையை எவராலும் மறுக்க முடியாது.

ஆனால், இந்த வரலாறு இலங்கையில் பெரிதாக தேடப்படவில்லை; பாடசாலைகளில் கற்பிக்கப்படவில்லை. ஒருவகையில் பார்த்தால் இது மறக்கப்பட்டிருக்கிறது அல்லது மறைக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இலங்கையில், ‘தமிழ் பௌத்தம்’ எப்போது இல்லாது போனது என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இந்த இடத்தில், ‘சிங்கள-பௌத்தம்’ என்ற அடையாளம் எப்போது உருவானது என்ற கேள்விதான் முக்கியம் பெறுகிறது.

ஏனெனில், பௌத்தர்கள் என்பவர்கள் சிங்களவர்கள்தான் என்ற கருதுகோள் முன்வைக்கப்படும் போது, இந்த அடையாளத்தின் வரலாறு முக்கியமாகிறது. இலங்கையின் வரலாறே பெருங்குழப்பம் மிக்கது என்றே தோன்றுகிறது, உங்களுக்கு எப்படியோ ?

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்

(மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 17)

Share.
Leave A Reply

Exit mobile version