கத்தார் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி, தனது சேவைக் காலத்தை முடித்து மீண்டும் இலங்கைக்கு திரும்பிக் கொண்டிருந்த பெண் ஒருவர் இன்று திங்கட்கிழமை (23) விமானத்தில் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மொரட்டுவை பிரதேசத்தின் கோரலவெல்லை பகுதியைச் சேர்ந்த குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற 40 வயது திருமணமாகாத பெண் ஒருவர் ஆவார்.
இவர் இன்று காலை 01.17 மணியளவில் கத்தாரின் தோஹாவில் இருந்து கத்தார் ஏர்வேஸ் விமானமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த நிலையில், மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.