காஸாவில் இஸ்ரேல் இராணுவத்தின் செயல்பாடுகள் இன்னும் மூன்று மாதங்கள் வரை தொடரலாம், ஆனால் இறுதியில் ஹமாஸ் கண்டிப்பாக இருக்காது, என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் காலன்ட் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய விமானப்படையின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் சூழ்நிலையைப் பற்றிக் கேட்டறிந்த பிறகு கேலன்ட் இதைத் தெரிவித்தார்.

“செயல்பாட்டு அம்சங்களைப் பொறுத்தவரை, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளைத் தடுக்க எதனாலும் முடியாது,” என்று அவர் கூறினார்.

“காஸாவில் இதுவே எங்களின் கடைசி நடவடிக்கையாக இருக்கும். இதற்குப் பிறகு ஹமாஸ் இருக்காது,” என்றார் அவர்.

மேலும், கேலன்ட், அடுத்த கட்டமாக, பரவலாக எதிர்பார்க்கப்பட்ட தரைப்படை நடவடிக்கை, ‘விரைவில் வரும்’ என்றார். ஆனால், எவ்வளவு விரைவில் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மனிதாபிமான உதவிகள்

மேலும் 14 டிரக்குகள் மனிதாபிமான உதவிகளை ஏற்றிக்கொண்டு வந்துள்ளதாக ஐ.நா.வின் மனிதாபிமானத் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.

பாலத்தீனியர்களுக்கு இது ‘மற்றொரு சிறிய நம்பிக்கை’ என்று அவர் கூறினார். ஆனால் இன்னும் அதிகமான உதவிகள் தெவைப்படும் என்று கூறினார்.

தொண்டு நிறுவனமான ஆக்ஸ்ஃபாம் இந்த நடவடிக்கையை வரவேற்றிருக்கும் அதேவேளை வெகுவாக பதிக்கப்பட்டிருகும் காஸா, ‘ஒரு நாளைக்கு ஒரு சில டிரக்குகளை அனுப்புவது மட்டுமே போதுமானதாக இல்லை’ என்று கூறியிருக்கிறது.

இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அரசியல்வாதியான பாதுகாப்பு அமைச்சர், இதமார் பென் க்விர்

‘கைதிகளை விடுவிக்காத வரை காஸாவுக்கு உதவிகள் அனுப்பக் கூடாது’

இந்நிலையில், இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அரசியல்வாதியான பாதுகாப்பு அமைச்சர், இதமார் பென் க்விர், “ஹமாஸ், தன் பிடியில் இருக்கும் அனைத்துப் பணயக் கைதிகளையும் விடுவிக்கச் சம்மதிக்கும் வரை காஸாவிற்குத் தொடர்ந்து உதவிகள் அனுப்பக் கூடாது” என்று கூறியுள்ளார்.

ஞாயிறன்று மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற14 டிரக்குகளின் காஸாவில் நுழைய அனுமதிக்கப்பட்ட செய்தியைத் தொடர்ந்து, X சமூக ஊடகத்தில் பென்-க்விர் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

கடத்தப்பட்ட அனைவரையும் விடுவிப்பதை உறுதிசெய்யாமல் காஸாவுக்குத் தொடர்ச்சியாக உதவிகள் அனுப்புவதுதான் இந்தப் பிரச்னைகள் இவ்வளவு பெரிதாகக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘கடத்தப்பட்ட அனைவரையும் விடுவிப்பதற்கு ஈடாக மட்டுமே மனிதாபிமான உதவிகள்,’ என்று அவர் பதிவிட்டிருக்கிறார்.

அடுத்த இரண்டு நாட்களில், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்ட மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோரின் இஸ்ரேலுக்குப் பயணம் செய்வர்

இஸ்ரேலுக்குச் செல்லவுள்ள நெதர்லாந்து, ஃபிரான்ஸ் தலைவர்கள்

அடுத்த இரண்டு நாட்களில், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்ட மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோரின் இஸ்ரேலுக்குப் பயணம் செய்வர் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இரு தலைவர்களும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் வந்து அவரைச் சந்திப்பார்கள் என்று அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நெதன்யாகு இன்று இரு ஐரோப்பிய தலைவர்களுடனும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸுடனும் பேசினார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷேல்ஸ் ஆகியோர் இஸ்ரேலுக்குப் பயணங்கள் மேற்கொண்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version