இலங்கை அணியின் ஆழமான நம்பிக்கையுடன் கூடிய போராட்டம், பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும், ஃபீல்டிங்கிலும் வெளிப்படுத்திய ஒழுக்கம் ஆகியவைதான் நடப்பு சாம்பியனுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற வழிவகுத்துள்ளது.

பெங்களூரு சின்னசாமி அரங்கில் இன்று நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி தோற்கடித்தது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 33.2 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 157 ரன்கள் என்னும் எளிய இலக்கைத் துரத்திய இலங்கை அணி, 25.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து 148 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியைத் தொடர்ந்து 5வது முறையாக இலங்கை அணி தோற்கடித்துள்ளது. இந்த உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணி தொடர்ந்து 3வது தோல்வியைச் சந்தித்துள்ளது.

மிகக் குறைந்த ஸ்கோர்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இதுவரை ஒரு அணி சேர்த்த மிகக் குறைந்தபட்ச ஸ்கோர் இங்கிலாந்து சேர்த்த 156 ரன்கள்தான். 1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 168 ரன்கள் சேர்த்ததுதான் குறைந்தபட்சம். அதன்பின், 24 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்திருக்கிறது.

இந்த வெற்றியால் இலங்கை அணி 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்து அணியை அதிக பந்துகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதால், இலங்கையின் நிகர ரன்ரேட்டிலும் முன்னேற்றம் ஏற்பட்டு மைனஸ் 0.205 ஆகக் குறைந்துவிட்டது. அடுத்த இரு போட்டிகளில் இலங்கை அணி வென்றால், புள்ளிப்பட்டியலில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் எனத் தெரிகிறது.

அதேநேரம் இலங்கை அணி அடுத்து வரும் 4 ஆட்டங்களிலும் வென்றால் அரையிறுதிக்குச் செல்லவும் வாய்ப்புள்ளது.

‘நிகர ரன்ரேட் உயர்ந்திருப்பது மகிழ்ச்சி’

வெற்றிக்குப் பின் இலங்கை அணியின் கேப்டன் குஷால் மென்டிஸ் கூறுகையில், “நிகர ரன்ரேட் உயர்ந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் சில ஓவர்கள் நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம். அதையே தொடர்ந்தோம்.

ஒவ்வொருவரும் சிறப்பாக விளையாடினார்கள்.இன்னும் எங்களுக்கு 4 போட்டிகள் மீதமுள்ளன, அடுத்து வரும் போட்டிகளிலும் இதேபோன்று ஆட்டத்தை வெளிப்படுத்துவோம், அரையிறுதிக்குள் செல்ல முயல்வோம்.

குமாரா அவரின் பங்கு என்ன என்பது தெரிந்து செயல்பட்டார். எங்களின் பந்துவீச்சு இன்று கட்டுக்கோப்பாக இருந்தது. மாத்யூஸ் அனுபவசாலி, அவரின் உதவி நடுப்பகுதியில் முக்கியமாக இருந்தது. ஃபீல்டிங்கும் சிறப்பாக இருந்தது, அடுத்தடுத்த போட்டிகளிலும் இதுவே தொடர வேண்டும் என்று விரும்புகிறோம்,” எனத் தெரிவித்தார்

பூமியை கண்காணித்துக் கொண்டிருக்கும் ஏலியன்கள்: கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் கூறும் வழி

இங்கிலாந்துக்கு அரையிறுதி கதவு அடைப்பா?

கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்று கிராமத்தில் சொலவடை சொல்வார்கள். அதுபோல நடப்பு சாம்பியன் இங்கிலாந்தின் நிலைமை இப்படியா ஆக வேண்டும் என்று கேட்கத் தோன்றுகிறது. இங்கிலாந்து அணி 5 போட்டிகளில் ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன், 9வது இடத்துக்கு சரிந்துவிட்டது.

இங்கிலாந்துக்கு இனிமேல் 4 போட்டிகள் மட்டுமே இருக்கும் நிலையில் அனைத்து ஆட்டங்களிலும் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்று ரன்ரேட்டை உயர்த்தினாலும் அரையிறுதி வாய்ப்பு கிடைக்காது.

அவ்வாறு 10 புள்ளிகள் பெற்று அரையிறுதி வாய்ப்பு கிடைப்பது மற்ற அணிகளின் முடிவைப் பொறுத்து இருக்கிறது. ஏறக்குறைய இங்கிலாந்தின் அரையிறுதி கனவு கலைந்துவிட்டது.

உலகிற்கே கிரிக்கெட் கற்றுக் கொடுத்த நாடு இங்கிலாந்து, உலகக் கோப்பையில் சறுக்கி மோசமான இடத்தை அடைந்துள்ளது. இதுவரை 5 போட்டிகளில் இங்கிலாந்து பங்கேற்று அனைத்திலும் ஆல்-அவுட் ஆன ஒரே அணியாக தனித்து நிற்கிறது.
இலங்கையால் சரிந்த பாகிஸ்தான்

புள்ளிப் பட்டியலில் இலங்கை அணி 5வது இடத்துக்கு நகர்ந்துவிட்டதால், 5வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் 6வது இடத்துக்குச் சரிந்துள்ளது.

இலங்கை அணியின் வெற்றிக்கு கட்டுக்கோப்பான பந்துவீச்சு, ஃபீல்டிங், நழுவவிடாத கேட்சுகள், நம்பிக்கையளிக்கும் பேட்டிங் ஆகியவைதான் காரணம். குறிப்பாக நம்பிக்கையை இழக்காமல் இலங்கை அணி இந்த ஆட்டத்தில் பங்கேற்றதற்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்க வேண்டும்.

இலங்கை அணியின் முக்கியப் பந்துவீச்சாளர்கள், சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில் அனுபவம் குறைந்த வீரர்களை வைத்துக்கொண்டு ஒவ்வொரு தோல்வியிலும் கிடைக்கும் அனுபவத்தின் மூலம் வெற்றியைப் பெற்றுள்ளது.

குறைந்த ஸ்கோராக இருந்தாலும், அதிக விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்பதற்காக, இலங்கை பேட்டர்கள் பதும் நிசங்கா(77), சமரவிக்ரமா(65) ஆடிய விதம் அற்புதமானது.

இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். மூனனாவது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து, 137 ரன்கள் சேர்த்து வெற்றிக்குக் காரணமாக அமைந்தனர்.

தொடக்கத்திலேயே பெரேரா, மென்டிஸ் விக்கெட்டை இழந்ததுதான் சற்று வருத்தமானது. இருவரும் நிலைத்திருந்தால், விக்கெட் இழப்பின்றி கூட இலங்கை வென்றிருக்க வாய்ப்பு இருந்தது.

இலங்கை அணி 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் ஆட்டம் இங்கிலாந்து பக்கம் சாயும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிசாங்கா, சதீரா இருவரின் துடிப்பான, நம்பிக்கை தரும் பேட்டிங், கடிவாளத்தை இங்கிலாந்திடம் செல்லாமல் இறுகப் பிடித்தனர்.

 

வெற்றிக்கு அடித்தளமிட்ட பந்துவீச்சாளர்கள்

இலங்கை பந்துவீச்சாளர்கள் அமைத்துக் கொடுத்த படிக்கட்டில் ஏறி, சதாரா, நிசாங்கா சேர்ந்து அணியை வெற்றி பெற வைத்தனர். பந்துவீச்சில் இலங்கை வீரர்கள் தீக்சனா, குமாரா, ரஜிதா மூவரும் கட்டுக்கோப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். ஆட்டநாயகன் விருது 3 விக்கெட் வீழ்த்திய லஹிரு குமாராவுக்கு வழங்கப்பட்டது.

மாத்யூஸ் 18 மாதங்களுக்குப் பின் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியும், 5 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்ளிட்ட 14 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். பந்துவீச்சாளர்களின் ஒழுக்கம், லைன் லென்த்தில் பந்து வீசியது , நெருக்கடி தரும் பந்துவீச்சு ஆகியவை இங்கிலாந்தை திணறவிட்டது, இலங்கை பேட்டர்களின் பணியை எளிதாக்கியது.

இங்கிலாந்து அணியில் திறமையான பேட்டர்கள், அதிரடியான பேட்டர்கள், ஆல்ரவுண்டர்கள் இருந்தபோதிலும் 33.2 ஓவர்களில் ஆல்அவுட் ஆனது அதிர்ச்சிக்குரியது. இன்னும் விளையாடாமல் 100 பந்துகள் வரை மீதமிருக்கும் நிலையில் பேட்டர்களின் மனநிலை மீதுதான் மிகப்பெரிய கேள்வி எழுகிறது.

பேட்டர்களான பேர்ஸ்டோ, டேவிட் மலான், பட்லர், ஜோ ரூட் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆல்ரவுண்டர்கள் என்று ஹைப் வைக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் ஆகியோரும் ஏமாற்றம் அளித்தனர்.

இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தார்களா அல்லது பேட்டர்களிடம் தன்னம்பிக்கை குறைந்து, மனரீதியாக பலவீனமடைந்து விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.

மன வேதனை தரும் தோல்வி

இந்தத் தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் கூறுகையில், “இந்த உலகக்கோப்பைத் தொடர் கடினமாகவும், மிகுந்த வேதனை அளிப்பதாகவும் இருக்கிறது. எனக்கு தனிப்பட்ட முறையில் மன உளைச்சலையும், வீரர்கள் அனைவரும் தங்களால் பங்களிப்பை அளிக்க முடியாத நிலையிலும் உள்ளனர்.

ஏன் இப்படி எங்களுக்கு நடக்கிறது என்பது குறித்து தெளிவான காரணம் புரியவில்லை, பதில் இல்லை. நிச்சயமாக எங்களன் முயற்சியில் எந்தத் தவறும் இல்லை, நீண்டகாலமாக இடைவிடாமல் கிரிக்கெட்டை சிறப்பாக ஆடி வருகிறோம்.

கேப்டன் சிறப்பாக ஆட வேண்டும், முன்னோக்கி அணியை எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். நம்பிக்கை வற்றிக்கொண்டே வருகிறது. எங்களிடம் அனுபவம் வாய்ந்த நம்பிக்கை மிகுந்த வீரர்கள் இருக்கிறார்கள். ஒருநாள் இரவில் மோசமான வீரராக மாறிவிட முடியாது, மோசமான அணியாக மாறிவிடவும் முடியாது.

மனச்சோர்வு

மிகப்பெரிய மனச்சோர்வில் சிக்கியிருக்கிறோம் என்று நினைக்கிறேன், இந்தத் தோல்விக்கு யாரையும் விரல்நீட்டி குற்றம் கூற முடியாது. வீரர்கள் தேர்வு இந்த நேரத்தில் பிரச்னையில்லை, திறமையும் செயல்பாடும்தான் தேவை.

நாங்கள் அடிப்படையான விஷயங்களை சரியாகச் செய்யவில்லை என்று நினைக்கிறேன். அடுத்துவரும் போட்டிகளில் என்ன நடந்தாலும், எங்களை முன்னோக்கிக் கொண்டு செல்ல விளையாடுவோம்,” எனத் தெரிவித்தார்.

இங்கிலாந்து அணி 85 ரன்கள் வரை 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், அடுத்த 70 ரன்களை சேர்ப்பதற்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது. அதிலும் குறிப்பாக 122 ரன்களில் இருந்து 155 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி பறிகொடுத்தது.

இங்கிலாந்து அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட்(3), கேப்டன் பட்லர்(8), லிவிங்ஸ்டோன்(1), மொயின் அலி(15), கிறிஸ் வோக்ஸ்(0) என ஏமாற்றம் அளித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version