காஸா மீதான தாக்குல்களை நிறுத்த வேண்டும், இல்லை என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தாங்கள் தள்ளப்படுவோம் என இரான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேலுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே, ஐ.நா.விடம் இரான் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது.

இரானுக்கும் அதன் குடிமக்களின் நலன்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வரையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும் இடையே நடக்கும் மோதலில் தலையிட மாட்டோம் எனக் கூறியது.

அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் திடீரென இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலின் சில பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மக்களை பணயக் கைதிகளாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பிடித்துச் சென்றனர். மக்களை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றதில் இரானின் பங்கு குறித்து கேள்விகள் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் காஸா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதலில், இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இரானின் துணையுடன் தான் இஸ்ரேல் மீது இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்தியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஆனால், அதனை இரான் முற்றிலுமாக நிராகரித்தது. அத்துடன், ஹமாஸ் ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதல்களில் இரானின் பங்கு இருப்பதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என மேற்கத்திய நாடுகள் தெரிவித்தன.

 

இருப்பினும், இரு தரப்பினருக்குமான இந்த மோதலில், இரான் ஆரம்பத்திலிருந்தே, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மற்றும் பாலத்தீனர்களுக்கு வெளிப்படையாக தனது ஆதரவைத் தெரிவித்து வருகிறது. இதனால், மோசமான விளைவுகளை சந்திக்கக் கூடும் என்றும் இஸ்ரேலை எச்சரித்து வருகிறது.

இதற்கிடையில், இஸ்ரேலின் ஹைஃபா மாநகரின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்போவதாக ஈரானின் பாதுகாப்பு படைகளில் ஒன்றான இரானின் ராணுவத் துணை தளபதி இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்தார்.

இரானின் அரசு செய்தி சேவை நிறுவனமான பிரஸ் டிவி.யில் ஒளிபரப்பான செய்தியின்படி, காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தால், முஸ்லிம்களை யாராலும் தடுக்க முடியாது என இரானின் அதி உயர் தலைவர் (Supreme Leader) ஆயத்துல்லா அலி காமனெயி கூறியுள்ளார்.

இப்படி, தொடர்ந்து இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல்களையும், எச்சரிக்கையும் கொடுத்து வரும் இரானால் உண்மையில் இஸ்ரேலுடன் போரிடுவதற்கான திறன் உள்ளதா என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது.

 

இரான் தன்னிடம் அணு ஆயுதங்களை வைத்திருக்கக்கூடாது என்றும் இஸ்ரேல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இஸ்ரேலுடன் இரானால் போர் செய்ய முடியுமா?

ஈரானில் 1979 ஆம் ஆண்டில் நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சி, மேற்கு நாடுகளுக்கு சவால் விடும் வகையிலான ஒரு தலைமையை அதிகாரத்திற்கு கொண்டு வந்தது. அப்போதிலிருந்து, ஈரானின் தலைவர்கள், இஸ்ரேலை அழிப்பது தொடர்பாக தொடர்ந்து பேசி வருகின்றனர்.

அதேபோல, இஸ்ரேல் இருப்பதை இரானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தொடர்ச்சியாக முஸ்லிம்களின் நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமிக்கிறது என்பதும் இரானின் குற்றச்சாட்டு.

இஸ்ரேலும் இரானை ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கிறது. இரான் தன்னிடம் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்றும் இஸ்ரேல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இரானும் இஸ்ரேலும் எந்த வகையிலும் தங்கள் நாட்டின் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், இரு நாட்டினரிடமும் இந்த பதற்றமும் மோதல் போக்கும் தொடர்ந்து இருந்து வருகிறது.

இரானும் இஸ்ரேலும் நேரடியாக புவியியல் ரீதியாக இணைக்கப்படவில்லை என்றாலும், இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்துள்ள லெபனான், சிரியா, பாலத்தீனம் உள்ளிட்ட நாடுகளுக்கு இரானின் ஆதரவு இருக்கிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்திய பிறகு, ஏமன், லெபனான் மற்றும் இராக் ஆகிய நாடுகளில் இருந்தும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடந்தது. இதற்குக் காரணம் இரான் தான் என்கிறது இஸ்ரேல். தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, இரான்தான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தூண்டியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது

இரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி

இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியப் பிறகு, இரான் வெளிப்படையாக ஹமாஸ் ஆயுதக் குழுவினரை ஆதரித்தது. ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர், இராக், லெபனான் மற்றும் கத்தார் நாடுகளுக்குச் சென்று அங்குள்ள உயர் அதிகாரிகளையும், தலைவர்களையும் சந்தித்துள்ளார்.

ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாகவே இரானிடம் தெரிவித்துள்ளதாக மேற்கு நாடுகளில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் தாக்குதலுக்கு பின்னணியில் நேரடியாக இரானுக்கு தொடர்பு இல்லை என்றாலும், ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு பயிற்சி அளிப்பது, ஆயுதம் வழங்குவது உள்ளிட்டவையை செய்து, இரான் தனது ஆதரவை அளித்துள்ளது என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

ஆனால், இரானின் இந்த ஆதரவு, ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடக்கும் தாக்குதல்களின் நேரடியாக வெளிப்படுமா?

இந்தக் கேள்விக்கு, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்கு ஆசிய விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் அஷ்வினி மஹாபத்ரா பதிலளித்தார்.

அப்போது அவர், “முன்பை விட இரான் தற்போது தொழில்நுட்பத் துறையில் வளர்ந்துள்ளது. அவர்கள் மேம்பட்ட ட்ரோன்கள் மற்றும் நீண்ட தூரம் ஏவக்கூடிய ஏவுகணைகளை வைத்துள்ளனர். இஸ்ரேலால் இவற்றை எதிர்கொள்ள முடியும் என்றாலும், இஸ்ரேல் இந்த மோதலை தவிர்க்க விரும்புகிறது.

இஸ்ரேலிடமும் ஆயுதங்கள் உள்ளன. அதற்கு அமெரிக்காவின் ஆதரவும் உள்ளது. எங்கு போர் நடந்தாலும், இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது தங்குதடையற்ற ஆதரவை வழங்கும். இது இஸ்ரேலுக்கு ஒரு சாதகமான சூழ்நிலை. இந்நிலையில், இஸ்ரேலுடன் இரான் நேரடிப் போரில் ஈடுபடும் என நான் நினைக்கவில்லை,” என்றார்.

இதே வாதத்தைத் தான் ஜாமிய மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் நெல்சன் மண்டேலா மையத்தில் பணியாற்றும் உதவிப்பேராசிரியர் பிரமானந்த் மிரஸ்ராவும் முன்வைக்கிறார்.

“இரான் நிச்சயமாக நேரடியாகப் போரில் ஈடுபடாது. ஏனென்றால், இஸ்ரேலுக்கு எப்போதும் அமெரிக்கா ஆதரவாக உள்ளது. அதனால், ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளுடன் போரிடும் திறன் இரானுக்கு இல்லை,” என்றார் பிரமானந்த்.

‘ஈரானைவிட ஹமாஸூம் ஹெஸ்புலாவும் தான் இஸ்ரேலுக்கான அச்சுறுத்தல்’

இஸ்ரேலைக் குறிவைக்கும் ஆயுதக்குழுக்களுக்கு இரான் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது

இரானுக்கும் இஸ்ரேலுக்கும் நீண்ட காலமாக மறைமுகப் போர் நடந்து வருகிறது. இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தாக்குதல்களை நடத்திக்கொண்டாலும், இதுவரை இரண்டு நாடுகளும் நேரடியான முழு நேரப் போரை தவிர்த்து வருகின்றனர்.

இஸ்ரேலைக் குறிவைக்கும் ஆயுதக்குழுக்களுக்கு இரான் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. காஸாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், லெபனானில் உள்ள ஹெஸ்புலா ஆயுதக்குழுவினருக்கும் இரான் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. இந்த இரண்டு ஆயுதக்குழுக்களும் எப்போதும் இஸ்ரேலுக்கு எதிராக இரானுடன் இருக்கின்றன.

அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய பிறகு, லெபனானில் உள்ள ஹெஸ்புலா ஆயுதக்குழுவும் லெபனான் எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதில், ஹெஸ்புலா தலையிட வேண்டும் என இஸ்ரேலும் எச்சரித்தது.

அதேபோல, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு இடையேயான மோதலில் அமெரிக்கா நேரடியாக தலையிட்டால், ஹமாஸ் ஆயுதக்குழுவினருடன் இணைந்து தாங்களும் போரிடுவோம் என ஏமனில் உள்ள ஹுதி ஆயுதக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்த ஹவுதி ஆயுதக்குழுவினரும் இரானின் ஆதரவு பெற்றவர்கள்.

ஹமாஸ் ஆயுதக்குழுவைப்போலவே, ஹெஸ்புலா ஆயுதக்குழுவினரையும் பிரிட்டன் மற்றும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளனர்.

இடையில், 2021 ஆம் ஆண்டு சில மாதங்களுக்கு ஹுதி குழுவினரை பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து அமெரிக்கா நீக்கியிருந்தது. ஆனால், அதே ஆண்டில் சில அசம்பாவித சம்பவங்களால், ஹுதி குழுவினரை மீண்டும் பயங்கரவாதிகள் பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது.

இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் மற்றும் ஹெஸ்புலா குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த இரண்டு ஆயுதக்குழுவினரும் ஈரானின் பிரதிநிதிகளாகக் கருதப்படுகின்றனர்.

இந்தக் குழுக்கள் குறித்து பேசிய அஷ்வினி மொஹபத்ரா,”மேற்கு ஆசியாவில் இரானின் செல்வாக்கு அதிகரிப்பதை அமெரிக்காவும் இஸ்ரேலும் விரும்பவில்லை. அதனால் தான், அமெரிக்கா இரானை ஓரங்கட்ட நினைக்கிறது. ஆனால், இதனை விரும்பாத இரான், தனது நட்பு சக்திகளான ஆயுதக்குழுக்களுக்கு தனது ஆதரவை வழங்கி வருகிறது,” என்றார்.

மேலும், இரானை விடவும், ஹெஸ்புலா போன்ற ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இதுகுறித்து பேசிய அஸ்வினி மொஹபத்ரா, ​​”கடந்த ஐந்து ஆண்டுகளில் இரான் நேரடிப் போரை நடத்தாமல் ஹெஸ்புலா உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் மூலமாக தனது நோக்கத்தை நிறைவேற்றி வருகிறது.

இஸ்ரேலுக்கு, இந்த ஆயுதக்குழுக்கள், இரானை விட ஆபத்தானவையாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளன. இந்த நெருக்கடி அடுத்தடுத்த நாட்களில் அதிகரிக்கும்,”என்றார்.

 

ஹமாஸ்-இஸ்ரேல் போர் இரானுக்கு கிடைத்த வெற்றியா?

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய பிறகு, இது இரானுக்கு கிடைத்த வெற்றியாக சில ஆய்வாளர்கள் கருதினர்.

இந்தத் தாக்குதலால், பாலத்தீன விவகாரம் மீண்டும் சர்வதேச அரங்கில் பேசு பொருளாக மாறியதாக நினைத்தனர். மேலும், பாலத்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என் இரான் வலியுறுத்தி வருவதால், இந்தத் தாக்குதலை தனக்கு சாதகமாக இரான் பயன்படுத்திக்கொள்ளும் என்றும் ஆய்வாளர்கள் கருதினர்.

பாலத்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை செளதி அரேபியாவும் முன்மொழிந்துள்ளது.

சமீபகாலங்களில், இஸ்ரேலுக்கு செளதி அரேபியாவிற்கும் இடையிலான உறவு சமூகமாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால், ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலுக்கும் செளதி அரேபியாவிற்கும் இடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய அஸ்வினி மொஹபத்ரா,”2011 ஆம் ஆண்டில் அரபு நாடுகளில், அரசாஙங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடங்கியபோது, அங்கு தனது செல்வாக்கை செல்வாக்கை செலுத்தும் வாய்ப்பு ஈரானுக்கு கிடைத்தது. அந்தப் போராட்டத்தில் இரான், ஒரு பிரிவினரை ஆதரித்தது.

அதேபோல், சிரியாவில் நடந்த உள்நாட்டுப்போரின்போதும், அது தனது ஆதரவு அமைப்பான ஹெஸ்புலாவை அனுப்பியது. அங்கிருந்த பஷர்-அல்-ஆதாத் அரசை ஹெஸ்புலா காப்பாற்றியது. தற்போது, ஹெஸ்புலா லெபனானில் ஒரு மிகப்பெரிய சக்தியாக மாறியுள்ளது.

“தற்போது ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஆதரவளித்து வரும் இரான், முன்னதாக பாலத்தீன விடுதலை அமைப்புக்கு (பிஎல்ஓ) தனது ஆதரவை அளித்து வந்தது.

பாலத்தீன விடுதலை அமைப்பு எழுப்பிய கோரிக்கைகளை தற்போது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எழுப்பி வருகின்றனர். இவை அனைத்தும் இரான் நாட்டிற்கு ஒரு பலமாக இருந்தது. இருப்பினும், சுன்னி முஸ்லிம்கள் அதிகம் கொண்ட அரபு நாடுகள் ஷியா முஸ்லிம்கள் அதிகம் உள்ள ஈரானை எப்போதும் தலைவராக ஏற்காது,” என்றார்.

மேலும், எந்தவொரு ஆதிக்க சக்தியும் எந்த நாட்டிற்கு சென்றும் நேரடியாகச் சென்று சண்டையிடுவதில்லை எனக் கூறினார் அஸ்வினி,

“அமெரிக்காவா நேரடியாக உக்ரேனுக்குச் சென்று சண்டையிட்டது. அவர்கள் ஆயுதங்கள் உள்ளிட்ட பிற உதவிகளை தங்களின் நட்பு நாட்டிற்கு கொடுத்து, ஆதரவளிப்பார்கள்,” என்றார் அஸ்வினி.

இவற்றைத் தவிர, இரானில் உள்ள உள்நாட்டு அரசியல் சூழலும் இரானை நேரடியாக போரில் நுழைவதற்கு அனுமதிக்காது என்றும் அஸ்வினி கருதுகிறார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version