இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (வலது), ஜெருசலேமில் பேச்சுவார்த்தை நடத்தும் முன், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை வரவேற்கிறார். Tuesday, Oct. 24, 2023.
செவ்வாயன்று, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இஸ்ரேலுக்கு விஜயம் செய்து, காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலிய அரசு நடத்தி வரும் இனப்படுகொலைப் போருக்கு பகிரங்கமாக தனது ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.
அத்துடன், நெதன்யாகுவுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த மக்ரோன், நெதன்யாகுவின் அரசாங்கத்திற்கு பிரெஞ்சு இராணுவ ஆதரவின் வெளிப்படையாக உறுதிமொழியை வழங்கினார்.
நெதன்யாகுவுடன் மூடிய கதவுக்கு பின்னால் நடந்த பேச்சுகளுக்குப் பின்பு, இந்த இரத்தக்களரி தாக்குதலுக்கு தனது “ஒற்றுமை மற்றும் நட்பை” உறுதியளிக்க மக்ரோன் கேமராக்கள் முன் வந்தார்.
மத்திய கிழக்கில் ஒரு பாரிய போர் விரிவாக்கத்தில் பிரான்ஸ் மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளை ஈடுபடுத்த மக்ரோன் அழைப்பு விடுத்தார்.
“ஈராக் மற்றும் சிரியாவில் எங்கள் நடவடிக்கைகளுக்கு நாங்கள் பயன்படுத்திய இஸ்லாமிய அரசுக்கு எதிரான சர்வதேச கூட்டணி ஹமாஸை எதிர்த்துப் போராட வேண்டும்” என்று அவர் முன்மொழிந்தார்.
காஸாவில் மட்டுமல்ல, மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள அனைத்து முக்கிய ஏகாதிபத்திய நேட்டோ சக்திகளின் கூட்டணியால் நடத்தப்படும் ஒரு நவகாலனித்துவப் போரைத்தான் மக்ரோன் முன்மொழிந்தார். அமெரிக்கா, ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, துருக்கி, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளன.
2003-2011 அமெரிக்க தலைமையிலான ஈராக் ஆக்கிரமிப்பின் போது அமைக்கப்பட்ட புதிய காலனித்துவ ஈராக்கிய கைப்பாவை ஆட்சியைப் பாதுகாப்பதற்காக, சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான நேட்டோவின் போரின் பின்னணியில் நகரங்கள், பொதுமக்கள் இலக்குகள் மற்றும் இஸ்லாமிய அரசு (IS) ஆயுதப் பிரிவுகள் மீது இந்தக் கூட்டணி நாடுகள் குண்டுவீசித் தாக்கின.
மக்ரோனின் முற்றிலும் பொறுப்பற்ற கருத்துக்கள், மத்திய கிழக்கு முழுவதும் நேட்டோ ஒரு முழு அளவிலான போரில் இணைந்துகொள்ளும் என்ற வாக்குறுதியை ஒத்துள்ளது.
நேட்டோ ஏற்கனவே உக்ரேனில் ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ள நிலையில், இது ஒருபுறம் நேட்டோ கூட்டணிக்கும் மறுபுறம் ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவுக்கும் இடையே உலக அளவிலான, நேரடி இராணுவ மோதலை விரைவில் தூண்டலாம்.
மேலும் எல்லையின் இருபுறமும் உள்ள கிராமங்களில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஹெஸ்பொல்லா “முழுமையாக தயாராக” உள்ளது என்றும் அதைத் தடுக்க இரண்டு விமானம் தாங்கி கப்பல்களில் போர் அணிகளை பிராந்தியத்திற்கு அனுப்பிய அமெரிக்க அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களை அனுமதிக்க மாட்டோம் என்றும், அதன் இரண்டாவது கட்டளைத் தளபதி நைம் காசிம் கூறினார்.
ரஷ்ய மற்றும் ஈரானிய இராணுவப் படைகள் நிலைகொண்டிருக்கும் சிரியாவில் உள்ள இலக்குகள் மீது IDF வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.
கடந்த வாரம், காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரைத் தொடர்ந்து விரிவுபடுத்துவது மத்திய கிழக்கு நாடுகளை போருக்குள் நுழையத் தூண்டும் என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார்.
“[இஸ்ரேலிய] சியோனிச ஆட்சியின் குற்றங்கள் தொடர்ந்தால், முஸ்லீம்களும் எதிர்ப்பு சக்திகளும் பொறுமையிழந்து விடுவார்கள், அவர்களை யாராலும் தடுக்க முடியாது… காஸா மீதான குண்டுவீச்சு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.
நேற்று ஐக்கிய நாடுகள் சபையில், ஹமாஸுக்கு ஆதரவாகவுள்ள ஈரானிய இராணுவ நடவடிக்கைக்கு எதிராக, அமெரிக்கப் படைகள் “விரைவாகவும் தீர்க்கமாகவும்” தலையிடும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளின்கன் உறுதியளித்தார்.
செனட்டர் லிண்ட்சே கிரஹாம் உட்பட அமெரிக்க அதிகாரிகள் ஈரானின் எண்ணெய் தொழில்துறைக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தப்போவதாக அச்சுறுத்தியுள்ளனர்.
இது ரஷ்யா மற்றும் சீனாவுடன் நேட்டோ மோதலின் சாத்தியத்தை நேரடியாக எழுப்புகிறது, இவை 2021 இல் ஈரானுடன் பரஸ்பர இராணுவ உதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இப்போது சீனாவிற்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவின் முக்கிய ஆதாரமாக ஈரான் உள்ளது.
மக்ரோனுடனான செய்தியாளர் சந்திப்பின் போது, “ஹமாஸ், ஈரான் மற்றும் ஹூதிகள்” மற்றும் ஹெஸ்பொல்லாவை உள்ளடக்கிய “தீய அச்சுக்கு” எதிராக போரை நடத்தப்போவதாக நெதன்யாகு மிரட்டினார்.
காஸா மீது இஸ்ரேலிய படைகளின் தரைவழி ஆக்கிரமிப்புக்கு எதிராக தலையிட்டால் “பயங்கரமான விளைவுகள்” இருக்கும் என்றும் “ஹெஸ்பொல்லாவிற்கு எதிரான பேரழிவு கற்பனை செய்ய முடியாதது” என்றும் கூறிய அவர்,
மக்ரோன் அரசாங்கமும் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளும் ஒட்டுமொத்தமாக மத்திய கிழக்கின் மக்களுக்கு எதிராக கூட்டுத் தண்டனையின் இனப்படுகொலை முறைகளால் நடத்தப்படும் போரை ஆதரிக்கின்றன.
ஈராக்கிற்கு எதிரான முதல் வளைகுடாப் போர் மற்றும் 1991ல் சோவியத் யூனியனின் ஸ்ராலினிசக் கலைப்புக்குப் பின்னர், இப்பிராந்தியத்தில் நேட்டோ சக்திகளால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டுவரும் நவகாலனித்துவப் போர்களின் இறுதி விளைவு இதுவாகும்.
நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளால் நடத்தப்படும் இடைவிடாத ஆக்கிரமிப்பு யுத்தம், 20 ஆம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகு, உலகை ஒரு மூன்றாம் உலகப் போருக்குள் தள்ளுகிறது.
பயங்கரவாதத்திற்கு எதிரான ஜனநாயகத்திற்கான போராக மத்திய கிழக்கு முழுவதும் இராணுவ விரிவாக்கத்திற்கு தனது அரசாங்கம் மற்றும் நேட்டோ கூட்டணியின் ஆதரவை முன்வைக்கிறது என்று மக்ரோன் வெட்கமின்றி பொய் சொன்னார்.
அவர் மேலும், “போராட்டம் இரக்கமின்றி நடத்தப்பட வேண்டும், ஆனால் விதிகள் இல்லாமல் அல்ல. நாங்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரை நடத்தும் ஜனநாயக நாடுகள், போர் சட்டங்களை மதிக்கும் மற்றும் மனிதாபிமான அணுகலை உறுதி செய்யும் ஜனநாயக நாடுகள். நாங்கள் காஸாவிலோ அல்லது வேறு எங்கிலும் பொதுமக்களை குறிவைக்காத ஜனநாயக நாடுகள்” என்று தெரிவித்தார்.
காஸாவிற்கு எதிராக “இராணுவ மற்றும் அசாத்தியமான பதிலடிக்கு” வாதிடும் போது, “பாலஸ்தீனிய மக்களுக்கு ஒரு பிரதேசத்தையும் அரசையும்” வழங்குவதற்காக “பாலஸ்தீனியர்களுடன் ஒரு தீர்க்கமான அரசியல் செயல்முறையை மீண்டும் தொடங்க வேண்டும்” என்று மக்ரோன் கூறினார்.
உண்மையில், காஸாவிலுள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் பெருமளவில் பாதுகாப்பற்று வாழும் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் போரையும், மனிதகுலத்திற்கு எதிராக தொடர்ச்சியான குற்றங்களில் ஈடுபட்டுவரும் இஸ்ரேலிய இராணுவத்தையும் மக்ரோன் பாராட்டுகின்றார்.
2007 ஆம் ஆண்டு முதல், காஸா மீது முற்றுகையிட்டிருக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்ற ஐ.நா தீர்ப்புகளையும் மீறி, மோதலின் முதல் இரண்டு வாரங்களில் இஸ்ரேல், அந்த பகுதிக்கு தண்ணீர், உணவு மற்றும் எரிபொருள் விநியோகத்தை தடுத்து வைத்துள்ளது. கடந்த வாரம் அரபு அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேலிய குண்டுவீச்சு, நூற்றுக்கணக்கான பொதுமக்களின் உயிர்களை பலி வாங்கியது, காசாவிற்கு எதிரான போரின் காட்டுமிராண்டித்தனமான தன்மையை இது வெளிப்படுத்துகிறது.
நேற்று, உலக சுகாதார அமைப்பு (WHO) காசாவின் 72 சுகாதார வசதிகளில், மூன்றில் இரண்டு பங்கு, அதன் 35 மருத்துவமனைகளில் 12 உட்பட, மின்சாரம் இல்லாததால் பராமரிப்பை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக அறிவித்தது. இன்குபேட்டர்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், குறைமாதக் குழந்தைகள் இறக்கக்கூடிய மருத்துவமனைகள் உட்பட, மீதமுள்ள பெரும்பாலான மருத்துவ வசதிகளில் அதிகபட்சம் ஒரு நாள் மின்சாரம் மட்டுமே பாக்கி இருக்கிறது.
இந்த யதார்த்தத்தை சுருக்கமாக ஒப்புக்கொண்ட மக்ரோன், “மருத்துவமனைகளில் மின்சார விநியோகத்தை மீண்டும் நிறுவுவது மற்றும், அதனை போரை நடத்துவதற்குப் பயன்படுத்த முடியாது என்பது பற்றி தானும் நெதன்யாகுவும் நீண்ட நேரம் பேசியதாகக்” கூறினார்.
எவ்வாறாயினும், இதுபோன்ற அறிக்கைகள், பிரெஞ்சு அரசாங்கம் நெதன்யாகுவை ஆதரிப்பதால், அது பொதுமக்களுக்கு எதிராக ஒரு போரை நடத்துகிறது மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்கிறது என்பதை முழுமையாக அறிந்திருக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறது.
இஸ்ரேலிய இராணுவம் போர்ச் சட்டங்களை மதிக்கிறது மற்றும் காசாவிற்கு மனிதாபிமான அணுகலை வழங்குகிறது என்று மக்ரோன் வலியுறுத்துகையில், அவர் உண்மையில் பிரெஞ்சு மக்களுக்கும் முழு உலகத்திற்கும் வேண்டுமென்றே பொய் சொல்கிறார்.
காசாவின் 1.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு சட்டவிரோதமான உத்தரவை பிறப்பித்த நெதன்யாகுவை ஆதரிப்பதன் மூலம், இஸ்ரேல்-பாலஸ்தீன சமாதானத்தை தான் தேடுவதாக மக்ரோனின் கூற்று அபத்தமானது.
உண்மையில், 20 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவின் பாசிச அரசாங்கங்கள் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய இனப்படுகொலை மற்றும் இனச் சுத்திகரிப்பு முறைகள் மூலம் பாலஸ்தீனியப் பிரச்சினையை “தீர்க்கும்” முயற்சியை மக்ரோன் பாதுகாக்கிறார்.
இது, காஸா போருக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதும் எதிர்ப்பு அலையை தூண்டியுள்ளது.
காஸாவிற்கு எதிரான கொடூரமான தாக்குதலை நிறுத்துவதற்கும், மூன்றாம் உலகப் போரை நோக்கி ஏகாதிபத்திய சக்திகளின் கீழ்நோக்கிய சுழலைத் தவிர்ப்பதற்கும், ஏகாதிபத்தியப் போர் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட வேண்டும்.
இதில், “பணக்காரர்களின் ஜனாதிபதி” என்று பரவலாக வெறுக்கப்படும் ஒரு வங்கியாளரான மக்ரோனுடன் அரசியல் சமரசங்கள் எதுவும் இருக்க முடியாது.
இந்த வசந்த காலத்தில் அவரது பெரும் செல்வாக்கற்ற ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்களைத் தாக்குவதற்கு தனது கலகத் தடுப்புப் பொலிஸை அனுப்பியதன் மூலம் அவர் வெளிப்படுத்திக் காட்டியதின்படி, மக்ரோன் அரசாங்கம் மக்களுக்கு எதிராக வெளிப்படையாகவும் உணர்வுபூர்வமாகவும் ஆட்சி செய்கிறது.
சமூக செல்வத்தை போர் செலவினங்களுக்கு தொடர்ந்தும் திசை திருப்புவதை நிறுத்துவற்கும், பேரழிவு தரும் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், தொழிலாள வர்க்கத்தில் மக்ரோனது அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு ஒரு இயக்கத்தை கட்டியெழுப்புவதைத் தவிர வேறு வழியில்லை.
மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.