ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மைக்கு சவால் ஏற்படுத்தும் வகையில் வியாபித்துள்ளது.
அமைச்சரவையில் ஏற்படுத்தப்பட்ட சில மறுசீரமைப்புகளின் பின்னர் இந்த பிளவுகள் மிகவும் தீவிரமாக வெளிப்பட தொடங்கியுள்ளது.
தேர்தலை இலக்காக கொண்டு ஆளும் கட்சியின் உள்ளக கொந்தளிப்புகள் தீவிரமடைந்தாலும், அதற்கு முன்னர் அதாவது வரும் நவம்பர் மாத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட உள்ள 2024 வரவு – செலவு திட்டத்தில் தாக்கம் செலுத்துமா என்ற அச்சமும் ஐயமும் ஜனாதிபதிக்கும் அவரை சார்ந்துள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தேசிய அரசியலில் கடந்வாரம் முழுவதும் ஆளும் கட்சியின் உள்ளக கொந்தளிப்புகளை சார்ந்து வெளிப்படையாக காணப்பட்ட கருத்து மோதல்களை அவதானிக்க முடிந்தது. நாங்கள் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மையை இழந்து தெருவுக்கு வந்து விடும் என்ற எச்சரிக்கையை பொதுஜன பெரமுனவின் அதிருப்தி குழுவினரால் உருவாக்கபட்டுள்ள புதிய அரசியல் கூட்டணியினர் விடுத்துள்ளனர்.
சீனாவில் இடம்பெற்ற ‘ஒரு பாதை ஒரு மண்டலம்’ முன்முயற்சி திட்டத்தின் சரவதேச ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பிய ஜனாதிபதி, சனிக்கிழமை (28) இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனத்தில் கலந்துகொண்டிருந்தார்.
கறுப்பு நிற மேலங்கியுடன் ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனத்துக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நோக்கி, இந்த மேலங்கி மிகவும் சிறப்பாக உள்ளது.
சம்மேளனத்திற்கும் தேசிய அரசியலுக்கும் உகந்த அடையாளமாக உள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியின் ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே அமைப்பாளர் சட்டத்தரணி தினேஷ் விதானபதிரண கூறினார்.
அனைத்து விடயங்களிலும் ஜனாதிபதி புத்தாக்கத்தை வெளிப்படுத்துகின்றார் என்று பாலித ரங்கே பண்டார கூறுகையில். எதற்கும் பதிலளிக்காது வழமையான அரசியல் புன்னகையுடன் பிரதான மேடையை நோக்கி ஜனாதிபதி சென்றார்.
அமைச்சரவை மறுசீரமைப்பு
மறுநாள் ஓய்வு தினம் என்றாலும் மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அன்றைய தினம் பிற்பகல் தனது அலுவலகத்திற்கு சென்று அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து தீர்மானங்களை எடுத்திருந்தார்.
நீண்ட காலமாக அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து ஜனாதிபதி தீர்மானித்திருந்தாலும், சுகாதார அமைச்சு பதவியை பொறுப்பேற்க வைத்தியர் ரமேஷ் பத்திரண மறுத்திருந்தமையினால் இழுபறி நிலை ஏற்பட்டது.
இருப்பினும் நாட்டில் சுகாதார அமைச்சு மற்றும் துறை தொடர்பில மக்கள் மத்தியில் ஏற்பட்ட சஞ்சலங்களினால் மீண்டுமொரு முறை சுகாதார அமைச்சை பொறுப்பேற்குமாறு ரமேஷ் பத்திரணவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையினை அவர் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து அமைச்சரவையை மறுசீரமைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை எந்தெந்த அமைச்சுக்கு, எந்தெந்த விடயதாணங்கள் என்று தீர்மானிக்கபட்ட நிலையில் திங்கட்கிழமை காலை பதவிப்பிரமானம் இடம்பெற்றது.
அமைச்சரவை கூட்டம்
அன்றைய தினம் மாலை அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றது. இதில் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட நிதியுதவியை பெற்றுக் கொள்ளுதல் மற்றும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள சீன ஆய்வு கப்பல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான முதலாவது மீளாய்வின் போது இரண்டாவது நிதியுதவியை விடுப்பதற்கான ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதை நாணய நிதியம் காலம் கடத்தியமை குறித்து ஜனாதிபதி அமைச்சரவையில் தெளிவுப்படுத்தினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனத்தில் கூறியது போன்று பாராளுமன்ற வரவு – செலவு திட்ட அலுவலக சட்டமூலம் மற்றும் 2023 இலக்கம் 9 ஊழல் ஒழிப்பு சட்டமூலம் ஆகிய இரண்டையும் அமைச்சரவை ஜனாதிபதி சமர்பித்தார்.
ஜனாதிபதி சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுவாகவே ஒவ்வொரு வியாழக்கிழமையும் நிதியமைச்சில், அமைச்சர்கள், நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகள் ஆகியோருடன் நாட்டின் பொருளாதார நிதி நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவது வழக்கம். கடந்த வியாழக்கிழமையும் அங்கு சென்றிருந்த ஜனாதிபதி பல்வேறு விடயங்கள் குறித்த கலந்துரையாடினார்.
வெற்றிகரமான சீன விஜயம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான முன்னெடுப்புகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அங்கிருந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் பாராட்டுக்களை இதன் போது தெரிவித்தனர்.
இரண்டாம் தவணையை இலங்கைக்கு வழங்க வேண்டாம் என்று எதிர்க்கட்சியுடன் தொடர்புடைய ஆய்வு நிறுவனம் ஒன்று சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜனாதிபதியை நோக்கி கூறினார்.
ஆம். அந்த நிறுவனத்தின் பிரதாணிக்கு, அரசியலமைப்பு பேரவைக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்ற தேவை உள்ளது. அதனால் தான் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு உட்பட நாட்டின் ஏனைய ஆணைக்குழுக்களுக்கு அதிகாரிகளை நியமிக்கும் போது, அதற்கு ஆலோசனை வழங்க குழு ஒன்றை வழங்க சர்வதேச நாணய நிதியம் எம்மிடம் கோரிக்கை விடுத்தது.
ஆனால் அரசியலமைப்பு பேரவைக்கு மேலாக மற்றுமொரு குழுவை நியமிக்க ஜனாதிபதி விரும்ப வில்லை. அமைச்சர் செஹான் சேமசிங்கவும் இதே நிலைப்பாட்டில் இருந்து தான் கருத்துக்களை கூறினார் என்று நீண்ட விளக்கத்தை இதன் போது சாகல ரத்நாயக்க அனைவருக்கும் இதன் போது வழங்கினார்.
எவ்வாறாயினும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு உட்பட ஏனைய ஆணைக்குழுக்களுக்கு அதிகாரிகளை நியமிக்கும் போது அவர்களின் தகுதிகள் மற்றும் செயல்பட வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய சட்டவரைபு உள்ளமையை தெளிவுப்படுத்தினோம். அதனை சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக் கொண்டது என்று அமைச்சர் செஹான் சேமசிங்க கூறினார்.
அமைசசரவை மறுசீரமைப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அவர்களிடம் கேட்டு அமைச்சரவையை ஜனாதிபதி மறுசீரமைக்க வில்லை என்பதே குற்றச்சாட்டாக உள்ளது என்று அரசாங்க தகவல் தினைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக வேறு ஒரு விடயத்தை கலந்துரையாடலுக்குள் கொண்டு வந்தார்.
சில தீர்மானங்களை எடுக்க ஜனாதிபதி யாரிடமும் அனுமதி கோர வேண்டியதில்லை. அரசியலமைப்பில் அதற்கான அதிகாரங்கள் உள்ளன.
இதற்கு முன்னிருந்த ஜனாதிபதிகளும் அவ்வாறே செயல்பட்டனர். அதனால் கடந்த காலங்களில் ஜனாதிபதிக்கு எதிராக வீதியில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஏனெனில் அரசாங்கத்தில் யார் எந்த தீர்மானம் எடுத்தாலும் அதற்கு ஜனாதிபதியே பொறுப்புக்கூற வேண்டும் என்று வஜிர அபேவர்தன கூறினார்.
பொதுஜன பெரமுனவின் இளம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதியுடன் இணைந்து செயல்படுவது சிலருக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்தியிருக்கலாம் என்று ஆசு மாரசிங்க இதன் போது தெரிவித்தார்.
மத்திய கிழக்கு மோதல்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ‘உலகம் இரு தரப்புகளாக பிளவுப்படப் போகிறது. இது பொருளாதாரத்திற்கு சிறந்ததல்ல.
எரிபொருள் விலையேற்றம் ஏற்படலாம். இவற்றை எதிர்கொள்ள திட்டங்கள் வகுக்க வேண்டும்’ என்று கூறியதும், ‘சேர், வரவு – செலவு திட்டத்தில் என்ன உள்ளது’ என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கேள்வியெழுப்பினார்.
இதற்கு மறுமொழியளித்த ஜனாதிபதி, ‘இதைத்தான் வரவு – செலவுத் திட்ட இரகசியம் என்று கூறுவது’ எனவும் ‘இரகசியத்தை கூற முடியாது’ என்றும் புன்னகையுடன் கலந்துரையாடலை நிறைவு செய்து ஜனாதிபதி வெளியேறினார்.
புதிய அரசியல் கூட்டணி
ஆளும் கடசிக்குள் உருவெடுத்துள்ள புதிய அரசியல் கூட்டணியினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் ரீதியில் பிளவுக் கண்டுள்ளது. இருதரப்பும் வெவ்வேறு கோணங்களில் நின்று அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. கடந்த வாரத்தில் இதன் தாக்கத்தை பொதுஜன பெரமுனவின் உள்ளக அரசியல் கொந்தளிப்புகளில் உணர முடிந்தது.
வியாழக்கிழமை சந்திப்பு
இவ்வாறானதொரு நிலையில், புதிய அரசியல் கூட்டணி முக்கிய செயல்பாட்டளர்கள் எதிர்கால அரசியல் திட்டங்கள் மற்றும் அமைச்சரவையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்து கலந்துரையாடும் வகையில் கடந்த வியாழக்கிழமை சந்தித்திருந்தனர்.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினை மஹிந்த அமரவீரவுக்கு வழங்கியமைக்கு பொதுஜன பெரமுனவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். ஒவ்வொரு சந்திதியிலும் நின்று மஹிந்த அமரவீரவுக்கு எதிராக கருத்து கூறுகின்றனர் என்று சந்திப்பில் கலந்துக் கொண்ட அமைச்சர் நளின் பெர்னாண்டோ கூறினார்.
உண்மை தான். இவர்களுக்கு என்ன நடந்துள்ள என்று தெரியவில்லை. பெருந்தோட்ட கைத்தொழில் என்ற விடயதாணத்தை விவசாய அமைச்சின் கீழ் கொண்டு வராது, வேறு எந்த அமைச்சுக்கு வழங்குவது. அதனை விமர்சிக்கும் பொதுஜன பெரமுனவினருக்கு மூலையில் சுகவீனம் ஏற்பட்டுள்ளதையே உணர முடிகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.
அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரனை கொண்டு வந்த சந்தர்ப்பத்தில் கெஹேலியவை சுகாதார அமைச்சில் இருந்து நீக்கியிருக்கலாம். ஐக்கிய மக்கள் சக்திக்கு தேவைப்பட்ட விடயத்தையே தற்போது ஜனாதிபதி செய்துள்ளதாக சிலர் கூறுவதாக துமிந்த திசாநாயக்க இதன் போது தெரிவித்தார்.
ஆம். இந்த விடயத்தை ஊடகங்கள் சிலவும் என்னிடம் கேட்டன. நம்பிக்கையில்லா பிரேரனையை பயன்படுத்தி ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக சதித்திட்டம் தீட்டியமையாலேயே அதனை நாங்கம் தோல்வியடைய செய்தோம் என்ற விடயத்தை என்னிடம் கேட்ட ஊடகங்கள் உள்ளிட்ட பலருக்கும் தெளிவுப்படுத்தியதாக லசந்த அழகியவண்ண கூறினார்.
புதிய அரசியல் கூட்டணியில் உள்ள எமக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் பொதுஜன பெரமுனவில் உள்ளவர்கள் தெரிவிப்பார்கள். தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் ஆட்டங்களுக்கு குறைவிருக்காது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கையில் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டு தலையசைத்தனர்.
பொதுஜன பெரமுனவுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் தான் அவர்கள் எமக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்க பிரதான காரணம்.
பாராளுமன்றத்தை விட்டு செல்ல அவர்கள் தயாரில்லை. ஒவ்வொரு நாளும் ஊடக சந்திப்புகளை நடத்தி பொய் பிரசாரங்களை முன்னெடுக்க இயலாது.
எமது புதிய கூட்டணி ஆதரவு வழங்காது என்று எதிர்க்கட்சியில் நாங்கள் சென்று அமர்ந்தால் மொத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கவிழ்ந்து விடும் என்று எதிர்கால அரசியல் சமிக்கையை வெளிப்படுத்தும் வகையில் நிமல் லான்சா கூற அனைவரும் சிறு புன்னகையுடன் அதனை ஆமோதித்தனர்.
அமைச்சு பதவிகள் எவ்வாறு கையளிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஊடகங்கள் ஊடாக நாமல் ராஜபக்ஷ பாடம் எடுப்பதை கண்டு வியந்து போனேன் என்று லசந்த அழகியவண்ண பெரும் சிரிப்பொலியுடன் கூறினார்.
சிறிதுளியேனும் வெட்கம் இல்லாதவர்கள். ராஜபக்ஷ வம்சத்தின் அரசியல் தோல்விகளுக்கு இவர்கள் தான் காரணமென்று நளின் பெர்னாண்டோ சற்று கோபத்துடன் இதன் போது கூறினார்.
உண்மை தான். லொக்குகே மற்றும் ரோஹித போன்றவர்களை நீக்கி அன்று பல அமைச்சர்களை ‘ராஜபக்ஷ சித்தப்பர் ‘ வெளியில் தள்ளினார்.
அன்று பூனையை போன்று தான் நாமல் ராஜபக்ஷ இருந்தார். ஆனால் இன்று அமைச்சு பதவிகள் குறித்து பேசுகின்றார். முடிந்தால் அரசாங்கத்தை விட்டு வெளியேறி காட்டட்டும் பார்க்கலாம். ஒருவர் கூட வெளியேற மாட்டார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா மற்றுமொரு விடயத்தையும் போட்டுடைத்தார்.
மில்கோ நிறுவன மோதல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளரும் மில்கோ நிறுவனத்தின் தலைவருமான ரேனுக பெரேராவுடன் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த வாரத்தில் சம்பள கொடுப்பணவு தொடர்பில் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.
ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவை சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் ரேனுக பெரேராவை சந்தித்து கலந்துரையாட சென்ற போது ஏற்பட்ட முரண்பாட்டினை தொடர்ந்து பொலிசாரை அழைத்து ஊழியர்களை கைது செய்ய அறிவிக்கப்பட்டது.
இதில் முக்கிய விடயம் யாதெனில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க தலைவரான ரம்புக்வெல்ல என்பவரையும் ஏனைய ஊழியர்களையுமே பொலிசார் கைத செய்துள்ளனர்.
இந்த செயல்பாடு காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க ஊழியர்கள் கடும் அதிருப்தியில் இருந்த நிலையில், கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் இருந்து புதிய அரசியல் கூட்டணிக்கு ஆதரவு வழங்கும் தொழிற்சங்க தலைவரான அசங்க ஸ்ரீநாத்வுடன் தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு கலந்துரையாடியுள்ளனர்.
‘அசங்க… எம்மை ரேனுக காட்டிக்கொடுத்து விட்டார். சுமார் 40 ஊழியர்கள் கைது செய்யப்பட்டு கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் உள்ளனர். முடிந்தால் ஏதாவது செய்யவும் என்ற தகவலை கைது செய்யப்பட்ட பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க தலைவரான ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.’
உடனடியாக இந்த தகவல் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா மற்றும் ராஜகிரிய அலுவலனத்தின் முக்கியஸ்தர் சிறிபால அமரசிங்க ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் கைதில் உள்ளவர்களுக்கு பினை ஏற்பாடுகள் மற்றும் ஏனைய சட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
லியோ நிரோஷ தர்ஷன்)