தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் (?) – திருகோணமலை மாவட்ட தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தர் ஐயா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்று நேர்காணல் ஒன்றில் சுமந்திரன் கருத்து கூறியிருக்கிறார்.

தமிழரசின் மற்றொரு சக நாடாளுமன்ற உறுப்பினராக எம்.ஏ. சுமந்திரனின் இந்த கருத்து தமிழ்த்தேசிய அரசியல் வட்டாரத்திலும், தமிழரசின் உள் வீட்டிலும் வாதப் பிரதி வாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு தரப்பினர் இதைச் சொன்ன சுமந்திரனுக்கு இதைச் சொல்வதற்கான தகுதியும், அருகதையும் உண்டா? அதற்கான அதிகாரம் அவருக்கு உண்டா என்று கேட்கிறார்கள்.

சம்பந்தரின் தலைமைத்துவம், ஆளுமை, முதுமை, அனுபவம் இவற்றிற்கு சுமந்திரன் மதிப்பும், மரியாதையும் கொடுக்காது தலைவரை அவமானப்படுத்தி விட்டார் என்று பேசுகிறார்கள். கொழும்பு சுமந்திரனை தேசியப் பட்டியல் ஊடாக அரசியலுக்கு அறிமுகம் செய்த ஐயாவுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று பேசுகிறார்கள்.

தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், கொழும்பு கிளையின் தலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா இன்னும் ஒரு படி மேலே ஏறி “வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது” என்று சம்பந்தருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

தமிழ்த்தேசிய அரசியலில் இராசதுரை -காசி ஆனந்தன் முதல் அமிர்தலிங்கம் -பிரபாகரன் வரை தவராசாவின் இந்த வார்த்தைகள் நன்கு பழக்கப்பட்டவை.

சுமந்திரனின் இந்தக் கருத்து 1977 தேர்தலுக்கு முன்னர் மட்டக்களப்பு கல்லடி பாலத்து இறக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் “இராசு அண்ணர் ஒதுங்கி இருந்து எம்மை ஆசீர்வதிக்க வேண்டும்” என்று கூறியதற்கு சமமானதாகும்.

அப்போது அரசியலில் பழமும் தின்று கொட்டையும் போட்ட சொல்லின் செல்வர் இராசதுரை அளித்த பதில் இது ” நானும் தம்பி காசி ஆனந்தனும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்”. இதே போன்று “என்னை அறிந்து, என் முதுமை தெரிந்து எனக்கு வாக்களித்தவர்கள் திருகோணமலை மாவட்ட மக்கள் அதை அவர்களே தீர்மானிக்கவேண்டும்” என்று அரசியல் மாணவனுக்கு வகுப்பு எடுத்திருக்கிறார் தமிழரசின் மூத்த தலைமை வாத்தியார்.

மறு தரப்பினரோ சுமந்திரன் கூறியதில் என்ன தவறு இருக்கிறது. சம்பந்தர் நாடாளுமன்றத்தில் இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன திருகோணமலை வெறுமையாகத்தான் இருக்கிறது. முதுமை காரணமாக செயற்பாட்டு அரசியலுக்கும், இயங்குநிலை அரசியலுக்கும் எந்தப் பங்களிப்பையும் வழங்க அவரின் முதுமை தடையாக இருக்கிறது. சுயமாக நிலைமைகளை ஆராயவும், முடிவுகளை எடுக்கவும் இயலாமையின் கட்டத்தில் அவர் இருக்கிறார் பதவி விலகத்தான் வேண்டும் என்று பேசுகிறார்கள்.

இதற்கிடையில் தமிழரசின் மூத்த உறுப்பினர் சி.வி.கே.சிவஞானம் இன்னொரு நேர்காணலில் இது விடயத்தில் சரியும் -பிழையும், பிழையும் – சரியும் என்று பேசியதுடன் தமிழரசின் உள்வீட்டு விவகாரங்களை தேசியப்பட்டியல் நியமனம், செயலாளர் நியமனம் போன்றவற்றுடன் சந்திக்கு கொண்டு வந்துள்ளார்.

நேர்காணலில் சி.வி.கே. சிவஞானம் பயன்படுத்திய ஒரு வாக்கியம்: “யாழ்ப்பாண மண்ணில் வாழாத இரண்டொரு பேர் எங்களுக்கு பாடம் எடுக்கிறார்கள்” என்பதாகும். இந்த இரண்டொரு பேர் சுமந்திரனும், சாணக்கியனுமா….?

யுத்தத்திற்கு பின்னரான தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகள் குறித்த பலரும் ஈவிரக்கமற்ற விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

இவற்றில் சம்பந்தர் ஐயாவின் முதுமை, சுமந்திரனின் தனித்து ஓடல், முன்னுக்கு பின் முரணான கொள்கையற்ற அரசியல், சம்பந்தரின் இயலாமையைப் பயன்படுத்தி தவறான

அரசியல் முடிவுகளை எடுத்து செயற்படல்…… போன்ற பல விடயங்களை  குறித்தும் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக பேசிவருகின்றனர்.

இவற்றை கே.வி. தவராசாவும் பல தடவைகளில் சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழரசுக்கட்சி சம்பந்தரின் திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் அல்ல, ஒட்டு மொத்த வடக்கு -கிழக்கிலும் இரண்டாக பிளவுபட்டு கிடக்கிறது.

கட்சி மீதான அதிருப்தி அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இருந்த சுமந்திரன் – மாவை அணியை, இச்சர்ச்சை மேலும் ஆழமாக்கி தவராசா, சிவஞானம் போன்றவர்களையும் சுமந்திரனுக்கு எதிரான நிலைப்பாட்டில் கொண்டு நிறுத்தியுள்ளது.

வே.வி. தவராசா
இந்த விடயத்தில் சுமந்திரன் – தவராசா இருவருக்கும் இடையிலான பழைய தனிநபர் அரசியல் போட்டி முரண்பாடும் கூர்மைப்படுத்தப்பட்டுள்ளது.

2020 நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டிருந்தது.

அப்போது சுமந்திரன் இரு பெண்கள் உள்ளிட்ட ஒரு வேட்பாளர் பட்டியலை களமிறக்க திட்டமிட்டிருந்தார். அவர் “நோட்டம்” விட்டதில் அந்தப் பட்டியலில் கே.வி.தவராசாவை தவிர்ப்பது தமிழரசுக்கட்சிக்கும் சுமந்திரனுக்கும் இலகுவாக இருக்கவாய்ப்பில்லை.

தவராசா வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவர் வெற்றி பெறுவது உறுதி, அது நடந்தால் தனது ஆளுமைக்கு அது போட்டியாக அமையும் என்பதால் சுமந்திரன் மற்றொரு “பொறிமுறையை” வகுத்தார். கொழும்பில் போட்டியிடுவதில்லை என்று ஐயாவுக்கு குழையடித்தார்- சாதித்தார்.

அதுதான் மனோகணேசனுக்கு எதிராக தமிழரசு வேட்பாளரை நிறுத்தாது அவரை ஆதரிப்பது என்ற முடிவு. இதன் மூலம் கொழும்பு வாழ் யாழ்ப்பாண தமிழர்களின் வாக்குகளை மனோகணேசனுக்கு அளித்து அவருக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிப்பது. இதில் இருந்து தொடங்கியது சுமந்திரனுக்கும், தவராசாவுக்குமான உளவியல் போர்.

இதனால் சுமந்திரன் தன்னால் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த பெண்கள் இருவரில் ஒருவரை யாழ்ப்பாணத்திலும், மற்றையவரை மட்டக்களப்பிலும் களமிறக்க முனைந்தார். இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் குறித்து எதிர்ப்பு யாழ்ப்பாணத்திலும், மட்டக்கள்ப்பிலும் அதிகரித்ததால் அதுவும் கைகூடவில்லை.

கடந்த காலங்களில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள், சட்டத்திருத்தங்கள் குறித்து தவராசாவின் பார்வை சுமந்திரனின் சுயநல அரசியல் பார்வையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கான திருத்தும், அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள், ஜனாதிபதி தேர்வில் தளம் அழகப்பெருமாவை ஆதரித்தது,

உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழரசு தனித்து போட்டியிடும் என்ற சுமந்திரனின் பொறிமுறை ஆகியவற்றில் தவராசாவுக்கு உடன்பாடிருக்கவில்லை. ஆனால் தவராசாவின் நிலையோ எறிகின்றவன் கையில் பொல் இல்லாத நிலை.

இதுவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உடைவதற்கு காரணமானது. ரெலோவையும், புளட்டையும் கூட்டமைப்பில் இருந்து துரத்தும் திட்டமிட்ட சதி.

இப்போது தமிழரசுக்கட்சியின் எதிர்காலம் குறித்து அதிகம் கவலை கொண்டவர்களாக மாவை சேனாதிராஜா, சி.வி.கே. சிவஞானம், கே.வி. தவராசா போன்றவர்களே இருக்கிறார்கள்.

சுமந்திரன் கட்சியை விடவும் தன்னை முதன்மை படுத்துகின்றார், என்பதுடன் சம்பந்தர் ஐயாவை வெளியேற்றி விட்டால் …. அடுத்து மாவை…. தவராசாவை தட்டுவதும் சுமந்திரனுக்கு வில்லங்கமான காரியம் அல்ல. எல்லாமே அடுத்து வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலை நோக்கிய தேர்தல் பதவி அரசியலே அன்றி தமிழ்த்தேசியம் நோக்கியவை அல்ல.

இதே தேர்தல் குறி தவராசாவின் காய் நகர்த்தலின் பின்னணியிலும் உள்ளது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவதற்கானது. அதேவேளை அதை எவ்வாறு தடுப்பது என்பதே சுமந்திரனின் நகர்வு.

சம்பந்தர் ஐயா எம்.பி. யாகவும், கட்சியின் மூத்தவராகவும் இருக்கும் வரையும், மாவை சேனாதிராஜா, சி.வி.கே. சிவஞானம் ஆகியோரின் ஆதரவுடன் தவராசாவின் வேட்பாளர் நியமனத்தை தடுப்பது கஷ்டமானது.

இதனால் சம்பந்தரை வீட்டுக்கு அனுப்பி விட்டு அடுத்த தேர்தலுக்கான தனது வியூகங்களை வகுக்க ஆரம்பித்துள்ளார் சுமந்திரன்.

இவ்வியூகத்தின் முதல் பலி சம்பந்தர் என்றால் அடுத்தது மாவை. இரண்டு பேரையும் தள்ளி விட்டால் வழியில் குறுக்கே கிடந்த இரண்டு பாறாங்கற்களை அகற்றியதற்கு சரி. அதற்கான நெம்புகோலை கையில் எடுத்திருக்கிறார் சுமந்திரன்.

1970 களின் இறுதியில் இருந்து சட்டக்கல்லூரி மாணவ காலம் முதல் கொழும்பு தமிழ் இளைஞர் பேரவையில் இயங்கியவர் தவராசா.

ஒப்பீட்டளவில் சுமந்திரனைவிடவும் அரசியல் கைதிகளின் விடுதலையில் தனது மறைந்த துணைவியார் கௌரிசங்கரியுடன் இணைந்து செயற்பட்டவர்.

கடந்த தேர்தலில் ஒரு இலட்சம் வாக்குகளுக்கு கனவு கண்டு அதில் அரைவாசியில் தேறிய சுமந்திரனுக்கு நிட்சயமாக கே.வி.தவராசாவின் நாடாளுமன்ற வேட்பாளர் அரசியல் பிரவேசம் பெரும் சவாலாக அமையும்.

சுமந்திரனின் அரசியல் ஆதரவு யாழ்ப்பாணத்தில் கடந்த தேர்தல் காலத்தையும் விடவும் குறைவடைந்துள்ளதாகவே கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் தவராசா களமிறங்கினால் யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு வாய்ப்பான விருப்பத்தெரிவை அது வழங்கும் . இதுவே சம்பந்தர் ஐயா விவகாரத்தில் இருவரும் மோதிக்கொள்வதற்கான தனிநபர்கள் நலன் சார்ந்த காரணம்.

சம்பந்தர் பதவியில் இருப்பது தவராசாவுக்கும், மாலைக்குள் நன்மை. சம்பந்தர் பதவி விலகினால் சுமந்திரனுக்கு அடித்த அதிஷ்டம்.

மறுபக்கத்தில் சம்பந்தர் பதவி விலக வேண்டும் என்ற சுமந்திரனின் கோரிக்கையில் உள்ள நியாயத்தன்மையை தட்டிக்கழிக்கவும் முடியாது.

நியாயமற்றது என்று ஆடுபவர்கள் வெறுமனே அவரின் அரசியல் முதிர்ச்சி, அனுபவம், முதுமை என்பனவற்றை அடவு வைத்து ஆடுகின்றனர்.

ஆனால் இவற்றில் ஏதாவது ஒன்றையாவது இந்த நாடாளுமன்ற காலத்தில் சம்பந்தர் தமிழ்மக்களின் நலன் சார்ந்து கையாளவில்லை – பயன்படுத்தவில்லை.

அப்படியானால் அந்த முதிர்ச்சியும், அனுபவமும், முதுமையும் இருந்து என்ன பயன். தமிழர் கலாச்சார பண்பாட்டில் முதுமைக்கு கனம் பண்ணவேண்டும் என்பதற்காக தமிழர் அரசியலை “கோமாவில்” விட்டு விடமுடியுமா?

தமிழரசுக்கட்சி பழம்பெருமையை மட்டும் பேசும் ஒன்றாக இருக்கிறது. பல புதிய சிறிய கட்சிகளுடன் ஒப்பிடுகையில் செயற்றிறனும், இயங்கு சக்தியும் அற்ற பலவீனமான ஒன்று.

கட்சி ஒன்றுக்கு அவசியமான உறுப்புரிமை அதிகரிப்பு, சமூக, பொருளாதார, அரசியல் செயற்பாட்டுக்குழுக்கள், கட்சிமாநாடு, யாப்புமுறையிலான ஒழுங்கான செயற்பாடுகள்,

தேசிய, பிராந்திய, சர்வதேச- இராஜதந்திர அணுமுறைகளில் 2009 க்கு பின்னர் அது தோல்வி அடைந்துள்ளது.

ஒரு குக்கிராமத்தின் கோயில் நிர்வாக கட்டமைப்பபில் உள்ள ஒழுங்கு கூட இங்கு இல்லை. இல்லையேல் பல ஆண்டுகளாக செயலாளர் ஒருவர் தெரிவு செய்யப்படாமல், பேச்சாளராக ஒருவர் தீர்மானிக்கப்பட்டும் அவர் செயற்பட முடியாமல் ஒரு கட்சி இருக்க முடியுமா?

இதற்கும் ஒரு காரணம் உண்டு. செயலாளர் பதவி மட்டக்களப்பு க்கு வழங்கப்படவேண்டும் என்று சி.வி.கே. சிவஞானம் போன்றவர்கள் கோருகின்றனர்.

மட்டக்களப்பா ? அது எங்கணை கிடக்கு ? என்று கேட்பவர்கள் உள்ள மேலாண்மை – பிரதேசவாத கட்சியில் செயலாளரை தெரிவு செய்யும் துணிச்சல் எவருக்கும் இல்லை .

இது மட்டக்களப்புக்கான உரிமை என்று குரல் கொடுக்கவும் மட்டக்களப்பு தமிழரசார் தயாரில்லை. உரிமையை – பங்கை கேட்டால் “பிரதேச வாதம்” பேசுகிறார்கள் என்று முத்திரை குத்தினால் அடுத்ததேர்தலில் வேட்பாளர் நியமனம் என்னாவது? உரிமையை – பங்கை கேட்பது பிரதேசவாதம் என்றால் நியாயமான உரிமையை – பங்கை மறுப்பதும் பிரதேசவாதமும், மேலாதிக்கமும் கொண்ட கலவை.

இவை எல்லாவற்றிற்கும் பொறுப்பு சம்பந்தர் ஐயாவின் முதுமை -இயலாமை மட்டும் அல்ல, அந்த பலவீனத்தை தங்கள் சுயநல அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்வோம் என்ற நிலைப்பாடு உடையவர்களும்தான்.

தமிழரசுக்கட்சியின் இன்றைய தேவை பூரணத்துவமான மறுசீரமைப்பு. சம்பந்தர் ஐயா இராஜினாமாச் செய்வதால் மட்டும் அல்லது அவர் சாகும் வரை எம்.பி.யாக இருப்பதால் மட்டும் இதனை ஏற்படுத்த முடியாது.

தமிழரசுக்கட்சியின் பலவீனங்களை மூடி மறைத்தவர்கள், அது குறித்த சரியான விமர்சனங்களை காணத்தவறியவர்கள் – கருத்தில் கொள்ளாதவர்கள், கட்சிக் கொள்கைகளை மறந்து சந்தர்ப்பவாத அரசியலை செய்தவர்கள், அடைய முடியாத இலக்குகளை அடைவதற்கான வழிகளைக் கூறாது மக்களை ஏமாற்றுபவர்கள், மக்களை அரசியல் மயப்படுத்தாது வெறும் குறுந்தேசிய இனவாத,மதவாத அரசியல் செய்பவர்கள் தமிழரசுக்கட்சியை சாகடிக்கின்ற பொறுப்புக்குரியவர்கள். அவர்கள் விதைத்ததை அறுவடை செய்கிறார்கள்.

பல நாடுகளில் ஜனாதிபதி, பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர் எவராவது மக்கள் வழங்கிய ஆணையை -கடமையை செய்ய முடியாத உள, உடல் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தால், அல்லது முதுமை காரணமாக அந்த பொறுப்பை செயற்றிறனுடன் செய்யமுடியவில்லை என்றால் தானகவே பதவி விலகுவது அரசியல் நேர்மை.

அவ்வாறு குறிப்பிட்ட நபர் தானாக பதவி விலகாவிட்டால் பாராளுமன்றம் அல்லது சபாநாயகர் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பதவியில் இருந்து நீக்க முடியும்.

இதற்கு நடுநிலையான – பக்கச்சார்பற்ற உடல், உள வைத்திய நிபுணர்கள் குறிபிட்ட அரசியல்வாதி குறிப்பிட்ட காரணத்தினால் சிந்தித்து செயற்படுகின்ற ஆற்றலை இழந்து விட்டார் என்று உறுதிப்படுத்தவேண்டும்.

ஜனநாயக நாடு ஒன்றில் சுயசிந்தனை செயற்பாட்டை இழந்த ஒரு உறுப்பினர் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்கை கூட செல்லுபடியற்றதாக்க முடியும். இது குறித்த சட்ட ஏற்பாடுகளை அறியாதவர்களாக சட்டாம்பிகள் இருக்க நியாயமில்லை.

ஒட்டு மொத்தத்தில் தமிழரசுக்கட்சி ஒருவழிப்பாதையில் (ONEWAY)மட்டும் அல்ல , தொடர்ந்தும் பயணிக்க முடியாத (DEAD END) இலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

— அழகு குணசீலன் —

Share.
Leave A Reply

Exit mobile version