மதுஷனகா 5 விக்கெட் வீழ்த்தினாலும் கில், கோலி, ஸ்ரேயாஸ் அரை சதத்தால் 357 ரன்கள் சேர்த்த இந்தியா; 5 விக்கெட் வீழ்த்திய ஷமி; 55 ரன்களுக்குள் சுருண்ட இலங்கை; 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அசத்தல் வெற்றி

13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இன்று (வியாழக்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய 33வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற இலங்கை பவுலிங் – இந்தியா முதலில் பேட்டிங்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து, இந்தியா முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா – சுப்மன் கில் களமிறங்கிய நிலையில், டில்ஷான் மதுஷங்க வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை எதிகொண்ட கேப்டன் ரோகித் லெக் சைடில் பவுண்டரி விரட்டினார்.

ஆனால், மதுஷங்க வீசிய 2வது பந்து ரோகித்துக்கு பின்புறம் இருந்த ஆஃப் ஸ்டெம்பை மேலே தட்டித் தூக்கியது. இதனால், ரோகித் 4 ரன்னுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

பின்னர் சுப்மன் கில் உடன் ஜோடி விராட் கோலி சேர்ந்தார். இந்த ஜோடி தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் கோலி 50 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

இதேபோல், கில் 53 பந்துகளில் அரைசதம் அடித்தார். 92 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு களத்தில் சிறப்பாக இருந்த கில் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 92 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.

இதேபோல், அவருடன் சிறப்பான ஜோடியை அமைத்த கோலியும் சதம் அடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், 94 பந்துகளில் 11 பவுண்டரிகளை மட்டும் விரட்டி 88 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்ததாக கே.எல்.ராகுல் களமிறங்கினார். இந்திய அணி 33 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. மறுமுனையில் ஆடிய ஸ்ரேயாஸ் சிக்சரும் பவுண்டரிகளாக விளாசி ரன் சேர்த்தார். இதற்கிடையில் ராகுல் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் 12 ரன்களில் அவுட் ஆனார்.

அடுத்ததாக ஜடேஜா களமிறங்கிய நிலையில், சிறப்பாக ஆடி வந்த ஸ்ரேயாஸ் 36 பந்துகளில் அரை சதம் விளாசினார். இந்திய அணி 44 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் 56 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 6 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்து களமிறங்கிய ஷமி 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த பும்ரா 1 ரன் எடுத்திருந்த நிலையில், கடைசி பந்தில் ஜடேஜா 35 ரன்களில் அவுட் ஆனார்.

இதனையடுத்து இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை தரப்பில் மதுஷனகா 5 விக்கெட்களையும், சமீரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இலங்கை பேட்டிங்

இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக பதும் நிஸ்ஸங்க மற்றும் கருணரத்னே களமிறங்கினார். முதல் பந்திலே பும்ரா நிஸ்ஸங்கவை எல்.பி.டபுள்யூ ஆனார். அடுத்ததாக குசல் மெண்டிஸ் களமிறங்கிய நிலையில், கருணரத்னே தனது முதல் பந்தில் டக் அவுட் ஆனார். சிராஜ் அவரை எல்.பி.டபுள்யூ ஆக்கினார்.

அடுத்து களமிறங்கிய சமரவிக்ரம 4 பந்துகளைச் சந்தித்து, டக் அவுட் ஆனார். அவர் சிராஜ் பந்தில் ஸ்ரேயாஸிடம் கேட்ச் கொடுத்தார்.

இதனையடுத்து அசலங்கா களமிறங்கினார். மறுமுனையில் ஆடிய குசல் மெண்டிஸ் 10 பந்துகளில் 1 ரன் எடுத்து சிராஜ் பந்தில் போல்டானார். இதனால் இலங்கை அணி 5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 7 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

இதனையடுத்து மேத்யூஸ் களமிறங்கினார். அசலங்கா ஒருமுனையில் நங்கூரமிட்டு நிற்க, மேத்யூஸ் ஒற்றை ரன்களாக அடித்தார். 24 பந்துகளைச் சந்தித்த அசலங்கா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் ஷமி பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்தார்.

அடுத்த வந்த ஹேமந்தா மற்றும் சமீரா டக் அவுட் ஆகினர். இருவரும் ஷமி பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர்.

இதனையடுத்து மேத்யூஸ் உடன் தீக்‌ஷனா ஜோடி சேர்ந்தார். சிறிது நேரம் தாக்குபிடித்த மேத்யூஸ் 12 ரன்களில் ஷமி பந்தில் போல்டானார். இலங்கை அணி 13.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்ததாக ரஜிதா களமிறங்கினார். தீக்‌ஷனா – ரஜிதா ஜோடி 20 ரன்கள் சேர்த்தது. ரஜிதா 14 ரன்களில் அவுட் ஆனார்.

அடுத்து மதுஷனகா களமிறங்கி, 5 ரன்களில் அவுட் ஆக இலங்கை அணி தோல்வியை தழுவியது. தீக்‌ஷனா 12 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இலங்கை அணி 19.4 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது.

இதன் மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் ஷமி 5 விக்கெட்களையும், சிராஜ் 3 விக்கெட்களையும், பும்ரா மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இந்த வெற்றி மூலம் இந்தியா உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 7 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version