‘நமக்கு சொந்தமற்ற நாடுகளில் ஏன் அகதிகள் போல அலைய வேண்டும்? நமக்கு உறுதி செய்யப்பட்ட நிலத்தில், நமக்கான தேசத்தை உருவாக்க வேண்டும்’ என்று இஸ்ரேல் தேசம் குறித்து அவர்கள் சிந்திக்கத் தொடங்கியது அப்போதுதான்.
வரலாறு நெடுக இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால் ஏராளமான மோதல்கள் நிகழ்ந்து வந்திருக்கின்றன, இப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் மிகவும் பழைமையானதும் சிக்கலானதுமான மோதலே இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல். இதற்கு சுமார் 2,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு.
இஸ்ரேல், பாலஸ்தீனம் என்று இரண்டு பிரதேசங்களும் முக்கியமாகக் கருதுவது ஜெருசலேம் நகரை! உலகின் மிகப் பழைமையான நகர்களில் ஒன்றான ஜெருசலேம், ஆபிரகாமிய மதங்களான யூத மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதம் என மும்மதங்களாலும் புனித பூமியாகக் கருதப்படுகிறது.
பழைய ஜெருசலேமில் கோயில் மலை என்ற யூதர்களின் வழிபாட்டுப் பகுதி உள்ளது. இங்கிருக்கும் Dome of the Rock யூதர்களின் புண்ணியத்தலம். இதையொட்டி இருக்கும் மேற்குச் சுவர் எனப்படும் அழுகைச்சுவர், கி.மு காலத்தைய கட்டுமானம்.
பழைமையான யூத தேவாலயத்தின் எஞ்சிய பகுதியாக இது கருதப்படுகிறது. ‘நான் உங்களுடன் இருக்கிறேன்’ என்று தங்களுக்கு இறைவன் இந்த சுவர் வழியாக உணர்த்துவதாக யூதர்கள் நம்புகிறார்கள். இந்த சுவரில் சாய்ந்து அழுவதை ஒரு புனித யாத்திரை போல யூதர்கள் கருதுகிறார்கள்.
Dome of the Rock
இந்த மேற்குச்சுவரை ஒட்டியிருக்கிறது அல் அக்சா மசூதி. ஜெருசலேமின் மிகப் பழைமையான, மிகப்பெரிய மசூதி இது. இந்த மசூதி இருக்கும் மலைப்பகுதியிலிருந்துதான் நபிகள் நாயகம் விண்ணுலகிற்குச் சென்று வந்ததாக நம்பிக்கை. அதனால், இஸ்லாமியர்களுக்கு மெக்கா மற்றும் மதீனாவை அடுத்து மூன்றாவது முக்கியமான புனிதத்தலமாக இது இருக்கிறது.
ஜெருசலேமில் இருக்கும் Church of the Holy Sepulchre, உயிர்த்தெழுந்த தேவாலயம் எனப்படுகிறது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது, அவர் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தது ஆகிய நிகழ்வுகள் நடந்ததாக நம்பப்படும் பகுதிகள் இந்த தேவாலய வளாகத்தில் உள்ளன.
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் மிகவும் புனிதமாகக் கருதும் புண்ணியத்தலம் இது. கடந்த கி.பி நான்காம் நூற்றாண்டிலிருந்து இங்கு புனித யாத்திரை வருவதை கிறிஸ்தவர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
Church of the Holy Sepulchre
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஜெருசலேம், அதைச் சுற்றியிருக்கும் நிலப்பரப்பு ஆகியவற்றுக்காக மோதல் தொடர்வதில் வியப்பில்லை.
இஸ்ரேலின் ஆதிகுடிகளாக இருந்தவர்கள் யூதர்கள். ஆனால், தொடர்ச்சியாக அசிரியன் பேரரசு, பாபிலோனியப் பேரரசு மற்றும் ரோமப் பேரரசுடன் நடந்த போர்கள் அவர்களை சின்னாபின்னமாக்கின.
பலர் கட்டாயமாக நாடு கடத்தப்பட்டனர், பலர் மத்திய தரைக்கடலைத் தாண்டிச் சென்று பல்வேறு பகுதிகளில் குடியேறினர். மத்தியக் கிழக்கு ஆசியாவிலும் ஐரோப்பா முழுக்கவும் இப்படி யூதக் குடியேற்றம் நிகழ்ந்தது. காலப்போக்கில் அந்தப் பிரதேசம் பாலஸ்தீனமாக மாறியது.
பல்வேறு நாடுகளில் குடியேறிய யூதர்கள், அங்கெல்லாம் பொருளாதாரரீதியாகவும் அரசியல் வட்டாரத்திலும் செல்வாக்கு செலுத்தினர்.
அவர்களுக்கான நெருக்கடிக் காலம், இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லர் வடிவில் வந்தது.
ஜெர்மனியில் விஸ்வரூபமெடுத்து வளர்ந்த நாஜிக்கள், ஐரோப்பாவை முழுக்கவே தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முயன்றனர்.
தாங்கள் ஆக்கிரமித்த அத்தனை நாடுகளிலும் யூதர்களைத் தேடித் தேடி அழித்தனர். ‘நமக்கு சொந்தமற்ற நாடுகளில் ஏன் அகதிகள் போல அலைய வேண்டும்? நமக்கு உறுதி செய்யப்பட்ட நிலத்தில், நமக்கான தேசத்தை உருவாக்க வேண்டும்’ என்று இஸ்ரேல் தேசம் குறித்து அவர்கள் சிந்திக்கத் தொடங்கியது அப்போதுதான்.
அந்த நேரத்தில் பாலஸ்தீனத்தின் பெரும்பாலான பகுதிகள் பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்ததால், இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்குவது இன்னும் சுலபமானது.
பாலஸ்தீனத்தில் பணக்கார யூதர்கள் எங்கெங்கோ இருந்துவந்து நிலங்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தனர்.
இதன் உள்நோக்கம் தெரியாத பாலஸ்தீனர்கள், குறைந்த விலைக்கு நிலங்களை விற்றனர். படிப்படியாக யூதர்கள் குடியேற்றம் நிகழ ஆரம்பித்தது.
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் ஜெர்மனி நிகழ்த்திய போர்க்குற்றங்களில் அதிக இழப்பைச் சந்தித்த யூதர்களுக்குத் தனி நாடு உருவாக்குவதை ஐ.நா சபையே ஏற்றது.
1947 நவம்பரில் பாலஸ்தீனத்தை யூதர்கள் பகுதி, அரபுப் பகுதி என்று பிரித்து ஒரு வரைபடத்தை ஐ.நா உருவாக்கி ஏற்றது.
அரபு நாடுகள் பலவும் இதை எதிர்த்தன. இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகளும் போர்க்கொடி உயர்த்தின. இப்படி முரண்பாடுகள் முற்றிய சூழ்நிலையில், 1948 மே 14-ம் தேதி பாலஸ்தீனத்தில் தங்கள் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாக அறிவித்தது. யூதர்களின் அரசியல் தலைவரான David Ben-Gurion, இஸ்ரேல் என்ற தேசம் உருவாகிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே எகிப்து, ஜோர்டான், சிரியா மற்றும் லெபனான் ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து இஸ்ரேல் மீது போர் தொடுத்தன.
1949 ஜூலையில் போர் முடிந்தபோது, அரபு நாடுகள் நான்கும் தோல்வியை ஒப்புக்கொள்ள நேர்ந்தது. பழைய பாலஸ்தீனத்தின் 80% நிலப்பரப்பை இஸ்ரேல் பிடித்துவிட்டிருந்தது.
தற்போது பாலஸ்தீன சுயாட்சிப் பிரதேசத்தின் தலைமையகமாக இருக்கும் மேற்குக்கரையை ஜோர்டான் கைப்பற்றியது. காஸா நிலப்பரப்பை எகிப்து கைப்பற்றியது.
சுமார் ஏழரை லட்சம் பாலஸ்தீனர்கள் வீடிழந்து, நாடிழந்து அகதிகளாக இஸ்ரேலிலிருந்து வெளியேற நேர்ந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் காஸாவில் போய்க் குடியேறினர். ‘நக்பா’ என தங்களுக்கு நேர்ந்த பேரழிவாக இதை பாலஸ்தீன மக்கள் வரலாற்றில் பதிவிடுகின்றனர்.
இஸ்ரேல் உருவானபிறகு, மத்தியக் கிழக்கு ஆசியாவில் தொடர்ந்து சண்டைகள் நடக்கத் தொடங்கின. சூயஸ் கால்வாய் தொடர்பான பிரச்னையில் எகிப்து மீது போர் தொடுத்தது இஸ்ரேல். பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அதற்கு உதவின. காஸா பகுதி இதன்பின் இஸ்ரேல் ஆதிக்கத்தில் வந்தது.
எகிப்து மற்றும் சிரியா தலைமையிலான அரபுப் படைகள் நடத்திய தாக்குதலில் 2,700 இஸ்ரேல் வீரர்கள் இறந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
அரபுப்படைகளுக்கு ரஷ்யாவும், இஸ்ரேல் படைகளுக்கு அமெரிக்காவும் ஆயுத சப்ளை செய்ய, கிட்டத்தட்ட இரண்டு வல்லரசுகளின் வலிமையை சோதிக்கும் யுத்தக்களமாக இது மாறியது. கடைசியில் ஐ.நா தலையிட்டு அமைதியை நிலைநிறுத்தியது.
சினாய் தீபகற்பத்திலிருந்து இஸ்ரேல் வெளியேறி, அதை எகிப்திடம் ஒப்படைத்தது. இதற்காக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இரண்டு நாடுகளும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டன.
இதன்மூலம் தான் இழந்த பகுதிகள் எகிப்துக்குக் கிடைத்தது. இஸ்ரேலுடன் முதன்முதலில் ஓர் ஒப்பந்தம் போட்ட அரபு நாடாக வரலாற்றில் இடம் பிடித்தது எகிப்து. இஸ்ரேலை ஒரு தேசமாக எகிப்து அங்கீகரித்ததாக அர்த்தமாகிவிட்டது. இது இஸ்ரேலுக்குக் கிடைத்த வெற்றி.
Yom Kippur
இந்தப் போரில் சந்தித்த இழப்புகளுக்குப் பிறகே, பாலஸ்தீனர்கள் வசிக்கும் பகுதியில் அவர்களுக்கு சுயாட்சி வழங்குவது குறித்து யோசிக்க ஆரம்பித்தது இஸ்ரேல்.
அதற்கான பேச்சுவார்த்தைகள் 20 ஆண்டுகள் நடைபெற்று, கடைசியில் 1993-ம் ஆண்டு ஆஸ்லோ ஒப்பந்தம் கையெழுத்தாகியது. அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் முன்னிலையில் இஸ்ரேல் பிரதமர் யிட்ஷாக் ராபினும், பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத்தும் கையெழுத்திட்டனர்.
மேற்குக்கரை மற்றும் காஸா பகுதிகள் பாலஸ்தீன தேசிய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுயாட்சிப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டன.
அது தனி நாடாக இல்லாமல், இஸ்ரேலின் ஆளுகைக்கு உட்பட்ட சுயாட்சிப் பிரதேசமாக அமைந்ததில் பெரும்பாலான பாலஸ்தீனர்களுக்கு அதிருப்தி. இன்னொரு பக்கம் இஸ்ரேலின் தீவிர வலதுசாரிகளும் இதை எதிர்த்தனர். ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட இஸ்ரேல் பிரதமர் யிட்ஷாக் ராபின் இரண்டே ஆண்டுகளில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2005-ம் ஆண்டு யாசர் அராபத் மரணமடையும் வரை, அவரின் ஆளுமைக்காக அடங்கியிருந்த பாலஸ்தீனர்கள் கிளர்ந்தெழத் தொடங்கினர்.
அதற்கு முன்பே ஹமாஸ் அமைப்பு அங்கு ஆழமாக வேரூன்றி இருந்தது. இந்த அரசியல் மற்றும் ஆயுதப் போராட்டங்களுக்கு மத்தியில் பாலஸ்தீனர்கள் பல நாடுகளுக்கு அகதிகளாகப் போய்க் குடியேற நேர்ந்தது. இன்று உலகிலேயே அதிக அகதிகளை உருவாக்கிய மண்ணாக பாலஸ்தீனம் திகழ்கிறது.
(அந்த சோகக்கதையை நாளை பார்க்கலாம்…)