யூதர்கள் சாலைகள், ஸ்தாபனங்கள் அமைத்ததால் அரேபியர்களும் பயன் அடைந்தாலும், ஐரோப்பாவிலிருந்து வந்த யூதர்களுடைய தனி நாடு அமைக்கும் திட்டத்தைப் புரிந்துகொண்டு கலக்கம் அடைந்தனர்.
பாலஸ்தீனம் முழுவதும் தங்களுக்கே என்று நினைத்திருந்ததற்கு மாறாக, நிறைய யூதர்கள் மேலும் மேலும் குடியேறுவதும், அவர்கள் அரேபியர்களுக்குச் சொந்தமான பல இடங்களை வாங்கிப் போடுவதும் இவர்களின் கோபத்தைக் கிளப்பியது.
யூதர்களின் குடியேற்றத்தை நிறுத்தும் பொருட்டு 1920-இல் யூதர்கள் தனியாக இருந்த குடியிருப்புகளை அவர்கள் தாக்கினர்.
இதில் யூதர்களின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர் கொல்லப்பட்டார். சாகும் தறுவாயில் அவர் கூறிய ‘நாட்டிற்காக உயிர் விடுவது நல்லது’ என்ற வார்த்தைகள் அவரை ஒரு பெரிய தியாகி ஆக்கின.
யூத நாட்டை உருவாக்கியே தீருவது என்பதில் யூதர்கள் முடிவாக இருந்தனர். தங்களுக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அசெம்பிளியையும், கமிட்டியையும் அமைத்துக்கொண்டனர்.
பாலஸ்தீனத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெறாமலே தங்களைக் காத்துக்கொள்ள ஒரு சிறு படையையும் அமைத்துக்கொண்டனர். இது பின்னால் இஸ்ரேலின் ராணுவத்தின் முக்கிய அங்கமானது. இவற்றோடு தொழிலாளர் அமைப்பு ஒன்றையும் அமைத்துக்கொண்டனர்.
முதல் உலகப் போருக்குப் பின் ஆட்டோமான் பேரரசு பாலஸ்தீனம் உட்பட பல இடங்களை இழந்தது.
ஜூலை 1922-இல் சர்வதேச சங்கம் (League of Nations) பாலஸ்தீன அரசியலை மேற்பார்வை செய்ய பிரிட்டனை நியமித்தது.
பல நேசநாடுகளின் ஒப்புதலோடு வெளியிடப்பட்ட இந்த நியமனம் (இதை ஆங்கிலத்தில் British Mandate என்றார்கள்.) யூதர்களின் பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது.
இதையடுத்து பிரிட்டன் தன் ராணுவ நிர்வாகத்தை நீக்கிவிட்டு, சிவில் நிர்வாகத்தை பாலஸ்தீனத்தில் அமைத்தது.
ஹெர்பெர்ட் சாமுவேல் என்னும் பிரிட்டிஷ் யூதரை பாலஸ்தீனத்திற்குத் தன் பிரதிநிதியாக நியமித்தது. இவரும் பாலஸ்தீனத்தில் யூத நாடு ஒன்றை அமைக்க வேண்டும் என்னும் கூட்டத்தைச் சேர்ந்தவராகையால், அப்போது பாலஸ்தீனத்தில் வாழ்ந்துவந்த யூதர்கள் தங்களுடைய கடவுளின் தூதர் அவர் என்று – முதலிலாவது – எண்ணி வரவேற்றனர்.
பாலஸ்தீனம் பிரிட்டனின் அதிகாரத்தின் கீழ் வந்துவிட்டதால் எப்படியும் பிரிட்டன் பேல்ஃபர் Balfour Declaration அறிக்கையின் மூலம் பாலஸ்தீனத்தில் தனி நாடு அமைக்கத் தங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் கண்டிப்பாக நிறைவேற்றும் என்று நம்பினர். இதை யூதர்கள் தங்களுடைய பெரிய வெற்றியாகக் கருதினர்.
தொடர்ந்து யூதர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து பாலஸ்தீனத்தில் குடியேறி வந்ததாலும் அங்கு நிலங்களை வாங்கிக்கொண்டிருந்ததாலும் பாலஸ்தீனம் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்துக்கொண்டிருந்த அரேபியர்கள் பாலஸ்தீனத்திற்குள் யூதர்கள் வந்து தங்கும் முக்கிய இடமான ஜாஃபாவைத் தாக்கினர்.
அதைத் தொடர்ந்து அதற்கு வடக்கிலும் தெற்கிலும் இருவருக்கும் இடையே கலவரங்கள் வெடித்தன. யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் வருவதுதான் கலவரங்களுக்குக் காரணம் என்று நினைத்த ஹெர்பெர்ட் சாமுவேல் தற்காலிகமாக யூதர்கள் வருவதைத் தடைசெய்தார். ஆனால் சீக்கிரமே அந்தத் தடை நீக்கப்பட்டது.
இதற்கிடையில் லண்டனில், பாலஸ்தீனத்தில் யூதர்களின் நாட்டை உருவாக்க பாலஸ்தீன் உருவாக்க நிதி (Palestinian Foundation Fund) என்ற அமைப்பு நிறுவப்பட்டது.
அதே சமயத்தில் அங்கு அவர்களின் விவசாயக் குடியிருப்புகளை நிறுவ ஸயோனிஸ்ட் சங்கம் இன்னொரு நிதியை ஏற்படுத்தியது.
ரஷ்யாவிலிருந்து குடியேறிய ஒரு யூதர் பாலஸ்தீனத்தில் மின்நிலையங்களை அரசு அனுமதியுடன் தொடங்கினார்.
இதனால் டெல் அவிவ் (Tel Aviv), ஹைஃபா (Haifa), டிபீரியஸ் (Tiberius) போன்ற யூதர்கள் வாழ்ந்த பகுதிகள் தொழில்வளர்ச்சியில் மிகுந்த முன்னேற்றம் கண்டன.
யூதர்களின் எண்ணிக்கை பாலஸ்தீனத்தில் அதிகரித்துக்கொண்டே போனதால் பீதியடைந்த அரேபியர்களின் பயத்தைப் போக்க பிரிட்டிஷ் அரசு யூதர்களின் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தியது.
கட்டுப்பாடுகள் இருந்தாலும் பாலஸ்தீனத்திற்குள் யூதர்கள் வருவது குறையவில்லை. 1924-1929 வரை போலந்திலிருந்து பல யூதர்கள் போலந்து அரசு யூதர்களுடைய வருமானவரியை அதிகரித்ததால் போலந்தை விட்டு பாலஸ்தீனத்திற்கு வந்தனர்.
இந்தச் சமயத்தில் இவர்களுக்கு அமெரிக்காவிற்குப் போக அனுமதி கிடைக்கவில்லை. இந்த வணிகர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறி வணிக நிறுவனங்களைத் தொடங்கினர்.
முன்னால் வந்த யூதர்களைப் போல் அல்லாமல் இவர்கள் நகரவாசிகள் ஆயினர். இதனால் டெல் அவிவ் போன்ற நகரங்களில் ஏராளமான கட்டடங்கள் கட்டப்பட்டன.
கட்டடப் பணி வளர்ந்தது. யூதர்கள் வாழ்ந்த நகரங்கள் விரிந்துகொண்டே போயின. யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே அவ்வப்போது கலவரங்களும் வெடித்தன.
1932-க்கும் 1939-க்கும் இடையில் 175,000 யூதர்கள் ஜெர்மனியிலிருந்தும் போலந்திலிருந்தும் பாலஸ்தீனத்தில் குடியேறினர்.
இதனால் பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3,00,000 ஆனது. ஸயோனிஸ்ட் அமைப்பின் தலைவர்களுக்கும் ஜெர்மன் அரசின் வெளியுறவு அமைச்சகத்திற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தினால் ஜெர்மானிய யூதர்கள் தங்களுடைய சேமிப்பின் ஒரு பகுதியை ஜெர்மனியிலிருந்து எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் பாலஸ்தீனத்திற்குள் நிறையப் பணம் கொண்டுவரப்பட்டு அதன் பொருளாதாரம் சிறப்படைந்தது.
உலோகங்கள், துணி, வேதியல் பொருள்கள் ஆகியவற்றின் வணிகம் பெருகியது. மேலும் இப்படி வந்தவர்களில் பலர் கல்வியில் சிறந்தவர்களாக விளங்கியதால் ஹீப்ரு பலகலைக்கழகமும் மற்ற ஆராய்ச்சி நிறுவனங்களும் மேம்பாடடைந்தன.
கலைகளும் கலைக்கூடங்களும் சிறப்புற்றன. இவர்கள் நகரங்களில் வாழத் தொடங்கியதால் யூதர்களின் நகரங்களும் விரிவடைந்துகொண்டே போயின.
யூதர்களின் செல்வமும் செல்வாக்கும் அதிகரித்துக்கொண்டே போனதால் அரேபியர்களின் பயமும் அதிகரித்தது. அது பெரிய கலவரமாக வெடித்தது.
புதிதாக யூதர்கள் வாங்கும் விவசாய நிலங்களில் ஏற்கனவே அரேபியர்கள் வேலைபார்த்துக்கொண்டிருந்தால் அவர்களுடைய வாழ்க்கை ஆதாரத்திற்கு ஒரு சிறிய பகுதியை விட்டுவிட்டுத்தான் நிலத்தை வாங்க வேண்டும் என்று பாலஸ்தீனத்தை ஆண்ட பிரிட்டிஷ் அரசு உத்தரவு போட்டிருந்த போதிலும், யூதர்கள் அந்தக் கட்டுப்பாடுகளை நிராகரித்துவிட்டு அப்படிப்பட்ட நிபந்தனை இல்லாத நிலங்களையே வாங்கினர்.
மேலும் அந்த நிலங்களில் பாடுபட யூதர்களையே நியமித்தனர். தாங்கள் இது வரை உழைத்து வந்த நிலங்கள் தங்கள் கைகளை விட்டுப் போனதுமல்லாமல் தங்களுக்கு வேலையும் போய்விட்டதால் அரேபியர்களின் கோபம் அதிகமானது.
யூதர்களுக்குப் பணமும் தொழில்நுட்ப அறிவும் இருந்ததால் அவர்களின் விளைபொருள்களான காய்கறிகள், பழங்கள் அதிக அளவில் சந்தைக்கு வந்து அரேபியர்களின் பொருள்களைச் சந்தையிலிருந்து விரட்டியடித்தன.
யூதர்கள் தங்களுக்கென்று யூதர்கள் நிறைய வாழும் டெல் அவிவ் நகரில் ஒரு சிறிய துறைமுகத்தையும் அமைத்துக்கொண்டனர். யூதர்களின் வளர்ச்சியை நிறுத்தும் நோக்கத்துடன் அரேபியர்கள் ஆரம்பித்த கிளர்ச்சி, யூதர்கள் தங்களை மேலும் வலுப்படுத்திக்-கொள்வதற்குப் பயன்பட்டது.
மேலும், யூதர்கள் முதலில் இரகசியமாக ஆரம்பித்த படைக்குத் தடை விதித்திருந்த பிரிட்டிஷ் அரசு அந்தத் தடையை நீக்கி. யூதர்கள் தங்களுக்கென்று ஒரு படையை வைத்துக்கொள்ள அனுமதித்தது. 1939-இல் 14,500 ஆட்களைக் கொண்டதாக இந்தப் படை இருந்தது.
அடிக்கடி யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதால் பிரிட்டிஷ் அரசு 1936-ல் லண்டனிலிருந்து லார்ட் பீல் (Lord Peel) என்பவரை பாலஸ்தீனத்திற்கு அங்குள்ள நிலைமையை அறிந்துவர அனுப்பியது.
அவர் தன்னுடைய நீண்ட அறிக்கையில், யூதர்கள் பழங்காலத்திலிருந்தே பாலஸ்தீனத்தோடு அவர்களுக்கிருந்த தொடர்பால் அதற்கு உரிமை கொண்டாடுவதும், அரேபியர்கள் பதிமூன்று நூற்றாண்டுகளாக அங்கு வாழ்ந்துவருவதால் அவர்கள் அதற்கு உரிமை கொண்டாடுவதும் சரியே என்றும் வாதிட்டு, இருவருக்கும் பாலஸ்தீனத்தைப் பகிர்ந்து கொடுப்பதே சரியான தீர்வு என்றும் அப்படிச் செய்வதின் மூலம்தான் அங்கு ஏற்படும் கலவரங்களுக்கு முடிவு காணமுடியும் என்றும் கூறினார்.
பாலஸ்தீனத்தின் வட மேற்குப் பகுதியில் இருந்த கலீலி மற்றும் கடற்கரையை ஒட்டிய சமவெளிப் பிரதேசத்தை – இது பாலஸ்தீனத்தின் பரப்பளவில் 20 சதவிகிதம்;
ஆனால் வளம் நிறைந்த பகுதி – யூதர்களுக்கும் மற்ற இடங்களைப் பாலஸ்தீன அரேபியர்களுக்கும் கொடுப்பதென்றும் முடிவாகியது.
இருவரும் தனித்தனியே தங்கள் நாடுகளை அமைத்துக்கொள்வதென்றும், அரேபியர்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதி பின்னால் ட்ரானஸ் ஜோர்டன் (Transjordan) என்ற பகுதியோடு சேர்க்கப்படும் என்றும் பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது.
ஜோர்டன் நதிக்குக் கிழக்கே இருந்த நிலப் பகுதி ட்ரான்ஸ் ஜோர்டன் என்றும் மேற்கே இருந்த பகுதி வெஸ்ட் பேங்க் (West Bank) என்றும் அழைக்கப்பட்டன. வெஸ்ட் பேங்க் பாலஸ்தீன அரேபியர்களுக்குக் கொடுக்கப்பட்டது. பின்னால் ட்ரான்ஸ் ஜோர்டன், ஜோர்டான் என்ற தனி நாடாகியது.
தங்களுக்குப் பாலஸ்தீனம் முழுவதும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்த யூதர்களில் ஒரு பிரிவினர் பீலின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லையாயினும், மற்றவர்கள் அப்போதைக்கு அதை ஏற்றுக்கொள்ளுவதென்றும் பின்னால் பிரிட்டிஷ் அரசோடு பேசி இன்னும் கொஞ்சம் இடம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்ததால் பீலின் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும், ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த பிறகு யூதர்களின் நிலை மோசமாகிக்கொண்டே போனதால் யூதர்களுக்கென்று உடனே ஒரு நாடு வேண்டும் என்ற எண்ணத்திலும் யூதர்கள் இந்தத் திட்டத்தை ஒப்புக்கொண்டனர்.
தங்களிடம் ஒரு படை இருந்ததால் பின்னால் அரேபியர்களோடு சண்டைபோட்டு அவர்கள் நிலத்தில் ஒரு பகுதியை எடுத்துக்கொள்ளலாம் என்று இரகசியமாகத் திட்டமிட்டதும் இன்னொரு காரணம்.
ஆனால், சிரியாவில் நடைபெற்ற அரேபியர் மாநாட்டில் பல அரபு நாடுகளிலிருந்து வந்திருந்த 400 பிரதிநிதிகள் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அரேபியர்களுக்கு மட்டுமே உரிய அரபு நாட்டை (பாலஸ்தீனத்தை) யூதர்களோடு பங்கு போட்டுக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை.
பீலுக்குப் பிறகு பாலஸ்தீன நிலையைக் கண்டறிய அனுப்பப்பட்ட இன்னொருவர் பாலஸ்தீனத்தைப் பிரிப்பது மிகவும் சிக்கலான காரியம் என்று அறிக்கை கொடுத்ததால் பீல் திட்டம் கைவிடப்பட்டது.
யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டங்களும் கலவரங்களும் தொடர்ந்தன.
யூதர்கள் தங்கள் குடியிருப்புகளை நிறுவும் திட்டங்களும் தொடர்ந்தன. பிரிட்டன் இரு தரப்பையும் கூட்டி ஒரு முடிவிற்கு வர முயன்றும் ஒன்றும் நடக்கவில்லை. இதற்கிடையில் 1939-இல் ஐரோப்பாவில் யுத்த மேகங்கள் சூழ்ந்துவந்ததால் பிரிட்டன் அதில் கவனம் செலுத்த விரும்பியது.
யூதர்கள் அதிகமாக பாலஸ்தீனத்தில் குடியேறுவதும் யூத-அரேபிய போராட்டங்களுக்குக் காரணம் என்று பிரிட்டன் முடிவு செய்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் 75,000 யூதர்கள் மட்டுமே பாலஸ்தீனத்திற்கு வரலாம் என்று வரையறுத்தது.
சுதந்திரம் அடையப் போகும் பாலஸ்தீனத்தில் அரேபிய பெரும்பான்மையோடு தாங்கள் வாழ வேண்டும் என்று எண்ணிய யூதர்கள், பிரிட்டன் ஸயோனிஸத்தின் எதிரி என்று நினைக்க ஆரம்பித்தனர்.
இருப்பினும், இரண்டாவது உலக யுத்தத்தில் பிரிட்டனின் பக்கம் சேர்ந்து சண்டையிட்டால் யுத்தத்திற்குப் பிறகு பிரிட்டன் தங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையைப் பல யூதர்கள் வைத்திருந்தனர். இவர்களால் பிரிட்டனை எதிர்த்த பிரிவினர் நசுக்கப்பட்டனர். பிரிட்டனோடு சேர்ந்து சண்டையிட்ட பல யூதர்கள் யுத்தத்தில் உயிர் இழந்தனர்.
யுத்தம் முடிவடைந்ததும் பிரிட்டனில் தொழில் கட்சி (Labour Party) ஆட்சிக்கு வந்தது. இது கொள்கையளவில் யூதர்களுக்கு ஆதரவாக இருந்தாலும், செயல்களில் யூதர்களுக்கு எதிராகவே இருந்தது.
ஐரோப்பாவில் அவர்கள் புறப்பட்ட இடங்களிலிருந்தும் பாலஸ்தீனத்தில் அவர்கள் நுழைய முயன்ற இடங்களிலும் அவர்களைத் தடுத்து நிறுத்த பிரிட்டன் முயன்றும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
பாலஸ்தீனத்தில் பலரை இழந்த பிரிட்டன் அதற்கு மேல் அங்கு இருப்பதால் தனக்குப் பலன் எதுவும் இல்லை என்று எண்ணிப் பாலஸ்தீனப் பிரச்சினையை மறுபடி ஐ.நா.-விடமே கொடுத்தது.
ஐ.நா. சபை பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு குழுவை நியமித்து பாலஸ்தீனத்திற்குச் நேரில் சென்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியது.
இந்தக் குழு ஜெருசலேமில் ஐந்து வாரங்கள் தங்கியிருந்த போது யூதப் பிரதிநிதிகள், குழு அங்கத்தினர்களைச் சந்தித்துத் தங்கள் பக்கக் கோரிக்கைகளைக் கூறினர்.
ஆனால் அரேபிய பிரதிநிதிகள் இவர்களைச் சந்திக்கவில்லை. பாலஸ்தீனத்தை பிரிட்டனின் அதிகாரத்திலிருந்து விடுவித்துவிடுவது என்றும், பாலஸ்தீனத்திற்குச் சுதந்திரம் கொடுப்பது என்றும் ஐ.நா.வில் தீர்மானிக்கப்பட்டது.
1947 நவம்பரில் பாலஸ்தீனத்தை யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே பிரிப்பது என்ற தீர்மானத்தை 33 நாடுகள் ஆதரித்தன; 13 நாடுகள் எதிர்த்தன; 13 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
இத்தீர்மானத்தின்படி ஆறு லட்சம் யூதர்களுக்கு 5700 சதுர மைல் இடமும் 14 லட்சம் அரேபியர்களுக்கு 4300 சதுர மைல் இடமும் கொடுக்கப்பட்டது. .
ஜெருசலேம், பெத்லஹேம் முதலான புண்ணிய தலங்கள் ஐ.நா.வின் பார்வையில் இருக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது. யூதர்களுக்கு அவர்களே எதிர்பார்த்ததை விட அதிக நிலம் கிடைத்தது.
இதை எதிர்த்த அரேபியர்கள் பாலஸ்தீனத்தை முழுவதுமாகப் பெறப் போவதாகச் சூளுரைத்தனர். இதையடுத்து அரேபியர்களும் யூதர்களும் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டனர்.
முதலில் அரேபியர்களின் கை ஓங்கியிருப்பதாகத் தோன்றினாலும், யூதர்கள் தங்கள் படைபலத்தால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களைப் பிடித்துக்கொண்டனர்.
முதலில் பாலஸ்தீனத்தைப் பிரிக்கும் முடிவை அமெரிக்கா வெகுவாக ஆதரித்து ஐ.நா.வின் அந்த முடிவைச் செயலாக்கத் தன் வோட்டை அளிக்கத் தயாரானது, ஆனால் உள்நாட்டுப் போர் தீவிரமடையவே தன் முடிவிலிருந்து பின்வாங்கி ஐ.நா.வின் கீழ் பாலஸ்தீனம் இருப்பதே சரி என்று நினைத்தது.
அமெரிக்க ஆதரவுத் தங்களுக்குக் குறைவதை உணர்ந்த பாலஸ்தீன யூதர்கள் தங்கள் படைபலத்தால் தங்களுக்கு ஐ.நா.வால் கொடுக்கப்பட்ட இடங்களைத் தங்கள் அதிகாரத்திற்குள் கொண்டுவந்தனர்.
அதே சமயத்தில் அமெரிக்காவையும் பாலஸ்தீனப் பிரிவினைக்குச் சம்மதிக்க வைக்க முயன்றனர். இதனால் அமெரிக்காவும் அங்கு அமைதியை நிலைநாட்ட முன்றது.
யூதர்கள் அரேபியர்களும் யூதர்களும் வாழ்ந்த இடங்களையும் பிடித்துக்கொண்டனர். இந்தச் சமயத்தில்தான் பல அரேபியர்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு விட்டு வெஸ்ட் பேங்க் பகுதியிலும் சிரியா, லெபனான், ஜோர்டன் போன்ற நாடுகளிலும் அகதிகளாகக் குடிபெயர்ந்தனர்.
மிஞ்சியிருந்த சிலரையும் யூதர்கள் பலவந்தமாக வெளியேற்றினர். 1948 ஏப்ரலில் டேர் யாசின் (Deir Yassin) என்ற இடத்தில் 110 அரேபியர்கள் யூதர்களால் கொல்லப்பட்டதை அடுத்து 7,50,000 பாலஸ்தீன அரேபியர்கள் பாலஸ்தீனத்தை விட்டே வெளியேறினர். இதனால் பாலஸ்தீனத்தில் யூதர்களின் எண்ணிக்கை பெரும்பான்மை ஆகியது.
1948 மே 15-ஆம் தேதி பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறப் போவதாக பிரிட்டன் அறிவித்தது. மே 14-ஆம் தேதி இரவு 11:55 மணிக்கு யூதர்கள் ஐ.நா.வால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களை இஸ்ரேல் என்ற நாடாகப் பிரகடனம் செய்துகொண்டனர்.
அரேபியர்கள் ஐ.நா.வின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளாமல் மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்டிருந்ததால், இன்று வரை அரேபியர்களுடைய ஆளுகைக்கு உட்பட்ட, இறையாண்மை உள்ள (sovereign) பாலஸ்தீன நாடு உருவாகவில்லை.
British Palestine (1917-1948)
படங்களுக்கு நன்றி :
http://en.wikipedia.org/wiki/United_Nations_Partition_Plan_for_Palestine
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D
தொடரும்
நாகேஸ்வரி அண்ணாமலை