லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய் என்ன பேச போகிறார் என ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர் மேடையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் என தொடர்ந்து சர்ச்சை வரும் நிலையில் அதற்கு அவர் முடிவு கட்டியுள்ளார்.

லலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாரான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி வெளியானது. இந்த படம் வெளியான 12 நாட்களில் 540 கோடி ரூபாயை வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக சென்னையில் நேரு உள் விளையாட்டரங்கில் விழா நடைபெற்றது. அதில், விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை த்ரிஷா, நடிகர் அர்ஜூன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

லலித்குமார், லோகேஷ் கனகராஜ், அர்ஜூன், திரிஷா உள்ளிட்டோர் பேசிய பிறகு நடிகர் விஜய் மேடைக்கு வந்தார். லியோ ஆடியோ லான்ச்சில் அவரது பேச்சைக் கேட்கும் வாய்ப்பு இல்லாமல் போனதால் ஏமாற்றம் அடைந்திருந்த ரசிகர்கள் அப்போது உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.

ரசிகர்கள் குதூகலப்படுத்திய விஜய்

விஜய் மேடை ஏறியதும் ரஞ்சிதமே ஸ்டைல் முத்தங்களை காற்றில் ரசிகர்களுக்கு பறக்கவிட்டார். பின்னர் நான் ரெடி தான் பாடலை பாடி சில ஸ்டெப்புகளை போட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார்.

“என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா.. நண்பிகள்.. உண்மைய சொல்லணும்னா நீங்க தான் என்னை உங்க நெஞ்சுல குடி வச்சிருக்கீங்க..

நான் குடியிருக்கும் கோயில் நீங்க எல்லாம் இது கொஞ்சம் சினிமா டயலாக் மாறி தெரியலாம் ஆனால், நீங்க எனக்கு காட்டுற அன்புக்கு, என் உடம்ப செருப்பா தச்சு உங்களுக்கு போட்டாக் கூட பத்தாது.. நீங்க எல்லாம் பிளடி ஸ்வீட்” என பேசி விஜய் அரங்கத்தை அதிர வைத்தார்.

விஜய் சொன்ன குட்டிக்கதை

வழக்கம் போல் குட்டிக் கதை ஒன்றையும் சொல்லி அவர் அசத்தினார். “ஒரு காட்டுக்கு 2 பேர் வில், அம்பு சகிதமாக வேட்டைக்குச் சென்றார்கள். அந்தக் காட்டில் சிங்கம், புலி போன்ற மிருகங்களுடன் காக்கா, கழுகு போன்ற பறவைகளும் இருந்தன.

ஒரு வேடன் தனது வில்லால் முயல் ஒன்றை அம்பெய்தி கொன்றான். மற்றொரு வேடனோ யானைக்கு குறி வைத்தான். ஆனாலும் அவனால் யானையை வீழ்த்த முடியவில்லை. ஆனாலும், இந்த இருவரில் முயலை வீழ்த்திவிட்டதாலேயே அந்த வேடன் சிறந்தவனாகி விட முடியாது.

Small aim is crime என்று அப்துல் கலாமே கூறியிருக்கிறார். பாரதியார், பெரிதினும் பெரிது கேள் என்று கூறியுள்ளார். ஆகவே, பெரிய விஷயத்தையே குறிக்கோளாக கொள்ள வேண்டும்” என்று விஜய் குட்டிக்கதை கூறினார்.

சோஷியல் மீடியாவில் சமீப காலமாக ரசிகர்கள் கோபப்படுவதை கண்டித்துள்ள அவர், “நமக்கு நிறைய பெரிய வேலைகள் இருக்கு, தேவையில்லாமல் சோஷியல் மீடியாவில் கோபப்பட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
லியோ வெற்றி விழா


சூப்பர் ஸ்டார் ஒருத்தர் தான்..

சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு விஜய் ஆசைப்படுகிறார் என்று வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொடங்கிய சர்ச்சைக்கும் அவரே முற்றுப்புள்ளி வைத்தார்.

“புரட்சி தலைவர்-னா ஒருத்தர் தான். புரட்சி கலைஞர் என்றால் ஒருத்தர் தான். நடிகர் திலகம்-னா ஒருத்தர் தான். உலகநாயகன் என்றால் ஒருத்தர் தான், சூப்பர் ஸ்டார் என்றால் ஒருத்தர் தான். தல என்றால் ஒருத்தர் தான்.

தளபதி என்றால் உங்களுக்கு தெரியும். மன்னர்களுக்கு கீழ் அவங்க இருப்பாங்க. இங்கே மக்கள் தான் மன்னர்கள். நான் உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி நீங்க ஆணையிடுங்க நான் செய்கிறேன்,” என விஜய் கூறினார். இதன் மூலம் சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கும் அவர் முடிவு கட்டியுள்ளார்.

2026 குறித்து விஜய் கூறியது என்ன?

இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சித் தொகுப்பாளர் 2026-ம் ஆண்டு குறித்து கேள்வி எழுப்ப, நடிகர் விஜயோ, “என்ன உலகக்கோப்பையா?” என்று கிண்டலாக கேள்வி எழுப்பினார். பின்னர் அவரே தொடர்ந்து, “கப்பு முக்கியம் பிகிலு” என்று குறிப்பிட ரசிகர்களின் ஆரவாரம் அடங்க வெகுநேரமானது.

நடிகர் விஜய்யின் பேச்சு தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இணையத்தில் தளபதி விஜய் பேச்சு குறித்த ஹாஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. நடிகர் விஜயின் பேச்சு மற்றும் குட்டி ஸ்டோரியை கேட்டு லியோ படத்தை பார்த்ததை விட இரட்டிப்பு சந்தோஷத்தில் இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version