அடுத்த ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழர் தரப்பில் ஒரு பொது­வேட்­பா­ளரை நிறுத்­து­வது தொடர்­பான யோசனை ஆரா­யப்­பட்டு வரு­கின்ற நிலையில், இரா.சம்­பந்தன் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியில் இருந்து விலக வேண்டும் என்ற கருத்து, தமிழ் அரசுக் கட்­சியின் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­தி­ரனால் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் பொது­வேட்­பா­ளரை நிறுத்­து­வ­தற்கும், இரா.சம்­பந்­தனை பதவி வில­கு­மாறு கோரு­வ­தற்கும் இடையில் என்ன சம்­பந்தம் என்ற கேள்வி பல­ருக்கு இருக்­கலாம்.

அதற்­கான விடையை தேடு­வ­தற்கு முன்னர், தமிழ்க் கட்­சிகள் ஜனா­தி­பதி தேர்­தலில் பொது­வேட்­பாளர் ஒரு­வரை நிறுத்த வேண்டும் என்ற கருத்து உரு­வா­கி­யி­ருப்­ப­தற்­கான கார­ணங்­களை ஆராய வேண்டும். ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழர் ஒருவர் வெற்றி பெறு­வது நடை­முறைச் சாத்­தி­ய­மான விடயம் அல்ல.

ஏனென்றால், ஜனா­தி­பதி தேர்­தலில் ஒரு வேட்­பாளர் வெற்றி பெறு­வ­தற்கு 50 சத­வீ­தத்­துக்கும் அதி­க­மான வாக்­கு­களை பெற்­றி­ருக்க வேண்டும்.

சிங்­கள பௌத்த பேரி­ன­வாத சிந்­தனை மேலோங்­கிய இலங்கைத் தீவில், தமிழர் ஒரு­வரை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிறுத்­து­வ­தற்கு, அவ்­வாறு 50 வீதத்­துக்கும் அதி­க­மான வாக்­கு­களைப் பெறக் கூடிய எந்தக் கட்­சியும் முன்­வரப் போவ­தில்லை.

அவ்­வாறு நிறுத்­தி­னாலும், பெரும்­பான்மை மக்கள் அந்த வேட்­பா­ளரை ஆத­ரிக்கப் போவ­தில்லை. அதற்குக் காரணம் தமி­ழர்கள் சிறு­பான்­மை­யினர். பெரும்­பான்மைச் சிங்­க­ள­வர்கள் அதனை ஆத­ரிக்க மாட்­டார்கள். இவ்­வா­றான நிலையில் தமிழ் வேட்­பாளர் ஒரு­வரை தமிழ்க் கட்­சிகள் நிறுத்­து­வதால் என்ன இலாபம் கிடைத்துவிடப் போகி­றது?

தற்­போ­தைய ஜனா­தி­பதி தேர்தல் முறையின் கீழ், 1982ஆம் ஆண்டு குமார் பொன்­னம்­பலம், அகில இலங்கை தமிழ் காங்­கி­ரஸின் சார்பில் போட்­டி­யிட்­டி­ருந்தார்

ஆனால், அவரை பெரு­வா­ரி­யான தமிழ் மக்கள் ஆத­ரிக்­க­வில்லை. அப்­போது அவ­ருக்கு கிடைத்த வாக்­குகள், 173,934 (2.67சத­வீதம்) மட்டும் தான். ஆனால் அப்­போது, நாட்டில் 18 சத­வீ­தத்­துக்கும் அதி­க­மான தமி­ழர்கள் இருந்­தனர்.

யாழ்ப்­பாண மாவட்­டத்தில் தான் குமார் பொன்­னம்­ப­லத்­துக்கு அதிக வாக்­குகள் கிடைத்­தி­ருந்­தன. வன்னி, மட்­டக்­க­ளப்பில் அதி­க­ளவு தமிழ் வாக்­குகள் இருந்தும் அவ­ருக்கு அவை விழ­வில்லை.

அதற்குப் பின்னர், 2010  ஜனா­தி­பதி தேர்­தலில் எம்.கே.சிவா­ஜி­லிங்கம், சுயேட்­சை­யாகப் போட்­டி­யிட்ட போதும், 9,662 வாக்­கு­களைத் தான் பெற முடிந்­தது.

ஜனா­தி­பதி தேர்தல் வர­லாற்றில் இவர்கள் இரு­வரும் பெரும் விளை­வுகள் எதையும் ஏற்­ப­டுத்­த­வில்லை. அவ்­வாறு விளை­வு­களை ஏற்­ப­டுத்த முடி­யா­மைக்கு, அவர்கள் தமிழர் தரப்பின் பொது­வேட்­பா­ள­ராக நிற்­காமல், போனது முக்­கி­ய­மா­ன­தொரு காரணம்.

ஆனால், இந்­த­முறை தமிழர் தரப்பில் இருந்து பொது­வேட்­பாளர் ஒரு­வரை நிறுத்­து­வதன் மூலம், தமி­ழரின் அர­சியல் கோரிக்­கையை உல­கத்­துக்கு தெரி­யப்­ப­டுத்­தலாம்.

அதா­வது வட்­டுக்­கோட்டைத் தீர்­மா­னத்­துக்கு 1977இல் ஆணை பெறப்­பட்­டது போல, ஒரு நகர்வைச் செய்ய முடியும் என்ற கருத்து சில­ரிடம் காணப்­ப­டு­கி­றது.

அதே­வேளை, 1977 தேர்­தலில் தமிழ் மக்கள் வட்­டுக்­கோட்­டையில் நிறை­வேற்­றப்­பட்ட தனித் தமி­ழீழ தீர்­மா­னத்­துக்கு ஆணையை வழங்­கிய நிலையில், ஜனா­தி­பதி தேர்­தலில் அதற்கு குறை­வான ஒரு தீர்­வுக்கு- அதா­வது சமஷ்­டிக்கு ஆணை கோரு­வது சரி­யா­னதா என்ற கேள்­வி­களும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

தமி­ழரின் அர­சியல் கோரிக்­கையை முன்­வைத்து ஒரு பொது வேட்­பா­ளரை முன்­னி­றுத்தும் முடிவை தமிழ்க் கட்­சிகள் எடுக்­கு­மானால், அது ஜனா­தி­பதி தேர்­தலில் தீர்க்­க­மான விளைவை ஏற் ­ப­டுத்தும்.

தமிழ் வாக்­குகள் பிர­தான சிங்­களக் கட்­சி­களின் வேட்­பா­ளர்­க­ளுக்கு கிடைக்­காமல் போகும்­பட்­சத்தில், அவர்­களால் முதல் சுற்றில் 50 வீதத்­துக்கும் அதி­க­மான வாக்­கு­களைப் பெற முடி­யாத நிலை ஏற்­ப­டலாம்.

ஆயினும், கோட்­டா­பய ராஜபக் ஷ தனிச் சிங்­கள வாக்­கு­களால் வெற்றி பெற்­றது போன்ற அரி­தான நிகழ்­வுக்கு சாத்­தி­ய­மில்லை என்று கூற முடி­யாது.

அவ்­வா­றான நிலையில் இரண்டாம் சுற்று வாக்கு எண்­ணிக்கை இடம்­பெறும். அதிலும் செக் வைப்­ப­தற்கு வாய்ப்­புகள் இருக்­கின்­றன.

இவ்­வா­றான நிலை அடுத்த சிங்­கள ஜனா­தி­ப­தியைத் தெரிவு செய்­வதில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தி­னாலும் அதனை

தடுத்து நிறுத்­தாது. அதே­வேளை, தமிழ்ப் பொது வேட்­பா­ள­ருக்கு கிடைக்கும் வாக்­குகள் தமி­ழரின் அபி­லா­ஷை­களை வெளிப்­ப­டுத்­து­வ­தாக இருக்கும்.

பொது வேட்­பாளர் ஒரு­வரை நிறுத்­து­வ­தற்கு தமிழ்க் கட்­சிகள் தீர்­மா­னிக்­கின்­றன என்று வைத்துக் கொள்வோம். அவ்­வா­றாயின் யார் அதற்குப் பொருத்­த­மா­னவர் என்ற கேள்­வியும் இப்­போது எழுந்­தி­ருக்­கி­றது.

அவர் தமிழ் மக்­களால் நன்கு அறி­யப்­பட்­ட­வ­ராக, அவர்­களால் ஆத­ரிக்க கூடி­ய­வ­ராக இருக்க வேண்டும். அவ்­வா­றான 100 சத­வீத ஆளுமை அல்­லது ஆற்­ற­லுடன் யாரும் இருக்­கின்­றனர் எனக் கூற முடி­யாது.

ஆயினும், சிலர் இரா.சம்­பந்­தனை கைகாட்­டு­கின்­றனர். ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் பொது வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­டு­வ­தற்கு இரா.சம்­பந்தன் பொருத்­த­மா­னவர் என்ற கருத்து அர­சியல் மட்­டத்தில் மாத்­தி­ர­மன்றி ஊடகப் பரப்­பிலும் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இவ்­வா­றான நிலையில் தான், இரா.சம்­பந்­தனை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியில் இருந்து விலக வேண்டும் என்ற கருத்து முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

காட்சி ஊடகம் ஒன்று இரா.சம்­பந்­தனின் முதுமை நிலை கார­ண­மாக அவரால் செயற்­பட முடி­யா­தி­ருப்­பது குறித்து சுட்­டிக்­காட்டி கேள்வி எழுப்­பிய போதே, சுமந்­திரன் இந்தக் கருத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

முது­மை­யினால் பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் பங்­கேற்க முடி­யாத நிலை ஏற்­பட்ட போதே, அவரைப் பதவி வில­கு­மாறு தான் கேட்டுக் கொண்­ட­தா­கவும், அதற்கு அவர் மறுத்து விட்டார் என்றும் சுமந்­திரன் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

2020 ஆம் ஆண்டின் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தாம் போட்­டி­யிட்ட போது -தனது முதுமை நிலையைப் புரிந்து கொண்டும்,

திரு­கோ­ண­மலை மக்கள் தமது முத­லா­வது பிர­தி­நி­தி­யாக தெரிவு செய்­தி­ருக்­கின்­றனர் என்­பதால் பதவி விலக முடி­யாது என இரா.சம்­பந்தன் காரணம் கூறி­ய­தா­கவும் சுமந்­திரன் கூறி­யி­ருக்­கிறார். அதே நிலைப்­பாட்டில் தான் அவர் இருக்­கிறார் என்­பதை சுமந்­தி­ரனின் கருத்து வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இரா. சம்­பந்தன் போன்று, திரு­கோ­ண­மலை மக்கள் சிந்­தித்­த­னரா என்று தெரி­ய­வில்லை.  அவர்கள், தள்­ளாத வய­தி­லுள்ள அவர் தோல்­வி­யுடன் அர­சி­யலில் இருந்து வெளி­யேற வேண்டும் என்று ஏன் நினைந்­தி­ருக்க கூடாது?

நீண்­ட­காலம் தங்­களின் பிர­தி­நி­தி­யாக- தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மை­யாக இருந்து விட்ட அவர் தோற்றுப் போய் அர­சி­யலில் இருந்து ஒதுங்கி விடக் கூடாது என்று கூட மக்கள் நினைந்­தி­ருக்­கலாம்.

அவ்­வா­றான நிலையில் அவர்கள் வாக்­க­ளித்­தி­ருந்தால், இரா.சம்­பந்தன் தொடர்ந்து பத­வியில் இருப்­பது சரி­யா­ன­தல்ல.

அதே­வேளை, இரா.சம்­பந்­தனை ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட வைக்க சில தரப்புகள் முயற்சி செய்யும் நிலையில், அவர் முதுமையைக் காட்டி பதவி விலகுவதும் சரியான அணுகுமுறையாக இருக்குமா என்ற கேள்வி உள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் தங்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு ஒன்றை பெற்றுக் கொள்ள முடியுமாயின், அதற்குப் மிகப் பொருத்தமான ஒரு வேட்பாளரையும் தயார்படுத்த வேண்டும்.

எல்லோரும் சேர்ந்து அந்த வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதில்லை. தமிழரின் வாக்குகள் சிதைந்து போகாத வகையில், பார்த்துக் கொள்ள வேண்டும்.

இல்லையேல், பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதையாக மாறி விடும்.

அபிலாஷைகள் விடயத்தில் தமிழர்கள் பிளவுபட்டிருக்கிறார்கள் என்ற கருத்து உருவாக்கப்பட்டு விடும்.

-கபில்-

Share.
Leave A Reply

Exit mobile version