மிகக் குறுகிய கால இடைவெளியில் 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போதைப்பொருள் பாவனையால் உயிரிந்துள்ளனர்!

கலாசாரத்துக்கு பெயர்போன யாழ்ப்பாணம் இன்று பல்வேறு விதமான கலாசார சீரழிவுகளுக்குள்ளும் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதனை கண்கூடாக காண முடிகிறது.

வடக்கு மாகாணம் என்றாலே எல்லோருக்கும் நினைவில் வருவது பண்பாடும் பாரம்பரியங்களும் மாத்திரமே. அந்தளவுக்கு கட்டுக்கோப்புடன் கலாசார விழுமியங்களை பின்பற்றிய தமிழர்களின் பகுதிகள் யுத்தத்துக்கு பின்னர், கட்டுக்கோப்புகளையும்-பண்பாடுகளையும் புறந்தள்ளி தறிகெட்டு தன்பாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது.

வடக்கு மாகாணம் குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டம் அண்மைக் காலமாக போதைப்பொருட்களின் கூடாரமாகவும்-போதைப்பொருள் கடத்தல் வியாபாரிகளின் இராஜ்ஜியமாகவும் உருவெடுத்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு இவ்வாறான ஒரு நிலை ஏற்படும் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

2009ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு முன்னர் வடக்கு மாகாணத்துக்குள் ஊடுருவாத போதைப்பொருள் தற்போது பெருமளவில் ஊடுருவ யார் காரணம் என்ற கேள்வி இன்று ஒவ்வொருவர் மனதிலும் எழக்கூடும். சில தமிழ் அரசியல்வாதிகள் கூட பொதுவெளியில் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளனர்.

இதன் பின்னணியில் தமிழ்ப் பற்றுள்ள அனைவரதும் எதிர்பார்ப்பு, அந்த கட்டுக்கோப்புடனான சமுதாயம் மீண்டும் மலர வேண்டும் என்பதே.

கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம், விழுமியம் என ஒழுக்கத்துக்கு பெயர்போன யாழ்ப்பாணத்தில் தற்போது இரவு நேர களியாட்ட நிகழ்வுகள் மற்றும் போதை விருந்துகள் எம் கண் முன்னே இடம்பெற்று வருகின்றன.

முன்பு வீட்டு வாசற்படியில் கால் வைக்க தயங்கிய பெண்களுக்கு தற்போது இரவு நேர களியாட்டத்தில் தன்னை மறந்து ஆடவருடன் நடனமாடும் மனத்துணிவைக் கொடுத்தது யார்?

துணிவு தானாக வருகிறதா அல்லது போதை மீதான மோகத்தால் துணிவு வரவைக்கப்படுகிறதா?

போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரம் உலகளாவிய ரீதியில் பரந்து காணப்படுகிறது. போதைப்பொருள் வியாபாரம் என்பது நாம் எவரும் எண்ணிப் பார்க்க முடியாதளவுக்கு வியாபகம் பெற்றுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கையை இலக்கு வைக்கவில்லை. ஆனால், இலங்கை கடற்பரப்பை அண்மித்து ஏனைய நாடுகளுக்குள் இடம்பெறுகின்ற கடத்தலின்போது சிந்தப்படுகின்ற போதைப்பொருட்களே எமது நாட்டை ஆட்டிப்படைக்கின்றன என்றொரு கருத்தும் காணப்படுகிறது.

அவ்வாறு சிந்தப்படுகின்ற துளியளவு போதைப்பொருளே இந்தளவுக்கு நாட்டை சீரழிக்கிறது என்றால் எமது நாடு கடத்தல்காரர்களால் இலக்கு வைக்கப்பட்டால் எத்தகைய பாதிப்புக்களை எதிர்நோக்கும் என்றே எண்ணிப் பார்க்க முடியவில்லை.

ஆனாலும், இன்று யாழ். மாவட்டத்துக்குள் பாடசாலை மாணவர்கள், தனியார் கல்வி நிலைய மாணவர்கள் என இளைய சமுதாயத்தை சீரழிக்கும் நோக்கில் போதைப்பொருள் விநியோகம் இடம்பெறுகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது.

கல்வி,-விளையாட்டு என சகல துறைகளிலும் சிறந்து விளங்கிய வடக்கு மாகாணம் இன்று சகல விதத்திலும் பின்தங்கியுள்ளது. இருப்பினும், இழந்ததை அடையும் விடாமுயற்சியில் அந்த மக்கள் போராடி வருகின்ற இவ்வேளையில், மறுபுறம், இளைய சமுதாயத்தை அடியோடு அழிக்கும் தீவிர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் கலாசாரத்தை இளைய சமுதாயத்தினரிடையே புகுத்தும் திட்டமிட்ட செயற்பாட்டினை இந்த சமுதாயம், குறிப்பாக பெற்றோர்கள் ஓரளவுக்கு உணரத் தலைப்பட்டுவிட்டனர். ஆனால், இளையவர்கள் இதனை உணராவிட்டால், இந்த இளம் சமுதாயத்தை எவராலும் காப்பாற்ற முடியாது.

சமூக சீர்கேட்டின் தீவிர நிலையை உணரவேண்டிய இளையவர்கள், போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட விடயங்களை புதிய கலாசாரமாக எண்ணத் தலைப்பட்டுள்ளனர். இந்நிலை இவ்வாறே தொடர்ந்தால், நாம் எதற்காக இதுவரைக் காலமும் போராடினோமோ, அதற்கு அர்த்தமே இல்லாமற்போய்விடும்.

சில வருடங்களுக்கு முன்னர் கஞ்சா, கசிப்பு போன்ற உள்ளூர் சட்ட விரோத உற்பத்திகளையே நாம் போதைப்பொருட்களாக அறிந்திருந்தோம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஹெரோயின், ஐஸ், குஷ், போதை மாத்திரை என நாளுக்கு நாள் புது வகையான போதைப்பொருட்கள் நாட்டுக்குள் குறிப்பாக வடக்கு மாகாணத்துக்குள் ஊடுருவிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், கடற்படை, இராணுவம், பொலிஸ் போன்ற பாதுகாப்புத் தரப்புக்களால் இவற்றை தடுக்க முடியவில்லையா? அல்லது தடுக்க முயலவில்லையா? என்ற சந்தேகம் எமது மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

இதற்கு மத்தியில் நீதிமன்ற பாதுகாப்பில் இருந்த போதைப்பொருள் கூட மாயமான சம்பவங்களும் நாட்டில் பதிவாகியுள்ளன.

யாழ். மாவட்டத்தை பொறுத்தவரையில், மிகக் குறுகிய கால இடைவெளிக்குள் 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்துள்ளனர். இவர்கள் 19 – 30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்தும்போது ஏற்பட்ட உயிரிழப்புகள், தொடர்ச்சியான போதைப்பொருள் பாவனையால் இதயத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டு நேர்ந்த உயிரிழப்புகள் என்கிற அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் இச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவை அனைத்தும் வெறுமனே ஒரு செய்தியாகவே கடந்துவிடுகின்றன. அதனால் இன்றும் யாழ்ப்பாணத்தில் இவ்வாறான போதைப்பொருள் பாவனையால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்கள் தொடர்ந்து வருகின்றன.

தற்போது போதைப்பொருள் பாவனையால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல குடும்பங்களுக்குள் பிரிவுகள், வன்முறைகள், விவாகரத்து என பிரச்சினைகள் உருவெடுத்து, பின்னர் கொலைகளில் கூட முடிந்துள்ளன. அந்தளவுக்கு போதை எமது சமுதாயத்தை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.

கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையை வாழ்ந்த அன்றைய யாழ்ப்பாண சமூகத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக, பக்கபலமாக இருந்து வந்தனர். ஆனால், இன்றோ தந்தையே மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வாழ்க்கையை சீரழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சமூகத்திலேயே வாழ நாம் தள்ளப்பட்டுவிட்டோம்.

தற்போது எங்கும் அவசரமான, ஆபத்தான ‍சந்தர்ப்பங்களில் கூட உறவுகளை நம்பி பிள்ளைகளை ஒப்படைக்க முடியாத நிலையே காணப்படுகிறது. அந்தளவுக்கு போதை எம்மவர்களின் கண்களை மறைத்துவிட்டது. பலர் மனசாட்சியையும்-மனிதாபிமானத்தையும் குழி தோண்டிப் புதைத்துவிட்டார்கள்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் போதைப்பொருள் விற்பனையாளர்கள் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சிறுவர்களை இலக்கு வைத்துள்ள நிலையில், பெருமளவில் இவ்வாறானவர்களின் வலையில் சிக்குவது வறுமை முதலான காரணிகளால் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திய சிறுவர்களே.

கடந்த வார கணிப்பின் அடிப்படையில், வடக்கு மாகாணத்தில் 600 மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகியிருப்பதாக வட மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாறான மாணவர்களே வறுமை மற்றும் பிற காரணிகளால் சமூக விரோதிகளின் பிடியில் சிக்கி, எதிர்காலத்தில் தமது வாழ்க்கையை சீரழித்துக்கொள்கின்றனர்.

போதை எனும் தற்காலிக இன்பத்தை அனுபவிக்க முற்பட்டு, அதனால் அவர்கள் வேறெந்த இன்பத்தையுமே அனுபவிக்க முடியாமல் வாழ்நாள் அவஸ்தையை அனுபவித்து வருகின்றனர்.

இன்றைய நிலையில், பலர் உடல் மெலிந்து, குறுகி தமது அன்றாட கடமைகளைக் கூட மேற்கொள்ள முடியாதவர்களாக, தாம் செய்த தவறினை உணர்ந்து கண்ணீர் விடுகின்ற நிலை காணப்படுகிறது.

மகன் தாய், தந்தையரை பராமரிக்க வேண்டிய பருவத்தில் தாய்,-தந்தை அந்த மகனை நினைத்து வாடுவதென்பது எவ்வளவு வேதனையான விடயம். அந்த வேதனையை பல பெற்றோர்கள் அனுபவிப்பதற்கு போதைவஸ்து எனும் விஷம் காரணமாகிவிட்டது.

மேலும், போதைவஸ்து பாவனையில் இருந்து விடுபட முடியாமல் இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்ட மற்றும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்ட சம்பவங்கள் பல யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.

ஒரு சொற்ப சுகம் வாழ்நாளையே நரகமாக மாற்றிவிடுகிறது. அந்த சுகத்தில் திளைத்தவர்கள் அதிலிருந்து விடுபட நினைத்தாலும், அவர்களால் அது முடிவதில்லை. அதுவே தற்கொலை எண்ணத்தை தூண்டுகிறது.

போதையின் பிடியில் சிக்கி மீள்வதை விட அதன் பிடியில் சிக்காமல் தப்பிப்பதே புத்திசாலித்தனம்.

நாளைய சமுதாயம் இவ்வாறு வழி தவறி போதை எனும் பாழ் கிணற்றில் விழுந்து அழிவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருபுறம் திணைக்களங்கள், மக்கள் நலன் சார்ந்த நிறுவனங்கள் போதை தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும், எங்கோ ஒரு மூலையில் போதையின் தாக்கம் வியாபித்துக்கொண்டேதான் இருக்கிறது.

முளையிலேயே கிள்ளி எறியவேண்டிய விடயத்தை விருட்சமாக வளரவிட்ட தவறு அனைவரையுமே சாரும்.

போதையின் பிடியில் சிக்கி சிதைபவர்களை அதிலிருந்து மீட்டு மீண்டும் போதையற்ற சமூகத்துடன் இணைக்கவேண்டிய பொறுப்பு இதே சமுதாயத்துக்கே உள்ளது. அத்தோடு, புதியவர்கள் போதையின் பிடியில் சிக்காமல் இருப்பதனையும் உறுதி செய்ய வேண்டும்.

கிராமங்களில், பாடசாலை அருகாமையில் என இளைய சமுதாயத்தை சீரழிக்கும் போதைப்பொருள் வியாபாரிகளை அடையாளம் கண்டு, அவர்களை பொலிஸாருக்கு இனங்காட்ட வேண்டிய பாரிய பொறுப்பு சமூகத்துக்கு உள்ளது.

பொலிஸ், இராணுவம், மது வரி என பல திணைக்களங்கள் போதையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், போதைவஸ்து பாவனை சமூகத்தில் திரும்ப திரும்ப துளிர்விடுகிறதே… இதற்கு யார் காரணம் என்ற சந்தேகம் எம் அனைவர் மத்தியிலும் உண்டு. எனவே, சமுதாயமாக இணைந்து இவ்வாறானவர்களை இனங்காட்டி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

அத்துடன், பிரதேச செயலகம், கல்வித் திணைக்களம் ஆகியனவும் பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்குரிய தேவைகளை நிறைவேற்றி, கல்வி உரிமையை பெற்றுத் தொடர வழிவகுக்க வேண்டும். இதன் ஊடாக மாணவ சமுதாயத்தை மீட்டு ஆரோக்கியமான எதிர்காலத்தை நிச்சயமாக கட்டியெழுப்ப முடியும்.

அத்துடன், சட்டங்களில் சில இறுக்கங்களை ஏற்படுத்த வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திடம் உள்ளது.

போதைவஸ்து விற்பனையாளர்கள் இலகுவில் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து, மீளவும் சமுதாயத்தை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாதிருக்கும் வகையில் அவர்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். இதனூடாகவே போதையின் கோரப் பிடியில் இருந்து நாட்டை மீட்க முடியும்.

நாளைய தலைமுறையினர் திசை மாறிச் சென்றால், எமது அத்தனை போராட்டங்களும் வீணாகிவிடும். தமிழ் இனத்தின் இருப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும்.

போதை காட்டுத் தீ போன்று பரவக்கூடியது. எனவே, பெற்றோர் தமது பிள்ளைகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். போதை ஆரம்பத்தில் ஆக்ரோஷத்தை கொடுத்தாலும், அது மெல்ல கொல்லும் விஷக் கிருமி. எனவே, அதனை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும்.

யுத்த வடுக்களில் இருந்து மீண்டு படிப்படியாக கல்வி, பொருளாதார ரீதியாக முன்னேறி வரும் சமூகத்தை சேர்ந்த நாம், போதைவஸ்துக்கு இடமளித்து மீண்டும் வீழ்ந்த இனமாக மாறிவிடக்கூடாது என்பதில் நாம் அனைவருமே உறுதியாக இருக்க வேண்டும்.

(தவராசா சுபேசன்)virakesari

Share.
Leave A Reply

Exit mobile version