மன்சூர் அலிகானின் மன்னிப்பை அடுத்து வைரலாகும் நடிகை த்ரிஷாவின் ட்வீட்!

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான், பேசியிருந்தது கோலிவுட்டில் டாக் ஆஃப் தி டவுனாகி இருக்கிறது.

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சையாகப் பேசியதற்குப் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின.

நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து கண்டனம் தெரிவித்ததையடுத்து இந்தச் சர்ச்சை இன்னும் பெரிதானது.

லோகேஷ், கார்த்திக் சுப்புராஜ், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, குஷ்பு உள்ளிட்டப் பலரும் மன்சூர் அலிகான் பேசியது தவறு என்று தங்களது கடும் கண்டங்களைத் தெரிவித்திருந்தனர். இது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.

தயாரிப்பாளர் சங்கமும் மன்சூர் அலிகான் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கூற, “நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாத குடுக்கறவன்.

எல்லாருக்கும் தெரியும் சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்கிட்ட வேகாது.

த்ரிஷாட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்க” என்று விளக்கமளித்திருந்தார்.

இருப்பினும் மன்சூர் அலிகான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பலரும் கூற அதை மன்சூர் அலிகான் மறுத்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது வழக்கப்பதிவு செய்திருந்தது.

இப்படி இப்பிரச்னை நாளுக்குநாள் கோலிவுட்டில் சர்ச்சைகளை ஏற்படுத்த, இறுதியாக நடிகர் மன்சூர் அலிகான், “எனது சக திரைநாயகி த்ரிஷாவே, என்னை மன்னித்துவிடு!” என்று கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து இப்பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் தற்போது நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “தவறு செய்வது மனிதர்களின் குணம், மன்னிப்பது இறைவனின் குணம்” என்று பதிவிட்டுள்ளார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

த்ரிஷாவின் ட்வீட்டில் தொடங்கிய இப்பிரச்னை தற்போது ஒருவழியாக த்ரிஷாவின் ட்வீட்டிலேயே முடிந்துள்ளது.

இந்தப் பிரச்னை மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களுக்கு அவசியமான பாடத்தைக் கற்றுத் தந்துள்ளது என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

Share.
Leave A Reply

Exit mobile version